ஏப்.30 - சென்னை மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு அடித்தளமாகச் செயல்பட்டு ‘எதிரிகள் - துரோகிகளால்’ வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட களப்பணியாளர் பத்ரிநாராயணன் நினைவு நாள்.

பத்ரியின் நினைவு நாளில் சென்னையில் மண்டல மாநாட்டையும், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது.

‘நிலம் பாழ் - நீர் மறுப்பு - ‘நீட்’ திணிப்பு - தன்மான தன்னுரிமை மீட்பு மாநாடு’ என்று காலத்தின் தேவைக்கேற்ற தலைப்போடு மாநாடு நடக்கிறது.

மாநாட்டை விளக்கி நகரம் முழுதும் சுவரெழுத்துகளை தோழர்கள் எழுதி வருகிறார்கள். மாநாட்டின் நோக்கம் காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு இழைத்த அநீதிகளை விளக்கி இது வரை 50,000 துண்டறிக்கைகளை மாநகர் முழுதும் தோழர்கள் பகுதி பகுதியாகச் சென்று மக்களிடம் வழங்கி, நிதி திரட்டி வருகிறார்கள்.

கழகச் செயல் வீரர்கள் ஒவ்வொரு நாளும் கழகக் கொடி துண்டறிக்கைகளுடன் புறப்பட்டு, பகுதி பகுதியாக ‘கருத்துப் பரப்பல் நிதி திரட்டல்’ என்ற இயக்கத்தை உற்சாகத்துடன் நடத்தி வருகிறார்கள். 10 ரூபாய், 20 ரூபாய் என்று சிறு சிறு நடைபாதைக் கடை நடத்தும் மக்களும் வணிகர்களும் நிதியாக வழங்கி தோழர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

பா.ஜ.க. நடுவண் ஆட்சி மீது மக்கள் அடங்காத கோபத்துடன் இருப்பதை இந்த இயக்கத்தின் வழியாக உணர முடிகிறது என்று தோழர்கள் கூறுகிறார்கள். களப்பணிகளில் கழகத் தோழர்கள் உற்சாகமாக களமாடி வருவது மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கி வருகிறது என்றால், அது மிகைக் கூற்று அல்ல.

சென்னையில் தொடங்கிய கழக மகளிர் மாநாடு, ஈரோடு, திருப்பூர், மேட்டூர், கோபி என்று தொடர்ந்து தோழர்களை உற்சாகத்தோடு களமிறக்கியது. இப்போது தமிழகத்தின் உரிமைகளை மறுக்கும் பார்ப்பன பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவும் தமிழகத்தின் தன்னுரிமை இலட்சியத்தை முன்னெடுக்கவும் சென்னையில் மண்டல மாநாட்டை கழகம் நடத்துகிறது.

கருத்தாழமிக்க செய்திகள் கலை நிகழ்வுகளோடு நடைபெற இருக்கும் மாநாடு தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட செயல் நகர்வுகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அமையும். தமிழகத்தின் இயற்கை வளச் சுரண்டல்களுக்கு எதிராகத் தொடர்ந்து களமாடி வரும் பேராசிரியர் ஜெயராமன், பெரியாரியலையும், தன்னுரிமைப் போராட்டத்தையும் முன்னெடுப்பதில் துடிப்புடன் களமாடி வரும் மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி, கழகப் பொதுச் செயலாளர், கழகத் தலைவர் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் ‘களை’ கட்ட இருக்கின்றன. களப்பணியாளர் பத்ரி குறித்து நினைவுகளைப் பதிவு செய்யும் நூலை நமது மரியாதைக்குரிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் வெளியிடுகிறார்.

மண்டல மாநாடு என்றாலும் மாநாட்டின் முக்கியத்துவம் கருதி, மாநிலம் முழுதும் தோழர்கள் திரண்டு வர அழைக்கிறோம்.

தமிழ்நாட்டில் இப்போது திரும்புமிடமெல்லாம் ‘பெரியார் பெரியார்’ என்ற முழக்கமே கேட்கிறது. இளைஞர்கள் முதல் முதியோர் வரை பெரியாரின் இலட்சியச் சுடரைக் கையில் ஏந்தி விட்டார்கள். கலைத் துறைத் தமிழர்கள், இனி பெரியார் தத்துவங்களே தமிழர்களைப் பாதுகாக்கும் என்று முரசறையத் தொடங்கி விட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு காலத்தை உருவாக்கவே பெரியார் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு எத்தனையோ ஆண்டுகாலமாக எதிர்நீச்சல் போட்டு உறுதியோடு பயணித்தது. அதற்காகக் கடும் விலைகளைத் தந்தது.

அந்த உழைப்பு வீண் போகவில்லை; பெரியார் எனும் பேரெழுச்சி புது வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி விட்டது.

இந்த வெள்ளத்தின் ஓட்டத்தை மடை மாறாமல் கொள்கை திசை நோக்கி ஓட வைக்க வேண்டிய பொறுப்பு நமது கையில் தானே இருக்கிறது?

வரலாறு நமக்கு தந்திருக்கும் இந்த கடமையை நாம் தவற விடக் கூடாது; களத்தை மேலும் விரைவுபடுத்துவோம்!

மேலும் மேலும் தீவிரமாய்...

மேலும் மேலும் உற்சாகமாய் கூடுவோம்!

மாநாடுகளின் சந்திப்பும், உரையாடலும் நமக்குப் பாதையை செப்பனிட்டு புத்துணர்ச்சியை ஊட்டும் தானே!

வாருங்கள் தோழர்களே, சென்னையில் சந்திப்போம்!