தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள வெறியன் - கொலைகாரன் இராஜபக்சேயை பாடை கட்டித் தூக்கும் போராட்டம் நடந்தது. பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஈரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே, கொலைகாரன் சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியா வந்துள்ளதை கண்டித்து, இராஜபக்சேவை பாடைகட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர்.

சங்கு ஊதிக் கொண்டும், சேகண்டி அடித்துக் கொண்டும், மேளம் அடித்துக் கொண்டும் ஊர்வல மாக 100க்கும் மேற்பட்ட தோழர்கள் வி.எஸ்.பி. தியேட்டர் முன்பாகப் புறப்பட்டு வந்தனர். ஊர்வலம் எம்.ஜி.ஆர். சிலையை வந்தடைந்தபோது காவல் துறை இடைமறித்து அனைவரையும் கைது செய்தது.

“இராஜபக்சேவே திரும்பிப் போ... கொலைக்காரன் இராஜபக்சேவே திரும்பிப் போ” என்பது போன்ற முழக்கங்கள் தோழர்களால் மிகுந்த உக்கிரத்துடன், வீரியத்துடன் முழங்கப்பட்டன. காவல்துறை அந்த இராஜபக்சே உருவ பொம்மையை கைப்பற்ற முனைந்தபோது நூற்றுக்கணக்கான தோழர்களும் அதனைச் சூழ்ந்து கொண்டு செருப்பால் அடித்து துவைத்தனர். உருவ பொம்மையும் அதனை வைத்து எடுத்து வந்த பாடையும் தூள்தூளாகியது.

இந்த கண்டன ஊர்வலத்தினை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பு செய்து நடத்தியது. இந் நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நகரமன்ற உறுப்பினர் இளவல் வேலு மற்றும் இராம கிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாநகரச் செயலாளர் விநாயகமூர்த்தி, தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சி சுவடி இளங்கோ, தமிழர் பண்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் 68 தோழர்கள் கைதாகினர்.