ஜாதி ஆணவப் படுகொலைகளில் சமூகத்தில் நிலவும் ஜாதிவெறிக்கு அரசு நிர்வாகமும் காவல்துறையும் துணை போவதை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உடுமலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக சங்கர் என்ற தலித் பொறியாளரை ஜாதி வெறியர்கள் படுகொலை செய்தனர். முன்கூட்டியே காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டும்கூட காவல்துறை அலட்சியம் காட்டியது. எனவே ‘ஆதித்தன்’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இது குறித்து மேலும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைத் திரட்டி விரிவான மனுவை தேர்தல் முடிந்த பிறகு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க மனு திரும்பப் பெறப்பட்டது. இப்போது கழக சார்பில் முன் வைத்த கோரிக்கைகளை வேறு ஒரு ஜாதி ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறது.

2014ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த விமலாதேவியும், திலிப்குமாரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களை வலுக் கட்டாயமாக பிரித்த உசிலம்பட்டி மற்றும் வத்தலக்குண்டு காவல்துறையினர் விமலாதேவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் சில தினங்களில் விமலா தேவி ஜாதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் உருத் தெரியாமல் எரிக்கப்பட்டது.

திலிப்குமாருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவரை சென்னையில் தங்க வைத்து அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி, ரிட் மனுதாக்கல் செய்தது. இவ்வழக்கில் நீதிபதி இராமசுப்பிர மணியம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டதோடு, காவல்துறை செய்த தவறுகள் குறித்து ஐ.ஜி. விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஐ.ஜி.யும் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில், விமலாதேவி தொடர்பான வழக்கு, நீதிபதி இராமசுப்பிரமணியம் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல அதிரடியான உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தார்.

விமலாதேவி வழக்கைப் பொறுத்தவரை, இதில் தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தி, ராணி உள்பட 5 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்த வேண்டும்; 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொலைபேசி எண் (ஹெல்ப் லைன்) அறிவித்திட வேண்டும்; புகார்களை இணையம் வழியாகவும் பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்றுக் கொள்ளும் காவல்நிலையம், மேற்படி பிரச்சினை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.

இதை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்; பெற்றோர்கள் மற்றும் தம்பதியினர் மற்றும் காதலர்களை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவைப்படும் வழக்குகளில் பெற்றோருக்கு சட்டத்தை எடுத்துரைப் பதற்கான ஏற்பாடும், அச்சுறுத்தலில் உள்ள ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர் மற்றும் காதலர்கள் தங்குவதற்கு மாவட்டங்கள் தோறும் குறுகிய காலகாப்பக வசதியும் செய்து தரப்பட வேண்டும்; இதற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்திட வேண்டும் என்று பல அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி இராமசுப்பிரமணியம், மேற்கண்ட அனைத்து உத்தரவுகளையும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்குகெடு விதித்தார்.