திரைப்பட  மற்றும் ஊடகவியலாளர் தோழர்.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் உரை

24.4.2010 அன்று மதுரை காந்தி மியூஸியம் குமரப்பா குடிலில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர்.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் ஆற்றிய உரையின் சராம்சம்.

நானும் தோழர் ஆனந்தனைப் போல பொது நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பின் எனது வாழ்க்கை எனும் ஊர்தியின் திசை மாறிவிட்டது. அவ்வாறு மாறிப் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். முதற்கண் இங்கு நான் வந்தது இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்று எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் எனது பழைய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டோர் அனைவரிடமும் எனது மன்னிப்பையும் கோர விரும்புகிறேன்.

ஆனால் எனது விருப்பம் அதுவான போதிலும் தற்போது இங்கு கலந்து கொண்டுள்ள குறிப்பிடத்தக்க கூட்டத்தைக் காணும் போது , இந்தக் கருத்தரங்கத்திற்காக ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஓடியாடி பணிபுரிந்து கொண்டிருக்கும் மாணவர் மற்றும் இளைஞர்களைப் பார்த்த பின்னர் உள்ளபடியே ஒரு குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டுள்ளது.

நான் பிறந்து வளர்ந்த கேரள மாநிலம் இடதுசாரி இயக்கத்தின் நிலைக்களனாகக் கருதப்படக் கூடிய ஒன்று. ஆனால் அந்த மாநிலத்தில் கூட இதுபோன்ற ஒரு வேறுபட்ட வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னைக்காக நடைபெறும் கூட்டத்தில் இங்கு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை ஒத்த விதத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று கூற முடியாது.

70 களில் மாணவரின் போக்குகள்

நான் மாணவனாக இருந்த 70 கள் இன்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை. உலகத்திலும் அதன் பங்கும் பகுதியுமாக இந்தியாவிலும் பல்வேறு போக்குகளைக் கொண்ட இயக்கங்கள் அப்போது இருந்தன. வியட்நாம் யுத்தம் , அதனை எதிர்த்த உலகெங்கிலுமான மக்கள் இயக்கங்கள், அவ்வாறு நடைபெற்ற இயக்கங்களின் சிகரமாய் விளங்கின. போர் வேண்டவே வேண்டாம் அமைதிதான் வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கிலும் மாணவர் இளைஞர் உதடுகளில் தவழ்ந்து கொண்டிருந்தது.

வாழ்க்கை என்பது ஒரு அர்த்தமும் இல்லாதது என்ற எண்ணப்போக்கைக் கொண்ட எக்ஸிஸ்டன்சியாலிசப் போக்குகளுக்கு மாணவர் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பிருந்தது. வாழ்க்கையில் அர்த்தமில்லை; அது வாழத்தகுதியுடையதல்ல என்பது வெறும் பேச்சளவில் இருக்கவில்லை. எக்ஸிஸ்டன்சியாலிசத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஆல்பர்ட் கெமு தற்கொலையே செய்து கொண்டார். தற்கொலை ஒரு பேசனாக அன்று இருந்தது.
 

பிரான்ஸ் தேசத்தை உலுக்கி எடுத்த மாணவர் போராட்டங்கள் உலகின் பார்வையை அவற்றின் பக்கம் இழுத்தன. ஒரு பாரிஸ் நகரின் பல்கலைக் கழகத்தில் பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில் இரவில் 8 மணிக்கு மேல் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்றிருந்த நியதி தேவையற்ற ஒன்று என்ற அடிப்படையில் தோன்றிய அந்த மாணவர் இயக்கம் காட்டுத்தீயயன பிரான்ஸ் தேசமெங்கும் பரவியது. ஆண் பெண் உறவு குறித்த ஒரு சீர் குலைந்த சித்திரத்தை முன்வைக்கும் இயக்கமென இதனை பிரான்ஸ் நாட்டின் கம்யூனிஸ்ட்கள் எதிர்த்தனர். ஆனால் ஜான் பால் சார்தரே போன்றவர்கள் இந்த மாணவர் இயக்கத்தைத் தெருவில் இறங்கி ஆதரித்தனர்.

