“வாசிப்பு மனிதனைப் பூரண மனிதனாக்குகின்றது” எனும் கூற்று பாடசாலை முதல் உரையரங்குகள் வரை வாய்ப்பாடாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அவை இப்பொருளின் உள்ளார்ந்த ஆற்றலினையும் முக்கியத்துவத்தினையும் வெளிக்கொணரத் தவறிவிடுகின்றன. அதன் வெளிப்பாடாகவே வாசிப்பு பற்றிய மேல் நோக்கான பார்வை மலிந்து விட்டதனையும் சமூதாய முரண்பாடுகளிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் விலகி நிற்க முனைகின்ற அம்சமாகவே வாசிப்பு அமைந்துள்ளதை காணலாம்.

இவ்வாறானதோர் சூழலில் வாசிப்புப் பற்றிச் சிந்திக்கின்ற போது “நெல்லுக்குள் அரிசி” என்ற பரம ரகசியத்தை கூறுவது போலத் தோன்றும். ஆனால் இத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆழமாக நோக்குகின்றபோது பல புதிய விடயங்களையும் உண்மைகளையும் கண்டறியலாம்.

விஞ்ஞானபூர்வமான சிந்தனை என்பது சர்வசாதாரண விடயங்களைக் கூட மேலெழந்த வாரியாகப் பார்த்து விட்டு இது தெரிந்தவிடயம் தானே என முடிவு கட்டிவிடாமல் அதனையே ஆழமாகவும் பார்க்க வேண்டும் என்பதாகும்.

வாசிப்பு குறித்த தேடலையும் விஞ்ஞானபூர்வமான பார்வைக்குட்படுத்தி ஆய்வு செய்வதன் மூலம் இத்துறைசார்ந்த காத்திரமான விடயங்கள் பலவற்றினை வெளிக்கொணரலாம். “நெல்லுக்குள் அரிசி” என்ற விடயம் சிறுவர் முதல் பெரியோர் வரை தெரிந்த விடயமாகும். இதனையே ஆழ அகலப்படுத்தி நோக்குகின்ற போதுதான் “அரிசி இல்லாத நெல்லும் உண்டு” என்ற உண்மையை அறிய முடியும். அதனையே பதர் என்று குறிப்பிடுகிறோம். இங்கு தேடலுக்குட்படுத்தப்படும் விடயங்களிலும் பதர்களை இனங்கண்டு அவற்றினை நீக்கி விடுவதற்கும் வாசிப்பு பற்றிய தெளிவுணர்வு அவசியமானதொன்றாகின்றது.

மேற்குறித்த கருதுகோளின் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்ற இக்கட்டுரை அதன் முனைப்புற்ற சில போக்குகளை அடையாளப்படுத்துவதாகவே அமையும். அவ்வகையில் இதனை நிரூப்பிப்பதற்காக நீண்ட பட்டியல் நீட்ட விரும்பவில்லை. அட்டவணை போட்டு இலக்கியக் கணக்கெடுக்கும் இரசிக விமர்சகர்களுக்கு அப்பணியினை விட்டுவிட்டு இலக்கிய வாசிப்பின் அவசியத்தையும், அதற்கு அனுசரணையாக உள்ள இலக்கியக் குறிப்புகளையும் இலக்கியக்கர்த்தாக்களையும் சுட்டிக்காட்டிச் செல்வது இதன் சாரம்சமாக இருக்கும் என்பதனையும் கூற விழைகின்றேன்.

வாசிப்பு ஏன் அவசியம்?

உலகில் தோற்றம் பெற்ற அனைத்துப் படைப்புகளிலும் மனிதனே மேலான பொருள். மனிதனின் ஆளுமை, கம்பீரம், மேன்மை குறித்து உலக இலக்கிய விற்பன்னர்களில் ஒருவரான மார்க்ஸிம் கோர்க்கி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“மனிதன் எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கின்றது. எனக்கு மனிதனை விட சிறந்த கருத்துக்கள் இல்லை. மனிதன் மட்டும் தான் எல்லாப் பொருள்களும், எல்லாக் கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் அவனே. இவ்வுலகில் அற்புத அழகுப் பொருள்கள் எல்லாம் அவனது உழைப்பால் ஆனவை. நான் மனிதனுக்குத் தலை வணங்குகின்றேன். ஏனெனில் மனித அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பால் நான் இவ்வுலகில் வேறொன்றையும் காணவில்லை. மனிதனே எல்லாப் பொருள்களுக்கும், கருத்துகளுக்கும் படைப்பாளி.”

