kolathoor mani chennai

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் ‘பெரியாரும் காமராசரும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை:

“காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசை வீழ்த்தியே தீருவேன் என அறிவித்த பெரியார், அதே காங்கிரஸ் கட்சியில் இருந்த காமராசரை அரவணைத்தார் என்றால் அதற்கு என்ன காரணம்? பெரியாரின் அடியொற்றி செயல்பட்டார் காமராசர் என்பதுதான். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்கான தடைகளை தகர்ப்பதில் பெரியாருக்கு இருந்த அதே உணர்வு காமராசருக்கும் இருந்திருக்கிறது. பெரியாருக்கு இருந்த கருத்து வீரியம் காமராசருக்கும் இருந்திருக்கிறது.

காமராசரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரது மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கொள்கைத் தாக்கம் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளிப் பருவத்திலேயே ‘மந்திர-தந்திரங்களை’ காமராசர் எதிர்த்திருக்கிறார். பீதாம்பர அய்யர் என்பவர் ‘மந்திரங்களை’ செய்ததை நேரில் பார்த்து அவர் எப்படி எல்லாம் அதை செய்கிறார் என்பதை சக மாணவர்களிடம் செய்து காட்டி விளக்கியிருக்கிறார். 21 வயது இளைஞராக இருக்கும்போதே விருதுநகரில் பெரியாரை அழைத்து மாநாடு நடத்தியிருக்கிறார். பள்ளியில் ஒழுங்காகப் படிப்பது இல்லை என்று கேரளாவில் உள்ள அவரது தாய்மாமன் வீட்டுக்கு காமராசரை அவரது பெற்றோர்கள் அனுப்பினார்கள். அங்கே போயும் வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்தியபோது அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்.

ஒரு தேசியவாதியாக அவர் போராடவில்லை. தமிழர் உணர்வு என்ற அடிப்படையிலேயே போராடியிருக்கிறார். மொழிவாரிப் பிரிவினைகளின்போது 1953ஆம் ஆண்டிலேயே ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்துவிட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் என்ற மாநிலங்களும் மொழி வழியாகப் பிரியாமல் தடுப்பதற்காக மூன்று மாநிலங்களையும் இணைத்து ‘தட்சிணப் பிரதேசம்’ ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடந்த போது பெரியார் அதைக் கடுமையாக எதிர்த்தார். பெரியார் ஒரு கன்னடர் என்றும் கன்னடர், தெலுங்கர் உரிமைகளுக்காக தமிழர் நலனை அடகு வைத்தவர் என்றும், இப்போது சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். பெரியாருக்கு அத்தகைய உணர்வு இருந்திருக்குமானால், அல்லது திராவிடர் நாடே தேவை என்று கருதியிருந்தால் அவர் தட்சிணப் பிரதேச திட்டத்தை ஆதரித்திருப்பார். தமிழர் நலன் என்ற உணர்வின் காரணமாகவே அத்திட்டத்தை பெரியார் எதிர்த்தார். தட்சிணப் பிரதேசம் என்ற ஒன்று அமைந்துவிட்டால், தமிழர்களின் வேலை வாய்ப்புகளை, மலையாளிகளும் கன்னடர்களும் பறித்துக் கொண்டுபோய் விடுவார்கள்; அவர்கள் எஜமானர்களாகி விடுவார்கள்; தமிழன் எடுபிடியாகத்தான் இருப்பான் என்றார் பெரியார். இது குறித்து முடிவெடுக்க பெங்களூரில் முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டினார் நேரு. தட்சிணப் பிரதேசம் உருவானால் ‘இரத்தக் களரிதான்’ ஏற்படும் என்று பெரியார் தந்தி மூலம் எச்சரித்தார். பெரியார் எந்த கருத்தைக் கூறி எச்சரித்தாரோ அப்படியே அதே கருத்தை நேருவிடம் கூறினார் காமராசர். காமராசர் ஒரு தேசிய கட்சியில் இருந்தாலும், அவர் மொழி வழி மாநிலங்கள் பிரிவது தேசியத்துக்கு எதிரானது என்று கருதவில்லை. இரு தலைவர்களுமே, தமிழ்நாடு தமிழர் நலன் என்ற கருத்தில் பிரிக்க முடியாதபடி ஒன்றுபட்டு நின்றார்கள்.

