உ.பி. தேர்தல் முறைகேடுகளுக்கு தயாராகிறார்கள் 

ஆட்சியின் மோசமான தோல்விகளை மறைப்பதற்கும் இந்து தீவிரவாதம் பேசும் நபர்களை அதிகாரப்படுத்தி ஆர்.எஸ்.எஸ்.சை மகிழ்விப்பதற்குமே மோடி அமைச்சரவையை மாற்றியமைத்திருக்கிறார்.

பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தலித் மற்றும் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப் பட்டுள்ளதாகவும் இதை எதிர்கட்சிகள் விரும்ப வில்லை என்றும் மோடி மாநிலங்களவையில் அமைச்சர்களை அறிமுகப்படுத்தும் உரையில் குற்றம் சாட்டினார். ஓராண்டு காலமாக வேளாண் சட்டங்களை இரத்து செய்யக் கோரி திறந்த வீதியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப்படுத்தும் மோடி ஆட்சியைக் கண்டித்து எதிர் கட்சியினர் காட்டிய எதிர்ப்பை மோடி இப்படி திசை திருப்பிப் பேசினார்.

உண்மையில் தலித், பிற்படுத்தப்பட் டோருக்கான உயர் கல்வி - வேலை வாய்ப்புகள் மோடி ஆட்சியில் நிரப்பப்படவில்லை. உயர்ஜாதி ஏழைகள் ஒதுக்கீடு மட்டும் முழுமையாக நிரப்பப்படுகிறது. நாடாளு மன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையே இதை படம் பிடித்துக் காட்டுகிறது. சமூக நீதி பற்றி கவலைப்படாமல் ‘இந்து’ மதவெறி யில் மூழ்கிக் கிடப்பவர்கள் பிற்படுத்தப்பட்டவர் களாக இருந்தாலும் ‘தலித்’ பிரிவினராக இருந்தாலும், என்ன பயன்? தமிழ்நாட்டைச் சார்ந்த பா.ஜ.க. தலைவராக இருந்த முருகன், தீண்டாமை, ஜாதி எதிர்ப்புப் பற்றி வாய் திறந்த வரலாறே இல்லை. இடஒதுக்கீடு குறித்து பேசியதும் இல்லை. ‘நீட்’ தேர்வு வேண்டும் என்கிறார். காவி தரித்து வேலைத் தூக்கிக் கொண்டு முருகன் கோயிலுக்கு ‘யாத்திரை’ போனவர் தான், இப்போது மத்திய இணை அமைச்சர், இவரை தலித் மக்ககளின் உரிமைக்கான பிரதிநிதியாக எப்படி ஏற்க முடியும்?

‘பிரண்ட் லைன்’ ஆங்கில இதழ் (ஜூலை 30, 2021), அமைச்சரவை மாற்றம் குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

அரசின் தோல்விகளை மறைப்பது; இந்து தீவிரவாதிகளை அதிகாரப்படுத்துவது; உ.பி. தேர்தலில் வெற்றி பெறுவது என்பதே அமைச்சரவை மாற்றத்தின் நோக்கம் என்று எழுதியிருக்கிறது. சர்ச்சைக்குரிய இஸ்லாமிய வெறுப்பு இந்துவெறி கருத்துகளைப் பேசி கண்டனங்களுக்கு உள்ளாகிய அனுராக் தாக்கூர், கிரி ராஜ் சிங் ஆகியோருக்கு காபினட் உயர்வு தரப்பட்டு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பேரும் பீம்கோரே கான் வழக்கில் தீவிரவாதிகள் என்ற குற்றச் சாட்டில் ‘உபா’ சட்டத்தில் கைது செய்துள்ள இடதுசாரி சிந்தனை யாளர்களையும் சிறைக்குள்ளே சாகடிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமியையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியவர்கள், இவர்களை சிறையில் அடைத்தது சரி தான் என்று துணிவோடு பேசியதற்காக இவர்களுக்கு பரிசாக முக்கிய துறைகளை ஒதுக்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது என்று அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

