jeyaranjanபொருளியல் ஆய்வாளர் ஜெயரஞ்சன் விளக்கம் (4)

திராவிட விழுதுகள் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகப் பொருளாதாரம் கடந்த 50 ஆண்டுகளில் வளர்த்தெடுக்கப்பட்ட வரலாறுகள் குறித்து பொருளியல் ஆய்வாளர் ஜெயரஞ்சன் ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

தமிழகத்தின் சிறந்த கட்டமைப்பு பொது விநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் உணவு கொடுக்கும் திட்டம். பொது விநியோகத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுவது போல இந்தியாவில் வேறு எங்கேயும் செயல்படுவதில்லை. இதில் முக்கியமானது என்னவென்றால், தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டமே உள்ளது.

கேரளாவையும் சேர்த்தே கூறுகிறேன். இடது சாரிகள் ஆட்சி செய்யக்கூடிய கேரளாவிலும் கூட இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம் தான் உள்ளது. யாரெல்லாம் ஏழைகளென்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்குத்தான் பொது விநியோகத் திட்டம் மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொருட்கள் வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளலாம் வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். அப்படி இருந்தும் நம்மை வாங்கக் கூடாது என்று யாரும் தடுக்கவும் மாட்டார்கள். இதற்கு பெரிய வரலாறு உள்ளது. 1974ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது வரை வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு உணவு கொடுப்பது போன்றே, யாரும் பசியுடன் படுக்கச் செல்லக்கூடாது என்ற நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறோம். இது போன்ற அமைப்பை உருவாக்குவது என்பது 50 வருட வேலை. இந்த வேலையை மிகவும் வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறோம். வேறு எந்த மாநிலமும் இதுவரை செய்துகாட்டவில்லை. இந்த அமைப்புகளெல்லாம் சேர்ந்துதான் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்று சொல்லக் கூடிய நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இந்தியாவில், வட மாநிலங்களையும் தென் மாநிலங்களையும் எடுத்து ஒரு வரைபடம் வரைந் தோமென்றால், 1960,70,80,90 ஆகிய வருடங்களுக்கு தனிநபர் வருமானத்தை கணக்கிட்டோமென்றால் 1960, 70, 80 களில் பீகார் போன்ற மாநிலங்கள்கூட தமிழ்நாட்டை விட தனிநபர் வருமானத்தில் அதிகமாக இருக்கும். 1990களுக்குப் பிறகு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் 1980களில் இருந்ததே தற்போது வரை  இருந்து வருகிறது.

எனவே, இவ்வளவு அதிகமான மாணவர்கள் படிப்பது, வேறு வகைகளில் வருமானம் வருவது போன்றவற்றால் கூலி வேலைகள் செய்வதற்கான ஆட்கள் தமிழ்நாட்டில் இல்லை. கூலி வேலைகளை செய்ய வேலையாட்கள் இல்லாத காரணத்தினால், தனிநபர் வருமானம் வளராமல் இருக்கிற மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் நாட்டில் கூலி வேலை செய்ய வருகிறார்கள்.

வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை யென்றால் தமிழ்நாட்டில் எந்த வேலைகளும் நடைபெறாது. அப்படித்தான் தற்போதைய நிலவரம் உள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் ஒரு தமிழர்கூட வேலை செய்ய வில்லை. உடனே சிலர் கூறுவார்கள், தமிழர்கள் டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்திவிட்டு ரேசன் அரிசியை சாப்பிட்டுவிட்டு உறங்கி விட்டார்கள் என்று.

அப்படி இருந்திருந்தால் நான் ஏற்கனவே கூறியதைப் போல 100 ரூபாய் வருமானத்தில் 30 ரூபாய் விவசாயத்தில் இருந்து மட்டும் வர முடியுமா? எப்படி ஒரு சிலர் எண்ணுகிறார் களென்றால், கொஞ்சம் பொருளாதாரம் சேர்ந்து விட்டால் மற்றவர்கள் அவர்களிடம் வேலை கேட்டு நிற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருப்பது உண்மைதான். அதிகமாக மது அருந்துகிறார்கள் என்பதும் உண்மை தான். ஆனால் அப்படி இருந்தும் யாரும் பெரும் பாலானவர்கள் வேலைக்குச் செல்லாமல்  இல்லை.