இங்கே குலக்கல்வித் திட்டம் பற்றி பேசினார்கள். ராஜாஜி அத் திட்டத்தைக் கொண்டுவந்தபோது காமராசர் அது காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கொண்டு வருகிற திட்டம் என்பதற்காக ஆதரிக்கத் தயாராக இல்லை. அதை எதிர்த்தார். அப்போது அத்திட்டத்துக்கு புதிய கல்வித்திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பள்ளிக் குழந்தைகள் அரை நேரம் அவரவர் பெற்றோரின் குலத் தொழிலை செய்ய வேண்டும் என்பது அத்திட்டம்.

இப்போது பா.ஜ.க. ஆட்சி 2015ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்கள் உரிமைச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்த பிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ அவர்களது பாரம்பர்யத் தொழிலை செய்யலாம் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. ராஜாஜி கொண்டு வந்தது குலக் கல்வி. இப்போது குலத் தொழிலை பலரும் கைவிட்டு நகர்ப்புறத்தில் குடியேறி வேறு தொழிலுக்கு மாறி விட்டார்கள். பல குடும்பங்கள் ‘அவுட் சோர்சிங்’ முறையில் வேலைகளை எடுத்து தொழில் செய்து வருகின்றன. பள்ளிக் குழந்தைகள் இந்தப் பாரம்பர்யத் தொழிலை செய்வதில் பெற்றோர்களுக்கு உதவலாம் என்று குழந்தைகளை உடல் உழைப்பில் பயன்படுத்தக் கூடாது என்றிருந்த சட்டத்தைத் திருத்தி மாற்றியமைக்கிறது, பா.ஜ.க.வின் இந்த புதிய கல்விக் கொள்கை. அன்று ‘குலக்கல்வி’; இன்று ‘பாரம்பர்யக் கல்வி’யாக வருகிறது.

அன்று ராஜாஜி கொண்டு வந்த ‘புதிய கல்வி’ கொள்கைக்கு ‘குலக்கல்வித் திட்டம்’ என்று பெரியார் பெயர் சூட்டினார். அந்தப் பெயர்தான் நிலைத்தது. குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாட்டை சென்னையில் பெரியார் கூட்டினார். நீடாமங்கலம் அ.ஆறுமுகம் என்ற பெரியார் தொண்டர் தலைமையில் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படை ஒன்று நீடாமங்கலத்திலிருந்து புறப்பட்டு, நடைபயணமாகவே சென்னை வந்தது. பெரியார், “பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். ஒவ்வொருவரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள். நான் நாள் குறித்து அறிவிப்பேன். அக்கிரகாரம் எரிய வேண்டும்” என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தார். எச்சரிக்கை செய்தாரே தவிர, நாள் குறிக்கவில்லை. குலக்கல்வி எதிர்ப்புப் படை சென்னை வந்தடைந்தது. அப்போது ராஜாஜி பதவி விலகி, காமராசர் முதல்வராகிவிட்டார். குலக்கல்வி எதிர்ப்புப் படையினர், காமராசரை கோட்டையில் சென்று சந்தித்தனர். ‘நல்ல சேதி வரும் போய் வாருங்கள்’ என்றார் காமராசர். நான்கே நாள்களில் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார் காமராசர். பெரியார், காமராசரின் இந்தச் செயலை மாய்ந்து மாய்ந்து பாராட்டி மகிழ்ந்தார்.

