‘செருப்பால் அடிப்பேன்; காலால் உதைப்பேன்’ என்று பேசுவது அவமானமா என்று கேட்டார், ஒரு தோழர். அவர் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது. உடலில் தலையிலிருந்து கால் வரை அனைத்து உறுப்புகளும் சமமானவை தானே? தலை மட்டும் உயர்ந்தது? கால் கீழானதா? அது எப்படி? உடலையே சுமந்து நிற்பது கால் தான். காலில் போடும் செருப்பு, அந்தக் காலுக்கு பாதுகாப்பு. பிறகு ஏன் செருப்பால் அடிப்பது என்பது இழி சொல்லாக மாறியது?

தலையில் பிறந்தவன் பிராமணன்; காலில் பிறந்தவன் ‘சூத்திரன்’ அடிமை என்று மனுசாஸ்திரம் கூறி வைத்தது தான் இதற்கான காரணம். அப்படித் தான் இருக்க முடியும். ‘பகவானின் பாதார விந்தத்தை’ சரணடைகிறேன் என்று பக்தர்கள் உருகி உருகிப் பாடியிருக்கிறார்கள். பகவான் காலுக்கு அவ்வளவு பெருமை இருக்கும்போது அதே காலிலேயே பிறந்ததாகக் கூறும் சூத்திரனை மட்டும் ஏன் இழி பிறவி என்று கூறுகிறீர்கள் என்று ஒரு கேள்வியை பெரியார் கேட்டார்.

பழந்தமிழன் பெருமை; பழந் தமிழர் வீரம், பழந் தமிழர் பண்பாடு என்று மேடைகளில் உடலை வளைத்து கைகளை முடக்கி, நீட்டி முழங்கி ‘கோடை இடியாகக்’ குமுறுகிற ஒருவர் தன்னை ‘சங்கி’ என்று எவனாவது கூறினால் செருப்பால் அடிப்பேன் என்று செருப்பைக் கழற்றிக் காட்டியிருக்கிறார்.

கீழ் ஜாதிக்காரன் காலில் செருப்பு போடக் கூடாது; தோளில் துண்டு போடக் கூடாது; சட்டை போடக் கூடாது; இப்படித் தான் அடங்கி ஒடுங்கிக் கிடந்தனர் நமது ‘வீரம்’ பேசிய பழந்தமிழர்கள். சங்க இலக்கியப் பாடல்களுக்கு ஓவியம் தீட்டும் ஓவியர்கள்கூட சட்டை இல்லாத திருமேனியோடுதான் பழந்தமிழர்களை இப்போதும் அடையாளப்படுத்துகிறார்கள். நமது ‘கற்புக்கரசி’ கண்ணகிகூட அந்தக் காலத்தில் ‘ரவிக்கை’ போட முடியாத ‘தமிழச்சியாக’வே இருந்திருக்கிறார். ரவிக்கை அணிந்தார் என்பதற்கு இலக்கியச் சான்று இல்லை என்கிறார்கள் தமிழ்ப் புலவர்கள்.

காலில் செருப்பைப் போடு; உடம்பில் சட்டையைப் போடு; தோளில் துண்டைப் போடு என்று போராட்டங்கள் நடத்தித் தான் பழந்தமிழன் தன்மானத்தையும் வீரத்தையும் மீட்க வேண்டியிருந்தது. நீ எதைப் போட்டால் என்ன? சாதியை ஒழிக்க ஏதேனும் சட்டையோ, செருப்போ இருக்கிறதா என்ற கேள்வியும் இப்போது கேட்க வேண்டியிருக்கிறது.

செல்வக்குடியில் பிறந்து அரண்மனையில் தவழ்ந்து விளையாடி வெள்ளிக் குவளையில் பால் அருந்தும் பரம்பரையில் வந்த செல்வச் சீமான்கள் மேடையிலேயே செருப்பைத் தூக்கிக் காட்டுகிறார்கள். காட்டப்பட்ட செருப்பில் ‘கருப்பு- சிவப்பு’ வண்ணம் தான் பளிச்சிட்டது.

தமிழ்நாட்டில் இந்த அரண்மனைச் சீமான்கள் மேடையில் எதை வேண்டுமானாலும் காட்டலாம்; தமிழ்நாட்டில் யார் வாழலாம்; யார் வாழக் கூடாது என்பதை தீர்மானிக்கலாம். நான் ஆட்சிக்கு வந்தால், எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று பறைசாற்றலாம். அவரை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. தமிழ்நாட்டில் அவர் உயரத்தை எட்டிப் பிடித்த ‘புரட்சியாளர்கள்’ இன்னும் பிறக்கவில்லை.

வாய்ப் பேச்சு வீரத்தாலும் போர் முழக்க இடியோசையாலும் தமிழ்நாட்டையே தனது காலடிக்குள் வைத்துக் கொண்டிருப்பவர் அவர். எதிர்த்தால் அவரது செருப்பு தான் பேசும் என்கிறார். உண்மை தான். அவரது வீரம் செறிந்த பேச்சால் நடுங்கிப் போன அவரது கட்சித் தமிழர்கள் 3000 பேர் அவரது கட்சிக்கே முழுக்குப் போட முடிவு செய்து சீமான் வீரத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

செருப்பைக் காட்டும் சீமான் கட்சியிலிருந்து விலகி செருப்பு போடும் உரிமைகளுக்குப் போராடிய திரவிட இயக்கமான தி.மு.க.வில் இணையப் போவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இனி 3000 பேருக்கும் எதிராக செருப்புகளை சீமான் தயார் செய்ய வேண்டியிருக்குமே! அவர் தயாரிப்பார்; அவர் தான் அசைத்துக் கூடப் பார்க்க முடியாத அரண்மனையில் பிறந்து தமிழ்நாட்டையே தனது கால் செருப்புக்குள் வைத்திருக்கும் தமிழர்களின் ரட்சகர் ஆயிற்றே!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It