கொள்கை கோட்பாடுகள் எதுவுமற்று வெறும் தொகுதிகளையும், எண்ணிக்கைகளையும் மட்டுமே குறியாகக் கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியல், இதற்கு முந்தைய வேறு எந்தத் தேர்தலிலும் கண்டிராத அளவுக்கு இந்த தேர்தலில் சீரழிவின் உச்சத்திற்குச் சென்றுள்ளது.

தமிழகத்தின் இரு பெரும் முக்கிய கூட்டணிகளுக் குள்ளும் முதலில் எண்ணிக்கையில் இழுபறி, பிறகு தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறியென, அவை நாளும் நாளேடுகளில் தலைப்புச் செய்தியாகி, தற்போது அவை தாற்காலிகமாக ஓர் ஏற்பாட்டுக்கு வந்துள்ளன.

தாற்காலிகமாக என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. ‘தேர்தல் அரசியலில் எதுவும் எப்போதும் நேரலாம்’ என்கிற பொது விதிப்படி, இப்போதிருக்கிற நிலை வாக்களிப்பு நாள்வரை தொடருமா, இதிலும் இடையில் ஏதும் மாற்றம் வருமா என்பவை எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பதால் இவற்றைத் தாற்காலிகம் என்றே வைத்துக் கொள்வோம்.

இந்தத் தற்காலிகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி எண்ணிக்கை பங்கீட்டிலும், தொகுதிகள் பங்கீட்டிலும் ஓரளவு ஏற்பாட்டிற்கு வந்திருக்க, பெருமளவும் இது இப்படியே நீடிக்கும் என நம்பலாம்.

அதிமுக கூட்டணியில் மதிமுக உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ளப் படாது முற்றிலும் எதிர்பாராததொரு திருப்பமாக அது விலகும் நிலை ஏற்பட, இந்த அணி சற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இத்துடன் அதிமுக - தேமுதிக கட்சிகளுக்குள் மேல்மட்டத்தில் ஒரு முடிவுக்கு வந்தாலும் களத்தில் இன்னமும் இழுபறியான நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டணியின் சாதக பாதகங்கள், பலம் பலவீனங்கள் பற்றிய மதிப்பீடுகளுக்குச் செல்வதற்கு முன்னால் தமிழகத்தில் இக்கூட்டணிக் கட்சிகளுக்குள் இதற்கு முன் எப்படிப்ப அணி சேர்க்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் ஒரு மேலோட்டமான பரிசீலனைக்கு உட்படுத்தி பிறகு நிகழ்காலச் சூழலுக்கு வருவோம்.

ஏற்கெனவே திமுக, அதிமுக தவிர்த்து காங்கிரஸ், தலைமையில் தேமுதிக மற்றும் சில உதிரிக் கட்சிகளைச் சேர்த்து ஒரு மூன்றாவது கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது கனிந்து வராததனாலும் காங்கிரஸ் உருவாக்கும் அணியில் மதிமுக இடது சாரிகள் சேர வாய்ப்பில்லை என்பதனாலும் அது கைவிடப் பட்டது. இதுபற்றி கடந்த 32வது இதழ் மண்மொழியிலேயே எழுதி விட்டோம் என்பதால் அது மீண்டும் இப்போது இங்கே தேவையில்லை.

இந்த நிலையில்தான் திமுகவிடம் காங்கிரஸ் கிடுக்கிப் போட்டு 63 தொகுதிகளைப் பெற்று இருக்கிற கூட்டணி யைத் தக்க வைத்துக் கொண்டது. இதன் வழி திமுக, காங்கிரஸ், பாமக, வி.சி.க கொண்ட கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக அமைந்துவிட்டது.

இதை மேலும் வலுப்படுத்த இந்த அணிக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்க, கலைத்துப் போட தேமுதிகவை உசுப்பேற்றி அதைத் தனியாக நிற்க வைக்கச் செய்யும் முயற்சி திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு செய்தி பரவியது.

என்றாலும் இந்த முயற்சி வெற்றி பெற முடியாமல் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதிப்பட இதில் தொடக்கத்தில் எண்ணிக்கை அளவில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தாலும் தொகுதிப் பங்கீட்டில் சில இழுபறிகள் நீடித்து தற்போது ஒரு சுமுக முடிவுக்கு வந்திருக்கிறது.

இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் தொடக்கத்தில் நடைபெற்ற சில இழுபறிகளாலும், அதிமுகவில் நடந்த உட்கட்சிக் குளறுபடிகளாலும் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அதிலிருந்து வெளிவந்து தேமுதிக, இடது சாரிகள், மதிமுக மற்றும் சில உதிரிக் கட்சிகள் சேர்ந்து ஒரு அணி, அதாவது காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியாக அமைக்கலாமா என்கிற ஒரு முயற்சியும் நடைபெற்றது. இதில் அதிமுக அதிர்ச்சி யடைந்து உடனடியாக அதன் தரப்பில் மேற்கொள்ளப் பட்ட சமரச முயற்சியால் இது கைவிடப்பட்டு அதிமுக கூட்டணியே தொடர்ந்தது.

இப்படி ஒரு மூன்றாவது கூட்டணி அமைந்திருந்தால் கூட தமிழகத்துக்குச் சற்று தேவலாமாக இருந்திருக்கும். தேவலாம் என்பது இவர்கள் நல்லாட்சி தந்து விடுவார்கள் என்பதனால் அல்ல, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு என்பது திமுக. திமுகவை விட்டால் அதிமுக. அப்புறம் அதிமுகவை விட்டால் பழையபடியே திமுக என இவ்விரு கட்சிகள், அது சார்ந்த கூட்டணிக்குள்ளேயேதான் இருக்கவேண்டும் என்கிற நிலை மாறி இவ்விரண்டிற்கும் மாற்றாக ஒரு மூன்றாவது சக்தி உருவாவது, ஒரு சனநாயகக் கட்டமைப்பில் ஒப்பு நோக்கில் நல்லது என்பதனாலேயே இந்த ‘தேவலாம்’. ஆனால் அதுவும் நிறைவேறாமல் போய்விட்டது என்பதோடு மட்டுமல்ல. ஏற்கெனவே இருந்த கூட்டணியிலேயே மதிமுக நீடிக்க இயலாமல் போனதும் மாபெரும் சோகம்.

ஆக இப்போதைக்கு இந்தப் பின்னணியில், இந்தச் சூழலில் இப்போதிருக்கிற கூட்டணியை வைத்துதான் இந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பரிசீலிக்க நோக்க வேண்டியுள்ளது.

இதற்கு, இந்தத் தேர்தலில் நாம் எப்போதும் சொல்லும் முக்கியமான செய்தியை - அதாவது இந்தத் தேர்தல் அரசியலால் சமூகத்தில் அடிப்படையில் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை. காரணம் இது அரசு யந்தி ரத்தை அதன் கட்டமைப்பை மாற்றும் செயல் அல்ல. மாறாக இது வெறும் ஆட்சியாளர்களை மாற்றும் செயல் மட்டுமே என்பதை - முதன்மையாக நினைவிலே வைத்து, தற்போது இருக்கும் நிலைக்கு இது என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது, கொண்டு வர முடியும் என்கிற நோக்கிலேயே இதைப் அணுக வேண்டுவது முக்கியம்.

இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பது, வீழ்த்துவது, தமிழக சட்டமன்றத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட இல்லை என்கிற நிலையை உருவாக்குவது என்பதே தமிழ் உணர்வாளர்களின் இலக்காக, விருப்பமாக தீவிர முனைப்பாக இருந்தது. தற்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லாதது அந்த இலக்கிற்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

இந்தக் கூட்டணியில் மதிமுக இருந்திருந்தால் காங்கிரஸ் நிற்கிற 63 தொகுதிகளிலும் அதை எதிர்த்து நிற்கும் அதிமுக கூட்டணியினர் எவரானாலும், எந்தக் கட்சியானாலும் அவருக்கு, அந்தக் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று எந்தவிதத் தங்கு தடையுமின்றி உணர்வாளர்கள் பிரச்சாரம் செய்யலாம். மக்களிடம் கட்சிகளிடம் கோரிக்கை வைக்கலாம். மதிமுக வின் வாக்குகளும் அப்படியே கட்டுக்கோப்பாக காங்கிரஸ் எதிர்ப்பு அணிக்கு வந்திருக்கும்