ஸ்டேன் சுவாமி சிறையில் கொல்லப்பட்ட அதே வாரத்தில் உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. வன்முறையாளர்களிடம் ஒப்படைத்து விட்டார் உ.பி. முதல்வர் ஆதித்ய நாத். தேர்தல் நடந்த 75 மாவட்டங்களில் பா.ஜ.க. வினரைத் தவிர, எதிர்க் கட்சியினரை குறிப்பாக சமாஜ்வாடி கட்சியினரை வேட்பு மனுதாக்கல் செய்யவிடாமலேயே ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விட்டனர். பல பகுதிகளில் வேட்பாளர்களைக் கடத்திப் போய் தனியறையில் அடைத்து, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நேரம் முடிந்த பிறகே வெளியே விட்டனர். தேர்லுக்கு முந்தைய கணிப்புகளின்படி சமாஜ் வாடி கட்சி 804 இடங்களிலும் பா.ஜ.க. 601 இடங்களில் வெற்றி பெறும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் ஜூலை 8ஆம் தேதி மாநில முழுதும் திட்டமிட்ட வன் முறைகளை கட்டவிழ்த்துவிட்டு - சமாஜ் வாடியின் வெற்றி தடுக்கப்பட்டது என்று விரிவாக அக்கட்டுரை பதிவு செய்துள்ளது. ஜூலை 6 - ஸ்டேன் சுவாமி சிறைவாசியாகக் கொல்லப்பட்டார். அதை மறைக்க ஜூலை 7இல் அமைச்சரவை மாற்றத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. ஜூலை 8ஆம் தேதி உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் நடத்தி முறை கேடாக பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் முறையாக செயல்படாமல், ‘கொரானா’வைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டார். அது அவரது தவறு தான் என்ற செய்தியை அவரது பதவி பறிப்பின் மூலம் மோடி உணர்த்த விரும்பினார். அதேபோல் பிரகாஷ் ஜவடேகர் தகவல் ஒளிபரப்புத் துறை பதவியிலிருந்து நீக்கி, ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சரியாக எடுத்துக் கூறவில்லை. உண்மையிலே ஆட்சி நன்றாக செய்யப்பட்டது என்ற தகவலையும் மோடி மக்களிடம் கூற விரும்பினார். எப்போதும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பெயர் போனவரும், தேர்தல் வெற்றிக்கு எந்த முறைகேடுகளை செய்யத் துணிந்தவர் என்ற பெயர் பெற்றவருமான கிரிராஜ் சிங் காபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டதற்கு எதிர்வரும் உ.பி. சட்டமன்றத் தேர்தலில் அவரது அதிகார முறைகேடுகளை பயன்படுத்துவதற்குத் தான். கூடுதலாக நியமிக்கப்பட்ட 36 அமைச்சர்களில் 5இல் ஒரு பங்கு உ.பி.யைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தேர்தல் களத்தில் இறங்க தயார்படுத்தப்பட்டுள்ளார்கள். உ.பி.யிலிருந்து மட்டும் 16 பேர் மத்திய அமைச்சர் களாக இருக்கிறார்கள். தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த உ.பி.யைச் சேர்ந்த சந்தோஷ் கோல்வார் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். இவர் மென்மையானவர். ‘கோவிட்’ தொற்றை ஆதித்ய நாத் ஆட்சி சரியாக நிர்வகிக்க வில்லை என்று வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அதனால் பதவி நீக்கப்பட்டுள்ளார். பீகாரைச் சார்ந்த ரவிசங்கர் பிரசாத் நீக்கப்பட்டதற்கு மற்றொரு காரணம், மோடி, அமீத்ஷாவைவிட அதிகமாக ஊடகங்களில் விளம்பரமாகிறார் இதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்பது தான்.

மாநிலங்களின் உரிமையில் உள்ள கூட்டுறவுத் துறையை ஒன்றிய அரசு உருவாக்கி அதை அமீத்ஷாவிடம் ஒப்படைத்திருப்பது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்து உருவாக்க வேண்டிய துறையை சட்டவிரோதமாக மாநில உரிமைகளைப் பறித்து அமீத்ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ‘பிரண்ட் லைன்’ கட்டுரை கூறுகிறது.

Pin It