இந்த தலைப்பைப் பார்த்து விட்டு நிச்சயம் ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி என்று திட்டஞ்சல்கள் வரத்தான் போகின்றன என்றாலும் சமீபகாலமாக இலக்கிய உலகில் சண்டையும் சச்சரவுகளுமாக இருப்பது அரசியலையும், செல்லமே போன்ற அசட்டு சீரியல்களையும் மறக்கடித்து விடுகிறது என்றே சொல்லலாம். இந்த வார குமுதத்தில் கடைசியில் போட்டே விட்டார்கள். எப்போதும் இந்த சர்ச்சைகளை முதலில் முந்தித் தருவது குமுதம்தான். ஆனால் இந்த முறை குமுதம் கொஞ்சம் லேட். ஷோபா சக்தி வெர்சஸ் தமிழச்சி லடாய் பற்றித்தான் சொல்கிறேன்.

ஃபேஸ்புக்கில் இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி போல மாறி மாறி தாக்கிக் கொண்டனர். எது உண்மை என்பது சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களுக்குத்தான் தெரியும் என்றாலும் அவரவர் அணியில் வேகப்பந்து வீசுவது போல ஒவ்வொரு இலக்கிய ஆர்வலரும் வார்த்தைகளை வீசிக்கொண்டிருந்தார்கள்.

இவர்கள் நோக்கம் என்ன? அநீதிக்கு குரல் கொடுப்பதா அல்லது வெறும் பாப்புலாரிட்டியா என்று புரியவில்லை. இதில் என்னை வருத்தப்பட வைக்கும் விஷயம் உண்மையிலேயே தமிழச்சிக்கு அந்த கொடுந்துயர் நேர்ந்திருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் இருவரும் மாற்றி மாற்றி தாக்கிக் கொள்வதால் இந்த இரண்டு பேரின் நேரம்தான் விரயமாகிக் கொண்டிருப்ப‌தாக எண்ணுகிறேன். இவர்கள் இந்த தாக்குதலை ஒரு கட்டுரையில் முடித்துக் கொண்டு அவரவர் இலக்கியப்பணிக்கு சென்று விடலாம். புதிய படைப்புகளில் இந்த கோபத்தைக் காண்பிக்கலாம். அப்படிச் செய்தால் அது இலக்கிய உலகிற்கு நன்மையளிப்பதாக இருக்கும். ஆனால் செய்வார்களா என்று தெரியவில்லை.  இலக்கியவாதிகளுக்குள் சண்டை என்பது ஒட்டக்கூத்தர்-புகழேந்தி காலத்திலேயே இருந்திருக்கிறது.

'செப்பிளம் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங்கொண்ட குளிர்வானை எப்பொழுதும்
மீன்பொதித்து நின்ற விசும்பென்பதென்கொலோ
தேன்பொதித்த வாயாற்றெரிந்து'

- என்று புகழேந்திப்புலவர் பாடியதற்கு ஒட்டக்கூத்தர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இங்கே புகழேந்தியும் லேசுப்பட்ட ஆள் இல்லை. பெண்களை செம்பு போன்ற கொங்கைகள் உடைய பெண்களே என்று குறிப்பிடுகிறார். பெண்களை குறிப்பிடுவதற்கு மலர்கள் போன்ற முகத்தை உடைய பெண்களே என்று சொல்லியிருக்கலாமே. எதற்காக செம்பையும் மார்பையும் வம்புக்கு இழுக்க வேண்டும். இதை தவறென்று ஒட்டக்கூத்தரும் சொல்லவில்லை. இந்த 'செம்பு' சொற்பிரயோகத்தை அவரும் ரசித்திருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் குற்றச்சாட்டே வேறு.

'சந்திரனின் கதிர்கள் பட்டதால் உண்டான கொப்புளங்களான நட்சத்திரங்கள் நிறைந்த குளிர்ந்த வானத்தை விண்மீன்கள் பொதித்த வானம் என்று' என்று எதற்காக அய்யா புகழேந்தி சொல்கிறீர்கள். வானத்தில் எப்படி கொப்புளம் ஏற்படும். அப்படியே கொப்புளம் ஏற்பட்டால் அது அருவருக்கத்தக்க மாதிரி மாறிவிடுமே. சீழ் வடிய ஆரம்பித்து விடுமே. எனவே உன் பாடலில் பொருட்குற்றம் உள்ளது' என்று வாதிடுகிறார் ஒட்டக்கூத்தர்.

