பொது வெளியில் மிக முக்கியமான, சொல்லப்போனால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முதன்மையான ஒரு அரசியலைப் பேசுகிற படைப்பாக வந்திருக்கிறது ‘கட்டியக்காரி’ குழுவின் ‘மஞ்சள்’ நாடகம். மஞ்சள் மகிமை பற்றிய மயக்கங்கள் உள்ள சமுதாயத்தில், அது குறித்த உறுத்தல் உணர்வைக் கிளறிவிடுவதாக, வேறொரு மஞ்சள் வண்ணம் பற்றிய எண்ணத்தைப் பதிக்கிறது.

அது, நம் ஒவ்வொருவர் உடலில் உற்பத்தியாகி, வெளியேற்றிய பின் அருவருக்கச் செய்கிற மலத்தின் வண்ணம். மலம் என்று எழுதி வாசிப்பதற்கே முகங்கள் சுழியக்கூடும், ஊராரின் மலத்தைத் தங்கள் கைகளால் அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிற, அரசாங்கம் அதெல்லாம் இல்லை என மறுத்துக்கொண்டிருக்கிற, ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை பொதுச் சமூகம் யோசித்திருக்குமா? ஊரைத் தூய்மையாக வைத்துக் கொண்டிருக்கிற அவர்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிற நெடுங்காலத் துரோகத்தைச் சாடுகிறது நாடகம்.

yellow func 600‘‘உங்களுக்கெல்லாம் மஞ்சள் புனிதமானது. எங்களுக்கு அது அருவருப்பானது,’’ என்பது முதல், நாடகத்தின் பல உரையாடல்களைக் கேட்கிறபோது, நடிகர்களின் உடல்மொழியைப் பார்க்கிறபோது கண்ணீர் முட்டுவதைத் தடுக்கவே முடியாது. அப்படி அழுவதோடு அவையோர் இருந்தால் அது நாடகத்தின் தோல்வி.

தங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது என்ற குற்ற உணர்ச்சியோடும், இனி இதைத் தொடர விடக்கூடாது என்ற சினத்தோடும் எழுகிறார்கள், அது படைப்பின் வெற்றி.குறிப்பிட்ட கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிற கதையோட்டமாக இல்லாமல், மலத் தொட்டியில் இறங்கக் கட்டாயப் படுத்தப்பட்டவர்கள் உயிரைவிட்டது உள்ளிட்ட பல கதைகள் வருகின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு செய்தியைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறது. திரை உயர்த்தப்படுவதற்கு முன்பாக, ‘‘இந்த நாடகத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், கருத்துகள், பேச்சுகள் அனைத்தும் கற்பனை அல்ல, முற்றிலும் உண்மை,’’ என்று அறிவிக்கப்படுவதை எல்லாக் காட்சிகளும் மெய்ப்பிக்கின்றன.

அவர்கள் கழிவுத்தொட்டியில் இறங்குவது, மதுவுக்குக் காசு வேண்டும் என்பதற்காகத்தான் என்று அவர்களின் சாவைக்கூட அவர்களுடைய குற்றமாகவே வாதாடுவதில் இருப்பது, ‘‘இவர்கள் இப்படியே இருந்து சாகப் பிறந்தவர்கள்தான்’’ என்ற அலட்சியமேயன்றி வேறென்ன? அந்த அலட்சியத்தின் மூல வேர் இருக்கும் இடத்தைக் காட்டுவதே இந்த நாடகத்தின் தனித்துவம்.

வெறும் தொழிலாக மட்டுமே இதைப் பார்த்து, பாதுகாப்புக் கருவிகளைத் தவறாமல் பயன்படுத்தச் சொல்கிற அறிவுரைகள் எங்கும் பொழியப்படுகின்றன. நாடகமோ, இது ஒரு தொழில்தான் என்றால் ஏன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கடமையாக்கப்பட்டிருக்கிறது எனக் கேட்டு, இந்திய சமுதாயக் கோபுரத்தின் மிக மிக அசிங்கமான அடிவாரமாகிய சாதியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.இதைத் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு மாற்றியிருக்க வேண்டிய நீதிமன்றம் என்ன செய்கிறது? கார்ப்பரேட்டுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளானால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆணையிடுகிறது. இவர்களின் பிரச்சனைகள் என்றால் சாவகாசமாகத் தள்ளிவைக்கிறது. சாதிமன்றத்தை நீதிமன்றத்தால் மீற முடியாததை இதை விட எளிமையாகச் சொல்ல முடியாது.