புத்தகங்கள் என்பவை மனிதனைப் பற்றி மனிதனால் எழுதப்பட்டவையாகும். இதனால் தான் இவை மகத்தான ஆற்றல் பெற்று விளங்குகின்றன. அவை மனித குலத்தின் வரலாற்றினை அனுபவத்தினை. வளர்ச்சியினை எடுத்துக் கூறுகின்றன. இன்றைய மனிதன் என்பவன் திடீரென வானத்திலிருந்து குதித்தவன் அல்ல. படிப்படியாக மனித குலம் தன் உழைப்பாலும், அனுபவத்தாலும் கற்ற விடயங்களைக் கொண்டே இன்றைய வாழ்வினைச் சிருஷ்டித்துள்ளது.

ஜசக்நியூட்டன் புவியிர்ப்பு விசையினைக் கண்டுப்பிடித்தார். இக்கண்டுபிடிப்பிலேயே அவரது வாழ்நாள் கழிந்துவிட்டது. இன்றைய மனிதன் தன் வாழ்நாளைச் செலவழித்து இதனைக் கண்டறியவேண்டிய அவசியமில்லை. அவன் நியூட்டனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டு புதிய கண்டுப்பிடிப்புகளை நோக்கி முன்னேறிச் செல்லலாம்.

எனவே “தேடல்” “வாசிப்பு” என்ற பதங்கள் மனித வாழ்க்கையின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கண்டு அவற்றிலிருந்து விடுபட்டு நிற்காமல், அவற்றினை எதிர்கொண்டு புதியதோர் நாகரீகத்தினை நோக்கி மனித வாழக்கையினை நகர்த்துவது இதன் தலையாய அம்சமாகும். வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கையுணர்வு, நேர்மை என்பன புதிய நாகரீகத்தினை உள்ளடக்கங்களாகும்.

எவற்றை வாசிக்க வேண்டும்?

மேற்குறித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்றபோது “வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக்குகின்றது.” என்ற கருத்து வெளிப்படும். அப்படியாயின் வாசிக்கின்ற அனைவரும் பூரண மனிதர்களா? புத்தகங்கள் அனைத்தும் மனித ஆற்றலை வெளிப்படுத்துகின்றனவா? போன்ற வினாக்கள் எழுகின்றன.

மனித நேயத்தின் ஆணிவேர்களைத் தின்று தீர்த்துவிட்டு மனிதனின் ஆற்றல்களை பண்புகளை எந்தெந்தவகையில் சிதைக்க முடியுமோ அந்தந்த வகையில் சிதைக்கின்ற நசிவு இலக்கியங்களும் நம்மத்தியில் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

“நெல்லுக்குள் அரிசி” என்ற உதாரணத்திற்கு வருவோம். அரிசி இல்லாத நெல் பதர்கள் எனக் குறிப்பிட்டோம். இவ்வாறு தான் மனிதத்தன்மை இல்லாத புத்தகங்களும் காணப்படுகின்றன. அவற்றினை இனங்கண்டு நீக்குவதற்கும் வாசிப்புடன் கூடிய விஞ்ஞானபூர்வமான பார்வை அவசியமான தொன்றாகிறது.

விஞ்ஞானபூர்வமான பார்வை என்றவுடன் எனது மாணவ பருவகாலத்து நிகழ்வுவொன்று ஞாபகத்திற்கு வருகின்றது. நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் நானும், எனது நண்பர்களும் மர்மக் கதைகளையும், துப்பறியும் நாவல்களையும் அதிகமாக வாசிப்பதுண்டு. இதனால் அவ்வப்போது ஆசிரியர்களின் தண்டனைகளுக்கும் ஆளாகினோம்.

பாடசாலைக் கல்வி முடிந்து வாழ்க்கையின் யதார்த்தத்தில் காலடிவைத்தபோது தான் நாங்கள் வாசித்த புத்தகங்களில் வெளிப்பட்ட வாழ்க்கைக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியை உணரமுடிந்தது. எனவே அக்காலக்கட்டங்களில் இடம் பெற்ற வாசிப்பினால் வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கோ, அல்லது புதியதொரு சிந்தனைத் தளத்தினை நோக்கிச் செல்வதற்கோ முடியாமல் இருந்தது. மனித நாகரிகத்திற்கான பயணத்தில் கலை இலக்கியத்தின் இலட்சியம் குறித்து சோவியத் எழுத்தாளர் ஷேலாகோவ் தன் சரித்திர தூரிகை கொண்டு புதியதொர் சித்திரத்தை இவ்வாறு ஆக்குகின்றார்.

