மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு அமைந்த புதிய சூழ்நிலைகளில், அகதிகள் அங்கு குடியேறுவதை விரைவுபடுத்தினர். இடதுசாரி முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) அகதிகளுக்கான அமைப்புகள் மற்றும் ஒன்றுபட்ட மத்திய அகதிகள் குழு ஆகியவற்றோடு தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஓர் அரசியல் நோக்கரின் பார்வையில், “சுரண்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசு வீழ்ந்து, ஒரு புதிய புகழ்பெற்ற அரசு அதிகாரத்திற்கு வந்திருக்கிறது.'' மேற்கு வங்க இடதுசாரி அமைச்சர் ராம் சாட்டர்ஜி, அகதிகள் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அவர்களை சுந்தர்பான் பகுதிகளில் மீள்குடியமர ஊக்குவித்தார். சுந்தர்பான் பகுதியில் அகதிகள் குடியமர்த்தப்பட வேண்டும் என்பது, எதிர்க் கட்சியினராக இருந்த இடதுசாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. ஆனால், ராம் சாட்டர்ஜி இடதுசாரி கூட்டணி அரசின் ஒரு சிறிய கட்சியை சேர்ந்தவர் என்பதும், அவர் தற்கால இடதுசாரி கொள்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் என்பதும், அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இடதுசாரி அரசின் நடைமுறைப்படுத்தவிருந்த கொள்கை மாற்றத்தைப் பற்றி அவர் பேசவில்லை என்பதும் தீண்டத்தகாத அகதிகளுக்கு தெரியாமல் போனது.

அகதிகள் சுந்தர்பான் பகுதியில் மீள்குடியமர்த்தப்படுவதைத் தொடர்ந்து ஆதரித்த சிறிய கட்சிகளின் கூட்டணியாக இடதுசாரி கூட்டணி அரசு இருந்தாலும், கூட்டணி அரசில் சி.பி.எம். ஆதிக்கம் செலுத்தி, அரசின் அனைத்து கொள்கைகளையும் முடிவெடுத்தது. இடதுசாரி கட்சிகள் எதிர்க் கட்சியாக இருந்து ஆட்சி அதிகாரத்திற்கு மாறியபோது, அகதிகள் தொடர்பாக பல முன்னுக்குப் பின் முரணான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

Marichjhapi-3தங்களுடைய உடைமைகளை விற்று, தண்டகாரண்யாவை விட்டு வந்த 15 ஆயிரம் அகதிக் குடும்பங்கள் அரசதிகாரத்திற்கு வந்த பிறகு இடதுசாரி அரசின் கொள்கை மாறிவிட்டதை அறிந்தனர். இந்நிலையில், பல அகதிகள் கைது செய்யப்பட்டு, மீள்குடியிருப்பு முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். எஞ்சியிருந்த அகதிகள் காவல் துறையின் பிடியிலிருந்து தப்பி அவர்கள் இலக்கான மரிச்ஜாப்பி தீவை அடைந்து, அங்கு குடியேறத் தொடங்கினர். தங்களுடைய சொந்த முயற்சியில் அதற்கடுத்த ஆண்டுகளில் சாத்தியமான மீன் பிடி தொழிலையும், உப்பளங்களையும், மருத்துவமனையையும், பள்ளிகளையும் நிறுவினர்.

மார்க்சிஸ்ட் கூட்டணி மாநில அரசு, இத்தகைய குடியிருப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்தது. அரசின் ஒப்புதல் இல்லாமல், அகதிகள் மரிச் ஜாப்பியை ஆக்கிரமித்திருப்பதாகவும், மரிச்ஜாப்பி சுந்தர்பான் அரசு வனச் சரணாலயத்தின் கீழ் வருவதால், அகதிகள் அங்கு குடியேறுவது காடுகள் சட்டத்தை

மீறுவதாகும் என்று மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு அறிவித்தது. மார்க்சிஸ்ட் அரசு சுற்றுப்புறச் சூழலை முதன்மைப்படுத்தியதா அல்லது மரிச்ஜாப்பியை முன்னுதாரணமாகக் கொண்டு தீண்டத்தகாத அகதிகள் திரண்டு வந்தால், அரசியல் ஆதரவை இழக்க நேரிடும் என்று அஞ்சியதா என்பது விவாதத்திற்குரியது.

தீண்டத்தகாத அகதிகளை மரிச்ஜாப்பியை விட்டு வெளியேற்ற நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தபோது, மேற்கு வங்க அரசு சனவரி 26, 1979 இல் குடியிருப்பின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நோக்கில், குடியிருப்பைச் சுற்றி 30 இடங்களில் காவல் துறையை வைத்து தாக்குதல் தொடுத்தது. தீண்டத்தகாத அகதிகள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டும், அவர்களின் குடிசைகள் இடிக்கப்பட்டும், மீன்பிடி வளாகங்களும், குழாய் கிணறுகளும் அழிக்கப்பட்டு, அகதிகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி ஒடுக்கப்படும் வகையில் தாக்கப்பட்டனர். அகதிகள் மறுவாழ்வு நடவடிக்கைகளில் அவர்களே ஈடுபடுவது குறித்து பத்திரிகையாளர்கள் சிறப்பாக எழுதி, மேற்கு வங்க அரசுக்கு பிரச்சனை கொடுத்து வந்தனர். ஆகையால், அரசு மரிச்ஜாப்பிக்கு பத்திரிகையாளர்கள் செல்ல தடைவிதித்தது. இதன்மூலம் இவ்வரசு பத்திரிகைகளைப் பகைத்துக் கொண்டது. வங்காள மொழி நாளேடான "ஜுகான்டர்' தனது தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது :

“இன்று மீண்டும் மாநிலத்தின் தலைவர்கள், பத்திரிகையாளர்களைப் பற்றி கடுமையாகப் பேசினர். இவர்கள் ஏதோ மரிச்ஜாப்பி பிரச்சனை பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்டது போல் பேசுகின்றனர். ஆனால், பத்திரிகையாளர்கள் சமூகத்தின் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கின்றனர். பத்திரிகையாளர்களாகிய நாங்கள் வெறும் சாட்சிகள். பத்திரிகையாளர்களால் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியாது. அவர்களால்நிகழ்ந்ததை விவரித்து மட்டுமே எழுத முடியும். சில நேரங்களில் நடுநிலையாக விவரித்து எழுதுவது, நிகழ்வுகளின் இயல்பால் கடும் கண்டனம் போல தெரியலாம். பத்திரிகையாளர்களின் வாயை அடைத்துவிடலாம். ஆனால், வரலாற்றின் ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது.''