ஆக ஒட்டக்கூத்தர் வேண்டுமென்றே வம்புக்காகத்தான் புகழேந்தியை நக்கலடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அதனால் எழுத்தாளர்கள் புலவர்கள் போன்றவர்கள் எல்லாம் கொஞ்சம் அசட்டுத்தனம் கலந்த தீவிரவாதிகள். மேம்போக்காக சண்டையிடுவார்கள். அந்த சண்டையை யாரும் வேடிக்கை பார்க்கவில்லை என்றால் சண்டையிட்ட இரண்டு பார்ட்டியும் தோளில் கை போட்டுக் கொண்டு டீயோ இல்லை பியரோ சாப்பிடப் போய் விடுவார்கள்.

இலக்கிய ஆசாமிகள் என்றாலே முன்பெல்லாம் ஜிப்பா, ஜோல்னா பை, தடிமனான கண்ணாடி, சவரமற்ற முகம் அப்புறம் தடிமனான புத்தகங்கள் என்று இருந்தார்கள். இப்போது அப்படியே உல்டா. ஜீன்ஸ் டிஷர்ட்(அப்போதுதான் வயது தெரியாது) கருகருவென்று தலைச்சாயம், சிகரட், ஆல்கஹால் (கட்டாயமாக ஓசியில்தான்) நாலைந்து கேர்ள்ஃப்ரன்ட் (அதில் பாதி டூப்) அப்புறம் எழுதுகிற எழுத்தில் கட்டாயம் ஸாப்ட்போர்னோ இருக்க வேண்டும். அப்படி எழுதினால்தான் முன்னணி இலக்கியப் பதிப்பகத்தில் வெளியிடுவார்கள்.

இவர்கள் எழுதும் புத்தகத்தை விட கட்டுரைகள் நன்றாக இருக்கிறது. உதாரணமாக ஒரு டகால்டி எழுத்தாளர் இது மாதிரி கூட எழுதக் கூடும்.

"மும்பை மரீன்டிரைவ் பகுதியில் ஒரு இலக்கிய சந்திப்பு. ஒரு டேபிளில் அகஸ்த்மாத்தாக பச்சன் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். சீனியர் பச்சன் தன் லாப்டாப்பில் எதையோ டிவிட்டுக் கொண்டிருந்தார். ஜீனியர் பச்சன் எழுந்து வெளியே போனபோது அந்த பெண் மட்டும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அப்புறம் லிப்ட் அருகே நின்றபோது என்னருகே வந்தாள். அவள் முகம் சோகமாக இருந்தது. இத்தனை அழகான நீங்கள் எதற்காக சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். ச்சே. மிஸ் செய்து விட்டேன் என்றாள். எதை என்று கேட்டேன். சேசே உங்களை முதலிலேயே பார்க்காமல் போய் விட்டேனே. இல்லையென்றால் எதற்காக இன்சூரன்ஸ் ஏஜென்ட் மாதிரி கூன் விழுந்த முதுகுடன் இருக்கிற அபிஷேக்பச்சனை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறேன் என்றாள். அந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யாராய் என்று அருகில் யாரோ முணுமுணுத்தார்கள்."

ஏன் இப்படியும் கூட "சாரு"த்தனமாக எழுதினாலும் எழுதுவார்கள்.

