இளைய தலைமுறை பெரியாரியலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? (3)

பார்ப்பனியம் என்ற அரசியல் சமூகக் கோட்பாட்டை தகர்க்க பெருந்திரளான மக்களிடம் படிந்து நிற்கும் உளவியலுக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைக்க வேண்டும் என்று பெரியார் சரியாக சிந்தித்தார்.

Periyar 235புராணப் புரட்டு - பனிப் போரின் பெருமைகளை மக்கள் மொழியில் போட்டுடைத்ததன் விளைவாக பார்ப்பனியம் தனக்காக நிலைநிறுத்திக் கொண்ட உயர்தனிப் பெருமைகள் சிதையத் தொடங்கின.

மானுடகுல படிமலர்ச்சியில் வேட்டை சமூக காலம் முதல் எந்திரங்களை சிந்திக்கச் செய்யும் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும், உலகமெங்கும் ஒரு சமூகமென்பதின் அடிப்படை அலகான தனிமனித மனங்கள் மீதான உண்மையான அதிகாரம் என்பது புரோகித வர்க்கத்திடமே (Pontifex Class) இன்றும் குவிந்துள்ளது என்பதை எளிதில் உணர முடியும். இது நவீன அமைப்பியல் கருத்தியல்களான சமூகம், அரசதிகாரம், படைத் துறை, பொருளியல் உற்பத்தி என்பவை தாண்டிய தனிமனிதன அகநிலையை கைக்கொள்ளும் அதிகாரம்.

இந்த அதிகாரம் செயல்படும் புள்ளி என்பது ஒவ்வொரு தனித்த அகத்தின் ஆதி அச்சம் சார்ந்தது. இது மனித மனங்களுக்கானது மட்டுமானதல்ல அனைத்து உயிர்களுக்குமான அச்சம். இதன் ஆழ்நிலை என்பது தன் பௌதீக இருப்பு குறித்த இயற்கை மீதான அச்சம். இந்த அச்சத்தை அதிகாரக் கைப்பற்றலுக்கு பயன்படுத்தும் தன்மையை எல்லா உயிரின சமூகங்களுக்குள்ளும் காண முடியும். ஆனால் அதை ஒரு முறைப்படுத்திய தன்மையில் தீவிர நடைமுறையாக்கி அதிகாரக் கைப்பற்றலுக்குப் பயன்படுத்தியது, மனித சமூகம் மட்டுமே.

வேட்டைச் சமூகத்தில், அச்சம் மறுத்து இருள்குகைக்குள் சென்று திரும்பிய ஒரு மனிதனின் பௌதீக இருப்பு, அவனை அந்தச் சமூகத்தின் மேம்பட்ட உயிரியாக்கி வணங்கத் துவங்கியதில் தோன்றியது புரோகித வர்க்கம். இந்த வர்க்கம் வரலாறு நெடுகிலும், இந்த அச்சத்தை தன் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்து தன் சமூக அதிகாரத்தை தக்க வைக்கிறது. இது மானுடகுலம் முழுமைக்குமான பொதுமைத் தன்மையானாலும். உலகம் முழுதும் காலம் நெடுகிலும், இந்த புரோகித வர்க்க அதிகார கைப்பற்றல் மாறிக்கொண்டே வந்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் ஒரு பெரிய பரந்துபட்ட புரோகித வர்க்க சமூக அதிகாரக்க கைப்பற்றல் என்பது என்றும் மாறாத்தன்மை கொண்டதான ஒரு சிறப்பு பண்பைக் கொண்டதாக உள்ளது. இதுவே மானுடவியல் நோக்கில் ஆய்வுக்குள்ளாக்க வேண்டிய மிக தீவிரமான பகுதி.