“கலை என்பது, மக்களின் மனங்களிலும் இதயங்களிலும் செல்வாக்குச் செலுத்தவல்லது. மனிதவர்க்கத்தின் நன்மைக்காகவும், மனிதர்களின் ஆன்மாவில் ஓர் அழகிய உலகத்தைப் படைப்பதற்காகவும், இந்த செல்வாக்கைப் பயன்படுத்தும் எழுத்தாளர்களே கலைஞர்கள் என்று அழைப்பதற்கு அருகதை உடையவர்கள்.” மனிதனின் உடல் அரோக்கியத்திற்கு நல்ல உணவு எவ்வளவு அவசியமோ அவ்வாறே அவனது உள ஆரோக்கியத்திற்கு நல்ல இலக்கியங்கள் அவசியமாகின்றன.

வாசிப்பு பூரணத்துவம் என்பன பற்றிச் சிந்திக்கின்ற போது புத்தகங்களில் கற்ற விடயங்களை யதார்த்த வாழ்வோடு இணைத்தும், வரலாற்றுடன் இணைத்தும் தமது அனுபவங்களைப் பட்டை தீட்ட முனைகின்றபோதுதான் அவை அர்த்தமுள்ளதாகின்றன.

எவ்வாறு வாசிக்க வேண்டும்?

வாசிப்பினை மேல்நோக்காக, தகுந்த அடிப்படையற்ற நிலையில் மேற்கொண்டு மனம்போனபோக்கில் பொருள் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை. சில சமயங்களில் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை விட தீமைகள் அதிகம். எனவே வாசிப்புத் தொடர்பான செயற்பாட்டில் ஆழ்ந்துகற்றல் கிரகித்துக்கற்றல், குறிப்பெடுத்தல் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கேத்திரகணித பாடத்தில் ஒரு தோற்றத்தினை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒரு முக்கோணியின் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை 180 பாகையாகும், என்ற தேற்றத்தினை நிறுவும்போது முக்கோணியைப் பற்றி மேலோட்டமாக அறிந்து வைத்திருப்பதனாலோ, அல்லது முக்கோணியின் உருவினைச் சிந்தனையில் கொணர்ந்து சிந்திப்பதனாலோ பூரணத்துவமான விடை இலகுவாகக் கிடைக்காது. ஒரு தாளில் யுடீஊ அல்லது Pஞசு போன்ற ஏதாவது மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்தி முக்கோணியொன்றினை வரைந்து சிந்திக்கும் போது தான், ஏதாவது ஒரு பக்கத்திற்குச் சமாந்தரக் கோட்டினை வரைந்து அதன் துணை கொண்டு தேற்றத்தினை நிறுவலாம் என்ற விடயத்தினை உணரக்கூடியதாக இருக்கும் .

இவ்வாறு புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்த நிலையில் வாசிப்பதனால் எந்தப் பயனும் பெறமுடியாது. ஆழ்ந்து வாசித்தல், வாசித்தவற்றின் மையக் கருத்தினைக் கிரகித்து குறிப்பெடுத்தல், அதனைச் சமுதாய யாதார்த்ததுடன் இணைத்துப் பார்த்தல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக ஒரு புதிய சிந்தனையை நோக்கி நகரவும், வாழ்வினை இன்றைய நிலையை விட முன்னேற்றகரமான நிலைக்கு எடுத்துச் செல்லவும் கூடியதாக அமையும்.

வாசிப்பதற்கு நேரம் உண்டா?

நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதனின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எனவே வாசிப்பதற்கான அவகாசம் இல்லை என நம்மில் பலர் முறையீட்டுக் கொள்கின்றனர். இவர்களின் இக்கூற்றுக்கள் எந்தளவு பொருத்தப்பாடுடையது என்பதை மார்க்ஸிம் கோர்க்கி, பாரதி என்போரின் வாழ்க்கைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு நோக்குவோம்.

