பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி சுமார் 400 நாட்கள் ஓடிவிட்டன. அதுவும் உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சரவைக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று தெளிவாக்கிய பிறகு அமைச்சரவை எடுத்த முடிவு அது.

அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் உடன்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது.

rajiv case victimsதமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தன்னிச்சையாக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட அனுமதித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநருக்கான உரிமை அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுவது மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஆளுநரின் முடிவை நிறுத்தியது. அதற்குப் பிறகு தி.மு.க. அமைச்சரவை கூடி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தபோது ஆளுநர் பாத்திமா பீவி அதற்கு ஒப்புதல் வழங்கினாரே தவிர, தற்போது ஆளுநர் செய்ததுபோல் கிடப்பில் போடவில்லை.

காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் 617 சிறைவாசிகளை விடுதலை செய்ய நடுவண் அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கடந்த ஓராண்டில் 2035 கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டதாகவும் நடுவண் ஆட்சி அறிவித்திருக்கிறது. இந்த நிலையில்கூட 7 தமிழர் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க ஏன் மறுக்க வேண்டும்? தார்மீக ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ இதற்கு என்ன விளக்கத்தை நடுவண் அரசு கூறுகிறது?

சரி, மாநில அரசும் அமைச்சரவையைக் கூட்டி பரிந்துரை வழங்கிவிட்டோம்; எங்கள் கடமை முடிந்து விட்டது என்று ஒதுங்கி நிற்பதுதான் அவர்கள் தலைவியாக ஏற்றுக் கொண்டிருக்கிற செல்வி ஜெயலலிதா காட்டிய பாதையா? மாநில அரசுக்கு விடுதலை செய்யும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே 7 தமிழர் விடுதலையை சட்டமன்றத்தில் அறிவித்து நடுவண் அரசுக்கு கெடுவிதித்தார் ஜெயலலிதா. மாநிலங்களுக்கான உரிமைகளில் அவ்வளவு உறுதிகாட்டி செயல்பட்டார். இப்போது தமிழக அரசு ஏன் பதுங்கி நிற்க வேண்டும்?

பஞ்சாபில் இப்போது காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது. குருநானக் 550ஆவது பிறந்தநாளையொட்டி 550 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முன் வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த பியாந்த் சிங்கை சுட்டுக் கொன்ற யஸ்வந்த் சிங் ரோஜனா என்ற தூக்குத் தண்டனைக் குற்றவாளியின் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதியையும் பெற்றிருக்கிறது.

பியாந்த் சிங் யார்?

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஞ்சாப் மாநில முதல்வராக 1992 முதல் 1995 வரை பதவியில் இருந்தவர். அவரை ‘கார் வெடி குண்டை’ வெடிக்கச் செய்து கொன்றவர்தான் பல்வந்த் சிங் ரோஜனா!

‘ஆம்! நான்தான் கொலை செய்தேன்; அதற்காகப் பெருமைப்படுகிறேன்’ என்று நீதின்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் தந்து எதிர் வழக்காட விரும்பாமல் தண்டனையை ஏற்றவர். சொந்த காங்கிரஸ் கட்சி முதல்வரையே வெடிகுண்டுக்கு பலியாக்கிய சீக்கியரின் தூக்குத் தண்டனையைக் குறைக்க காங்கிரஸ் ஆட்சி முன் வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியினரோ 7 தமிழர் விடுதலையை தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இத்தனைக்கும் ராஜீவ் கொலையில் நேரடி தொடர்பே இல்லாதவர்கள் இந்த 7 தமிழர்கள். “இது பயங்கரவாத நடவடிக்கை அல்ல. பயங்கரவாத சட்டமும் இதற்குப் பொருந்தாது” என்று உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவாக்கியிருக்கிறது. நால்வருக்குத் தூக்குத் தண்டனை விதித்த தலைமை நீதிபதி கே.டி. தாமஸ், பதவி ஓய்வுக்குப் பிறகு அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே நான் அவர்களைத் தண்டித்து விட்டேன் என்று மனம் உருகிப் பேசி வருகிறார்.

காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி, கோபால் கோட்சே, 14 ஆண்டுகளில் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டார். தண்டனைக் குiறைப்பு வழங்கியதும் காங்கிரஸ் ஆட்சி தான்.

குஜராத்தில் மோடி ஆட்சியில் 2000 இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் இப்போது ஒருவர் பின் ஒருவராக விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் விடுதலைக்கு பா.ஜ.க. ஆட்சியாளர்களே உதவுகிறார்கள். மேல்முறையீட்டுக்கு செல்லாமல் காப்பாற்றி வருகிறார்கள்.

2008ஆம் ஆண்டு மாலேகான் மசூதியில் குண்டுவெடிக்கச் செய்து 6 பேர் உயிர்ப் பலியானதற்குக் காரணமானவர் பிரக்யாசிங் தாகூர். அதேபோல் பாகிஸ்தானுக்கு செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் இரயிலில் குண்டு வைத்து 68 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டவர். வழக்கிலிருந்து இவரைக் காப்பாற்ற ‘தேசிய புலனாய்வு முகாம்’ வழியாக எவ்வளவோ முயற்சிகள் செய்தது பா.ஜ.க. ஆட்சி. சாட்சிகளை விலைக்கு வாங்கி பிறழ்சாட்சிகளாக மாற்றினர். ஆனாலும் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பிரக்யாசிங் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட சந்தர்ப்ப சாட்சியங்கள் அவருக்கு எதிராக இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்து விட்டது விசாரணை நீதிமன்றம்.

ஆனாலும் என்ன? உடல்நிலை சரியில்லை என்று கூறி, பரோல் கேட்டார். உடனே பரோல் கிடைத்து விட்டது. உடனே போபால் தொகுதியின் வேட்பாளராக்கியது பா.ஜ.க. இப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர். யார்? 74 பேர் மரணத்துக்குக் காரணமானவர்; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்.

இவ்வளவுக்குப் பிறகு 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள். ஒட்டு மொத்தத் தமிழகமும் இவர்களின் விடுதலையை வலியுறுத்துகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி ‘எஜமான்’ விசுவாசம் காட்டுகிறது. ஆனால் ராகுல் காந்தியே இவர்கள் விடுதலையை தான் எதிர்க்கவில்லை என்று கூறி விட்டார்.

நேரு குடும்ப எதிர்ப்பையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வும் சங் பரிவாரங்களும் 7 தமிழர் விடுதலையை ஏன் முடக்குகிறது?

காங்கிரசின் ‘பரம எதிரி’யான சுப்பிரமணிய சாமி, ஏழு தமிழர் விடுதலைக்கு ஏன் குறுக்கே நிற்கிறார்?

இந்திய அரசியலில் ஆட்சிகள் மாறினாலும் பார்ப்பனர்கள் செலுத்தி வரும் தங்குதடையற்ற அதிகாரமே இதற்குக் காரணம். இந்த தமிழர்கள் விடுதலையை பார்ப்பனரல்லாத இன உணர்வுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகி விடும் என்று கருதுகிறார்கள். சொல்லப் போனால் தேவ - அசுரப் போராட்டத்தின் தொடர்ச்சி தான். சீக்கியர்களுக்கு உள்ள உணர்வு தமிழர்களுக்கு வர வேண்டாமா?

இந்த நிலையில் தமிழக அரசுக்கு நாம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம் - மீண்டும் ஒரு முறை தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முன் வாருங்கள்!