தலைமைப் பீடங்களைத் தகர்ப்போம்

இந்தக் காலகட்டத்தில் தான் சீன மண்ணில் அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் மாவோ தலைமைப் பீடங்களை நொறுக்குவோம் என்ற அறைகூவலை முன்வைத்து மாணவர் இளைஞர்களை  பழைய கலாச்சாரத்தின் உருவகங்களாக கட்சிக்குள்ளும் , அரசு நிர்வாகத்திலும் இருந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராட  அழைத்தார்.

இந்தப் போக்கோடு கூட ஹிப்பிக் கலாச்சாரமும் தோன்றி வளர்ந்தது. தங்களை மலர்கள் என்றும் இது மலர்கள் யுகம் என்றும் வர்ணித்துக் கொண்ட ஹிப்பி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் நிர்வாணத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்து நின்றனர்.போதைப் பழக்கவழக்கங்கள் மலிந்திருந்தன. இந்திய ஆன்மீக வாதிகள் பலர் தங்களது மடங்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறுவி அவற்றை அந்நாட்டுச் சந்தையின் சரக்காக்கிச் சம்பாதித்தனர். இவ்வாறு ஒருபுறம் சமூகப் பிரச்னைகள் சார்ந்த இயக்கப் போக்குகளும் மறுபுறம் இதுபோன்ற வாழ்க்கையிலிருந்து தப்பிச் செல்லும் ஆன்மீகப் போக்குகள் உட்பட பல போக்குகள் கோலோச்சிய காலம் அது.

ஜே.பி. இயக்கம்

இந்தியாவில் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்வு மகத்தான ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டமாகும். காட்டுத்தனமான அடக்குமுறை அதற்கு எதிராக ஏவிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவநிர்மான் சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி முழுப்புரட்சி என்ற பெயரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கி வைத்த மாபெரும் இயக்கம் நடைபெற்றது.

ஊழலுக்கு எதிராக நடைபெற்ற அந்த இயக்கத்தில் எண்ணிறந்த மாணவர், இளைஞர் உணர்ச்சிப் பெருக்குடன் பங்கேற்றனர். அவ்வியக்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயனை பாட்னா தொடங்கி கேரளா வரை அக்காலத்தில் பின்தொடர்ந்த அனுபவமும் எனக்கு உண்டு. மகாராஷ்டிரம், பீஹார் மற்றும் வட இந்தியாவின் பெரும் பகுதியில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அப்போது மாணவனாக இருந்த ஒரு இளைஞனின் கையை உயர்த்திப்பிடித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறினார்: இந்தியாவின் எதிர்காலம் இவர்களைப் போன்றவர்களின் கைகளில்தான் உள்ளது என்று. அவ்வாறு ஜெ.பி. அவர்கள் கையை உயர்த்திப் பிடித்து அடையாளம் காட்டிய அந்த மாணவர் வேறுயாருமல்ல; தற்போதய ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் தலைவரான லல்லு பிரசாத் யாதவ்வே ஆவார்.

அன்றைய கால கட்டத்திலிருந்து இன்றைய கால கட்டம்தான் எத்தனை தூரம் மாறியுள்ளது. அன்று யாருடைய கரத்தைப் பிடித்து ஜெ.பி. அவர்கள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வல்லவர்களின் பிரதிநிதி என்று கூறினாரோ அந்த மாணவர் இன்று அரசியல்வாதியாகி அவர் மீதே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்து நிற்கிறார். அத்தகைய அவலநிலை சமூகத்தில் தலைதூக்கியுள்ளது. கேரளத்திலும் நான் பயின்ற கல்லூரியில் எனது கல்லூரித் தோழர்கள் 65 பேரையும் வைத்து கூட்டம் நடத்திய நினைவு இப்போதும் என் மனதில் தேங்கியுள்ளது. நூலகங்களுக்குத் தவறாமல் செல்வதும் பல்வேறு விவாதங்களில் ஈடுபடுவதும் என்று அன்றிருந்த நிலைதான் இன்று எங்கு சென்று ஒளிந்து கொண்டது என்று தெரியவில்லை.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் தன்மைகள்

நான் தற்போது ஒரு கல்லூரியில் மீடியா கன்வெர்ஜ்ஜன்ஸ் குறித்து போதிக்கிறேன். அக்கல்லூரி மிகுந்த வசதி படைத்தவர்கள் மட்டுமே அணுக முடிந்த ஒரு கல்லூரி அங்கு பயிலும் மாணவர்கள் ஆண்டொன்றுக்கு ரூபாய் 4 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். உலகின் எந்த மூலையிலிருக்கும் எந்த அறிவையும் அங்கு பெற முடியும்.