5 சதவீதம், 8 சதவீதம் என்றிருந்த தமிழர்களின் கல்விக் கற்றலை 31 சதவீதமாக உயர்த்திய பெருமை காமராசரையே சாரும் என்று எழுதினார் பெரியார்.

‘தகுதி திறமை’ கெட்டுப் போகிறது என்று இடஒதுக்கீட்டை எதிர்த்தப் பார்ப்பனர்களுக்கு சரியான பதிலடி தந்தார் காமராசர். இங்கே பேசியவர்கள் அதை எல்லாம் கூறினார்கள்.

‘தகுதி திறமை மோசடி’ என்று கருத்துகளை எல்லாம் தொகுத்து பெரியார் ஒரு நூலாகவே வெளியிட்டார்.

அது மட்டுமல்ல; அய்.ஏ.எஸ். போன்ற அகில இந்திய தேர்வுகளை தாய்மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காமராசர். இப்போது அனைத்து இந்திய தேர்வுகளை இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் எழுத முடியும். 22 சதவீதம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முறை அய்.ஏ.எஸ்.சுக்கு வந்தபோது வடநாட்டில் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். நாங்கள் ஏன் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் நமக்கு தாய்மொழியில் எழுத உரிமையில்லாமல் சாதாரண மத்திய அரசு பணிகளுக்குக்கூட 100 சதவீதம் ஆங்கிலத்தில் எழுத வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அகில இந்திய கட்சியில் இருந்தாலும் டெல்லிக்காரன் சொல்வதை எல்லாம் அப்படியே அடிபணிந்து நான் கேட்பவன் அல்ல என்று ராஜாஜிக்கு பதில் சொன்னவர்காமராசர். ஒரு வரலாற்றுத் தகவலைக் குறிப்பிட வேண்டும். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த ராஜாஜி, 1942இல் காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகிக் கொண்டார். அதற்குப் பிறகு காங்கிரஸ் அதிகாரத்துக்கு வரப்போகிறது என்பதை புரிந்து கொண்டு மீண்டும் காங்கிரசில் சேர முனைகிறார். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தை நேரடியாகவே போய் சந்தித்து, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராகி விடுகிறார். காமராசருக்கு தெரியாமலேயே இவ்வளவும் நடக்கிறது. திருச்செங்கோட்டில் மாவட்ட காங்கிரஸ், ராஜாஜி காங்கிரசில் இணைவதை வரவேற்று தீர்மானம் போட்டது. திருப்பரங்குன்றத்தில் காமராசர் தலைமையில் மாநில காங்கிரஸ் கூடி, ராஜாஜி மாகாண காங்கிரஸ் உறுப்பினரானதை இரத்து செய்தது. இறுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தனது முடிவையே மறு உறுதி செய்தது. அப்போதுதான் அண்ணா எழுதினார், “கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது; கலங்காதீர் காமராசரே, கருஞ்சட்டைப் படை உமது கண்ணீரைத் துடைக்கும்” என்று. இது வரலாறு.

காமராசர் முதலமைச்சராக வந்தவுடன், அவர் உருவாக்கிய அமைச்சரவையில் ஒரு பார்ப்பனர்

கூட இடம் பெறவில்லை. பின்னாளில்தான் ஆர்.வெங்கட்ராமன் அமைச்சராக்கப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர்கள்தான் உள்துறையை தங்களிடம் வைத்திருப்பார்கள். ஆனால் காமராசர் உள்துறையை கக்கன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த தலைவரிடம் ஒப்படைத்தார். அறநிலையத் துறைக்கு பி.ஆர். பரமேசுவரன் என்ற தாழ்த்தப்பட்டவரை நியமித்தார். அதற்கு முன் இருந்த ராஜாஜி அமைச்சரவையில்

