தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த இனியன் கவுதம் என்ற தலித் மாணவருக்கு கல்விக் கடன் வழங்க புரசைவாக்கம் ‘பாங்க் ஆப் பரோடா’ மேலாளர் மறுத்துவிட்டார். குடும்பத்தில் முதல் தலைமுறையாக பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் மாணவன்.

இத்தனைக்கும் மாணவனின் தந்தை இந்த வங்கியில் 14 ஆண்டுகாலம் கணக்கு வைத்துள்ளார். மதிப்பெண்களைப் பார்க்காமல், தொழில் கல்லூரிகளில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கடன் தர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினாலும், வங்கி நிர்வாகம், தலித் என்றால் சட்டத்தை மீறியே செயல்படுகிறது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ப.ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. கழக வழக்கறிஞர் குமாரதேவன், பாதிக்கப்பட்ட மாணவருக்காக வாதாடி வெற்றி பெற்றுள்ளார். வங்கி நிர்வாகம் கடன் வழங்க மறுத்தது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து கடனை வழங்க உத்தரவிட்டது.

மற்றொன்று ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் தொடர்ந்த வழக்கு. அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான 522 விரிவுரையாளர் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தன. இதில் 300 பதவிகள் மட்டும் முதல் கட்டமாக நிரப்பப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.

இது 2000 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் முன் அரசு தந்த உறுதிக்கு எதிரானது என்று வழக்கு மனுவில் கூறப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி. ராம சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு, 522 பதவிகளையும் உடனடியாக நிரப்ப உத்தரவிட்டுள்ளது. புனித பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் அரி பரந்தாமன் வாதாடினார்.

Pin It