"ஞாயிற்றுக் கிழமைகள் எதற்காக வருகின்றன என்று தெரியவில்லை. ஏற்கனவே என் இன்பாக்ஸ் நிறைய பெண் ரசிகைகளின் மின்னஞ்சல்கள். நானென்ன தோனியா இல்லை சிம்புவா. என்னை காதலிக்கவா என்கிறார்கள். எனக்கு எழுதவே நேரம் போதவில்லை. இதில் ஒரு ஆள் சின்னதாய் ஒரு ராக்கெட் கிடைத்ததென்று ஆன்ட்ரமீடாவிலிருந்து வந்து விட்டார். என்னுடைய புத்தகங்களை அங்கே அந்த கிரகத்தில் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைத்திருக்கிறார்களாம். அவரிடம் இனி என்னை சந்திக்க எல்லாம் வராதீர்கள் என்று கறாராக சொல்லி விட்டேன். இது பரவாயில்லை. அமெரிக்க அதிபர் புனைப்பெயரில் என்னுடன் சாட் செய்ய வருகிறார். நல்லவேளை எலிசபத் டெய்லர் செத்துப் போய் விட்டார். அவரது தொல்லை விட்டது என்று நினைத்தால், பிராட்பிட் அலுத்து விட்டதாம். ஏஞ்சலினாஜூலி இப்போது என்னை டேட்டிங்கிற்கு அழைக்கிறாள். 'ஜமைக்காவில் ஜமாய்க்கலாம் வா' என்று எஸ்எம்எஸ் விட்டிருக்கிறாள்."

இந்த மாதிரி எழுத்துக்களை எல்லாம் வாசக ஜனங்கள எப்படி நொந்துபோகாமல் படிக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை.

இந்த வகை எழுத்தாளர்களுக்கு தான் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோமா என்று கவலைப்படுவதே முதல்வேலையாக இருக்கும். இவர்களது எழுத்துக்களில் ஒரு எக்ஸிபிஷனிஷம் இருக்கும்.

இலக்கியவாதிகள் கட்டுரை எழுதும் முறையை தமிழில் கொண்டு வந்தவர் சுஜாதா. அவர் இப்போது இல்லை என்ற தைரியத்தில் நிறைய பேர் அந்த கணையாழியில் கடைசிப்பக்க பாணியை கையில் எடுத்துக் கொண்டு இஷ்டப்படி அலப்பரை பண்ணுகிறார்கள். சரியாக கவனித்துப் பார்த்தால் சில‌ எழுத்தாளர்கள் எல்லாம் அந்தக் கால புலவர்கள் போன்றவர்கள்தான். புலவர்கள் பொதுவாக ஒரு அரசனை அண்டிப் பிழைப்பவர்கள். அவர்களை புகழ்ந்து பாடி கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுபவர்கள். இப்போதும் சில எழுத்தாளர்கள், சில பத்திரிகை அதிபர்களையும் (உதாரணம் தினமலரும் அதில் பிழைக்கும் எழுத்தாளர்களும்) பதிப்பக அதிபர்களையும் அண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி அண்டிப்பிழைக்கிற ஆசாமிகள், அவர்களது பாஸ் ஒரு வளமான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்து அடிமனதில் உள்ளூரப் பொறாமையால் புகைந்து கொண்டிருப்பார்கள். தானும் அது போல வாழ பிரயத்தனப்படுவார்கள். வட்டாரம் படத்தில் 'பர்மா' ஆர்யா அரியாசனத்தில் உட்கார்ந்து மகிழ்வது போல. அதனால் இவர்கள் எழுதும் கட்டுரையில் கிரிக்கெட் ஆட கற்றுக் கொள்வது போலவும் சினிமா சூப்பர்ஸ்டார்களே தங்களிடம் வந்து பேச முயன்றதாகவும் வெளிநாட்டு அழகுப் பெண்கள் எல்லாம் தங்களிடம் வந்து டேட் செய்ய அழைத்ததாகவும் தன்னிடம் நட்பாக வந்து பழகும் பெண்ணே தன் மீது அடல்ட்ரி குற்றச்சாட்டு கொடுப்பதாகவும் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். நாமும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டோம். நல்லவேளை இதையெல்லாம் படித்துத் தொலைக்க சுஜாதா இப்போது உயிரோடு இல்லை. எந்திரன் 'ச்சிட்டி' மறுபடி உயிர்பெற்று வந்தது போல அவர் மீண்டும் உயிரோடு வந்தாலும் படிக்கக்கூடாத இலக்கிய ஆட்கள் என்று அவரிடம் தருவதற்காக ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன். அந்த லிஸ்ட்டை மற்ற யாரிடமும் தருவதாக இல்லை.

- சூர்யகுமாரன்

mail:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
blog:writersuryakumaran.blogspot.com

Pin It