எனினும் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு, "பத்திரிகைகள் பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுகின்றன' என்றும், "ஊடகங்கள் அகதிகளின் நடவடிக்கைகளைப் பற்றி எழுதுவதன் மூலம் அகதிகளின் கிளர்ச்சிக்கும் சுயநலத்திற்கும் உதவுகின்றன' என்றார். பத்திரிகைகள், தேசிய நலன்களை கருத்தில் கொண்டு அகதிகளின் வெளியேற்றத்திற்கு உதவவேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் கூறினார். மேலும், பத்திரிகைகளை தணிக்கை செய்யும் முயற்சியும், "முதலாளித்துவ' பத்திரிகைகள் அகதிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டன.

மரிச்ஜாப்பி பிரச்சனை, சந்தேகமேயில்லாமல் இடதுசாரி கூட்டணிக் கட்சிகளுக்குள் பிரிவினையை உண்டாக்கியது. அதுமட்டுமின்றி, இப்பிரச்சனையை, இடதுசாரிகளுக்கு வாக்களிக்கும் மக்களில் 23 சதவிகிதமாக இருந்த தீண்டத்தகாத மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடவும் வாய்ப்பிருந்தது. தீண்டத்தகாதவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். மேலும், வானொலியும் தொலைக்காட்சியும் அப்பொழுது அரசுக்கு சொந்தமானதாக இருந்ததால், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்த பிற சாதிகளைச் சேர்ந்த தீண்டத்தகாத வாக்காளர்களுக்கு இப்பிரச்சினை தெரியாமல் போனதால், அவர்கள் இடதுசாரி அரசுக்கு அச்சுறுத்தலாக மாறவில்லை. அதே நேரத்தில் மேல்சாதி, நகரம் சார்ந்த நடுத்தர வர்க்க அகதிகள் – படித்த, ஒருங்கிணைந்து அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்ததைப் போல தீண்டத்தகாத அகதிகள் இல்லை.

அரசியல் எதிரிகள் மரிச்ஜாப்பி பிரச்சனையை, அரசாங்கத்தை தாக்குவதற்காகப் பயன்படுத்துவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் சரியாகக் குறிப்பிட்டார். ஏனென்றால், எதிர்க்கட்சியில் இருந்தபோது முதலமைச்சர் இதையேதான் செய்தார். எதிர்க்கட்சிகளோடு இணைந்து போராடுவதா அல்லது இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெறுவதா என்பதில் அகதிகளின் தலைவர்கள் பிளவுபட்டு நின்றனர். இதனால் மரிச்ஜாப்பியில் குடியமர்ந்த அகதிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்தனர். ரைகரன் பரூவி தலைமையில் ஒரு பிரிவு அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்த்து, அகதிகள் குடியிருப்பை அரசு அங்கீகரிக்கும் வகையில் அதைக் கட்டாயப்படுத்தும் நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ரங்காலால் கோல்டார் தலைமையிலான இன்னொரு பிரிவு, இடதுசாரி அரசுடன் பேசி ஒரு சுமூகமான ஒப்பந்தத்தை காண விரும்பியது. ரங்காலால் கோல்டார் பின்வருமாறு கூறுகிறார் : “பத்திரிகைகளில் கடுமையாகப் பேசி எதிர்க்கட்சி அரசியலில் பங்கேற்றதன் மூலம் ரைகரன் அரசைப் பகைத்துக் கொண்டார். நாங்கள் நகரத்திலிருந்து பிரதிநிதிகளைப் பார்வையிட அழைத்தபோது, ரைகரன் அவர்களை மரிச்ஜாப்பி தீவில் இறங்கவிடவில்லை. இது, மிகமோசமானதொரு தவறான கணிப்பாகும். தண்ணீரில் வாழ்ந்து கொண்டே முதலையின் எதிரியாக இருக்க முடியாது.''

ரைகரன் தரப்பு சம்பவங்களின் விவரங்கள் குறித்து தெரியாவிட்டாலும், தீண்டத்தகாத அகதிகள் சந்தித்த சூழ்நிலைகளால் இத்தகைய பிளவு புரிந்து கொள்ளத்தக்கதாக இருக்கிறது.

அகதிகள் சமாதானமான அணுகுமுறையை தேர்ந்தெடுத்திருந்தால்கூட, சி.பி.எம். போன்ற அதிகாரமயப்படுத்தப்பட்டிருக்கும் கட்சி அடி பணிந்திருக்காது. ஒரு குடியிருப்பை அனுமதிப்பது என்பது, மற்ற அகதிகள் அதையே செய்வதற்கு அழைப்பு விடுத்தது போலாகிவிடும் என்றும், வங்க தேசத்திலிருந்து மேலும் அகதிகள் வருவதற்கு ஊக்கப்படுத்தியது போலாகிவிடும் என்றும் சி.பி.எம். கட்சி தலைமை அஞ்சியது. பத்திரிகைகள் பொதுவாக இந்நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டாலும், அளவுக்கு அதிகமாக வன்முறை பயன்படுத்தப்படுவதை எதிர்த்தனர். எதிர்க் கட்சியாக இருந்தபோது, அகதிகள் மரிச்ஜாப்பியில் குடியேறுவதற்கு ஆதரவாகப் பேசியதும் இதே சி.பி.எம். தான்! இடதுசாரி கட்சியினர் ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அகதிகள் குடியமர்த்தலை எதிர்த்தது அரசியல்வாதிகளின் இயல்பென்றாலும் – அது அகதிகள் ஆதரவாளர்களின் நம்பிக்கையை மோசம் செய்தது.

முந்தைய அகதிகள் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களுடைய குடியிருப்புகளும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. ஆனால், முந்தைய அகதிகள் மேல்சாதி நடுத்தர வர்க்க மக்களாகவும், வங்காள அதிகார வர்க்கத்தில் நிறைய உறவினர்களையும் செல்வாக்கையும் கொண்டவர்களாகவும் இருந்தனர். தீண்டத்தகாத அகதிகளுக்கு அத்தகைய செல்வாக்கு ஏதுமில்லை. அவர்களுக்கு சில அதிகாரிகள் மற்றும் அறிவுஜீவிகளின் ஆதரவு மட்டுமே இருந்தது. பாரம்பரிய மேல்தட்டு அகதிகள் மேற்கு வங்காளத்தில் குடியமர்த்தப்பட்டபோது, மிக அதிக எண்ணிக்கையில் இருந்த அடித்தட்டு வர்க்கத்தினர் மற்றும் தீண்டத்தகாத மக்களை மிக எளிதாக வெளியேற்றலாம் என்பது அரசுக்கு தெரிந்திருந்தது.