இந்த வளர்ச்சிகளெல்லாம் எப்படி சாத்தியமானதென்றால்? முதல் காரணம் ‘சுயமரியாதை'. சுயமரியாதைக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும், திட்டங்களும்  சுயமரியாதைக்கான திட்டங்கள் தான். தமிழ்நாட்டில் அதிகமான, பள்ளி, கல்லூரிகள் திறந்ததெல்லாம் எதற்கு? சுயமரியாதைக்குத்தான். தற்போது நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள், நான் படிக்கும்போது எனது தலைமை ஆசிரியர் பள்ளியில், ‘நீங்களெல்லாம் எதுக்குடா படிக்க வற்ரீங்க' என்று கேட்பார்.

ஏனென்றால், நீங்கள் படிக்கத் தகுதியான ஆட்கள் கிடையாது என்று அர்த்தம். படிக்கத் தகுதியான ஆட்கள் யாரென்றால், அக்ரஹாரத்தில் உள்ள ஆட்கள் தான் படிக்கத் தகுதியானவர்கள். அப்படியான நிலைதான் திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் இருந்தது. அந்த காலகட்டங்களில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் ஆசிரியர்களால் நிறைய அவமானப்படுத்தப்பட்டனர். ஒரு புறம் சமுதாயம் மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறது. அரசு அவர்களை மீண்டும் படிக்க பல திட்டங்களைக் கொண்டு வருகிறது.

இட ஒதுக்கீட்டை மிகக் கடுமையாக செயல் படுத்தியதன் விளைவு அதிகாரத்தில் இருந்தவர்களை இறக்கி மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள். காவல், வருவாய், விவசாயம் ஆகிய அரசுத் துறைகளில் சூத்திரர்கள் அதிகாரத்தில் அமர்ந்தார்கள். பழைய தலைமை செயல் அதிகாரி நாராயணன் 'Dravidian Years' என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் ‘கலைஞர் செய்த முக்கியமான சாதனையாக அவர் ஒன்றைக் குறிப்பிடுகிறார். 1969 முதல் 76 வரை அரசு நிர்வாகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பங்கு என்பதை உறுதிபடுத்திவிட்டார்'. அதுதான் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவற்றை சட்ட மன்றத்தில் பேசிவிட்டு  கலைஞர் செய்யவில்லை.

ஒரு திட்டம் புதியதாக செயல்படுத்து வதற்கான கலந்துரையாடல் டெல்லியில் நடைபெறுகிறதென்றால், தமிழ்நாட்டைப் பொருத்தவரை ‘No Need to Report’ என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் நாம் செயல் படுத்தியதுபோல வேறு எந்த மாநிலங்களும் செயல்படுத்தியிருக்க முடியாது. இதற்கான காரணம் என்னவென்றால் பிரதிநிதித்துவம் தான். அரசுத் துறைகளில் அனைத்து மக்களும் அதிகாரம் பெற்றதே முதல் காரணம்.

அதற்காக யாரும் பணமே வாங்கவில்லை என்று நான் கூறவரவில்லை ஆனால், அவர்கள் அர்ப்பணிப்புடன் காரியங்களை செய்வார்கள். அதன் விளைவு தான். இதற்கு இரண்டு சிறப்பான எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். ஒன்று, தமிழ்நாடு மருத்துவக் கழகம் எப்படி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கூறினேன்.

மற்றொன்று, எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில், ‘வரும் மாதத்தில் இருந்து பள்ளி மாணவர் களுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்கப் படும்’ என்று  அறிவித்துவிட்டார். பள்ளிகளில், சமையலர் இருக்கிறாரா? போதுமான அரிசி உள்ளதா? என்று எதையும் கவனிக்காமல் அறிவித்தார். அறிவித்து விட்டு தலைமை செயல் அதிகாரியை அழைத்து கேட்கிறார் எப்படி நடைமுறைபடுத்துவது? என்று தலைமை செயல் அதிகாரி தற்போது நடைமுறைப் படுத்த முடியாது என்று கூறுகிறார்.

