‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெருமைக்குரியவர் களாக இருந்த நாம் - இன்று வாழ்வுரிமை இழந்து நிற்கிறோம். காலம் காலமாக நமது முன்னோடித் தலைவர்கள் பெரியாரும் காமராசரும் அண்ணாவும் அவர் வழி வந்த தலைவர்களும் கட்டிக் காத்த தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளை நடுவண் பா.ஜ.க. மோடி ஆட்சியிடம் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோம்.

நமது தனித்துவத்தை அழிக் கிறார்கள்; இந்தியப் பண்பாட்டை - பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கிறார்கள்; நாம் இழந்து நிற்கும் உரிமைகளில் சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறோம்.

•             2006ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வை நாம் ஒழித்து விட்டோம்; பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரியில் நமது மாணவ மாணவிகளை சேர்த்தோம்; கடும் உழைப்பால் நல்ல மதிப்பெண் எடுத்துக்கூட நமது வீட்டுச் செல்வங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. ‘நீட்’ தேர்வை எழுது என்று கட்டாயப்படுத்துகிறது மோடி ஆட்சி. திக்கு தெரியாத காட்டில் விழி பிதுங்கி நிற்கிறார்கள் நம் வீட்டுக் குழந்தைகள்.

•             விரும்பும் மொழியை எவரும் படிக்கலாம். அது தனிப்பட்ட விருப்பம். ஆனால் தமிழ்நாடு அரசு இந்தியை ஏற்றுக் கொண்டுதான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஒரு இனத்தின் மொழி உரிமையை மறுத்து மாற்று மொழியை மாற்றுப் பண்பாட்டைத் திணிப்பது அல்லவா?

•             மைல் கற்களிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் தொலைக் காட்சி மற்றும் வானொலிகளிலும் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியை வேகம் வேகமாக திணிக்கிறார்கள்.

•             தொடர்வண்டி டிக்கட் பரிசோதகர்களாக இந்திக் காரர்கள் வந்து விட்டார்கள். வருமானவரித் துறை, சுங்கத் துறை, அஞ்சல் துறை, கடவுட் சீட்டுத் துறை என்று தமிழ்நாட்டின் மத்திய அரசு அலுவலகங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் இந்தி பேசுகிறவர்களே அதிகாரிகளாக குவிக்கப்படுகிறார்கள்.

•             இந்தியா முழுவதிலும் சுமார் 10,000 பார்ப்பனர்கள் மட்டுமே பேசுவதாகக் கூறப்படும் ‘சமஸ்கிருதத்தை’ ‘தெய்வீக மொழி’ என்றும், அதில் தான் பாரதப் பண்பாடே அடங்கி யிருக்கிறது என்றும் கூறி, கோடிக் கோடியாக பணத்தை வாரி இரைத்து அந்தப் பண்பாட்டை தமிழ்மொழி பேசும் தமிழர்கள் மீது திணிக் கிறார்கள். இது பார்ப்பனப் பண் பாட்டுப் படையெடுப்பு அல்லவா?

•             நமது விவசாயம் நலிந்து போய் விவசாயிகள் தற்கொலை செய்து மடிகிறார்கள். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை வாழ விடுங்கள் என்று நமது விவசாயிகள் டெல்லிக்குப் போய் ஆடையின்றிப் போராடியும் அவர்களை திரும்பிப் பார்க்கவே மறுக்கிறது மோடி ஆட்சி. கடந்த 3 ஆண்டுகளில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத் துறை வங்கிகளில் கடனாகப் பெற்று திருப்பி செலுத்தாத தொகை மட்டும் ரூ.6.8 இலட்சம் கோடி. நமது விவசாயிகள் தள்ளுபடி செய்யக் கோரும் கடன் தொகை ரூ.79 ஆயிரம் கோடி. ஆனால் மோடிக்கு நெருக்கமான பெரும் தொழிலதிபர் அதானி வங்கிக்கு தர வேண்டிய கடன் தொகை மட்டும் 72 ஆயிரம் கோடி. தெரியுமா உங்களுக்கு? அவருக்கு சொந்தமான விமானத்தில்தான் மோடி உலகம் முழுதும் சுற்றி வருகிறார்.

•             இறைச்சிக்கு ஆடு, மாடு, கோழிகளை வெட்டலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் மாடுகளை இறைச்சிக்காகக்கூட வெட்டக் கூடாது என்று சட்டம் போட்டு விவசாயத் தொழிலாளர்கள், மாட்டு வியாபாரிகள், இறைச்சிக் கடைக்காரர்கள், தோல் தொழில் செய்வோர், பால் விற்பனை யாளர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்தான மாட்டிறைச்சி உண்போர் வயிற்றில் அடித்து விட்டார்கள். பால் வற்றிப் போன மாடுகளை எவ்விதப் பயனும் இன்றி ஒவ்வொரு நாளும் ‘தீவனம்’ போட்டுக் காப்பாற்ற ஏழை விவசாயிகளால் முடியுமா?

