அன்று “இன்றைக்கு இலங்கைத் தமிழன் பாதிக்கப்படுகிறான். தமிழ்நாட்டிலே ஓர் அரசும் இல்லை. ஆகவே படை அனுப்பப்படவில்லை. எனவே அந்த அரசு இல்லையே என்கின்ற என்னுடைய ஏக்கத்தை வெளியிடுகிறேனேயல்லாமல் வேறல்ல. அப்படி ஓர் அரசை உருவாக்க வேண்டும். இந்தியாவிலே நாங்கள் 1962 இல் கைவிட்டு விட்ட பிரிவினைவாதத்தை இனி எடுத்து வைத்து அதற்கு ஆதாரம் தேடுகிறேன் என்று யாராவது அவசர அரசியல்வாதிகள் பேச முன் வருவார்களேயானால் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், துன்பத்தால் துயரத்தால் மகனை பறி கொடுத்துவிட்ட பரிதாபத்தால் அழுது கொண்டிருக்கின்ற ஒரு தாய் கண்ணீரும் கம்பலையுமாக ஐயோ பாவி போய்விட்டானே என்று சொன்னால், பாவி என்று சொன்னதற்கு அந்த நேரத்திலே அவனை திட்டுகின்ற பொருளல்ல.

அன்பு, பாசம், பற்று இவைகளால் தான், “ஐயோ! பாவி போய்விட்டாயே” என்று இறந்த மகனைப் பற்றிக்கூட சொல்லுவார்கள். அதைப்போலத்தான் நான். ஆதங்கப் படுகிறேன், ஏக்கமடைகிறேன், வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்றால் ராஜராஜசோழன் இருந்தான்; ராஜேந்திரச் சோழன் இருந்தான். அவர்களுக்குக் கீழே தமிழகத்தில் ஒரு அரசு இருந்தது. இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் உடனே படை சென்றது. இலங்கைத் தமிழன் காப்பாற்றப்பட்டான். இன்றைக்கு அங்கே அரசில்லை. ஆனால் ‘டெசோ’ இயக்கமென்ற முரசு இருக்கிறது.....

நாம் வடநாட்டை எட்டிப் பார்த்து, வட நாட்டிற்கு நடந்து நடந்து பார்த்து, முறையீடுகளை கொண்டுப்போய்க் கொடுத்து கொடுத்துப் பார்த்து, கிளர்ச்சிகளை நடத்தி நடத்திப் பார்த்து, சிறைச்சாலைகளை நிரப்பி நிரப்பிப் பார்த்து, இங்கே இருக்கின்ற திராவிடர் கழக வீரமணி தலைமையிலே ஆகஸ்டு தினத்தை துக்க தினம் என்றெல்லாம் அறிவித்துப் பார்த்து, மாவீரன் நெடுமாறன் அவர்கள் தியாகப் பயணத்தை நடத்திப் பார்த்து, தி.மு.க.வினர் இரண்டு மூன்று முறை சிறைச்சாலைகளை நிரப்பி, 30,000; 40,000 பேர் சிறைச்சாலைகளிலே அடைக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுடைய தேக்குமர தேகங்களுக்குத் தீயிட்டுக் கொண்டு முடிந்த எல்லாவற்றிற்கும் பிறகு, வடக்கே இருக்கிற டெல்லிப் பட்டணம் - அங்கே அமர்ந்திருக்கின்ற மத்திய அரசு - ராஜீவ் காந்தியினுடைய அரசு; இன்னமும் பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று காலம் தாழ்த்திக் கொண்டிருக்குமேயானால், வேறு வழி என்ன?”

(கலைஞர் ‘டெசோ’ கூட்டங்களில் 1985 இல் பேசியது. தி.மு.க. வெளியீடான ‘தமிழனுக்கு ஒரு நாடு - தமிழ் ஈழ நாடு’ நூல்.)

இன்று....

“இந்தியா இறையாண்மை மிக்க நாடு. அதைப் போலவே இலங்கையும் இறையாண்மை மிக்க நாடுதான். ஒரு இறையாண்மை மிக்க நாடு மற்றொரு இறையாண்மை மிக்க நாட்டிற்கு எந்த வகையான வேண்டுகோளை விடுக்கலாம். அந்த நாட்டின் மீது எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கலாம்; அரசியல் சட்ட ரீதியாக இருந்துவரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் அறிவார்கள்”

- டெக்கான் கிரானிக்கல் ஏட்டுக்கு கலைஞர் பேட்டி. ‘முரசொலி’ (23.3.2009)

Pin It