தோழர் மா. சிங்காரவேலர் எழுதிய “விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்” மிகச் சிறப்பான அறிவியல் விளக்கங்களைக் கொண்டுள்ள நூல். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் 1934ல் இதை முதலில்  வெளியிட்டது. அதிலிருந்து ஒரு பகுதி:

கையிலுள்ள கோடுகளைப் பார்த்து ஜோஸ்யம் சொல்லுவது உலக முழுமையும் பரவியுள்ள ஓர் வித்தையாகும். அது வெறும் பழக்கமே அல்லாது உண்மை யல்ல. நமது கையிலுள்ள கோடு களைப் போல் நமது ஒரு காலத்து பூர்வபங்காளிகளாகிய வாலில் லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன்னும் தூரப் பங்காளிகளாகிய (Distnat cousins) வாலுடைய குரங்குகளுக்கும் கையில் கோடுகள் இருக்கின்றன. ஆனால் காட்சிச் சாலைகளில் வசிக்கும் காட்டு மனிதக் குரங்குகளின் கைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்வார் யாரு மில்லை.

நமது கைகளில் இருக்கும் கோடுகள் (Grooves) நமது காலத் தில் நமது குரங்கு மூதாதைகள் மரத்தில் தாவிப் பிடித்து தாண்டும் போது உண்டான தோல் மடிப்புகள். அந்த வம்சத்தலிருந்து வந்தவர்களாகிய நமக்கும் அந்த மடிப்புகள் பரம்பரை வழியாக (Hereditory) தோன்றுகின்றன. நமது கைக்கோடுகள் காட்டுக் குரங்கு களின் வம்ச பரம்பரையாக வந்தவை. பல கோடி வருஷங்களாக நமது மூதாதைகள் மரங் களில் வாழ்ந்த காலத்தில் தாவு வதற்கு தங்கள் கைகளை உபயோகித்து வந்து இருக்க வேண்டும்.

இன்றைக்கும் வாலுடைய குரங்குகளும், வாலில்லாக் காட்டு மனிதக் குரங்குகளும் அம்மாதிரியாகவே தாவிச் செல் கின்றன. அப்படித் தாவிச் செல் வதால் கைகளை மடிக்க வேண்டி வருகின்றன. கைகள் மடியுண்ட இடங்களில் வரி வரியாகக் கோடுகள் உண்டாயின. அப்படி உண்டான கோடுகள் தான் அந்த சந்ததி மூலமாக நமக்கும் வந்திருக்கின்றன. இது தான் நமது உள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகளுக்கான காரணம்.

மரத்தைத் தாண்டும்போது வந்த இந்த கோடுகளைக் கொண்டு நமது நடத்தைகளை எப்படி அறியக் கூடுமெனக் கேட்கின்றோம். இரண்டு வரி அய்ந்தாம் விரலுக்குக் கீழ் இருந்தால் அவனுக்கு இரண்டு பெண் சாதியாம். ஆனால் ஒரு வரியுடைய பலருக்கே பல பெண் சாதிகள் இருப்பதைக்  காணலாம். ஆதலின் இந்த வரிகளைக் கொண்டு நமது நடவடிக்கைகளைக் குறிப்பிடுவதை ஆங்கிலத்தில் Pure Guess என்று சொல்லலாம். அதாவது வெறும் உத்தேசம். இந்த வெறும் உத்தேசத்தை உண்மையென்று நினைத்துக் கொண்டு மோசம் போகின்றவர்கள் பலர்.

எவனோ ஒருவன் ஒரு காலத்தில் கோடுகளைப் பார்த்து குறி சொல்லியிருப்பான். அது முதலில் வெறும் உத்தேசமாகவே சொல்லியிருப்பான். இதை உண்மையென நம்பி பழக்க வாசனையால் குறி சொல்லும் பழக்கம் வந்திருக்க வேண்டும். இவ்விதமாகத்தான் நமது கையைப் பார்த்துக் குறி சொல்லும் பழக்கம் உண்டாகி இருத்தல் வேண்டும். எந்த மூடனும் இந்த பழக் கத்தைக் கையாளலாம். ஆனால் இந்த மூட நம்பிக்கையை நம்புகிறவர்களுக்காகவே நாம் வருந்துகிறோம்.

‘விளக்கு வைத்துப் பார்த்தல்’ எனும் ஒரு மூடப்பழக்கம் பாமர மக்கள் வீடுகளில் இருந்து வருகின்றது. ஒரு பூசாரி தன் முன் ஒரு விளக்கை ஏற்றி, அந்த எரியும் சுடரை அந்த அம்மன் இந்த அம்மன் என்று வர்ணித்து, இதைச் சொல்லம்மா, அதைச் சொல்லம்மா என எரியும் சுடருடன் பேசுவதைப் போல் நடித்து, சுடர் அசையாமலிருந்தால் ‘அம்மா உத்தரவு அளிக்க வில்லை’ என்றும், அசைந்தால், ‘அம்மா உத்தரவு கொடுத்தாள்’ எனவும் அர்த்தப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் விதம் ஒன்று உண்டு.

இதுவும் ஓர் ஏமாற்று.

Pin It