periyar 340மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே, இந்த நாட்டில் மேல்சாதி - கீழ்சாதி மோதல் உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல் - கீழ் சாதி உணர்ச்சிகள் காட்டப்பட்டிருக்கின்றன.

இந்து மதம் என்பதில் வைணவத்திலாவது, சைவத்திலாவது சாதிப் பிரிவு உயர்வு - தாழ்வு காணப்படாத கடவுள்களோ, அவதாரங்களோ, திருவிளையாடல்களோ கடவுளைக் காட்டிய பெரியோர்களோ, தத்துவப் புராணங்களோ, இதிகாசங்களோ ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமா? 64 நாயன்மார்களும் 64 சாதிக்காரர்களாய்ப் பிறந்திருக்கிறார்கள்.

12 ஆழ்வார்களும் 12 சாதிக்காரர்களாயப் பிறந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆதாரமான, சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டால் அவைகளில் அளவில்லாத சாதிகளும், அதற்கு தாராதம்மியமும் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே, எந்த நிலையில் எந்த ஆதாரத்தைக் கொண்டு - இன்று உங்கள் மத நம்பிக்கைகாரனும் அதைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கைகாரனும் அது சம்மந்தமான வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாச நம்பிக்கைகாரனும் உங்களிடம் வந்து சாதிப்பாகுபாடும் சாதி வித்தியாசமும் இல்லை என்று சொல்ல முடியுமா ?

(குடி அரசு - 11.01.1931)

- பெரியார்

Pin It