5 பார்ப்பனர்கள் இடம் பெற்றிருந்தார்கள். 205 சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பார்ப்பனர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளித்தார். இதைப் பாராட்டிய பெரியார், “நானாக இருந்தால்கூட 20 பார்ப்பனருக்கு வாய்ப்பளித்திருப்பேன். காமராசர் மிஞ்சி விட்டார்” என்று எழுதினார். உயர் பதவிகளில் தமிழர்களே நிரம்பி வழிந்தனர். நெ.து. சுந்தர வடிவேலு, கல்வித் துறை இயக்குனராக்கப்பட்டார். அவரைவிட சிறந்த கல்வி பெற்று அமெரிக்காவிலே ஆராய்ச்சியாளராக இருந்தவரை அவர் காமராசரின் ஜாதிக்காரராக இருப்பதாலும் அவரை கல்வி அதிகாரியாக்கலாம் என்று கூறப்பட்ட போது காமராசர் அதை ஏற்க மறுத்து நெ.து.சு. அவர்களையே கல்வித் துறைக்கு அதிகாரியாக நியமித்தார்.

ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும்:

ஒரு அதிகாரிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காத நிலையில் அவருக்காக வ.உ.சிதம்பரனாரின் மகன், வ.உ.சுப்ரமணியம் காமராசரிடம் பரிந்துரைக்கு வந்தார். அதிகாரியின் பெயர் கிறிஸ்துவத்தைச் சார்ந்ததாக இருந்ததால் அதன் காரணமாக அவரது பதவி உயர்வு தடுக்கப் பட்டிருக்கலாம் என்று கருதிய வ.உ.சுப்பிரமணியம், அவர் கிறிஸ்தவராக இருந்தாலும் நாடார் சமூகம் என்று கூறியபோது காமராசருக்கு கோபம் வந்துவிட்டது. ‘ஜாதிக்காரன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு வராதே; போ’ என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். ஜாதியைக் கூறியதாலேயே அந்த அதிகாரிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 6 மாதம் தள்ளி போடப்பட்டது காமராசர் ஆட்சியில்!

ராஜாஜி இறந்தபோது பெரியார் அவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றதை எல்லோரும் குறிப்பிடு வார்கள். அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது அங்கே அதிபராக இருந்த நிக்சனை, முதலமைச்சர் என்ற முறையில் சந்திக்க விரும்பினார். ஆனால், நிக்சன் சந்திக்க மறுத்தார். பிறகு காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது இந்தியா வந்த நிக்சன், காமராசரை சந்திக்க விரும்பினார். காமராசர், “எங்கள் மாநில முதல்வரையே சந்திக்க மறுத்த உங்களை நான் சந்திக்கத் தயாரில்லை” என்று மறுத்து விட்டார். (கைதட்டல்)

காமராசர் நடத்திய ஆட்சி பெரியார் கொள்கை களின் ஆட்சியாகவே இருந்தது. அதன் காரணமாகத் தான் ராஜாஜியே காமராசர் ஆட்சியை ‘தெய்வத்தை ஒதுக்கிவிட்ட ஆட்சி’ என்ற தலைப்பிட்டு ‘கல்கி’ பத்திரிகையில் 8.12.1961இல் தலையங்கம் எழுதினார். காமராசர் மீது பார்ப்பனர்களுக்கு அவர் பெரியார் வழியில் செல்கிறார் என்பதால் அவ்வளவு கோபம்!

அதற்குப் பிறகு 20 நாள் கழித்து ராஜபாளையத் தில் டிசம்பர் 31இல் காமராசர் இவ்வாறு பேசினார்:

“ஏழைகளை வாழ வைப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் ஒரு வேளையாவது நல்லபடி சாப்பிட வகை செய்ய வேண்டாமா? படிக்க வழி செய்ய வேண்டாமா? இதைச் செய்தால் காங்கிரஸ் ஒழியணும் என்கிறார்கள். மரம் வளர்த்தவன் தண்ணீர் விடுவானாம்! இது தர்மமாம்; ஏழைகளை ஆண்டவன் காப்பாற்றுவான் என்கிறார்கள். மரம் வைத்தவனும் தண்ணீர் ஊற்றவில்லை; மற்றவர்களும் ஊற்றவில்லை. அதைப் பார்த்த பிறகுதான் ஏழைகளுக்கு சர்க்கார்தான் வசதி செய்ய வேண்டும் என்கிறேன்” என்று பேசினார். ராஜாஜிக்கு காமராசர் மீது ஆத்திரம் வந்தது ஏன் என்பது இப்போது புரியும்.

