தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுகள் உருவாக்கும் ‘தாக்கம்’ குறித்து ஆராய தி.மு.க. ஆட்சி, முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. குழுவின் அறிக்கை இன்னும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குழுவின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பிலுள்ள கரு.நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றி 2020இல் ஒன்றிய ஆட்சி சட்டமாக்கி மருத்துவக் கல்வி தொடர்பான உரிமைகளை தன் வசமாக்கிக் கொண்டு விட்டது. மாநில அரசு உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் மிக்க ஆணையமாக மாற்றியிருக்கிறது. இப்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை நியமிப்பதற்குக்கூட இந்த ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இப்போது பா.ஜ.க. பொறுப்பாளர் தாக்கல் செய்த மனு கூறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஒன்றிய அரசு திணிக்கும் ஒரு ‘தேர்வுத் திட்டத்தை’ பரிசீலிக்கும் உரிமைகூட கிடையாது என்பது ஒன்றிய ஆட்சியின் எதேச்சாதிகார வெளிப்பாடு ஆகும்.

தமிழ்நாடு தனக்கான சமூகநீதிக் கல்விக் கொள்கையை நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி - காமராசர் ஆட்சி காலத்திலும் ‘திராவிட’ ஆட்சி காலத்திலும் உருவாக்கி அதை வளர்த்தெடுத்து வருகிறது. இடஒதுக்கீடு, உள் இடஒதுக்கீடு, இலவசக் கல்வி, சத்துணவு, இலவச மிதிவண்டி, இலவச பாட நூல், இலவச கணினி, உதவித் தொகை, இலவசப் பேருந்து, இலவச சீருடை போன்ற பல்வேறு கட்டமைப்புகளோடு விளிம்பு நிலை மக்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை. இது ஒன்றிய அரசு உருவாக்கிய எந்தக் கல்விக் கொள்கையையும் தமிழ்நாடு கண்மூடி ஏற்காமல், தனக்கான தனித்துவத்தோடு பயணித்து இந்தியாவுக்கே வழிகாட்டி நிற்கும் நாடாக உயர்ந்து நிற்கிறது.

1968ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக ஒன்றியத்துக்கான கல்விக் கொள்கை கோத்தாரி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. கோத்தாரி ஆணையம் கல்வி, மாநில உரிமைப் பட்டியலில்தான் இடம்பெற வேண்டும் என்று உறுதியாக அறிவித்ததோடு, ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) கொண்டு செல்லலாம் என்று குழு உறுப்பினர் இருவர் முன் வைத்த கருத்தையும் ஏற்க மறுத்துவிட்டது. கல்வித் துறையை கூறுபோட்டு விடக் கூடாது என்று உறுதியாகத் தெரிவித்தது கோத்தாரி ஆணையம். (We are not in favour of fragmenting education and putting one part in the concurrent and the other in the State list. The position given to education in the constitution (that is in the state list) is probably the best)

கோத்தாரி ஆணையப் பரிந்துரைக்கு மாறாகத்தான் அவசர நிலை காலத்தில் 1976இல் கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. 1986இல் ராஜீவ் பிரதமராக இருந்தபோது இரண்டாவது ஒன்றிய அரசு கல்விக் கொள்கை வந்தது. அந்தக் கொள்கை ‘நவோதயா’ கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பெரியார் இயக்கங்கள் அதை எதிர்த்து தீவிரமான பரப்புரை செய்து போராட்டங்கள் நடத்தி தமிழகத்தில் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தியது. மூன்றாவது கல்விக் கொள்கையான கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரையை பா.ஜ.க.வின் ஒன்றிய ஆட்சி மாநிலங்களின் உரிமைகளை சட்டப்பூர்வமாகப் பறித்து வைத்துக் கொண்டு திணித்துக் கொண்டிருக்கிறது. இதற்காகவே பல்கலைக்கழக மான்யக் குழுவை கலைத்து விட்டு ‘உயர் கல்விஆணையம்’ என்ற அமைப்பையும், ‘மருத்துவக் குழு’ என்ற அமைப்பைக் கலைத்து விட்டு, ‘மருத்துவ ஆணையம்’ என்ற அமைப்பையும் சட்டத்தின் வழியாக உருவாக்கியிருக்கிறது.

1984இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தான் கிராமப்புற மாணவர் கல்வி உரிமைகளைத் தடுக்கும் நுழைவுத் தேர்வு வந்தது. கல்விக் கொள்கையில் இது மிகப் பெரும் ‘சறுக்கல்’. 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் கலைஞர், கல்வியாளர் அனந்த கிருட்டிணன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, அதன் பரிந்துரை அடிப்படையில் நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றார்.

2010இல் நுழைவுத் தேர்வு ‘நீட்’ என்ற பெயரில் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்தபோது நாடாளுமன்ற நிலைக் குழு அதை பரிசீலித்து விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு தரவேண்டும் என்று பரிந்துரைத்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டை எதிர்த்து வந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகளடங்கிய அமர்வு ‘நீட்’ டை இரத்து செய்தது. அனில் தவே என்ற பார்ப்பன நீதிபதி மட்டும் ‘நீட்’ வேண்டும் என்றார். நீட்டை இரத்து செய்த நீதிபதிகள், பதவி ஓய்வுக்காகக் காத்திருந்த மருத்துவக் கவுன்சில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு வழக்குக்கு உயிர் கொடுக்க சதித் திட்டம் தீட்டியது.

நீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கிய அனில் தவே அமர்வு முன் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே நீட்டை இரத்து செய்த தீர்ப்புக்கு தடை போட்டது அணில் தவே அமர்வு. இவர்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஓட்டை போடும் தீர்ப்பை வழங்கியவர். பிறகு இந்தத் தீர்ப்பை மாற்றியமைக்க சட்டத் திருத்தம் கொண்டு வரும் நிலை உருவானது. பெண்களுக்கு எதிரான வரதட்சணை தடுப்புச் சட்டத்தையும் இவர் நீர்த்துப் போக வைத்தவர். தான் மட்டும் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதையை அனைவரும் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உத்தரவிட்டிருப்பேன் என்று இறுமாப்போடு பேசிய ‘மனு சாஸ்திர’ வாதி இந்த நீதிபதி.

தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, 2016இல் மே 25ஆம் தேதி ‘நீட்’டை திணிக்கும் அவசரச் சட்டத்தையும், 2016ஆம் ஆண்டு ஜூலை 18இல் நாடாளுமன்றத்தின் சட்டம் வழியாக அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’டை கட்டாயப்படுத்தியது. விதிவிலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானத்தையும் குப்பைக் கூடையில் வீசி விட்டார்கள்.

இப்போது சட்டத் தடைகளை நீக்கும் முயற்சிகளில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டைப் போடுகிறது பா.ஜ.க. பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் வழக்கில் தமிழக அரசுக்கு ஆதரவாக தங்களையும் இணைத்துக் கொள்ள முன் வந்திருப்பது - தமிழ் நாட்டின் ஒருமித்த உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. ‘நீட்’ எதிர்ப்புக்கான மக்கள் இயக்கங்களை உருவாக்கி மனுவின் வாரிசுகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திடும் முயற்சியில் இறங்குவதே சரியான பதிலடியாக இருக்கும். அதற்கான பரப்புரையை தீவிரப்படுத்த ஆயத்தமாவோம்!