தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரில் செயல் படும் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூர்ய நாராயண சாஸ்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழக ஆளுநர் இறக்குமதி செய்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் வந்தன. அதற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கருநாடகத்திலிருந்து சூரப்பா எனும் பேராசிரியரை துணைவேந்தராக ஆளுநர் இறக்குமதி செய்துள்ளார். தமிழ்நாட்டில் பல்கலைக் கழகத் துணைவேந்தராகக் கூடிய தகுதி பெற்றவர்களே இல்லை என்பதுபோல தமிழகத்தின் தனித்துவமான ‘சமூகநீதி’ தத்துவத்துக்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது ஆளுநரின் இந்த நடவடிக்கை.

தமிழ்நாடு கலை மற்றும் நுண்கலைப் பல்கலைக் கழகத்துக்கு கேரளாவைச் சார்ந்த பரிமளாதேவி என்ற ஒரு  பெண் துணை வேந்தராக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசி வரும் அமைச்சர் ஜெயக்குமார், துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்று கூறி, ‘சரணாகதி’ அமைச்சரவையாகவே இருக்க விரும்புவதை வெளிப்படுத்திவிட்டார். இதற்கு மாறாக சட்ட அமைச்சராக இருக்கும் சி.வி. சண்முகம், இந்த நியமனங்கள் குறித்து ஆளுநர் தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், இந்த நியமனங்கள்  வருந்தத்தக்கது என்றும் கருத்து கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் எப்போதும் ஆளுநரிடம் விடப்பட்டதில்லை. பல்கலைக்கழக சட்டவிதிகளின் படி தேர்வுக் குழு தரும் பட்டியலிலிருந்து ஒருவரை தேர்வு செய்யும் உரிமை, மாநில அரசிடமே இருந்தது. ஆளுநர் ஒப்புதல் என்பது ஒரு சம்பிரதாயம் தான்.

ஒரு மாநிலத்தின் ஆளுநராக அந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களையே நியமிப்பதில்லை. அதற்காக ஒரு மாநிலத்தின் ஆளுநராக வந்து உட்காருகிறவர்கள், மாநிலத்தின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக பிற மாநிலத்தவர்களையே பிடிவாதமாக இழுத்து வந்து நியமிப்பது கூட்டாட்சி அமைப்புக்கும் மாநில உரிமைக்கும் எதிரானது. இவை எல்லாவற்றையும் விட தமிழ்நாட்டில் கட்டி எழுப்பப்பட்ட ‘சமூகநீதி’ தத்துவத்துக்கே விடப்படும் சவால். இந்தியா முழுமைக்கும் மத்திய அரசின் பல்கலைக்கழகங் களாக 31 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படாத மாநிலங் களுக்காக புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப் பட்டது. அதன்படி மோடி தலைமையிலான மத்திய ஆட்சி 2016இல் 16 புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்கியது. 5 ஆண்டுகள் பதவியில் இருக்கக்கூடிய துணைவேந்தர்களும், மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சகத்தின் தேர்வுக்குழு பரிந்துரை வழியாக நியமிக்கப்பட்டார்கள்.

இந்த 16 துணைவேந்தர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை.

திருவாரூரில் புதிதாக தொடங்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பி.பி.சஞ்சய், ஒரு கருநாடகத்துக் காரர். இப்போது துணைவேந்தராக இருக்கும் ஆதித்ய பிரசன்னராய் என்பவர், ஒரிசாக்காரர். இவரை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு உறுப்பினர், “தமிழக பல்கலைக் கழகத்துக்கு ஒருதமிழரை நியமிப்பதே, பல்கலைக் கழக வளர்ச்சிக்கு உதவும்” என்று பரிந்துரையில் எடுத்துக்காட்டியும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம், அந்தக் கருத்தைப் புறந்தள்ளியது.

கல்வி நிறுவனங்களைக் ‘காவி மயமாக்கும்’ நோக்கத்தோடு, மோடி ஆட்சி செயல்பட்டு வருவதால் காவிகளுக்கு எதிரான தமிழ்நாட்டின் சமூக நீதிப் பண்பாடுகளை சீர்குலைப்பதில் மிகத் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சமூக நீதி என்பது ஒரு கொள்கை மட்டுமல்ல; அது ஒரு பண்பாடாகவே ‘பெரியார் மண்’ வளர்த்தெடுத் திருக்கிறது.

மோடியின் ஆட்சி கல்வி - கலாச்சாரம் - பாது காப்பு என்ற மூன்று முக்கிய துறைகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டது. (இது குறித்து ‘நிமிர்வோம்’ மார்ச் இதழில் விரிவான கட்டுரை வெளி வந்துள்ளது)

‘சிக்ஸா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ்’, பாரதிய சிக்சா மண்டல்’ என்ற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகள் கல்வித் துறையை தனது முழுமையான அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறது. அவ்வப்போது மத்திய அமைச்சர்களுடனான சந்திப்புகளை நடத்தி அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

‘நாக்பூர்’ தலைமையகத்திலிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் அவை செயல்படுத்தப்படுகின்றன. ‘சரணாகதி’ அமைச்சரவை இதை வேடிக்கைப் பார்க்கிறது.

இனி, தமிழக பா.ஜ.க.வுக்கு தலைமை தாங்க, ஏன் ‘தமிழ் இசை’களை நியமிக்க வேண்டும்? ‘இந்துஸ்தானி இசைகளை’ வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கட்சியை நடத்த வேண்டியது தானே? தமிழர்கள் உணர்வுகளை சீண்டிப் பார்க்கிறது, பார்ப்பனியம்; கடும் விலையை தரப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.

Pin It