அப்போது வேறு ஒரு அதிகாரியை அழைத்து கேட்கிறார் அவர் நடைமுறைபடுத்த முடியும் என்று முழு திட்டத்தையும் வகுத்துக் கொடுக்கிறார் அவர்தான் திரவியம், ஐ.ஏ.எஸ். அதேபோல், மண்டல் குழுவின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது; அதற்கான தீர்ப்பு வழங்கியவர் யார்? நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன். 1967இல் திமுக வேட்பாளர். தோற்றுப் போன வேட்பாளர். யார் யார் எங்கு அதிகாரப் படுத்தப்பட வேண்டுமோ அதுபோல அதிகாரப் படுத்தப்பட்டார்கள் அதன் விளைவுகளை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இறுதியாக நான் கூற வருவது என்ன வென்றால், இது போன்ற நிறைய திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களை செயல்படுத்து வதற்கு நம்மிடம் ஒரு கற்பனை உள்ளது. இந்தியாவில் அப்படி கற்பனையுடன் கூடிய இனக்குழுக்கள் மிக மிக குறைவுதான். அதில் நமக்கு மிகப்பெரிய கொடை என்னவென்றால், தந்தை பெரியார் நமக்கு (தமிழ்நாட்டிற்கு) கிடைத்த மிகப் பெரிய கொடை. அவருக்கு ஒரு மிகப் பெரிய கற்பனை.

அது என்ன கற்பனை ? ஒருவனை ஒருவன் தாழ்வாக நினைக்காமல் ஒரு சமுதாயம் கட்டமைக்கப்பட வேண்டும். அதுதான் அவரது கற்பனை. அதற்கு அவர் வைத்த பெயர் சுயமரியாதை. அவர் சொல்லிக் கொடுத்த சுயமரியாதை தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த சுயமரியாதை பல வடிவங்களில் வெளிப்படுகிறது.

கருப்புக்கும் காவிக்கும் சண்டை யெல்லாம் இல்லை. நாம் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்புகளை அழித்து ஒழிப்பது தான் அவர்களின் தீர்மானமான முடிவு. தினம் தினம் தாக்கிக் கொண்டே உள்ளனர். மதிய உணவுத் திட்டமா; ஹரே கிருஷ்ணாவை கொண்டு வருகிறார்கள். அதிகமான மருத்துவர்களை தமிழ்நாடு கொண்டுள்ளதா ‘நீட்’ தேர்வு. உதவித் தொகையை வைத்துத் தானே அதிகம் பேர் தமிழகத்தில் படிக்கிறார்கள் அந்த உதவித் தொகையை நிறுத்துகிறார்கள்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்களே, ‘கொதிக்கிற எண்ணெய் அடங்க வேண்டுமானால் எரிவதை உருவ வேண்டும்’ அதுபோல நமது அடிப்படை கட்டமைப்புகளை ஒவ்வொன்றாக உருவிக் கொண்டே இருக்கிறார்கள். இதைத் தாங்கக் கூடிய வலிமை யாருக்கு இருக்க வேண்டும். மாநில அரசு தான் இதை எதிர்த்து கேட்க  வேண்டும்.

அப்படி இருக்கிறதா தமிழ்நாட்டில் உள்ள அரசு ? இதுதான் வேதனையளிக்கக்கூடிய கேள்வி. மதிய உணவுத் திட்டத்தை நிறுத்தி ஏன் ஹரே கிருஷ்ணாவிடம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டால், நிதி இல்லை என்று அரசு அதிகாரி பதில் சொல்கிறார். யார் பதில் தர வேண்டும்? அமைச்சர் தானே பதில் தர வேண்டும். மக்களின் பிரதிநிதி யார் ? அமைச்சர் தானே. அமைச்சர் சொல்வதை செயல்படுத்துபவர் தான் அதிகாரி. அமைச்சர்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

எனவே,  தமிழ்நாட்டில் நிலைமை எந்தளவிற்கு  மோசமடைந்துள்ளது என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் இருக்கும் பகுதியில் உங்கள் அளவிற்கு தகவல் தெரிந்தவர் இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு நாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தான் நம்மால் வாளை வீச முடியும். பொறுப்புணர்ந்து ஒன்றாக செயல் படுவோம் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

(நிறைவு)

- ஜெயரஞ்சன்