இருட்டு
எல்லோருக்கும்
இயல்பாய் பழகி விட்டது.

பார்வையற்றவர்களின்
தட்டுத் தடுமாறலைப் போல
பார்வையுள்ளவர்களின்
தடுமாற்றங்களுக்கு
பின்னிருக்கிறது இருட்டு.

பத்துமாத சிசு சுமந்த
இருட்டைப் போல
பல பத்தாண்டுகள்
இருட்டு சுமந்தவர்கள் நாங்கள்.

ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் பின்
திரைகட்டி இலவசமாய்
காட்டப்படும் திரைப்படத்தை
திருவிழா கூட்டமாய்ப்  பார்த்து
வீடு திரும்பும் போது
வழிகாட்டும் மினுக்கட்டாம் பூச்சிகளால்
வெளிச்சமாகவே இருக்கும்
எங்கள் தெரு அழகாயிருக்கும்.

வீடுகளையொட்டியுள்ள
கள்ளிக்குளம் கண்மாயில்
மீன்பிடி மாதத்தில்
நிலா வெளிச்சத்தில்
மிதக்கும் மீன்களைப் பிடிக்கும்
கோசாலியின் வலைவீச்சு
வாசலில் போடப்படும்
பூசணிப்பூ கோலம் போலிருக்கும்.

மெழுகுதிரி வியாபாரி
ஜான்  கட்டிக் கொடுத்த
தேசிய விநாயகர் கோவிலில் உள்ள
அரசமரத்தில்
அடையும் குருவிகளின்
இரவு நேர எசப்பாட்டு
எங்களுக்கு
இளையராசாவின்  தாலாட்டு.

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மின்சாரம் இருந்த வீடுகள்
வெள்ளியன்று வீட்டுக்கு வெளியே
ஒளியும், ஒலியும்
தொலைக்காட்சியில் காட்டி
தங்கள் குலப் பெருமையைப் படம் காட்டும்.

தேசிய விநாயகர் கோவில்
தெருவிளக்கில் படித்து, படித்து
பட்டம் பெற்ற ஒருவர்
ஆசிரியராகியும் விட்டார்!

ஒத்தை லைட் வீதியாயிருந்த
எங்கள் தெருவில்
வரிசையாக இப்போது
மின்கம்பங்கள்
மின்விளக்குகள்.
ஆனாலும்
இருட்டாகவேயிருக்கிறது
இன்னமும்
வீடுகளும், வீதியும் . . .
காற்று வீசவில்லையென
ஆட்சியில் இருந்தவர்கள்
ஐந்தாண்டுகளாகக் காரணம் காட்டினார்கள்.
காற்றில்
பறக்கிறது ஆட்சியின் மானம்!

- ப. கவிதா குமார்

Pin It