தீண்டத்தகாத அகதிகளுக்கு தீண்டத்தகாத மக்களாக அவர்களுடைய பலவீனம் தெரிந்திருந்தது. ஆகவே, அவர்கள் தங்கள் மொழியினத்தின் தோற்றத்தை குறிப்பிட்டு, மேல்தட்டு குடும்பங்களோடு பகிர்ந்து கொண்ட அகதி அனுபவங்களை வலியுறுத்தினர்.

“ஒவ்வொரு நாளும் கணக்கற்ற வங்காளிகளல்லாத மக்கள், மேற்கு வங்காள மாநிலத்திற்கு வேலை தேடி வருகின்றனர். அவர்களை இடதுசாரி அரசு ரயில்களில் ஏற்றி அவர்கள் மாநிலத்திற்கு திருப்பி அனுப்புவதில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக கல்கத்தா நகரின் நடைபாதை களிலும், மேற்கு வங்காளத்தின் ரயில் நிலையங்களிலும் வாழ்ந்து, ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றனர். ஆனால், அரசு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. வங்காளிகளாக இருப்பதால்தான் மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகளுக்கு மேற்கு வங்காளத்தில் இடமில்லையா?

Marichjhapi-20“மேற்கு வங்காள மாநிலத்தில் மரிச்ஜாப்பி மட்டுமே அகதிகள் குடியிருந்த பொது இடமல்ல. மரிச்ஜாப்பி பகுதியின் தீண்டத்தகாத அகதிகள் அரசாங்கத்திடம் பணம் கேட்கவில்லை; மற்றவர்களுடைய நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை; அரசாங்கத்தின் புதர் மண்டிய சதுப்பான வீணாகிப் போகும் நிலங்களை மட்டுமே கேட்கின்றனர். இந்நிலையில், மரிச்ஜாப்பி அகதிகள் இடதுசாரி அரசுக்கு என்ன தீங்கிழைத்தனர்? மற்ற பொதுவான அகதி கள் வாழும் நில ஆக்கிரமிப்பு காலனிகளில் சாதி இந்துக்கள் வாழ்கின்றனர். மரிச்ஜாப்பியில் பட்டியலின மக்கள் (தீண்டத்தகாதோர்) மட்டுமே வாழ்ந்தனர். இதனால்தான் மரிச்ஜாப்பியின் தீண்டத்தகாத அகதிகளுக்கு இந்த மாநிலத்தில் இடமில்லையோ?'' என்று கேட்கிறார், சாட்டர்ஜி என்ற ஆய்வாளர்.

தேசிய தீண்டத்தகாதோர் அமைப்பான கான்ஷிராம் வழிநடத்திய "பாம்செப்' அமைப்பிடமும் அகதிகள் முறையிட்டனர். ஆனால், "பாம்செப்' பிற்காலத்தில் அதன் வழித்தோன்றலான பகுஜன் சமாஜ் கட்சி ஆனதைப் போல பலம் வாய்ந்த அமைப்பாக இருக்கவில்லை. நாமசூத்ரா அகதிகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது கான்ஷிராம், பிரிவினைக்குப் பிறகு தீண்டத்தகாத மக்கள் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதை குறிப்பிடுகிறார்.

1947 இல் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு நாமசூத்ரா இயக்கத்தில் திடீரென்று பெரிய சரிவு ஏற்பட்டது. இந்தியப் பிரிவினை, பலதரப்பட்ட மக்களை சீரழித்தது. ஆனால், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் வங்காள தீண்டத்தகாத மக்களான நாமசூத்ரா மக்கள்தான். இந்தியப் பிரிவினையால் நாமசூத்ரா மக்களும் அவர்கள் இனமும் மட்டும் சீரழிக்கப்படவில்லை; அவர்கள் இயக்கமும் முற்றிலுமாக நாசமாகியது. இன்று நாமசூத்ரா மக்கள் வேரில்லாதவர்களாகி விட்டனர். இரு நாடுகளும் பிளவுபட்டதால் அவர்களுடைய வேர் வங்காளத்திலும், கிளைகள் இந்தியாவிலும் இருக்கும் வகையில் நாமசூத்திரர்கள் இருக்கின்றனர். பங்களாதேஷ் அரசு நாமசூத்திரர்களை வேரறுத்து, நாடு கடத்துவதில் முனைப்பு காட்டுகிறபோது – இந்திய மற்றும் மேற்கு வங்க அரசுகளோ நாம சூத்திரர்கள் மீது கோபத்தையும் பகைமையையும் வெளிப்படுத்துகின்றன.

தீண்டத்தகாத மக்களின் மரிச்ஜாப்பி இனப்படுகொலையும்; தண்டகாரண்யா, அந்தமான் மற்றும் நிகோபார் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட தீண்டத்தகாத அகதிகளின் துன்ப நிலையும் – ஒரு சோகக் கதையை தாமே சொல்லுகின்றன. இவை எல்லாவற்றிற்குப் பிறகும் மேல் சாதி இந்துக்களிடமிருந்து உதவி அல்லது இரக்கத்தை தீண்டத்தகாத மக்கள் கோருகின்றனர். அவர்கள் சாத்தியமில்லாத நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். கெடுவாய்ப்பாக, மார்க்சிஸ்ட் மேற்குவங்க அரசு, தீண்டத்தகாத மக்களிடம் திறமை எதையும் பார்க்கவில்லை. அவர்கள் (சி.பி.எம்.), தங்கள் கட்சி ஜாதி பார்ப்பதில்லை என்று கூறுகின்றனர். திறமையின் அடிப்படையில் மட்டுமே மக்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால், இந்த அடிப்படையில் அவர்கள் எந்த பட்டியல் சாதியின ரையும் மேற்கு வங்க அமைச்சரவையில் இடம்பெறச் செய்யவில்லை. கையறு நிலையில் வேறு எங்கும் செல்ல முடியாதவர்களாக இருப்பதால், பட்டியல் சாதியினர் சி.பி.எம். கட்சியையே சார்ந்திருக்கின்றனர்.