•             மீத்தேன்-ஹைடிரோ கார்பன் எடுப்பதாக பூமிக்கடியில் ஆழமாக துளை போடுகிறது ‘ஓ.என்.ஜி.சி.’ நிறுவனம். நீர் ஆதாரங்களைப் பாதித்து விளை நிலங்களை ‘காயடிக்கும்’ இந்த ஆபத்தான திட்டங்களை நிறுத்து என்று நெடு வாசலிலும் கதிராமங்கலத்திலும் போராடுகிறார்கள் நமது மக்கள் ‘நீ யார் கேட்பதற்கு? நாங்கள் அப்படித் தான் எடுப்போம்’ என்று இறுமாப்பு பேசுகிறது மோடி ஆட்சி.

•             தமிழர்களின் சங்ககால வாழ்வியலில் ஜாதி, மத அடையாளம் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஏராளமாகக் கிடைத்து வரும் ‘கீழடி’ அகழ்வாராய்ச்சியை முடக்கத் துடிக்கிறார்கள். வேதப் பார்ப்பனப் பண்பாடு அல்ல - தமிழர் பண்பாடு என்ற உண்மை வெளி வந்துவிடுமே என்ற பதைபதைப்பே அதற்குக் காரணம்.

•             இப்போது வந்திருக்கும் ‘சரக்கு மற்றும் சேவை வரி’ - சிறு தொழில் நடத்துவோர் நடுத்தர மக்கள், வணிகர்கள் கழுத்தை நெறிக்கிறது. அம்பானிகளும் அதானிகளும் கும்மாளம் போட்டு வரவேற்கிறார்கள். திருப்பூரில் ‘ஜாப் ஒர்க்’ எடுத்து பிழைத்து வந்த 7 இலட்சம் குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டன. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்கும் சொகுசு கார்களின் விலை மட்டும் பல இலட்சம் குறைந்து விட்டது. அடுத்த சில மாதங்களில் இன்னும் நெருக்கடிகள் காத்திருக் கின்றன.

•             நினைவிருக்கிறதா? 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் அறிவித்துவிட்டு, மாதக் கணக்கில் நம்மை எல்லாம் வங்கி வாசல்களில் சொந்தப் பணத்தை எடுக்க மணிக்கணக்கில் கியூவில் நிற்க வைத்தார் மோடி! கண்ட பலன் என்ன? கறுப்புப் பணம் வெளியே வந்ததா? பொருளாதார நெருக்கடி தீர்ந்ததா? ஒன்றும் இல்லை. இதனால் 15 இலட்சம் பேர் வேலை இழப்புக்கு ஆளானார்கள் என்று புள்ளி விவரம் கூறுகிறது. கறுப்புப் பணப் புள்ளிகள் பத்திரமாக பணத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

•             இவை மட்டுமா? தமிழ்நாட்டில் ‘ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு ஜாதித் தலைவர்களைப் பயன்படுத்தி ‘இந்துத்துவா’ வலைக்குள் இழுக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. இந்த சதி வலையில் நாம் சிக்கி விட்டால் - பிறகு தமிழ்நாடு ஜாதி வெறிக் களமாகி இந்துத்துவ நாடாக்கி விட முடியும் என்பதே ‘அவாள்’ போடும் கணக்கு.

•             தமிழர்களே! இந்த சூழ்ச்சி வலையில் நாம் சிக்கி விடக் கூடாது!

•             காலம் காலமாக கட்டிக் காத்த தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம்!

•             தமிழர்களைக் கூறு போடும் ஜாதியத்தை விட்டொழிப்போம்!

-              சமத்துவமும் சமூக நீதியுமே நமக்கான பண்பாடு;

-              மதக் கலவரங்களற்ற வாழ்வியலே நமது அறம்;

-              வெறுப்பு பகைமையற்ற சகோதரத்துவமே நமது நெறி;

-              மத நம்பிக்கையிருந்தாலும் அதை மதவெறியாக மாற்றிக் கொள்ளாத மனித நேயமே;

                நமது தனிச் சிறப்பு;

சூழ்ந்து வரும் ஆபத்துகளை முறி யடித்து, தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம், வாரீர்!

- திராவிடர் விடுதலைக் கழகம்

(திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைப் பயணம் - ஆகஸ்டு 5இல் கோவை, சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து புறப்பட்டு ஆக.12ஆம் தேதி திருச்செங்கோட்டில் நிறைவடைகிறது. பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை விளக்கும் துண்டறிக்கை.)

Pin It