ஆட்சியை விமர்சித்தால் அரசு துரோகமாகிவிடுகிறது; உபா (UAPA) சட்டம் 124ஏ பாய்கிறது. சட்டத்தில் கைது செய்து விட்டாலே நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே சிறை தண்டனை தொடங்கி விடுகிறது. நீதிபதிகள் ‘பிணை’ வழங்கும் உரிமைகளைக்கூட சட்டம் மறுக்கிறது. அந்நிய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம், ‘சுதந்திர பார்ப்பன இந்தியா’வில் இதைப் பயன்படுத்தும் வீதம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. 2016இல் 35 பேர் மீது பாய்ந்த இந்த சட்டம், 2018இல் 70 பேர் மீதும், 2019இல் 93 பேர் மீதும் பாய்ந்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து எழுதிய சுற்றுச்சூழல் ஆர்வலர் 27 வயதே நிரம்பிய திஷா ரவி மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச் செயலை நம்புவதற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது. அடிப்படை ஆதாரங்களில் உண்மை இருக்கிறது என்ற வாசகங்களை குற்றப் பத்திரிகையிலோ, வழக்கு டைரியிலோ சேர்த்து விட்டால் போதும், நீதிபதிகள் நினைத்தாலும் பிணை வழங்க முடியாது. வழக்கு விசாரணைகளும் துரிதப்படுத்துவது இல்லை.

தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 2016லிருந்து 2019 வரை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் 5,922 பேர். ஆனால் சட்டம் முறை கேடாகவே பயன்படுத்தப்படுகிறது. தண்டிக்கப்பட்டவர்கள் 132 பேர் மட்டுமே.

2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் விசாரணைக்காகக் கிடப்பில் இருந்தவை 3908. அதற்கு முன்பே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் இவர்களில் 257 பேர் மீது மட்டுமே. 2019இல் புலனாய்வுத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நீதிமன்றம் வரை வந்த 1878 வழக்குகளில் 485 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்தன. 113 வழக்குகளை மட்டுமே விசாரித்து முடித்த நீதிமன்றம். அதில் குற்றவாளிகள் என்று உறுதி செய்தது. 29 சதவீத வழக்குகளில் மட்டும் தான். 71 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு பிணை மறுத்து, சிறைச்சாலைகளில் ஆண்டுக் கணக்கில் அடைத்து வைப்பதற்கே இந்தச் சட்டம் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் ‘குடிமகன்’, தேசத் துரோகியாக்கப்பட்டு, ‘தேச பக்தனாக’ நிரூபிக்க இவ்வளவு விலை தர வேண்டியிருக்கிறது.