எந்த தேசிய கட்சியும் அவர்களுடைய பிரச்சனையை கண்டுகொள்ளாத நிலையில், தீண்டத்தகாத மக்கள் எந்தவித உறுதி மிக்க ஆதரவாளர்களுமின்றி துன்பப்பட்டனர். தீண்டத்தகாத மக்களின் உரிமைகளைக் காக்க கடமைப்பட்டிருந்த மத்திய அரசின் "தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்' போன்ற அமைப்புகள் வெளிப்படையாக மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் பிரச்சனையில் தலையிடவில்லை.

மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் பிரச்சனையில் ஊடகங்களையும் சில அறிவாளிகளையும் ஆர்வம் கொள்ள மேற்கொண்ட முயற்சி, பாதியளவே வெற்றி பெற்றது. ஊடகத்துறையினரும் அறிவுஜீவிகளும் மரிச்ஜாப்பி தீவில் விருந்துண்பதற்கு அழைக்கப்பட்டனர். ஒருவேளை உணவு கூட உண்ண முடியாத தீண்டத்தகாத அகதிகள், செல்வாக்கு மிகுந்த விருந்தினர்கள் உண்பதற்காகவும் தங்களின் பிரச்சினையை இவ்விருந்தினர்கள் வெளியுலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் கஷ்டப்பட்டு பொருளை சேமித்து, ஊடகத்துறையினருக்கும் அறிவு ஜீவிகளுக்கும் ஆடம்பரமான விருந்தினை அளித்தனர்.

தீண்டத்தகாத மக்களின் ஆதரவாளர்கள் பணத்தையும் உணவுப் பொருட்களையும் திரட்டினர். இவ்வாறு திரட்டப்பட்ட பணத்தையும் உணவுப் பொருட்களையும் தீண்டத்தகாத மக்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில அதிகாரிகள் உதவி புரிந்தனர். ஆனால், இவ்விஷயத்தில் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள முடியாதவாறு அரசு தடை விதித்தது. சபாலாநந்தா ஹல்டார் என்ற அகதி, காவல்துறை கண்காணிப்பு நிலையங்களின் கண்ணில் படாமல் தப்பித்து, நிலப்பகுதிக்கு நீந்தி வந்து குமிர்மாரியில் காவல் துறை துப்பாக்கி சூடு பற்றி கல்கத்தா பத்திரிகைகளிடம் தெரிவித்தார். பத்திரிகைகள் இந்த செய்தியை ஹல்டாரின் பெயரோடு வெளியிட்டதால், அவர் கைது செய்யப்பட்டார். காவல் துறையினரின் துப்பாக்கி சூடுகளும், அகதிகள் கொல்லப்படுவதும் பத்திரிகைகளில் அரசுக்கு எதிரான செய்திகளை வரச்செய்து கொண்டிருந்தன.

வெளியில் அறிவுஜீவிகள் மத்தியிலும், அரசின் அதிகார வர்க்கத்திலும், இடதுசாரி அமைச்சரவையிலும் கூட, தீண்டத்தகாத அகதிகளுக்காக இரக்கப்படுபவர்கள் இல்லாமல் இல்லை. அரசாங்கம் வன்முறையை பயன்படுத்துவதற்கு பதிலாக அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களை ஓர் அரசியல் அடித்தளமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே இருந்த உறுப்பினர்கள் சிலர் நினைத்தனர்.

காவல் துறையினர் தீண்டத்தகாத அகதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், குடிதண்ணீர் மற்றும் அரிசி கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப்படும் படகுகளை மூழ்கடிப்பதும், நிலப்பகுதியில் வேலை செய்ய வரும் அல்லது வனச்சரணாலயத்தில் வெட்டப்பட்ட விறகுகளை விற்க வரும் தீண்டத்தகாத அகதிகளை கைது செய்வதும் பத்திரிகைகளில் செய்தியாக வந்தவண்ணம் இருந்தன. மரிச்ஜாப்பி தீண்டத்தகாத அகதிகள் மத்தியில் பட்டினிச் சாவுகள் நிகழத் தொடங்கி, நிலைமை மேலும் மோசமாகியது.

சனவரி 27, 1979 இல் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மரிச்ஜாப்பியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அகதிகளுக்கு நடக்கக்கூட அனுமதியில்லை. இதோடு கிரிமினல் சட்டத்தில் 144 ஆவது பிரிவை செயல்படுத்தி, ஒரே நேரத்தில் அய்ந்து பேர் அல்லது அய்ந்து பேருக்கு மேலானவர்கள் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடுவதை அரசு தடை செய்தது. தீண்டத்தகாத அகதிகளின் ஆதரவாளர்கள் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் பிறகு, தீண்டத்தகாத அகதிகள் நடந்து செல்வது மற்றும் அவர்களின் உணவு மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றில் அரசு தலையிடுவதற்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. ஒரு பக்கம், எந்தவிதமான தடையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறிக்கொண்டே, இன்னொரு பக்கம் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக முற்றுகையை மேற்கு வங்க அரசு தொடர்ந்தது.

காவல் துறையின் தொழிற்சங்கம் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததால், நீதிமன்ற உத்தரவை மீறி அரசு செயல்பட முடிந்தது. பட்டினியும், நோயும் பல தீண்டத்தகாத அகதிகளைக் கொன்றபோதும் அகதிகள் தங்கள் கோரிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை. தீண்டத்தகாத அகதிகளை வெளியேற்றும் காவல் துறை நடவடிக்கைகள் தோல்வியடைந்த பிறகு, மாநில அரசு தீண்டத்தகாத அகதிகளை கட்டாயமாக வெளியேற்றும் படி கட்டளையிட்டது. இக்கட்டாய வெளியேற்றம், மே 14 இல் இருந்து மே 16, 1979 வரையில் நிகழ்ந்தது. தீண்டத்தகாத மக்களை வெளியேற்றுவதற்காக முஸ்லிம் கூலிப் படையினர் காவல் துறைக்கு உதவ வாடகைக்கு அமர்த்தப்பட்டனர். ஆளும் வங்காள தேசத்திலிருந்து வந்த தீண்டத்தகாத அகதிகளிடம் முஸ்லிம்கள் கருணை காட்ட மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கருதியது. தீண்டத்தகாத அகதி ஆண்கள், பெண்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். பெரும்பாலான தீண்டத்தகாத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆதரவற்ற தீண்டத்தகாத இளம் பெண்களை காவல் துறையினர் எந்த வரைமுறையுமின்றி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கத் தொடங்கினர்.

