‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது.

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.

kolathoor mani jayaranjan and viduthalai rajendranதமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வாங்கினர். இரண்டே நாட்களில் மிகச் சிறப்பாக அச்சிட்டுத் தந்த மாணவர் நகலக உரிமையாளர் அ. சவுரி ராசனுக்கும் அவரது இணையர் மணிமேகலைக்கும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆடை போர்த்தி சிறப்பு செய்தார்.

நூலை வெளியிட்டு உரையாற்றிய முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், “பெரியார் காலத்தில் இல்லாத பிரச்சினைகள் இப்போது புதிதாக வந்திருக்கிறது என்றாலும் அடிப்படையான தத்துவத்தில் நாம் முழுமையான முன்னேற்றம் அடையவில்லை. எதிரிகள் மிகவும் நுட்பமாக செயல்படுகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதன் ஆபத்துகளை இளைஞர்கள் உணரத் தொடங்கி யிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அவாகளிடம் பெரியாரின் கருத்துகளைக் கொண்டு போய் நாம் சேர்க்க வேண்டும்” என்றார்.

‘குடிஅரசு’ பத்திரிகையைத் தொடங்கிய பெரியார், வர்ததகத்துக்காக இலாப நோக்கத்தோடு வாசகர்கள் விரும்புகிறவற்றை வெளியிடும் பத்திரிகை அல்ல; மாறாக எதிரிகள் கொள்கைக் குழப்பத்தை எதிர்த்து மக்களுக்கு சுயமரியாதையை உண்டாக்கு வதற்காகத் தொடங்கப்பட்ட பத்திரிகை என்றார். இந்தப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ ஏட்டின் தலையங்கங்கள், பெரியார் கொள்கை வெளிச்சத்தில் அவ்வப்போது நடந்த நிகழ்வுகளின் மீது கருத்துகளை முன் வைத்து வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. பார்ப்பனியம் என்ற கருத்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டும் இல்லை, அது பார்ப்பனரல்லாதாரிடமும் பரவி நிற்கிறது. பெரியார் காலத்தைவிட இப்போது கோயில்கள் அதிகரித்து வருகின்றன. சீரடி சாய்பாபாவுக்கு மூலைக்கு மூலை கோயில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

நாம் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம். ஆனாலும் அதுவே முழுமையான வெற்றி என்று கூறுவது உண்மையல்ல என்பதே எனது கருத்து. எனக்கு இப்போது உயர்மட்டத் திலுள்ள அதிகாரிகளுடன் பேசக் கூடிய வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் அவர்கள் முழுமையான அதிகாரத்துடன் செயல்பட இயலாதவர்களாகவே இருக்கிறார்கள். டில்லியே முடிவுகளைத் திணிக்கிறது.

வி.பி.சிங், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்ததன் விளைவாக பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பல பதவிகளுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அதிகாரப் பதவிகளை எட்ட முடியாத அளவுக்கு அவர்கள் தடைபடுத்தப் படுகின்றனர். நீதித்துறை சட்டத்தை உருவாக்குவது; அதை அமுல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவது என்ற நிலைக்கு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அதிகாரிகள் உயரவில்லை. துறை சார்ந்த நிபுணர்கள் என்ற போர்வையில் அத்தகைய உயர் அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு விடுகிறார்கள்.

உயர்ஜாதி ஏழைகள் என்று அரசியல் சட்டத் துக்கு எதிரான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதை தீவிரமாக அவர்களால் அமுலாக்க முடிகிறது. ஆனால் ஏற்கனவே அமுலில் உள்ள இட ஒதுக்கீடு சட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவது இல்லை. நீதிமன்றங்களும் இதற்கு ஆதரவாகவே செயல்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உயர் அதிகாரப் பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டு அதன் வழியாக உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்த அதிகாரவர்க்கத்தைப் பற்றி நுட்பமாகப் புரிந்தவர்கள் எனக்குத் தெரிந்தவரை மூன்று தலைவர்கள் தான். ஒன்று பெரியார்; இரண்டு காமராசர்; மூன்று கலைஞர்.

‘பிராமணர்களுக்கு’ ஆபத்து ஏற்படும் போதெல்லாம் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த அனைவரும் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ‘கம்பி இல்லாத் தந்தி’போல ஒருவருக்கொருவர் தாமாகவே புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதை பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையில் சுட்டிக் காட்டினார். அந்த நிலை இப்போதும் தொடரவே செய்கிறது. இந்த நிலையில் பெரியார் கொள்கை என்ற நுண் கண்ணாடி வழியாக அவ்வப்போது நடந்த நிகழ்வுகளை இந்தத் தலையங்கம் வழியாக இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் எனது நீண்டகால நண்பர் விடுதலை இராசேந்திரன் எழுதி வருகிறார்” என்று குறிப்பிட்டார்.

கொளத்தூர் மணி தனது தலைமை உரையில், “பல்வேறு காலகட்டங்களில் கழகம் எடுத்த தனித்துவமான நிலைப்பாடுகளை இதைப் படிக்கும்போது உணர முடிகிறது. பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பிரச்சினையில் ‘உள் ஒதுக்கீட்டை’ நிபந்தனையாக்கி முட்டுக்கட்டைப் போட வேண்டாம். ஒரே சிவில் சட்டம் வரவேண்டும். அதற்கு முன் இந்துக்களின் ‘ஜாதி’ பாகுபாடுகளை வலியுறுத்தும் சட்டப் பிரிவுகளை நீக்கிவிட்டு இந்து சமூகத்தின் ஜாதியற்ற சமூகத்தை ஓர்மைப்படுத்த வேண்டும். நாட்டார் வழிபாடு, சமஸ்கிருத வழிபாடு மறுப்பு என்ற கண்ணோட்டத்தில் ஆதரிக்க முடியாது. இந்த வழிபாடுகளை கிராமங்களில் ஜாதியத்தைப் பேணிக் காப்பாற்றி வருகின்றன என்று தனித்துவமான நிலைப்பாடுகளை கழகம் எடுத்ததை தலையங்கங்கள் உணர்த்துகின்றன என்றார். (உரை முழு விவரம் அடுத்த இதழில்)