thedravidian modelஇந்தியாவுக்கே ‘திராவிடம்’ தான் வழிகாட்ட வேண்டும்; பெரியாரைப் பேசாமல் திராவிடம் முழுமை பெற முடியாது; ‘திராவிடக்’ கோட்பாட்டுக்கு ஒரே வலிமை பெரியார் தான் என்று கோபாலகிருஷ்ண காந்தி கூறினார்.

‘தி டிரவிடியன் மாடல்’ ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் இணையம் வழியாக அவர் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம்.

இந்த நூலின் தலைப்பாக இடம் பெற்றுள்ள ஒரே சக்தி வாய்ந்த சொல் ‘திராவிடம்’ என்பது தான். இந்தியாவில் தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள ‘திராவிட’ என்ற சொல் மட்டும் தான் இப்போது வேறு மாநிலங்களில் தெரிந்திருக்கிறது.

‘திராவிடம்’ என்ற கோட்பாடு எவ்வளவு வலிமையானது; அது எத்தகைய மாற்றங்களை சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி காலத்திலிருந்து உருவாக்கியிருக்கிறது என்ற வரலாறுகள் எடுத்துச் சொல்லப் படவில்லை. இந்த நூல் அந்தக் குறையை ஓரளவு சரி செய்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு வெளியே திராவிடத்தின் கொள்கைகளை வலிமையோடு பேசிய பெருமைக்குரிய திராவிடத் தலைவர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள். 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மாநிலங்களவையில் அண்ணா, பேராசிரியர் இரத்தினசாமி, இரா. செழியன் போன்றவர்கள் தென்னாட்டில் திராவிடத்தின் கோட்பாட்டை மிகச் சிறப்பாக விளக்கினார்கள். நேரு போன்ற தலைவர்கள் திராவிடத்தின் சிறப்புகளை அதன் வழியாகப் புரிந்து கொண்டார்கள்.

நேரு மரணத்துக்குப் பிறகு இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு காமராசர் விடையளித்து லால்பகதூரை பிரதமராக்கி இந்தியாவை அன்றைக்குக் காப்பாற்றினார். காமராசரும் அண்ணாவும் வேறு வேறு பாதையில் வந்தவர்கள் என்றாலும் திராவிடக் கோட்பாட்டின் அடையாளமாகவே காமராசiரைக் கூற வேண்டும்.

இந்தியாவில் தேவதாசி ஒழிப்புக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும், சமூகநீதிக்கும் கூட்டாட்சி அமைப்புக்குமான வலிமையான  குரல் திராவிடத்திலிருந்துதான் எழுந்தது.

‘திராவிடம்’ என்ற ‘அதிர்வுச் சொல்’ அண்மைக் காலமாக அடங்கிப் போயிருக்கிறது. அதை உரத்து முழங்கியாக வேண்டும். ‘திராவிடம்’ என்ற சொல்லுக்கு அழுத்தமும் வலிமையும் சேர்த்த மிகச் சிறந்த தலைவர் பெரியார். ஆனால் ‘திராவிடம்’ பேசும்போது பெரியாரைப் பேசாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.

அண்மையில் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில்கூட பெரியாரை முன் வைத்து பேசப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. பெண்கள் உரிமை, தலித் உரிமை, அனைவருக்குமான நீதியை வழங்கும் உரிமை, கூட்டாட்சிக்கான உரிமைகளே இன்றைக்கு பேசப்பட வேண்டிய முன்னெடுக்கப்பட வேண்டிய உரிமை.

அதற்கான சக்தி வாய்ந்த கருத்துகளை பெரியார் வழங்கியிருக்கிறார். பெரியாரைப் பேசாமல் திராவிடம் இல்லை. இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டியது திராவிடம் தான், என்றார் கோபாலகிருஷ்ண காந்தி.

காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர். தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர். டெல்லி அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

‘தி டிரவிடியன் மாடல்’ நூல் திறனாய்வு

‘தி டிரவிடியன் மாடல்’ (The Dravidian Model) என்ற தலைப்பில் தமிழக அரசியல் பொருளாதாரம் குறித்த ஆங்கில ஆய்வு நூல், அறிமுகம் மற்றும் திறனாய்வு, ஏப்.16, 2021 அன்று மாலை 5 மணியளவில் சென்னை மியூசிக் அகாடமி, கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நிகழ்ந்தது.

‘சென்னை மேம்பாட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை’ (எம்.அய்.டி.எஸ்.) மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய நிகழ்வு இது. ‘எம்.அய்.டி.எஸ்.’ பேராசிரியர்கள் ஏ. கலையரசன், எம். விஜயபாஸ்கர் இணைந்து இந்த ஆய்வு நூலை எழுதியுள்ளனர்.

ஆய்வாளர் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதி நெறிப்படுத்தினார். டெல்லி பொருளாதார ஆய்வு நிறுவனப் பேராசிரியர் ஜீன்டிரீஸ், பேராசிரியர் கோபால கிருஷ்ணகாந்தி, ‘திராவிடன் இயர்ஸ்’ (Dravidian Years) என்ற ஆய்வு நூலை எழுதிய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்த எஸ். நாராயணன், ‘இந்து’ குழும இயக்குனர் என். ராம், எம்.அய்.டி.எஸ். முன்னாள் இயக்குநர் பத்மினி சாமிநாதன் நூலை திறனாய்வு செய்தனர்.

நூலாசிரியர்களில் ஒருவரான விஜய பாஸ்கர், அறிமுக உரை நிகழ்த்தினார். விமர்சனங்களுக்கு விளக்கமளித்து நூலாசிரியர் பேராசிரியர் கலையரசன் நிறைவுரையாற்றினார்.

- விடுதலை இராசேந்திரன்