ஒவ்வொரு மாணவரும் லேப்டாப் கம்யூட்டர்கள் வைத்திருப்பது அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கல்விக்கு அரசின் அங்கீகாரம் இல்லை. 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதத்தில் அங்கு நியமிக்கப்பட்டுள்ள என்னைப் போன்றவர்கள் ஆசிரியர் என்றே அழைக்கப்படுவதில்லை. அவர்கள் மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தேவையானவற்றைச் செய்பவர்கள் என்றே அழைக்கப்படுகின்றன. அங்கு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆசிரியர் மாணவர்களிடமிருந்து பெறும் சராசரி மதிப்பெண்கள் 100க்கு 40க்கும் குறைவாக இருந்தால் அவர் அங்கு பணியில் நீடிக்க முடியாது. இங்கு கற்பவர்களுக்கு படித்து முடித்த உடன் குறைந்த பட்சம் ரூபாய் 35,000க்குக் குறையாத சம்பளத்தில் உடனடியாக வேலை கிடைத்துவிடுகிறது.

ஆனால் இதே  கல்வியைக் கற்பிப்பதற்காக அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஒன்றும் அங்கு உள்ளது. அங்கு இன்னும் பழைய கறுப்பு வெள்ளை புகைப்படக் கருவிகளே பயன்படுத்தப் படுகின்றன. அதுபோல் இன்று எவருக்கும் தெரியாத அத்தனை பழங்கால வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன. கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் அங்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் , அவர்கள் படித்த புத்தகங்களைக் கொண்டு இன்று எவ்வளவோ நவீன மயமாகிவிட்ட ஒரு துறையில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் எதையோ செய்து கொண்டுள்ளனர்.

நான் கற்பிக்கும் கல்லூரியில் போட்டியிடும் திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதே ஒழிய அரசின் அங்கீகார முத்திரை பதித்த சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. ஆனால் அரசால் நடத்தப்படும் கல்லூரியில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. போட்டித்திறன் குறித்துக் கடுகளவு கூட அக்கறை காட்டப்படுவதில்லை.

சந்தை நோக்குடன் அனைத்தும் நடைபெறும் போக்கு

அதிக முதலீடு செய்து மிகவும் ரம்யமான ஒரு சுற்றுச் சூழலில் தற்போது லாபம் என்று எதையும் எடுக்க முடியாத நிலையில் நான் கற்பிக்கும் நிறுவனத்தை நடத்துபவர் இருக்கிறார். ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட குறும்படங்களை எடுக்க மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கு ஒரு பெரும் தொகை அங்கு அவரால் செலவிடப்படுகிறது.

அதிக வருமானம் ஏதுமின்றி இதனை நீங்கள் இத்தனை சிரத்தை எடுத்து நடத்துவதற்குக் காரணம் என்ன என்று ஒருமுறை நான் அவரை வினவினேன். அதற்கு அவர் வெகுவிரைவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வரப்போகின்றன. அவைகளுக்கு நல்ல விலையில் நான் இந்த நிறுவனத்தை விற்றுப் பணம் ஈட்டும் வாய்ப்பிருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை தரத்துடன் இந்த நிறுவனத்தை நான் நடத்துகிறேன் என்று கூறினார்.

ஆம் இங்கு இப்போது கல்வியாயிருந்தாலும் கல்வி நிறுவனமாய் இருந்தாலும் அதனை நன்கு விலை போகும் சந்தைச் சரக்காக்குவதே உலகமயம் கோலோச்சும் இந்நாளின் நியதியாகிவிட்டது. நான் பயிற்றுவிக்கும் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கு நிகரானவை என்று அரசு நடத்தும் கல்லூரிகள் மட்டும்  தரக்குறைவுடன் இருப்பதில்லை. இன்று அரசால் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகளின் நிலையும் அத்தகையதாகத்தான் உள்ளது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

கேரள அரசு என்னை ஆய்வொன்றினை மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அதற்காக  100 சதவீதம் தேர்ச்சி பெறும் மற்றும் 100 சதவீதம் மாணவர்கள் தோல்வியடையும் பள்ளிகளில் நான் என்னுடைய ஆய்வுப் பணியை மேற்கொண்டேன்.  100 சதவீதம் தோல்வியடையும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரபிக் கடலின் கரையில் நின்று கொண்டே அதுதான் அரபிக்கடல் என்று தெரியாத நிலையில் இருந்தனர். மலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழ் வம்சா வழியினரைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக தேவிகுளம் , பீர்மேடு போன்ற பகுதிகளில் தமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பள்ளிகள் கேரள அரசால் நடத்தப்படுகின்றன. ஆனால் அப்பள்ளிகளில் மாணவர்களைக் காண்பதே அரிது. குழந்தை உழைப்பைத் தடைசெய்யும் சட்டம் அமலில் இருக்கும் போதும் ஏராளமான குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படும்  அவலநிலை அங்கு நிலவுகிறது.

