கல்விக்காக ஒதுக்கும் நிதியில் 60 விழுக்காடு நிதியை விழுங்கிக் கொண்டிருக்கின்றன அய்.அய்.டி உயர் கல்வி நிறுவனங்கள். ஆனால் இந்த நிறுவனங்களில் மனுசாஸ்திரம் தான் சட்டமாக இருக்கிறது. சனாதனக் கும்பலின் சதிகள் தான் இங்கே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் ‘விபின் புதியாவ் வீட்டில்’ என்ற பேராசிரியர் சென்னை அய்.அய்.டியில் ஜாதிய பாகுபாடுகள் தாண்டவமாடுகின்றன என்று கூறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் குழு ஒன்றை அமைத்து அய்.அய்.டி யில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை கண்டறிய வேண்டும்' என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு சென்னை அய்.அய்.டி க்கு படிக்க வந்த பாத்திமா லத்தீஃப் என்ற இஸ்லாமிய மாணவி மத பாகுபாடுகளுக்கு உள்ளாகி துன்புறுத்தப்பட்டதால் விடுதியிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். எழுதி வைத்திருந்த கடிதத்தில் ‘சுதர்சனம் பத்மநாபன்’ என்ற பேராசிரியர் தன்னை மத ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார். அந்த பேராசிரியர் மீது சென்னை கோட்டூர்புரம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் வழக்கு விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

சுதர்சனம் பத்பநாபன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர். சென்னை அய்.அய்.டி-யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு நிர்வாகம் தடை போட்டது.

அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய பல்வேறு படிப்பு வட்டங்கள் அனுமதிக்கப்பட்டன.

சைவ, அசைவ மாணவர்கள் ஒரே இடத்தில் உணவு சாப்பிடுகின்ற முறை இருந்தது. அதை சைவத்திற்கு வேறு இடம், அசைவத்திற்கு வேறு இடம் என்று மாணவர்களை கூறு போட்டது சென்னை அய்.அய்.டி நிர்வாகம். மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று கூறி அய்.அய்.டி மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமும் அங்கே நடந்தது.

அய்.அய்.டி நிகழ்ச்சிகளில் தமிழ்வாழ்த்து எப்போதும் பாடப்படுவது இல்லை. சமஸ்கிருதப் பாடல் தான் அங்கே பாடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு கொள்கையும் முழுமையாக அங்கே பின்பற்றப்படவில்லை நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ‘ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’ அளித்த பதிலில், இது அம்பலமானது.

‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில் (ஜூலை 4, 2021) பாபு ஜெயக்குமார் எழுதிய கட்டுரையில் சில தகவல்களை பதிவு செய்துள்ளார். பாத்திமா லத்தீப் என்ற மாணவி, அய்.அய்.டி. பெண்கள் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தபோது ஒரு பத்திரிகை புகைப்படக்காரர் விடுதியை படம் பிடிக்க முயன்றார். உடனே அய்.அய்.டி. பேராசிரியர் ஒருவர், காவலாளிகளுடன் திரண்டு வந்து, பத்திரிகை யாளரைக் கடுமையாகத் தாக்கினார். கோட்டூர்புரம் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பத்திரிகைகாரர்கள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேராசிரியரைக் காப்பாற்ற முயன்ற நிர்வாகம், சில மாணவிகளை காவல் நிலையத்துக்கு திரட்டி வந்து பத்திரிகையாளர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் தந்தது.

அய்.அய்.டி.களில் ஜாதிய பாகுபாடுகள் குறித்து பல ஆங்கில நூல்கள் வெளி வந்திருக்கின்றன. பாரீஸ் பல்கலையைச் சார்ந்த ஒடில் ஹென்றி என்ற பெண் பேராசிரியர் அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடு முறைகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். கான்பூர் அய்.அய்.டி.யில் அவர் ஆய்வு நடத்த அனுமதிக்காமல் நிர்வாகம் பாதியிலேயே அனுமதி மறுத்து விட்டது. ரோகித் வெமுலா (அய்தராபாத் பல்கலையில் ஜாதிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்) மரணம் குறித்து ஒரு விவாதத்தில் பங்கேற்றார் என்பதற்காக அவருக்கு ஆய்வு நடத்தும் உரிமையை மறுத்து விட்டார்கள்.

அண்மையில் கான்பூர் அய்.அய்.டி. பேராசிரியர் சீமாசிங் என்னும் ஆங்கில பெண் பேராசிரியர், தலித் மாணவரை ‘கெட்ட வார்த்தை’களால் இழிவாகப் பேசினார். அவர் அப்படிப் பேசியது பதிவு செய்து நிரூபிக்கப்பட்டதால் அவர் ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டார்.

சென்னை அய்.அய்.டி.க்குள் வேளச்சேரி பகுதியில் உள்ள நுழைவு வாயிலை பொது மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று நிர்வாகம் மூடிவிட்டது. பள்ளிக்கூடம் போவதற்கும், வழிபாட்டு தலங்களுக்கு போவதற்கும் மக்கள் இந்த மாவட்ட செயலாளர், அருந்ததி அரசு-ஆதித் தமிழர் பேரவை, முன்னாள் மாநில நுழைவுவாயிலைப் பயன்படுத்தி வந்தார்கள். அவர்களை சமூக விரோதிகள் என்கிறது, சென்னை அய்.அய்.டி. பார்ப்பன நிர்வாகம்.

அய்.அய்.டி முனைவர் பட்ட அனுமதிகளில் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர்க்கான இட ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்த அதிர்ச்சியான பதிலில் உண்மைகள் வெளி வந்துள்ளன.

முனைவர் பட்டக் கல்வியில் அனுமதிக்கப் பட்டுள்ள பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், இதர பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, அப்பிரிவுகளுக்குரிய இட ஒதுக்கீடுசதவீதங்களை விட மிகக் குறைவாக உள்ளது. இந்தியாவின் 23 ஐ.ஐ.டி களில் மொத்தம் 7186 மாணவர்கள் 2020 ஆம் ஆண்டில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் ஓ.பி.சி மாணவர்கள் 1635 பேர், 707 பேர் பட்டியல் சாதியினர், 321 பேர் பழங்குடியினர் என அப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 அய்.அய்.டி.களில் ஒரு பழங்குடி மாணவர்கூட அனுமதிக்கப்படவில்லை என்கிறது ஒன்றிய அரசு தரும் புள்ளி விவரம்.

சென்னை அய்.அய்.டி.யில் பணியாற்றும் 596 பேராசிரியர்களில் தலித் 16 பேர் (2.7 சதவீதம்), பழங்குடியினர் 3 (0.5 சதவீதம்), பிற்படுத்தப்பட்டோர் 62 பேர் (10.4 சதவீதம்), தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டு ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு 30.6.2021 அன்று வெளியிட்ட தகவல் இது.