இத்தாக்குதல் நடவடிக்கையில் குறைந்தது பல நூறு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டு, அவர்களுடைய சடலங்கள் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. "ஆனந்த பஜார் பத்திரிகா' என்ற இதழில் இது குறித்த படங்கள் வெளியிடப்பட்டன. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதைக் கண்டித்து, அவையைவிட்டு வெளிநடப்புச் செய்தனர். இருப்பினும், இக்குற்றத்தில் ஈடுபட்ட எவர் மீதும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை; எவ்விதப் புலன் விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. தன்னுடைய அரசுக்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தேவை என்பதால், பிரதமர் மொரார்ஜி தேசாய் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய அரசின் தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்திற்கு இப்படுகொலை பற்றி தெரிந்திருந்தும், மேற்கு வங்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு எதிராக எத்தகைய வன்கொடுமைகளும் நடைபெறவில்லை என்று தன்னுடைய ஆண்டறிக்கையில் அது குறிப்பிட்டிருந்தது. ஆனால், தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையத்தின் மரிச் ஜாப்பி கோப்பில் இப்படுகொலைக்கு முன்னர் காவல் துறையினரால் கொல்லப்பட்ட 236 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வயதும், பெயரும் அடங்கிய செய்தி நறுக்குகளும், கோரிக்கை மனுக்களும் இடம் பெற்றிருந்தன. காவல் துறையினரால் படகுகள் மூழ்கடிக்கப்பட்டு இறந்து போனவர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றிருந்தன.

தங்களைப் பார்வையிட வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அகதிகள் தாங்களாகவே காவல் துறையின் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையின்போது – நோயாலும் பட்டினியாலும் 1000 பேர் இறந்ததாக முறையிட்டனர். மேற்கு வங்கத்திற்கு தப்பியோடிய 14 ஆயிரத்து 388 குடும்பங்களில், 10 ஆயிரத்து 260 குடும்பங்கள் தங்களுடைய முந்தைய இடங்களுக்கு திரும்பி விட்டனர். எஞ்சிய 4 ஆயிரத்து 128 குடும்பங்கள், தங்கள் பயணத்தின்போதும், பட்டினியாலும், கடும் களைப்பினாலும், இன்னும் சில பேர் காஷிபூர், குமிர்மாரி மற்றும் மரிச்ஜாப்பி காவல் துறை துப்பாக்கிச் சூட்டினாலும் கொல்லப்பட்டனர்.

மரிச்ஜாப்பி படுகொலையில் வெற்றிகரமாகப் பங்கேற்ற உறுப்பினர்களை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியது. மேலும், “தங்களுடைய மாநிலத்தில் எந்த சூழ்நிலையிலும் பெருமளவிலான இந்த அகதிகளுக்கு புகலிடம் கொடுக்க வாய்ப்பே இல்லை'' (மேற்கு வங்க மாநிலக் குழு – சி.பி.எம். 1982) என்று சி.பி.எம். கட்சி அறிவித்தது. கட்சித் தலைமை இப்பிரச்சனையை கையாண்ட விதம் சி.பி.எம். கட்சிக்குள் சிறிது அதிருப்தியைக் கொண்டு வந்தது. அகதிகள் சார்பாக ஒரு மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்து, இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு மாறாக, தமது கட்சித் தலைமை இப்பிரச்சனையை "அதிகார தோரணையோடு' அணுகியதாக பல சி.பி.எம். தொண்டர்கள் கருதினர்.

கம்யூனிஸ்ட்டுகள் தங்களிடம் அதிகளவு இருந்த அகதி அமைப்புகள் மூலம் இந்த அகதிகளை ஒருங்கிணைத்து, அவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்து வந்திருக்கலாம். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்து, அதன்மூலம் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் ஆதரவை வளர்த்தெடுப்பதற்கு மாறாக, சி.பி.எம். வன்முறையைப் பயன்படுத்தியது. கட்சியின் இக்கொள்கையால் ஏமாற்றமடைந்த தொண்டர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலவில்லை. சி.பி.எம். மாநிலக் குழுவில் உள்ள எவரும் இக்கட்சியின் மாநிலச் செயலாளரான பிரமோத் தாஸ் குப்தாவிடம் இப்பிரச்சனை குறித்து எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனினும், இடதுசாரி முன்னணி கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும், அமைச்சர்களும் இம்மக்களை அப்புறப்படுத்துவதற்கு ஆதரவாகவும் நடந்து கொள்ளவில்லை; மாறாக, அகதிகளுக்கு ஆதரவளிப்பதையே விரும்பினர்.

Marichjhapi-7சுந்தர்பான் பகுதிகளில் அரசியல் செல்வாக்குப் பெற் றிருந்த இடதுசாரி முன்னணி அரசில் அங்கம் வகித்த புரட்சி கர சோசலிஸ்ட் கட்சி (RSP) பிற இடதுசாரி முன்னணி ஆதர வாளர்களைப் போலவே, அரசின் இம்முடிவை எதிர்த்தது. ஆர்.எஸ்.பி. கட்சியின் அமைச்சரான தேபா பிராட்டா பந்தோ பாத்தியாவுக்கு அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இச்செயல், சி.பி.எம். கட்சிக்கு புகழ் சேர்ப்பதாக இல்லை. சி.பி.எம். கட்டுப்பாட்டில் உள்ள கிராமக் குழுக்களில் ஊழலை ஒழிப்பதற்கு முயன்றதால்தான், இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டது என்று சொல்லப்பட்டாலும் – அமைச்சரவையில் இவர் அகதிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் காரணமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கட்சி ஊழல்மயமாகிவிட்டது என்று புகார் தெரிவித்ததால், இவருக்குப் பிறகு வந்த, கட்சியின் இரண்டாவது நிலையில் இருந்த பினாய் சவுத்ரி, கட்சி எவ்வளவு சீர்குலைந்து விட்டது என சுட்டிக் காட்டியதற்காக கட்சிப் பதவிக்கு மறுநியமனம் செய்யப்படவில்லை. மறு குடியமர்த்துதலை எதிர்ப்பதாக சி.பி.எம். அறிவித்த பிறகு, அகதிகள் சி.பி.எம். கட்சிக்கு ஆதரவாக இல்லை. இந்நிலையில் பிற இடதுசாரி கட்சிகள் இச்சூழலைப் பயன்படுத்தி, அகதிகள் மத்தியில் ஆதரவு திரட்டி தங்களுக்கு எதிராக நிறுத்துவார்கள் என்று சி.பி.எம். தலைவர்கள் கருதினர்.