ஆனால் அந்த அணியில் தற்போது மதிமுக இல்லாதது இல்லாததோடு மட்டுமல்ல அது அதிமுகவால் இழிவுபடுத்தப்பட்டு மனம் நொந்து வெளிவந்துள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளில் ஒரு பகுதி முற்றாக இழக்கப்படுவதோடு மட்டுமல்ல, மதிமுகவில் வாக்களிக்கும் மனப்போக்கில் இருப்பவர் களையும் பிற கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாக்க ளியுங்கள் என்று கோரலாமே தவிர, அதிமுகவுக்கு வாக்க ளியுங்கள் என்று நாம் கோரமுடியாது. நாம் அப்படிக் கோருவதிலும் போதிய நியாயம் இருக்கமுடியாது. நாம் எதுவுமே கோராமல் எல்லாவற்றையும் துறந்து காங்கிரசை வீழ்த்துவது என்கிற இலக்கில் மதிமுக தொண்டர்களும் தன்னலமற்ற தியாகம் புரியமுடியாது. அப்படியே தன்னலமற்று தியாகம் புரிவதாகக் கொண்டாலும் அப்படி வென்று வந்துதான் அதிமுக அணி என்ன செய்யப்போகிறது என்கிற கேள்விகளும் இயல்பாக எழும்.

இது பற்றியெல்லாம் இப்போது பேசி என்ன ஆகப் போகிறது. எல்லாம் தெரிந்தது தானே. தெரிந்துதானே காங்கிரசை வீழ்த்தும் ஒரே நோக்கில்தானே அதிமுக அணியினரை ஆதரிக்கிறோம் என்று நாம் வாதம் பேசலாம். ஆனால் மதிமுக தொண்டர்கள் உணர்வு நிலை நோக்கில் அதன் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ஆகவே அதுபற்றி இப்போது எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

ஆக, தமிழ் உணர்வாளர்கள் என்ன செய்யலாம்? காங்கிரஸ் நிற்கிற 63 தொகுதிகளிலும், அதை எதிர்த்து தேமுதிக, இடதுசாரிகள், பிற உதிரிக் கட்சிகள் நின்றால் மதிமுகவினரை அதற்கு வாக்களிக்கக் கோரலாம். ஆனால் அதிமுக நிற்கும் தொகுதிகளில் அப்படி உறுதியாகக் கோர முடியாது. எனவே இது அவரவர் விருப்பம் என்று விடலாம். இதுவே அதிமுக அணியைப் பொறுத்த வரை தமிழ் உணர்வாளர்களின் அணுகு முறையாய் இருக்க முடியும்.

ஆனால் திமுக, காங்கிரஸ் அணியை எடுத்துக் கொண்டால் காங்கிரசை எதிர்த்து அதற்கு எதிராக மாற்று அணிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வதில் தமிழ் உணர்வாளர்களுக்குச் சிக்கல் இருக்காது. அப்படி இருந்தால் மேற்சொன்ன பிரச்சியையைத் தாண்டி வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அதே வீச்சில் அதே அலை வரிசையில் திமுகவுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று சொல்ல முடியுமா என்றால், இதில் கடந்த இதழில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல பல தமிழ் உணர்வாளர்களுக்கு திமுக பற்று உண்டு. எனவே திமுகவை எதிர்த்து அதிமுக அணியில் யார் நின்றாலும் அது அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் யாராயிருந்தாலும் - ஒப்புநோக்கில் இவர்கள் மட்டும் என்ன தமிழ் உரிமைப் போராளிகளா, தமிழீழ விடுதலை ஆதரவாளர்களா என்கிற கேள்வி எழும் - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் விடை இல்லை. விடை தெரிந்ததுதான் என்பதால் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துங்கள் என்று அதுநிற்கும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வது போன்று, அதே வேகத்தோடு இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடியாது. அந்த மட்டத்திலேயே அதன் விளைவும் இருக்கும் என்பதோடு அதை விட்டு விட வேண்டியதுதான்.

அடுத்தது பாமக, விசிக கட்சிகள். சாதி அமைப்பாகத் தோற்றம் பெற்று அரசியல் கட்சிகளாகப் பரிணமித்துள்ள இவ்விரு கட்சிகளும் ஒன்று சேர்ந்திருப்பது சமூக நோக்கில் மிக நல்லது, தேவையானது, வரவேற்கத் தக்கதுதான். ஆனால் இந்த சேர்க்கை யாருக்கு சாதகமாகப் பயன் படுகிறது என்பது முக்கிய கேள்வி. இது ஆதிக்க சக்தி களுக்கு, அதிகார வர்க்கத்தினருக்குத்தான் பயன்படுகிறது என்பதே உண்மை.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் சமூக நலன்களை முன்னிறுத்தி வளர்ச்சி பெற்ற இக் கட்சிகள், அம்மக்களின் நலன் பற்றி அவ்வப்போது பேசினாலும், மொத்தத்தில் சாராம்சத்தில், இம்மக்களுக்கு எதிராகச் செயல்படுகிற ஆதிக்கத்திற்கே துணை போய்க் கொண்டிருக்கின்றன.

