அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் போல் நீதிபதிகளும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 372வது பிரிவை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி வலியுறுத்தினார்.

மக்கள் தொகையில் 60 விழுக்காடாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடுதான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சட்டங்களைக் காரணமாக காட்டி, பல்வேறு தீர்ப்புகளைக் காரணமாக காட்டி முடக்குகிறார்கள். உடனே உச்சநீதிமன்றம் போனால் தடை கொடுத்து விடுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி ஒன்றே முக்கால் லட்சம் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபோது தமிழக அரசை பாராட்டியது உச்சநீதிமன்றம்.

ஆனால் வேலை நிறுத்தம் செய்யக் கூடாத மருத்துவத் துறையில் வேலை நிறுத்தம் செய்த மருத்துவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கையை எடுத்தபோது அவர்களுக்கு முழு சம்பளம் கொடு என்று ஆணையிட்டது. அதே உச்சநீதிமன்றம் தான். நம்மவர்கள் பாதிக்கப்பட்டபோது பாராட்டிய உச்சநீதிமன்றம், நம்முடைய இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய பார்ப்பனர்களுக்கு மட்டும் பரிந்து கொண்டு நிற்கிறது. 20 நாளாக வேலைக்கு வரவில்லை என்றாலும்கூட சம்பளத்தைக் கொடு என்கிறது.

கேரளாவில் சிவன் கோயில் அர்ச்சகராக ஒரு பார்ப்பனரல்லாத ஈழவர் நியமிக்கப்பட்டார். பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். நியமனம் செல்லும் என்று உச்சநீதி மன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது. இந்தியாவில் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததற்குப் பிறகு, மனித உரிமை, மனித சமத்துவம் தான் அமுலாக்கப்பட வேண்டும். அரசியல் சட்டம் அமுலாவதற்கு முன்பு, சமத்துவத்துக்கு எதிராக நடைமுறையில் இருந்த எந்தப் பழக்க வழக்கங்களையும், அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் அதே கருத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பயன்படுத்திய அதே சொற்களைப் போட்டுத்தான், தமிழக அரசும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நிறைவேற்றியது. அதே உச்சநீதிமன்றம், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்குத் தடை வழங்கிவிட்டது. பார்ப்பனர்கள் இப்போதெல்லாம், நேராக உச்சநீதி மன்றத்துக்குப் போகிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தடை ஆணைகளை வாங்கி விடுகிறார்கள்.

கேரளத்தில் செல்வாக்குள்ள அரசியல் கட்சித் தலைவர் மதானி, அவர் 8 ஆண்டுகளாக சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைகள் எல்லாம் முடிந்துவிட்டது. அவரை பிணையில் விடவேண்டும் என்று கேரளாவில் உள்ள எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனாலும் அவருக்கு பிணை மறுக்கப்படுகிறது. அவருக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை என்ற நிலையிலும், பிணை மறுக்கப்படுகிறது.

ஆனால், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரிக்கு, உச்சநீதிமன்றம் பிணை வழங்கி விட்டது. பிணையில் விடுதலை செய்து, வழங்கிய உத்தரவிலேயே சங்கராச்சாரி மீது எந்தக் குற்றமும் இல்லை என்று தீர்ப்பே வழங்கிவிட்டதைப் போல் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதற்கு காரணங்களை அடுக்கிக் காட்டியது.

இரண்டையும் நீங்கள் ஒப்பிட்டுப் பாருங்கள். சங்கராச்சாரி மீது குற்றப்பத்திரிகைக்கூட இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் தீர்ப்பே சொல்லி விட்டான். போதை மருந்து கடத்தல் போன்ற போதை மருந்து வழக்குகளில் பிணையே கிடையாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் பா.ஜ.க. தலைவர் பார்ப்பனர் பிரமோத் மகாஜன் மகன் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, ஒரு வாரத்திலே பிணையில் வந்து விடுகிறார். இதே வழக்கில் கைதான மற்றவர்களுக்கு பல ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் பிணை கிடையாது. வழக்கு முடித்து தண்டனை கழித்துத்தான் வெளியே வரவேண்டும். இப்படியெல்லாம் இருக்கிற உச்சநீதிமன்றம் தான், இடஒதுக்கீட்டுக்கான வழக்குகளிலும் நமக்கு எதிராக இருக்கிறது.

372வது அரசியல் சட்டப் பிரிவு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். என்ற அகில இந்திய சர்வீசுகளைப் போல நீதித் துறைக்கும் ஒரு அகில இந்திய சர்வீசை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அந்த முறை இன்றுவரை வரவில்லை. வந்திருந்தால் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் நம்மவர்கள்கூட நீதிபதிகளாக வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், இதை முடிவு செய்யும் உரிமையை அவன் தான் கையில் வைத்திருக்கிறான்.

உச்சநீதிமன்றத்தில் 26 பேர் நீதிபதிகளாக இருந்தார்கள். இப்போது 22 பேர். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் இல்லை. அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த 56 ஆண்டுகளில் ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன் என்ற ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டவர் மட்டுமே நீதிபதியாக இருந்திருக்கிறார். தாழ்த்தப்பட்டவர் ஒருவர் மட்டும் இருக்கிறார். 56 ஆண்டுகளில் ஒரே ஒருவர்தான் வர முடிந்திருக்கிறது. அந்த நீதித் துறையும் இந்த இடஒதுக்கீட்டு வரைமுறைக்குள் வரவேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்துகிறோம்.

சென்னை மாநாட்டு உரையிலிருந்து