நடப்பு நிலவரங்களைச் சொல்வதோடு நிற்காமல், காந்தி - அம்பேத்கர் இடையே நடந்த விவாதங்களை விரிவாகப் படித்தறியத் தூண்டுகிற காட்சிகள் இருக்கின்றன. அதேவேளையில், சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசாமல் தீண்டாமை ஒழிப்பை முன்வைப்பதை இந்நாடகம் விமர்சிக்கிறது. ஒரு சாதி தன்னைஉயர்ந்த பிரிவாகக் கருதிக்கொண்டு, அடுத்த சாதியைக் கீழ்நிலையில் வைத்துப் பார்ப்பதன் அடிப்படையே, உன்னை விட நான் பெரிய ஆள், என்னை நெருங்காதே என்ற மமதைதான்.

அந்த மமதைதான் தீண்டாமை. மக்கள் ஏற்கும் வகையில் அந்தத் தீண்டாமையை ஒழிக்க அணி திரட்டுவது என்பது அடிப்படையில் சாதியை ஒழிக்கிற அறைகூவல்தான். கழிப்பறைகளுக்குள் ஒரு பகுதி மக்களை அடைத்துவைத்த கொடுமை மிகக்கொடூரமானதுதான், அதை ஒப்பிட முடியாதுதான். ஆயினும், தீண்டாமையோ பாகுபாடோ இல்லாத சாதி, செல்லாத ரூபாய் நோட்டு போன்றதுதான். ஆகவே தீண்டாமை ஒழிப்புக்காகக் களமிறங்குவது அடிப்படையில் சாதிச் சுவர் உடைப்புக்காகக் கை உயர்த்துவதுதான். இது பற்றிய ஆரோக்கியமான விவாதங்களுக்கு இந்த நாடகமும் வழி செய்வது வரவேற்கத்தக்கதே.

எல்லா மாநில மொழிகளிலும் தோட்டியை எப்படி அழைக்கிறார்கள் எனக் காட்டுகிற காட்சி, இவர்களை இப்படி கீழ்மைப்படுத்தி வைத்திருக்கிற கொடுமையைப் பொறுத்தவரையில் நாடு முழுக்க ‘ஒற்றைப் பண்பாடு’ ஏற்கெனவே பரவியிருப்பதை உணர்த்துகிறது. அதை மறைக்க சுண்ணாம்புப் பொடி தூவுகிற வேலையாகக் கொண்டுவரப்படுகிற ‘ஸ்வச் பாரத்’ போன்ற தந்திரங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை நாடகம்பகிர்கிறது.

ஆட்சிக்கு யார் வந்தாலும் தங்களை அவர்களுடைய தேவைகளுக்கு சேவை செய்கிறவர்களாக மாற்றிக்கொள்ளும் அதிகார வர்க்கத்தை விமர்சிக்கிற நயமான சித்தரிப்பு ஒன்று வருகிறது. ஆனால், அதிகார வர்க்கம் அப்படித்தானே இருக்க வேண்டும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆட்சியின் கொள்கைகளை நிறைவேற்றுகிறவர்களாகத்தான் அதிகாரிகள் இருக்க வேண்டுமேயன்றி, சுயேச்சையான ஆட்சியை நடத்துகிறவர்களாக இருக்கக் கூடாதல்லவா?கட்டியக்காரி தயாரிப்பு என்றால், நாடக ஆக்கம் பற்றிப் பேசுவதற்கே நிறையக் கிடைக்கும்.

கயிற்றில் தொங்கும் செயற்கைக் கால்கள், கைகள், குறிப்பிட்ட காட்சியின் பேசு பொருளுக்கேற்ற வண்ண விளக்குகள் உள்ளிட்ட வெளிப்பாடுகள் அப்படிப்பட்டவை தான். இவர்களின் முந்தைய நாடகங்களில் பார்த்த நுட்பங்கள் அப்படியே தொடர்வது போன்ற எண்ணமும் ஏற்படுகிறது.

பத்திரிகையாளர் பாஷா சிங் ஆங்கிலத்தில் ‘அன்ஸீன்’ என ஆவணப்படுத்தி, தமிழில் ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என வந்துள்ள புத்தகத்தை மையமாகக் கொண்டு, பத்திரிகையாளர் ஜெயராணி உரையாடல்களை எழுதிய இந்த நாடகத்தைத் தன் கற்பனையாலும் ஒருங்கிணைப்பாலும் பார்வையாளர்களின் அனுபவமாக்கியிருப்பவர் இயக்குநர் ஸ்ரீஜித் சுந்தரம். திரைப்பட இயக்குநர் பா,இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பகமும், ஜெய் பீம் மன்றமும் இணைந்து வழங்கிய இந்த நாடகம் உரிய மாற்றங்களோடு, மையக் கருத்தோடு உடன்படுகிற அவையினரின் முன்பாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்கள் முன்பாகவும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

நன்றி: ‘தீக்கதிர்’ திறனாய்விலிருந்து சில பகுதிகள்