தங்களின் உடைமைகள் அனைத்தையும் விற்ற பிறகு, தண்டகாரண்யாவை விட்டு அகதிகள் திடீரென வெளியேறியிருக்கக் கூடாது எனினும், முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரிப் போராட்டங்களில் முழுமையாகப் பங்கேற்று, "இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வர, தங்களின் உறவினர்களையும் இனத்தவரையும் வாக்களிக்க வைத்த அகதிகள் மீது கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்' என்கிறார் சக்ரபர்த்தி என்ற ஆய்வாளர்.

இந்நிகழ்வின் இறுதியில் ஏற்பட்ட திருப்பத்தில், அகதிகளை வெளியேற்றியதில் எஞ்சியிருந்த இடங்களை ஆக்கிரமித்த சி.பி.எம். கட்சி, தனது ஆதரவாளர்களை மரிச்ஜாப்பியில் குடியமர்த்தியது. சூழலியல் மற்றும் காடுகள் தொடர்பான சட்ட விதிகளும் மறக்கப்பட்டன. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவப் பேராசிரியர் ஒருவர், தண்டகாரண்யா அகதிகளை சந்தித்துப் பேசிய பிறகு என்னிடம் பின்வருமாறு கூறினார் : “திரும்ப வந்திருக்கக்கூடிய இம்மக்களிடம் எதுவுமில்லை; அவர்கள் தங்கள் நிலங்களையும் உடைமைகளையும் மேற்கு வங்கம் செல்வதற்காக விற்றுவிட்டனர். மறுபுறம் அங்கேயே தங்கிவிட்டவர்கள், இவர்களைவிட நல்ல நிலையில் இருக்கிறார்கள்.''

அகதிகளின் குடியிருப்புகளை துயரம் சூழ்ந்திருந்தது. மக்கள் எவ்விதப் புத்துணர்ச்சியுமின்றி, எந்திரகதியான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இடதுசாரி அமைச்சர்களுடன் நாள்தோறும் உரையாடி வரும் மேற்கு வங்க அரசில் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி செயலாளர்கள், சில செய்திகளை என்னுடன் பரிமாறிக் கொண்டனர். படுகொலை, பாலியல் வன்முறை, முஸ்லிம் கூலிப்படையினரை வாடகைக்கு அமர்த்துவது, சி.பி.எம். ஆதரவாளர்களை மீள்குடியமர்த்தியது மற்றும் மக்களை அப்புறப்படுத்தியதில் அமைச்சரவையில் நிலவிய இருவேறு கருத்துகள் பற்றி எல்லாம் தெரிவித்த இவர்கள், உண்மையில் இவ்வன்கொடுமைகளை செய்த முஸ்லிம் கூலிப் படையினர் மற்றும் காவல் துறையினரின் பெயர்களை மட்டும் வைத்திருக்கவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்க அரசு தவறியதால்தான் – இந்த தகவல்களைத் திரட்ட முடியவில்லை. வன்கொடுமை அறிக்கைகள் மூலம் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக தவறாக அவதூறு சுமத்தப்படுகிறது என்று இடதுசாரி முன்னணி அரசு கருதி யிருக்குமேயானால், அது ஒரு சுதந்திரமான புலனாய்வுக் குழுவை அமைத்து, தன் மீது குற்றமில்லை என்பதை நிரூபித்திருக்க முடியும். குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையும், தாங்கள் செய்த – செய்யாமல்விட்ட செயல்கள் மூலம் மரிச்ஜாப்பி தீண்டத்தகாத மக்களின் படுகொலையில் – மேற்கு வங்க முதலமைச்சரும் பிரதமர் மொரார்ஜி தேசாயும் பங்கெடுத்துக் கொண்டதாலும் இதுபோன்றதொரு விசாரணையை அமைக்க முடியாததாக செய்துவிட்டன.

"ஜுகாண்டர்' பெங்காலி நாளேட்டின் பத்திரிகையாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : “தண்டகாரண்யா அகதிகள்.... குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் – என சமூகத்தில் சுரண்டலுக்குள்ளாகும் பெரும்பான்மை மக்களாவர். இவர்களுக்கு சமூகத்தின் மேல்தட்டு மக்களுடன் எவ்வித உறவும் இல்லை என்று சொல்வதற்காக நான் வருந்துகிறேன். ஒருவேளை இப்பிரச்சனையில் நிலச்சுவான்தார், மருத்துவர், வழக்குரைஞர் அல்லது பொறியாளர் என்று யார் குடும்பமாவது பாதிக்கப்பட்டிருந்தாலும், கல்கத்தா முதல் தில்லி வரை போராட்டம் வெடித்திருக்கும். ஆனால், வகுப்புவாரியாக சுரண்டப்படும் இச்சமூகத்தின் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகவும், மீனவர்களுக்காகவும் நாம் யாரும் அக்கறை செலுத்துவதில்லை. அரசு எந்திரம் மேல்தட்டு மக்களின் பிடியில் இருக்கும்வரை – ஏழைகள், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், விபச்சாரிகள் மற்றும் அகதிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவர்.''

மரிச்ஜாப்பி படுகொலை பிரச்சனையில், பெங்காலி கல்விசார் சமூகமும் தொடர்ந்து அமைதி காத்தே வந்தது – சில கண்ணோட்டங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துவதையும், வன்கொடுமைகளை அறிவுஜீவி அதிகார வர்க்கம் ஏற்றுக் கொண்டதையும் காட்டுகிறது. அதற்கடுத்த 13 ஆண்டுகளுக்கான இப்படுகொலை தொடர்புடைய ஒரே குறிப்பு, மேற்கு வங்க மனித உரிமைகள் ஆவணத்தில் உள்ள சாஜல் பாசுவின் (1982) தொகுப்பு மட்டுமே! “சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி மற்றும் காங்கிரஸ் என இவ்விரண்டு கட்சிகளுமே வன்முறை நடவடிக்கைகளையும், உயிரிழப்புகளையும், இருப்பிடங்களிலிருந்து தொண்டர்கள் அப்புறப்படுத்துவதையுமே விரும்பின. ஆளும் கட்சியான சி.பி.எம். வலுக்கட்டாயமாக சி.பி.எம். அல்லாத நடுத்தர விவசாயிகளை அப்புறப்படுத்தியது. சி.பி.அய். (எம்.எல்.) மற்றும் எஸ்.யு.சி. (சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர்) தொண்டர்கள் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டதும், மரிச்ஜாப்பி அகதிகள் வன்முறையால் அப்புறப்படுத்தப்பட்டதும், பன்ஷீலா என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையும், சி.பி.எம்.இன் வன்முறை நிறைந்த நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. தெருச்சண்டைகளாக வெளிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் உள்பிரச்சனைகளும், அக்கட்சி சார்ந்த கூலிப்படைகளும் மறுபடியும் வன்முறைகளைக் கட்டவிழ்த்தன.