இந்திய நிலப்பரப்பின் இந்தப் புரோகித சமூக அதிகாரத்தின் மாறாத் தன்மையை சிந்தித்ததில் பெரியார் கவனிக்கப்பட வேண்டியவர். இந்த மாறாத் தன்மையை ஒரு குழப்பமாக அஞ்சாமல் அதன் உடைவு நோக்கி பேசியதில் அவர் ஒரு தெளிந்த சிந்திப்பு கொண்ட செயற்பாட்டாளராகிறார்.

இங்கு, பார்ப்பனியம் என்பது தன்னை விட பிற அனைத்தையும் மறுத்து தாழ்வாக்கி பிறனின் பௌதீக இருத்தலையே தீமை என்பதாக்கி சுரண்டி அழிக்கப்பட வேண்டியது என தானும் உணர்ந்து கொண்டு, சுற்றி இருக்கும் அனைத்து மனங்களையும் அதை நோக்கி இழுத்து சமூகம் முழுமைக்கும் எப்பொழுதும் ஒரு வெறுப்பை, ஏற்றதாழ்வை தக்க வைத்துக் கொள்ளும் பேரழிவு சிந்தாந்தம். இது அதிகம், இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களுக்குள் திணிக்கப் படுவது புரோகிதம் வழியான பக்தி உணர்ச்சி வழியாகவே.

ஒரு நாடு, அந்த நாட்டை ஆளும் அதிகார வர்க்கம், தனக்கான தேசிய குடிமக்களை உருவாக்க சில உணர்ச்சிகர தளங்களை உருவாக்கி அதை ஒரு இயல்வாழ்வியல் நடைமுறையாக்கி, அறியாமலே தனித்த மனங்களை கட்டுப்படுத்தி; தன் தேவைக்கேற்ப பயன்படுத்தத் துவங்கும். உதாரணம் எல்லா நாடுகளிலும் பள்ளிக்குழந்தை மனங்களில் தேசிய கீதம் பாடுவதை ஒரு நடைமுறையாக்கி; தேசியம் மீதான நம்பிக்கை விதைத்து அந்த இளம்மனத்தை அது உணரலாமே உணர்ச்சியால் கட்டமைத்து நன்மையாகவோ தீமையாகவோ பயன்படுத்திக் கொள்வது (இந்திய தேசிய உணர்ச்சியின் நன்மை, நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுமையும் நிகழ்ந்த போராட்டங்கள், அதே உணர்ச்சியின் தீமைப் பயன்பாடு அதே தேசிய உணர்ச்சி வழி ஹிந்து ராஜ்யா என முழங்கியபடி தனி மனிதர்களை தீயிட்டு கொளுத்துவது).

“இந்திய நிலப்பரப்பின் இளம் மனங்களை கட்டமைக்கும் இயல்பை; எந்தச் சலனமுமற்று சமூக அமைப்பின் அடிப்படை அலகான குடும்பத்திற் குள்ளேயே அதன் உறுப்பினர்களாலே கட்டமைக்கும் வழியை உருவாக்கிக் கொண்டதிலேயே பார்ப்பனியம் இந்த மண்ணில் இன்றும் நீடிக்கிறது. ஆம், உயர்குடி என்று தங்களை நம்பிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் உருவாக்கும் வழிபாட்டு நடைமுறைகள் இந்திய நிலப்பரப்பின் பெருவாரி குடும்பங்களுக்குள்; உயர்வானதாக நம்ப வைக்கப்படுவதில் ஒரு குழந்தையின் மனதிற்குள் பார்ப்பனியம் என்ற மனவியல் கட்டமைப்பு அதன் அரூபத் தன்மையில் விதைக்கப்படுகிறது. ‘பிராமண’ வழிபாட்டு நடைமுறையில் இருக்கும் ஆடம்பர அழகியலை (Luxurious Aesthetics) உள்ளேற்றிக் கொள்ளும் ஒரு குழந்தை இயல்பிலே ஆடம்பரமற்ற எளிய இயற்கையின்பாற்பட்ட பண்பாட்டு வழிபாடுகளை ஏற்கும் உற்சாகமற்று, அதை தாழ்வுற்றதாய் நம்பிக் கொள்கிறது. இதிலிருந்து ஒரு இந்தியக் குழந்தையின் மனத்தில் மேல், கீழ் உருவாக்கப்பட்டு தன்னிலிருந்து பிறனை விலக்கும் தீண்டாமையை இயல்பாக்கிக் கொள்கிறது.