தேர்தல் அரசியலில் அவரவர் கட்சிகளையும் காத்துக் கொள்ள வேண்டிய தேவை, கட்சிப் புள்ளிகளுக்குத் தீனி போடவேண்டிய கட்டாயம், சொந்த பலத்தில் நின்று சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் அமைச்சர் பதவிகளைப் பெற முடியாத வலுவின்மை, ஆகிய அனைத்தும் இவற்றை இப்படிப்பட்ட ஆதிக்க, அதிகார சக்திகளோடு சேர்ந்து அவற்றுத் துணை நின்று தங்கள் தேவையை நிறைவு செய்துகொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு இரையாக்கியுள்ளன. காலமும் வரலாற்று நிகழ்வுகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பான சூழலாக மாறும்போது இவை போராடும் அணியின் பக்கம் வரலாம், வராமலும் போகலாம் என்கிற வகையிலேயே இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, இக்கட்சிகளுக்கான நெருக்கடிகளைப் புரிந்து, இவர்களுக்கு வாக்களிப்பது பற்றி யோசிக்கையில் இவர் களுக்கு எதிராக வாக்களியுங்கள் என்றும் நாம் கோர வேண்டிய தில்லை. இவர்களுக்கே வாக்களியுங்கள் என்றும் நாம் பரிந்துரைக்க வேண்டியதில்லை. எனவே வாக்களிப்பதோ, வாக்களிக்காமல் இருப்பதோ ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பதோ அவரவர் விருப்பம் என மக்கள் விருப்பத்துக்கு விட்டுவிடலாம்.

இது என்ன நிலைப்பாடு. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய நாம் புறக்கணிப்பு என்றால் புறக்கணிப்பு, வாக்களிப்பு என்றால் யாருக்கு வாக்களிப்பு என்று திட்டவட்டமாக ஒரு நிலையைச் சொல்ல வேண்டாமா என்று சிலர் கேட்கலாம். நியாயம்.

ஆனால் நாம் முந்தைய இதழிலேயே குறிப்பிட்டபடி, இதில் பொத்தாம் பொதுவாக சகட்டு மேனிக்கு ஒரு முடிவெடுக்க முடியாது. புறநிலை பொத்தாம் பொதுவாக இருந்தால் நாமும் பொத்தாம் பொதுவாக முடிவெடுக்கலாம். புற நிலை பல்வேறுவித தனித் தன்மைகளோடு நிலவுவதால் நாமும் அதற்கேற்ப தனித்தன்மை வாய்ந்தவையாகவே நம் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது. ஆக இந்த அடிப்படையிலேயே நடப்புத் தேர்தலை நாம் நோக்க வேண்டி யிருக்கிறது.

என்றாலும் இதுபற்றி, புரட்சியாளர்கள் மத்தியில் எழும் மேலும் சில கேள்விகளுக்கான விளக்கங்கள்.

1. இப்படி மாற்றி மாற்றி வாக்களித்துக் கொண்டிருந்தால், புரட்சி எப்போது வரும், இது புரட்சியைத் தடைப்படுத்தாதா?

தேர்தல் அரசியலால் புரட்சி எழாது என்பது உண்மைதான். ஆனால் இதற்காக வாக்களிப்பை நிறுத்தி விடுவதாலேயே புரட்சி வந்துவிடும் என்று பொருள் அல்ல. இந்தத் தேர்தல் அரசியலுக்கு மாற்றான போராட்ட அரசியல் களத்தில் தொடர்ந்து, அது களத்தில் பல வெற்றிகளை ஈட்டி மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அதன் வளர்ச்சிப் போக்கில்தான் புரட்சி எழுச்சியுறும். அல்லாமல் அவ்வப்போது மக்களுக்குப் பராக்கு காட்டுவது போல சில சடங்குப் போராட்டங்களை நடத்தி எந்தக் கோரிக்கையுமே வெல்லாமல், தேர்தல் வரும்போது மட்டும் யாருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று தேர்தல் புறக்கணிப்பைச் செய்வதால் மட்டும் புரட்சி வந்துவிடாது.மக்களுக்கும் அதில் நம்பிக்கை வராது.