சென்னை திருவான்மியூரில் சலவைத் தொழிலாளர் மாநாடு ஒன்று நடந்தது; மாநாட்டில் பேசிய ராஜாஜி, “நீங்கள் உங்களது தொழிலை மேலும் சிறப்பாக செய்வது எப்படி என்பதில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும்; எல்லோரும் படிக்க வந்து விட்டால் பிறகு உங்கள் தொழிலை யார் செய்வது?” என்று கேட்டார். குழந்தைகளுக்கு எல்லாம் காமராசர் என்று பெயர் சூட்டினார். ‘பெயர் சூட்டுவதற்கு பெரியார் ஒரு ரூபாய் கேட்பார். இன்னும் ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால் நல்ல பெயர் சூட்டுவேன்’ என்று கூறி, அந்தக் குழந்தைக்கு ‘காமராசர்’ என்று பெயர் சூட்டுவார்.

1967 தேர்தலில் காமராசர் தோல்வி அடைந்து விட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. பெரியார் தி.மு.க.வை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார். அதற்குப் பிறகு 11.1.1968இல் ‘விடுதலை’யில் வெளியிட்ட அறிக்கையில் “கல்வி சம்பந்தப்பட்ட வரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்துச் சொல்வதை நிறுத்திவிட்டுக் காமராசர் வாழ்த்துக் கூற வேண்டும்” என்று எழுதினார். இங்கேகூட அந்த வாசகத்தை காமராசர் படத்துக்குக் கீழே நமது தோழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

1969ல் நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது பெரியார் காமராசரையே ஆதரிக்க வேண்டும் என்று எழுதினார். தி.மு.க. தனது ஆதரவு வேட்பாளரை காமராசருக்கு எதிராக நிறுத்தியதை பெரியார் குறை கூறினார். தி.மு.க.வை ஆதரிக்கிறோம் என்பதற்காக தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை எல்லாம் ஆதரிக்க வேண்டும் என்று பெரியார் கருதவில்லை. காமராசர் தொண்டின் மீது பெரியாருக்கு அவ்வளவு பற்றும் ஈடுபாடும் இருந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணா உடல்நலமின்றி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றபோது காமராசர் அண்ணாவிடம் கூறினார், “நீங்கள் நலம் பெற்று திரும்பி வரும்வரை எங்கள் கட்சி உங்கள் ஆட்சிக்கு எந்த இடையூறும் செய்யாது” என்று கூறினார். “தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுகூட 6 மாதங்கள் வரை ஆட்சியின் மீது எந்த விமர்சனமும் வேண்டாம் அவகாசம் தருவோம்” என்று காமராசர் கூறினார். அத்தகைய உயரிய பண்பாடு அன்று அரசியலில் இருந்தது.

பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவரக் கோரி காமராசரைக் கொல்ல ஆர்.எஸ்.எஸ். நிர்வாண சாதுக்கள் டெல்லியில் நடத்திய கொலை வெறியாட்டம் குறித்து பொதுச் செயலாளர் விளக்கினார். முதலில் பூரி சங்கராச்சாரி, டெல்லியில் பசுவதை தடைச் சட்டம் கோரி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 1966 நவம்பர் 7ஆம் தேதி காமராசர் வீட்டுக்கு தீ வைத்து வெறியாட்டம் போட்டார்கள். அதற்கு 3 நாட்களுக்கு முன் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இந்தப் போராட்டம் குறித்து பேசப்பட்டது. காமராசர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர். அப்போது காமராசர் கூறினார், “இவர்கள் டெல்லியில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்; சென்னையில் போய் நடத்த வேண்டியதுதானே?” என்று பேசியிருக்கிறார். “இவர்களுக்கு தைரியம் இருந்தால் சென்னையில் போய் நடத்தட்டும்; பெரியார் பார்த்துக் கொள்வார்” என்று கூறியவர் காமராசர். (கைதட்டல்)