இந்தக் குழந்தை மனம் முதிர முதிர இன்னும் சரிசெய்ய முடியாததாகி ஆதிக்கப் பெருமிதம் கொண்டு குற்ற உணர்வற்று பிறனை சுரண்டுதல் என்பதாக; அப்படியே அடுத்த தளத்தில் விரிந்து, ஒரு சமூக கட்டமைப்பாகி ஒரு மனிதன் தன் சக மனிதனிடம், ஓர் ஆண் ஒரு பெண்ணிடம், ஒரு சாதி இன்னொரு சாதியிடம் என எங்கும் அதிகாரம் பரவலாகும் சம உரிமை என்னும் சாத்தியப்பாட்டை இல்லாமல் ஆக்கி படிநிலை சமமின்மை (Graded inequality) மனநிலையாக விரிகிறது. இதை வர்ணாசிரமம், ஒரு தனிமனித குழந்தை மனம் உருவாக்க அடித்தளத்திலிருந்து செயல்படும் சிந்தனை அமைப்பாக போலியான குடும்ப ஆன்மிக வழிபாட்டு நம்பிக்கை வழி உருவாக்கி வைத்துள்ளது. இதுவே இன்றும், சாதியத்தை இந்திய நிலப்பரப்பிற்குள் தக்கவைத்துக் கொண்டிருகிறது. இந்த சிந்தனை முறைமையை உடைக்கவே பெரியார், கடவுள் வழிபாட்டு மறுப்பை கையிலெடுக்கிறார்.

இங்கு மனித மனங்கள் பாகுபடுத்தப்படுவது பெரிய சுரண்டல் அடிமை வணிகம். இதற்காகவே, இங்கு இத்தனை சாதிப்பிரிவுகள், மேல் கீழ் மனநிலை உருவாக்கம் என கண்டறிந்ததோடு; மானுடத்தின் சரிபாதி தொகையில் இருந்துகொண்டு, மேற்சொன்ன எந்த படிநிலைகளுக்குள்ளும் வராமல் உலகின் அனைத்து படிநிலைகளுக்கும் கீழாய் தாழ்வுற்று நிறுத்தப்பட்டிருக்கும் பெண்களின் மனநிலையை தட்டி எழச்சொல்லி, இன்னும் உரக்கப் பேசி எழுதியதாலே பெரியார், ஒரு சமூகவியல் அறிஞராகிறார்.

தீவாய்ப்பாக, வெறும் அரசியல் பரப்புரை கருத்துருவமாக மட்டுமே ஏற்பவர் மறுப்பவர் என இருதரப்பாலும், பெரியார் இங்கு உள்வாங்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியச் சிந்தனை மரபில் இருபதாம் நூற்றாண்டின் தவிர்க்க முடியா கண்ணி பெரியார். கருப்புச் சட்டையோடும் புரளும் வெண்தாடியோடும் பெரியார் என இன்று அமர்ந்திருக்கும் அந்த உருவம் நிகர்மைச் சமூகம் என்ற அரசியல் கருத்துருவின் இந்திய வடிவம். மானுட சமத்துவத்தையும், சமூகம் முழுமைக்குமான அதிகாரப் பரவலாக்கத்தையும் ஏற்கொள்ளும் பக்குவமற்று தான் மட்டும், தான் சார்ந்த மட்டுமென வேட்டைச் சமூக நிலையிலேயே நின்றுவிட்ட மனங்களை உள்ளூர தொந்தரவு செய்து உரையாட அழைக்கும் பெருங்கருத்துருவம் பெரியார்.