போராட்ட அரசியல் கூர்மை பெற்றால் அது வெற்றிகளை ஈட்டினால் தேர்தல் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே மக்களுக்கு எழாது. மக்கள் தானாகவே புறக்கணிப்புச் செய்வார்கள். ஆனால் அப்படிப் பட்ட சூழல் தற்போது இல்லை. இந்தத் தேர்தல் அரசியலுக்கு எதிராக மாற்று அரசியலை முன் வைத்து உண்மையோடும், உறுதியோடும் போராடும் இயக்கங்களும் தற்போது தமிழகத்தில் வலுவோடு இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் குறைந்தபட்ச மாற்றமாவது வேண்டும், தேவை என்கிற சூழலில் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். கிடைக்கிற அற்ப சொற்ப வாய்ப்பையாவது பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றுதானே தோன்றும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்புதான் தேர்தல். அதை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வது தானே நல்ல உத்தி. அதைவிட்டு எழுச்சி மிக்க களப் போராட்டமும் நடத்தாமல், தேர்தலையும் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளாமல் சும்மா புரட்சி வேடம் கட்டி புறக்கணிப்பு ஆட்டம் ஆடுவதால் மட்டும் என்ன பயன் சொல்லுங்கள்.

வேண்டுமானால், மே மாதம் புரட்சி வருவதாக இருக்கிறது தோழர், இந்த ஏப்ரல் 13 தேர்தலில் வாக்க ளித்தால் அந்தப் புரட்சி வராமல் நின்றுபோய்விடும் தோழர். ஆகவே வாக்களிப்பைப் புறக்கணியுங்கள் என்று யாரும் சொல்லட்டு வாக்களிப்பை நிறுத்தி விடலாம்.

2. ஒரு வாதத்துக்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதாகவே வைத்துக் கொள்வோம். இது காங்கிரசை வீழ்த்தியதாகிவிடுமா?

முற்றாக அப்படிச் சொல்ல முடியாது. ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதனாலேயே அது முற்றாக வீழ்ந்து விட்டதாகக் கொள்ள முடியாது. அந்தக் கட்சிக்கு உள்ள பலம், வாக்கு எண்ணிக்கை அது எப்போதும் போல இருக்கும்தான். கட்சியை வீழ்த்துவது என்பது களத்தில் மக்களை அதன் பிடியிலிருந்து மீட்டு அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதுதான். எந்தக் கட்சி விஷயத்திலும் இதை உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் வாய்ப்புள்ள தளங்களில் அதன் பலத்தை முடக்கலாம். அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே தவிர, முற்றாக அதை இல்லாமலாக்குவது என்பதல்ல. அது உடனடி சாத்தியமும் அல்ல. ஆகவே, இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியை சட்ட மன்றத்தில் இல்லாமல் ஆக்க முயல்வது என்பதுதான் திட்டம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலே காங்கிரஸ் கட்சி சற்று தள்ளாடும். ஏற்கெனவே உள்ள குழுச் சண்டைகள் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு சற்று தீவிரம் அடையும். அதன் செல்வாக்கில் அதன் வாக்கு வங்கியில் ஒரு பின்னடைவு, தளர்வு ஏற்படும். அவ்வளவுதானே தவிர காங்கிரசை வீழ்த்துவது என்பது முற்றாக அதை இல்லாமல் ஆக்குவது என்கிற அர்த்தத்திலோ அப்படியான ஒரு நம்பிக்கையிலோ அல்ல. தேர்தல் அரசியல் மூலம் அது சாத்தியமுமல்ல.

3. காங்கிரசை வீழ்த்துவதால் அது திருந்திவிடும் என்று நம்புகிறீர்களா?