கோர்க்கியின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுகாரசியமானது. இவர் பாடசாலை சென்று கல்வி கற்கவில்லை. சிறுவயதிலே தாய், தந்தையரை இழந்து தத்தாவின் வீட்டில் வாழ்ந்தவர. கடைச் சிப்பந்தியாக, சுமை கூலியாக, ஹோட்டல் தொழிலாளியாக, ரொட்டி சுடுபவராக, பறவைகள் பிடிப்பவராகப் பல தொழில்களைச் செய்தவர். இவர் தனது வாழ்க்கையினைப் பல்கலைக்கழகமாகவும், பயிற்சிக்களகமாகவும் கொண்டு கல்வி கற்றார். இவரது வாழ்வில் இடம் பெற்ற சம்பவமொன்றினைத் தேவை நோக்கி இங்கொருமுறை குறித்துக் காட்டுவது அவசியமானதொன்றாகின்றது.

கோர்க்கி சிறுவயதில் ஒரு கொடுமைமிக்க எஜமானிடம் வேலைக்கமர்த்தப்பட்டார். இக்காலப் பகுதியிலே வாசிப்பு ஆர்வம் அதிகமாக வளர்ந்தது. கடவுளுக்காகக் கொளுத்தப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் புத்தகங்களை வாசிக்கும் கோர்க்கி, சில சமயங்களில் அவற்றில் ஆழ்ந்து போய் மேசை மீது தூங்கிவிடுவதும் உண்டு. இரவுநேரத்தில் அதிகமாகக் கண்விழித்துப் படிப்பதனால் எஜமானியம்மாவின் வேலைகளைச் சரிவரச் செய்ய முடியாமல் போனமைக்காக இவர் பல தடவைகள் தண்டனைகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இவையொருபுறமிருக்க கோர்க்கியின் புத்தக வாசிப்பு என்பது தொடர்ந்து கொண்டேயிருந்தது. எனவே அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். பழைய பொருட்களைப் பாதுகாக்கும் களஞ்சிய அறையாக அது காணப்பட்டது. எதிர்பாராத விதமாகக்கடவுளுக்காகக் கொளுத்தப்பட்டு எஞ்சிய மெழுகுவர்த்திகளும் அங்கு போடப்பட்டிருந்தன. எல்லோரும் தூங்கிய பின்னர் அவற்றினைக் கொளுத்தி அவ்வெளிச்சத்தில் தமது வாசிப்பினைத் தொடர்ந்தார் கோர்க்கி. எஜமானிக்கு இதிலும் சந்தேகம் ஏற்பட மெழுகுவர்த்தியின் உயரத்திற்கு ஏற்ற வகையில் பலகை கீலங்களை அதனுடன் இணைத்து வைத்திருக்கின்றார். கோர்க்கி மிக தந்திரமாக உபயோகித்து விட்டு பின்னர் மெழுகுவர்த்தியின் உயர்த்திற்கேற்ப பலகைக்கீலங்களை சமன்செய்து விடுவார். இவ்வாறு வாழ்க்கையில் பல இன்னல்கள் தலைக்காட்டியப் போதும் இவற்றினை எதிர் கொண்டு வாசிப்பினைத் தொடர்ந்தவர் கோர்க்கி.

பாரதியின் வாழ்க்கை வரலாற்றினைப் பற்றிக் கூற வேண்டிய அவசியமேயில்லை. துன்பியலில் உழன்றும் ஏறாய் நின்ற பாரதி தன் வாழ்வில் எத்தனையோ அவலங்களைச் சந்தித்துள்ளான்.

இந்நிலையில், வாசிப்பதற்கு நேரமில்லை என்ற முறையீடு எந்தளவு நியமானது? இன்றைய இயந்திர உலகில் மனிதனின் வேலைப்பளு, வாழ்க்கைப் பிரச்சினை என்பன அதிகரித்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் வாசிப்பதற்கு நேரம் இல்லை எனக் கூறுமளவிற்கு நாம் இயந்திரங்களோடு இயந்திரமாகி விடவில்லை.

“வாசிப்பு” “தேடல்” எனும் விடயங்களைக் கல்வி நாகரிகப் போக்காகக் கொண்டு சிற்சில விடயங்களைக் கற்றுத் தலைவீங்கித் திரிகின்ற உளநோயாளராக அல்லாமல், மாறிவரும் சமுதாயச் சூழலைப் புரிந்து கொள்ளவும், நாகரிகமான வாழ்க்கையைச் சிருஷ்டிக்கவும் முனைகின்றபோதுதான் அவை அர்த்தமுள்ளதாகின்றன. 

- லெனின் மதிவானம்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It