சக மனிதனை தனக்கு இணையாக இருத்த முடியாத, சமூகக் கீழ்மையை புரிந்து கொள்ளவே முடியாமல் இருந்த பொது மன வெளிக்குள்; அந்தக் கீழ்மை நோக்கிய சிந்தனை துளியேனும் தோன்றியதற்கு காரணமான பெரியாரின் சமரசமற்ற சமூகச் செயற்பாடுகள் இந்தியச் சமூக வரலாற்றில் மிகப்பெரும் சாதனை. இந்தப் புள்ளியில் பெரியார், சகமனிதனை தனக்கு இணையாக எண்ணும் அனைத்து மனங்களுக்கும், ஓர் ஆற்றலூட்டும் சிந்தனை.

இங்கு, புனிதப்படுத்தப்படும் எதுவும் ஒரு நிலையில் தேங்கிப் போய் அதிகார குவிப்பாகி வன்முறை சுரண்டலாக மாறிப் போகும். இது அனைத்து சிந்தனைகளுக்கும் காலப்போக்கில் நிகழும் சிக்கல். ஆனால், எந்த நிலையிலும் ஏற்பவரோ மறுப்பவரோ பெரியாரை, அவரது கருத்துக்களை தத்துவப்படுத்த முடியாது. ஏனெனில் பெரியாரும் அவரது கருத்துக்குகளும் தன்னியல்பில் உள்ளூர புனிதப்படுத்துதலுக்கு எதிரானவர்கள். இந்தப் பண்பே ஒரு பாய்ம நிலையில் பெரியாரை எங்கும் தேக்கமுறா தன்மையில் நீட்டித்து உரையாட வைக்கிறது.

ஏறக்குறைய காந்தியும், பெரியாரும் ஒரே காலத்தில் சமூக அரசியலுக்குள் நுழைந்தவர்கள். சற்று ஆழ்ந்து யோசிக்கையில் காந்தியும் பெரியாரும் ஒற்றைச் சமூக இலக்கை நோக்கி இரு எதிரீட்டு வழிமுறைகளில் பயணித்த ஆளுமைகள். ஆம், காந்தி ஆழமான தனிமனித ஆன்மீக தேடல் வழியான சமூகம் பண்படும் ஒரு விடுதலை என்பதாக தனிமனித தன்னகவிழிப்பு நோக்கில் சிந்திக்கிறார். பெரியாரும் அதே தனிமனித சுயம் என்ற அகவிழிப்பின் வழியான சமூக மாற்றத்தை பேசுகிறார். காந்தி ஒவ்வொரு மனிதனும் மகாத்மாவாகும் சமூகத்தை கனவு செய்கிறார். இது ஏறக்குறைய நீட்ஷேவின் அதி மனிதன் என்ற கனவிற்கு ஒப்பானது.

பெரியார் அதே போன்றதொரு உன்னத சமூகத்தை ஒரு மனிதன் எளிமையாக தன் சுயத்தை உணரும் இயல் மனித நிலையிலே எட்டிவிடும் சாத்தியங்களை பேசுகிறார். இன்னும் அடுத்த நிலையில் இந்திய நிலப்பரப்பின் வரலாற்றில் மார்க்ஸிய இயக்கங்களும், காந்திய இயக்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமுமே பெருந்திரளாய் எளிய மனிதர்களை, குறிப்பாக பெண்களை தங்கள் குடும்ப வேலிதாண்டிய பொதுவெளிக்குள் கொணர்ந்து அரசியல் மயப்படுத்திய சமூக இயக்கங்கள். மேற்சொன்ன, அந்த அதிமனிதர்களின் தொகை குறையும்போது காந்திய அரசியல் அமைப்புக்கள் தளர்ந்து சிதைவுறத் துவங்குகிறது. இயல்மனிதர்களை கொண்டியங்கும் தன்மை கொண்டதாலே மார்க்ஸிய, பெரியாரிய அரசியல் அமைப்புக்கள் எப்போதும் எளிய மனிதர்களை கொண்டு தன்னை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டுதாயுள்ளது.