இப்படுகொலை நிகழ்ந்தபோது, கெடுவாய்ப்பாக எதிர்க்கட்சியினர் இதை பிரிட்டிஷ் அரசு செய்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டனர். ஏனெனில், மரிச்ஜாப்பி படுகொலை, 1958 இல் மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட 80 கம்யூனிஸ்டுகளின் படுகொலையை விடவும், ஜாலியன் வாலாபாக் படுகொலையை விடவும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம். ஆனால், மரிச்ஜாப்பி அகதிகளுக்கு இப்படுகொலையை திரைப்படங்களிலும், வரலாற்று நூல்களிலும் சேர்க்கும் அளவுக்கு ஆதரவாளர்கள் இல்லாமல் போய்விட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹன்ட்டர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டது. ஆனால், மரிச்ஜாப்பி படுகொலை தீண்டத்தகாத மக்கள் தவிர அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது. “இக்குற்றம் மறைக்கப்பட்டு பெரும்பாலான குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது மட்டுமல்ல, அவர்கள் அரசுப் பணியிலும் இருந்தார்கள்; சிலருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன'' என எம்.கே. காந்தி, ஜாலியன் வாலாபாக்கை பற்றி குறிப்பிட்டாலும் – அது மிக எளிதாக சி.பி.எம். மற்றும் காங்கிரஸ் படுகொலைகளுக்கும் பொருந்தும். தேசியவாதிகள் அல்லது கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்ட படுகொலை நிகழ்வு களை விளம்பரப்படுத்த திறன் வாய்ந்த அறிவுஜீவி சமூகம் முன் வருகிறது. ஆனால் அகதிகள் விஷயத்தில் எதுவுமே நடக்கவில்லை!

காங்கிரஸ் அரசு, கம்யூனிஸ்டுகளை படுகொலை செய்ததற்குப் பிறகு ஜோதிபாசு சட்டப் பேரவையில் பேசும்போது, தங்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையில் செத்த உடல்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றார். இந்நிகழ்வு "தியாகிகள் நாளாக' கொண்டாடப்பட்டது. ஆனால், கம்யூனிஸ்டுகள் செய்த படுகொலைக்கு எந்த எதிர்வினையும் எழவில்லை என்பதோடு, அது விரைவில் மறக்கடிக்கப்பட்டும் விட்டது. அகதிகள் பிரச்சனையில் இதே போன்றதொரு சூழலை காங்கிரஸ் எதிர்கொண்டபோது, அது அவர்களுக்கு வழங்கிய நிதியை நிறுத்தியது. இடதுசாரி முன்னணியைப் போல முற்றுøகயிடவோ, கட்டாயமாக வெளியேற்றவோ, காவல் துறையினர் மூலம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவோ இல்லை. ஒப்பீட்டளவில், சி.பி.எம். கடுமையான அடக்குமுறையைப் பயன்படுத்தியது.

காங்கிரஸ் அரசு தீண்டத்தகாத அகதிகளிடம் மிதமாக நடந்து கொண்டது; சி.பி.எம். அரசு அதீதமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டது – இரு கட்சிகளின் தத்துவார்த்த அடிப்படைகளான காங்கிரசின் காந்தியம், சி.பி.எம்.இன் ஸ்டாலினிசம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை காட்டுகிறதா அல்லது இரு கட்சிகளின் பொறுப்பில் உள்ள தலைவர்களின் வெவ்வேறு குணநலன்களைக் காட்டுகிறதா என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது. சி.பி.எம். கட்சி, சீனாவில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் நடைபெற்ற படுகொலையை ஆதரித்தது – அதன் செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அகதிகளின் விளிம்புநிலை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலை காரணமாக, மரிச்ஜாப்பி தீண்டத்தகாத மக்களின் இனப்படுகொலை சிறிதளவே உள்ளூரில் கவனத்தைப் பெற்றது. வெளிநாடுகளில் இதுபற்றி எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

“1961இல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் ராய் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்தபோது, தண்டகாரண்யாவுக்கு அகதிகளை அனுப்ப ஆணையிட்டார். அதில் 10 ஆயிரம் அகதிகள் செல்ல மறுத்தபோது, அவர் அவர்களை பலவந்தமாக வெளியேற்றவில்லை. அதற்கு மாறாக, அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்தினார்; அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மற்றும் வசதிகளை திரும்பப் பெற்றுக் கொண்டார். அவர்களை முகாமைவிட்டு அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றவு மில்லை; முகாம்கள் முன்பு இருந்த இடங்களில் அகதிகள் தொடர்ந்து வாழ்ந்தும் வந்தனர். அரசின் எந்த உதவிகளும் கிடைக்கப் பெறாததால், ஒதுக்கித் தள்ளப்பட்ட அவர்கள் அப்பகுதியின் பொருளாதாரத்தோடு தங்களை இணைத்துக் கொண்டனர். மேற்கு வங்க அரசின் புள்ளிவிவரங்களின்படியே அங்கு இருந்த உபரி நிலங்களில் அகதிகளைக் குடியேற்றியிருக்க முடியும். ஆனால், மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு இரக்கமற்ற முறையில் அவர்களை வெளியேற்றுகிறது'' என்கிறார் சக்ரபர்த்தி என்கிற ஆய்வாளர்.