மலப்புரம் போன்ற பகுதிகளில் குடிகாரர்களாகவும் வீட்டைவிட்டு ஓடிப்போயும் உள்ள தந்தையர்களைக் கொண்ட பெண் பிள்ளைகள் தந்தை எங்கே என்று கேட்டால் வெளிநாட்டில் இருக்கிறார் என்று பொய் கூறுகின்றனர். சிறுவர்களில் பலர் சட்டவிரோத கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அனைவரும் தோல்வியடையும் பள்ளிகளில் குடும்ப உணர்வு , சமூக உணர்வு , அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் நிலை ஆகியவை இல்லை.

அதே சமயத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் நிலை வேறுபட்டதாக உள்ளது. அங்கு அரசால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பதிலாகத் தனிப்பயிற்சிப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் பலர் பகுதிநேரப் பாடம் கற்பிக்கின்றனர். அங்கு மாணவர்களுடன் சேர்ந்து ஊரில் உள்ள நிர்க்கதியான வயதானவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அப்பெரியவர்கள் உணவு உண்ணும் வேளையில் பல்வேறு கதைகளை மாணவர்களுக்குக் கூறுகின்றனர். அத்துடன் மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறன் வளர்க்கப்படுகிறது. அவ்வட்டாரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று அப்பள்ளிகளில் கணிணிக் கருவிகள் வாங்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தேவையான உலக அறிவு அனைத்தையும் எவ்வாறு பெறுவது என்பது அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

மேட்டுக்குடித் தன்மைவாய்ந்த தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் அளவு ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லாதிருந்தாலும் அவர்களது தாய் மொழியில் இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான அறிவினைப் பெற்றவர்களாக அவர்கள் உள்ளனர். அதாவது இன்றைய வேலைச் சந்தையில் போட்டியிடும் திறன் ஓரளவு அவர்களிடமும் வளர்ந்துள்ளது.

கூர்மையடையும் வர்க்க வேறுபாடு

இவ்வாறு இன்றைய நிலை வசதி படைத்தவர்களுக்குப் போட்டித்திறனை வளர்க்கும் கல்வி வசதி இல்லாதவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழை மட்டும் தரும் கல்வி என்பதாகப் பெருமளவு மாறிவிட்டது. இன்றைய கல்விமுறை வர்க்க வேறுபாடுகளை இன்னும் கூர்மைப்படுத்தி சமூகத்தில் நிலவும் மிகவும் வெளிப்படையான ஓரே வேறுபாடு வர்க்க வேறுபாடே என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.

நான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக எதையும் கூற இங்கு வரவில்லை. என்னுடைய அனுபவங்களை உங்கள் முன் வைக்கவும் உங்களது அனுபவங்களை எடுத்து செல்லவுமே வந்துள்ளேன். முன்பிருந்ததைப் போல் ஏழை மாணவர்களிலும் ஒருசிலர் போட்டித்திறனை வளர்த்துக் கொண்டு வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிட்டு முன்னேற வேண்டுமானால் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவர்களிடையே நாம் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு பராமரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடம் ஜனநாயகப் போக்கு மிகுந்திருக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக அவர்கள் கேள்விகளைக் கேட்கப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்வதற்கு நம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனக்குச் சந்தேகம் ஏற்படுகிற எந்த விசயத்திலும் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற மனநிலை உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக இண்டிகோ என்ற நிறத்திற்கும் வையலட் என்ற நிறத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.  அந்நிலையில் வானவில்லின் நிறம் 6 ஆகத் தான் இருக்க வேண்டும். அப்படியிருக்கையில் நாம் ஏன் அதனை ஏழு என்று கூறவேண்டும் என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு தோழர்.ஜேம்ஸ் அவர்கள் தனது உரையினை வடிவமைத்து வழங்கினார்.

Pin It