நிச்சயமாக இல்லை. கட்சி என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு. அது ஒரு வர்க்கத்தின் நலன்களைத் தேவைகளைப் பிரதிபலிப்பது. இதனால்தான் தில்லியில் காங்கிரஸ் ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும் ஒரே நிலை நீடிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆண்டாலும், அ.தி.மு.க. ஆண்டாலும் ஒரே நிலை நீடிக்கிறது. இந்த நிலை அது பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி சார்ந்து - இதில் தனி நபர் பாத்திரம் பங்கு முக்கியமானது- இதற்கேற்ப சில அணுகுமுறைகள் மாறலாமே தவிர அடிப்படை மாறாது. தில்லியில் வாஜ்பேயி அணுகுமுறைக்கும் மன்மோகன்சிங் அணுகுமுறைக்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம். தமிழகத்தில் கருணாநிதியின் அணுகுமுறைக்கும், ஜெ.யின் அணுகுமுறைக்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படை ஒன்றே. இதே வகையில்தான் காங்கிரஸ் கட்சியும் அதன் வர்க்கநிலையில் அது இயங்கும். அதைத் திருத்தவோ மாற்றவோ முடியாது. அதன் நடைமுறை கருதி சில அணுகுமுறைகள் மாறலாம். அடிப்படை மாறாது. நாம் பாடம் கற்பிக்க வேண்டும் என்பது, தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், தமிழர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும் என்று அக்கட்சியினருக்கு உணர்த்துவதுடன் இந்த உணர்த்துதல் அக்கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் சில கேள்விகளை, விழிப்புணர்வை ஏற்படுத்தும். மக்கள் மத்தியிலும் தேர்தல் என்னும் ஒரு குறைந்தபட்ச ஆயுதத்தை ஒரு குறைந்தபட்ச அளவிலேனும் பயன் படுத்தலாம் என்கிற ஒரு தெளிவு ஏற்படும். இந்தத் தெளிவு போராட்ட அரசியலுக்கு உந்துசக்தியாகவும், உத்வேக மூட்டுவதாகவும் களம் அமைத்துக் கொடுக்கும். அவ்வளவே தவிர, அதைத் தாண்டி பெரிதாக வேறு ஏதுமில்லை.

4. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணியைப் பற்றிப் பேசி வந்த ‘மண்மொழி’ தற்போது காங்கிரசை வீழ்த்துவது என்கிற ஒற்றைக் கோரிக்கை அளவுக்குச் சுருங்கியுள்ளதே சரியா?

இப்போதும் மூன்றாவது அணி என்கிற நிலையில் மாற்றம் இல்லை. இது காலத்தின் தேவை, கட்டாயம். இன்றில்லா விட்டாலும் நாளை அது உருவாகியே தீரும்.

ஆனால் இந்த மூன்றாவது அணி திடீரென்று தேர்தல் களத்தில் உருவாகிவிடுவதில்லை. அப்படி உருவாக்கவும் முடியாது. அப்படி உருவாக்கினாலும் அது நிற்காது, நிலைக்காது, நீடிக்காது. தேர்தலுக்குப் பிறகு அது காணாமல் போய்விடும். நாம் குறிப்பிடுகிற மூன்றாவது அணி என்பது தமிழக நலன்களைப் பாதுகாக்கிற குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. நிலைத்த நீடித்த நோக்குடையது. நிரந்தரமானது, இதில் கட்சிகளின் அணி சேர்க்கையில் அவ்வப்போது சில மாற்றங்கள் நேரலாமே தவிர, அமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டில் மாற்றம் இருக்காது. மாற்றம் இருப்பின் அது வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்குமே தவிர, பின்னடைவுக்குப் போகாது. அப்படிப்பட்ட அணியையே நாம் மூன்றாவது அணி என்கிறோமே தவிர வேறு எதையும் அல்ல.

ஆனால் இது உடனே உருவாகாது, உருவாக்கப்பட முடியாது. எனவே இம்மூன்றாவது அணி என்பது தொலை நோக்குத்திட்டம். இதை உருவாக்கும் வரை நாம் சும்மா கையைக் கட்டி உட்கார்ந்திருக்க முடியாது. அப்படி ஒன்றை உருவாக்க உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும். அதற்கான செயல்களில் இறங்க வேண்டும். அக்கட்சிகளில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அப்படிப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றுதான் காங்கிரசை வீழ்த்துவது, தேற்கடிப்பது என்கிற உடனடித் திட்டம்.

இது காங்கிரசை வீழ்த்துவது, தோற்கடிப்பது, காங்கிரசுக்கு ஒரு பாடம் கற்பிப்பது என்பதோடு மட்டுமல்ல. பிற கட்சிகளிடையேயும், மக்களிடையேயும் இது மாற்று அணியைப் பற்றி சிந்திக்க வைக்கும். அதன்மீது நம்பிக்கை கொள்ளத் தூண்டும். இந்த அடிப்படையிலேயே இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவது என்பதை உடனடி இலக்காக வலியுறுத்துகிறோம்.

Pin It