Marichjhapi-8காங்கிரஸ் கட்சி எதனால் தோற்றதோ, அதுவே சி.பி.எம். கட்சி வெற்றி பெறவும் காரணமாக அமைந்தது. ஏனெனில் சி.பி.எம். ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொல்லத் தயாராக இருந்தது. காங்கிரசோ, சி.பி.எம்.மோ தங்களுடைய கொள்கையின்படி நடந்து கொள்ளவில்லை. இருப்பினும், இந்திய அரசியல் சூழலில் ஒவ்வொரு கட்சியின் தத்துவார்த்த அடிப்படையும் வித்தியாசத்தை தருகிறது. பதிவுகள் குறிப்பிடுவதைப்போல, காங்கிரஸ் ஆட்சியில் போலிஸ் படுகொலைகள் அபூர்வமானதாக இருக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை, மரிச்ஜாப்பியில் கட்டாயமாக தீண்டத்தகாத மக்கள் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட படுகொலையைவிட அதிகமாக இருக்கலாம். போதுமான விசாரணை இல்லாததால் படுகொலையின் எண்ணிக்கை, பல ஆண்டுகளுக்குப் பிறகும் வெவ்வேறாக இருந்தது. அத்ரோபாக்கி பிஸ்வாஸ் என்பவர் 4,128 குடும்பங்கள் இடைப்பட்ட காலத்தில் பட்டினியாலும், கடும் களைப்பினாலும், துப்பாக்கிச் சூடுகளாலும் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். டாக்டர் நிலன்ஜனா சாட்டர்ஜி என்பவர் மே 17, 1979 இல் அப்புறப்படுத்துதல் முடிவுக்கு வந்ததாக சொல்கிறார் : “குறைந்தது 3 ஆயிரம் அகதிகள் ரகசியமாக மரிச்ஜாப்பியை விட்டு சென்றுவிட்டனர்; அவர்கள் மேற்கு வங்காளத்தில் பரவலாக சிதறி ஓடினர். சூலை 1979 இறுதியில் தண்டகாரண்யா வளர்ச்சி நிர்வாக அதிகாரி, 15 ஆயிரம் குடும்பங்கள் இவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும், 5 ஆயிரம் குடும்பங்கள் (ஏறக்குறைய 20 ஆயிரம் அகதிகள்) திரும்பிவர தவறிவிட்டதாகவும் கூறினார். இத்திட்டத்தில் மறுபதிவு செய்வதற்கான நாள் 31 ஆகஸ்டு, 1979 என்று அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.''

கிடைத்த புள்ளிவிவரங்களின் படி (20,000 – 3,000) ஏறக்குறைய 17 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு நான்கு பேர் என்று கணக்கிட்டால்கூட, மொத்தம் 4,250 குடும்பங்கள் வருகின்றன. இது, ஏறக்குறைய அத்ரோபாக்கி பிஸ்வாஸ் சொன்ன புள்ளிவிவரங்களோடு மிகச் சரியாக ஒத்துப்போகிறது. அகதிகள் தொலைந்து; இறந்துபோனதாகக் கருதப்பட்டாலும் – அவர்கள் எப்படி இறந்தார்கள் என்றோ, எங்கே இறந்தார்கள் என்றோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இம்மக்களை அப்புறப்படுத்துவதற்காக முடிவெடுத்த அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றிய அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் கூற்றுப் படி, மரிச்ஜாப்பியில் படுகொலை செய்யப்பட்ட சடலங்கள் ஆற்றில் போடப்பட்டு, அவை கரையோரம் ஒதுங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

மரிச்ஜாப்பி படுகொலை, பல்வேறு நெறி சார்ந்த, சட்ட ரீதியான, அமைதியைக் குலைக்கும் கேள்விகளை நம்மிடையே எழுப்புகிறது. ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி முன்னணி அரசுக்கு, சந்தேகத்திற்கு இடமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தி காட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது. அகதிகள் இம்மாநிலத்தின் குடிமக்களாக இல்லாது போனாலும் அவர்கள் இந்தியக் குடிமக்களாவர். இந்நிலையில் அகதிகள் விஷயத்தில் அது அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இருப்பினும், கல்கத்தா உயர் நீதிமன்றம் அம்மக்களை அப்புறப்படுத்தியதை கண்டித்ததையும்கூட அது அலட்சியப்படுத்தியது. அகதிகளை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தவும், அவர்களைக் கொல்லவும் ஓர் ஆணையை யாராலும் பிறப்பிக்க முடியாது. ஆனால், மேற்கு வங்கத்தில் நிலவிய சூழலின்படி ஆக்கிரமிப்பை அகற்றியதால் இவ்வாறெல்லாம் நடந்திருக்கும் என ஊகிக்க முடிகிறது. முஸ்லிம் கூலிப் படையினரை வாடகைக்கு அமர்த்தியதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை இந்த அரசு கையாண்டிருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

பாலியல் வன்முறைகளிலும் மக்களைத் துன்புறுத்தி கொலை செய்வதிலும் காவல் துறை ஈடுபடும் என்பது தெரிந்திருப்பினும், தங்களால் காப்பாற்றிக் கொள்ள முடியாத மக்களை கொன்றிருப்பதன் மூலம் – இடதுசாரி அரசு 6 ஆயிரம் அரசியல் படுகொலைகளை செய்திருப்பதாகக் கணிக்க முடிகிறது ("இந்தியா டுடே', 31.8.1995, 31; அம்னஸ்டி இன்டர்நேஷனல், மார்ச் 1992). படுகொலைகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றன. அது குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. எனவே, மாநிலத் தலைவர்களுக்கு இத்தகைய படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு போதிய அவகாசம் இருந்தது. சி.பி.எம். மாநிலக் குழுவும், இடதுசாரி அமைச்சரவையும் தான் இக்குடியிருப்புகளை அகற்றுவதற்காக ஆணையிட்டன. குடியிருப்புகளை அகற்றுவதை ஒழுங்காக மேற்பார்வை இடாததால், அதிகளவு வன்முறையைக் கட்டவிழ்த்து, அதனால் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கும் பெருமளவு படுகொலைகளுக்கும் இக்கட்சியே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். மீறல்கள் நடந்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்குக் காரணமானவர்களை தண்டிக்காதது, விசாரணை செய்யாமல் அனைத்தையும் மூடி மறைத்தது – இவை எல்லாமே அப்புறப்படுத்துவதற்கு உத்தரவிட்டவர்களை குற்றச்சாட்டின் முதலிடத்தில் நிறுத்துகின்றன.

ஆங்கிலத்தில் - ராஸ் மாலிக்
தமிழில் - இனியன் இளங்கோ

Pin It