இன்னும் ஆழ்ந்து நோக்குகையில் காந்தியம் விழையும் அதிமனித சமூகத்தை அடையும் எளிய பாதையாக பெரியாரியம் வாய்ப்புக் கொண்டுள்ளது. ஒரு சமூகத்தின் உற்பத்தியில், கல்வியில் அதிகாரப் பகிர்வில் அனைவருக்கு சமவாய்ப்பு எட்டப்படும் போது, அதன் உறுப்புகளான தனிமனிதர்கள் சுயத்தை உணர்ந்து கேள்விகேட்டு ஒரு உளநிறைவை எட்டி அதிமனித ஆன்ம நிலைநோக்கி இயல்பில் நகர்வார்கள். கடந்த நூற்றாண்டில் இந்த அதிகாரப் பரவலாக்கத்தின் கணிசமான பகுதியை பெரியாரிய சிந்தனைப் பின்னணி கொண்ட திராவிட இயக்க அரசுகள் தமிழகத்தில் சாத்தியப்படுத்தியுள்ளன. இதன் வழி சமூகம் முழுமைக்குமான கல்வி பரவலாகியதன் அடுத்த நகர்வாக தமிழகத்தின் ஒவ்வொரு சாதிய குழுக்களும் தமக்கான உரிமைகளை தாம் வாழும் இந்த நிலப்பரப்பின் உற்பத்தி, கல்வி, அரசதிகாரம் என அனைத்திற்குள்ளும் கோரத் துவங்கியிருப்பது பெரும் சாதனை.

தற்கால நிலையின், சில துவக்க கால குழப்பங்களை கடந்து அனைத்திலும் அதிகாரம் பகிரப்பட்ட உளநிறைவு கொண்ட ஒரு ஆன்மமான காந்திய சிந்தனை சமூகத்தை, ஒரு வளர்நிலையில் இந்தப்போக்கு சாத்தியப்படுத்தும். ஏனெனில், படிநிலை சமூக அமைப்பு நிலையே குற்றமனநிலை உருவாக்கத்தின் மூலம். இந்த படிநிலை சமூக அமைப்பு வீழ்கையில் குற்ற மனநிலைகள் தோன்றும் வாய்ப்புத் தேவைகள் குறைந்து காந்தியம் காண விழையும் அதிமனிதர்கள் சாத்தியமாவார்கள். இதை பெரியாரியம் நடைமுறையில் தமிழ்நிலப்பரப்பில் சாத்தியப்படுத்தும் பாதைகளை நிரூபித்துள்ளது.

என்றும் நமக்கு, காந்தியிடம் உரையாட ஒரு சாத்வீகமான ஒழுங்குடைய மனம் வேண்டும். அம்பேத்கருடன் உரையாட ஒரு தெளிந்த கற்றல் வேண்டும். மார்க்ஸுடனும் புத்தருடனும் உரையாட ஒரு தத்துவார்த்த சிந்திப்பு என்ற தகுதி வேண்டும். மேற்சொன்ன எந்த தகுதிப்பாடுமின்றி எளிய வெள்ளந்தியோடு, எவரும் பெரியாருடன் உரையாடி அவருடன் முரண்பட்டு, உடன்பட்டு தெளிவு கொள்ள முடியும் என்பதாலே பெரியார்; இந்திய நிலப்பரப்பின் தனித்துவ சிந்தனையாளர் ஆகிறார்.

ஆம், பெரியார்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்ற பேரறத்தை தன் சித்தாந்த ஆன்மமாக போதிக்கிறார். அதை வாழ்வியலாக்கும் சிந்தனைக் கட்டமைப்பை உருவாக்கச் சொல்லி நம்மை தூண்டுகிறார். பெரியாரின் வழியில் நம் கனவு, இந்த நிலப்பரப்பின் மனிதர்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளித்து பேரன்பு கொண்டியங்கும் ஒரு நிகர்மைச் சமூகம்.

(நிறைவு)

பூபாலன்