ராஜாஜி 1966 பிப்.7ஆம் தேதி சென்னை கடற்கரையில் பேசும்போது, “தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த்தினால் மற்ற காக்கைகள் தானே பறந்து ஓடிவிடும்” என்று காமராசரை கருப்புக் காக்கை என்று குறி வைத்துப் பேசினார்.

டெல்லியில் காமராசர் வீடு தாக்கப்பட்ட அடுத்த 5 நாள்களில் காமராசருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. “பசுவதை எதிர்ப்புப் போராட்டத்தின்போது எப்படியோ தப்பிவிட்டாய். ஆனால் நீ இனி உயிருடன் வெகு நாள்கள் இருக்க முடியாது” என்று அந்த மிரட்டல் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘சுதேசமித்திரன்’, ‘மெயில்’ ஏடுகள் 13.11.1966 அன்று இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ 1.11.1966 அன்று வெளியிட்ட ‘தீபாவளி’ சிறப்பு இதழில் இவ்வாறு எழுதியது.

“அடுத்த 3 மாதங்களில் ஏதாவதொரு மிகப் பெரிய தேசிய நஷ்டம் ஏற்படலாம். தலைசிறந்த அரசியல் தலைவர் ஒருவரோ மாநில ஆட்சித் தலைவர் ஒருவரோ திடீரென மறைய (சாக) நேரலாம் எனத் தோன்றுகிறது. அல்லது விபத்தின் விளைவாக நாட்டின் மிகப் பெரும் தலைவர் ஒருவர் மரணமடைவார்” என்று எழுதியது.

ஆக, காமராசர் உயிருக்கு குறி வைத்து பார்ப்பன சதிவலை ஒன்று பின்னப்பட்டது. பெரியார் இதையெல்லாம் தொகுத்து, ‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்’ என்ற நூலை வெளியிட்டார். காங்கிரசுக்காரர்கள் காமராசர் விழா என்ற பெயரில் அவரது படத்துக்கு மாலை போட்டுக் கொண்டிருப் பார்கள். பெரியார் மாறாக அவரது சாதனைகளை அவருக்கு உருவான பார்ப்பன எதிர்ப்புகளை பேசினார், எழுதினார். நூல்களாக்கி பரப்பினார்.

காமராசர், அகில இந்திய கட்சியில் இருந்தாலும் அவர் தமிழராக அதுவும் உணர்வுள்ள தமிழராக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கும் தமிழராக இருந்தார். இங்கே பேசிய பழ. கருப்பையா அ வர்கள் கூறியதுபோல், “காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை” தான். இந்த வரலாறுகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல இத்தகைய விழாக்களைப் பயன்படுத்துவோம்” என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

கை ரேகையைப் பாருங்கள்

காமராசருடைய அனுபவம் சார்ந்த நிர்வாகத் திறமைக்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அப்போதெல்லாம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் முதலமைச்சர்களுக்கு “தேர்வு உரிமைகள்” (கோட்டா) உண்டு. அந்த உரிமையின்கீழ் இடம் கேட்டு முதலமைச்சருக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வரும். இப்போதெல்லாம் அத்தகைய இடங் களுக்கு உறவினர்கள், கட்சிக்காரர் களிடமிருந்து சிபாரிசுகள் வரும். அல்லது பணத்துக்கு அந்த இடங்களை விற்பார்கள். அப்போது இந்த சீர்கேடுகள் கிடையாது. மருத்துவத் துறை செயலாளர், ‘ஏராளமாக இடம் கேட்டு விண்ணப்பங்கள் வந்திருக்கிறதே; இதில் யாரைத் தேர்வு செய்வது’ என்று காமராசரிடம் கேட்டார். சிறிது நேரத்தில் காமராசர்இதற்கு தீர்வு கூறினார். “விண்ணப்பத்தில் பெற்றோரின் பெயர் என்று இருக்குமிடத்தில் கையெழுத்துப் போடாமல் கைரேகைப் பதித்திருப்பவர் களின் விண்ணப்பங்களை தேர்வு செய்து அனுப்புங்கள்” என்று கூறினார். (கைதட்டல்) அதுவரைப் பள்ளிக்கூடப் பக்கமே திரும்பாத, படிக்காத பெற்றோர் களின் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்கட்டும் என்று காமராசர் நினைத்தார்.

தமிழில் தலைமை உரையாற்றிய முதல் தலைவர்

காமராசர், அகில இந்திய கட்சியான காங்கிரசில் இருந்தாலும் தமிழ் உணர்வை விட்டுத் தராத தலைவர். மொரார்ஜி பிரதமராக இருந்தபோது, கேரள முதல்வர் ஈ.கே.நயினாருக்கு இந்தியில் ஒரு கடிதம் எழுதினார். அதற்கு ஈ.கே. நயினார், மலையாளத்தில் பதில் எழுதினார். ‘மொரார்ஜி என்ன இது? மலையாளத்தில் எழுதினால் எப்படி புரியும்’ என்றார். ‘நீங்கள் இந்தியில் எழுதியது எனக்குப் புரியவில்லையே’ என்றார் ஈ.கே.நயினார்.

காமராசர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அனைத்து இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு நடந்தது. மாநாட்டில் வடநாட்டு பிரநிதிகள் இந்தியில் பேசினார்கள். கருநாடகத்தைச் சார்ந்த குண்டுராவ், தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசினார். அடுத்து தமிழ்நாட்டுப் பிரதிநிதியாகச் சென்ற குமரி அனந்தன் தமிழில் பேசினார். கமிட்டியில் இது பிரச்சினையானது. காமராசரிடம் இந்தப் பிரச்சினை வந்தபோது, பழ. நெடுமாறனை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டார். பழ. நெடுமாறன் நடந்ததைக் கூறினார். ‘நீ செய்ததுதான் சரி; சரியாகச் செய்தாய்’ என்றார் காமராசர். இதை பழ.நெடுமாறன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

காமராசருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். ஆங்கிலத்தில் பேசக் கூடியவர். மற்றவர்கள் கூறுவதுபோல் ஆங்கிலம் தெரியாதவர் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் இருந்தபோது, புவனேசுவரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. ‘எனது தலைமை உரையை எனது தாய்மொழியால் நிகழ்த்துவேன். தேவைப்பட்டால் மொழி பெயர்ப்பாளரை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று நேருவிடம் கூறி விட்டார். அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக தமிழில் தலைமை உரை நிகழ்த்திய பெருமை காமராசருக்குத்தான் உண்டு. (கைதட்டல்)

சேலத்தில் காமராசர் மீது மிகவும் பற்றுள்ள ஒரு பொறியாளர் எனக்கு நண்பர். அவர் அரசு அதிகாரியாக இருந்தாலும் காமராசரிடம் நெருக்கமாக இருந்தவர். 1967 தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு அவரிடம், காமராசர் தமிழக அரசியலில் மிகப் பெரிய அறிவாளி யார்? என்று கேட்டாராம். அதற்கு காமராசரே விடையும் கூறினார். பெரியார் தான் மிகச் சிறந்த அறிவாளி. நான் அகில இந்திய அரசியலுக்குப் போனபோது ‘தற்கொலை முயற்சி என்று பெரியார் தந்தி கொடுத்து எச்சரித்த அறிவாளி’ என்று காமராசர் கூறியதாக என்னிடம் கூறினார்.

- கொளத்தூர் மணி