தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் தமிழருவி மணியன், சென்னையில் நடந்த கழக மாநாட்டில் (அக் 7) ஆற்றிய உரையின் இறுதிப் பகுதி:

உலகத்திலேயே சமயங்களிலேயே வித்தியாசமானது புத்தம். புத்தம் சமயம் அல்ல. அது ஒரு மார்க்கம். புத்தனுடைய சிறப்பு என்ன வென்றால் புத்தன் பேசிக் கொண்டிருக்கவில்லை. புத்தன் சீடர்களை வைத்துக் கொண்டு உரையாடிக் கொண்டிருக்கவில்லை. புத்தன் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தான். சாக்ரட்டீஸ் என்கிற சிந்தனையாளனின் சிறப்பு என்னவென்றால் சாக்ரட்டீஸ் கூட்டம் கூட்டி பேசிக் கொண்டிருக்கவில்லை. பெரியாரிடத்திலே கேள்வி கேட்டார்கள். கடவுள் பெயராலே நீங்கள் பெயர் வைத்துள்ளீர்களே என்று கேட்டார்கள். பெரியார் கூறினார், நீ விரும்பினால் ‘மசுரு’ என்று கூப்பிட்டுக் கொள். அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார். அப்படிச் சொல்லுகிற ஆண்மை ஒரு தலைவனுக்காவது உண்டா? இந்த தமிழ்நாட்டில் யாருக்கும் கிடையாது. பெண்ணுக்கு உரிமை வேண்டும் என்று சொல்லுகிறாயே, பொதுவுடைமைப் பற்றிப் பேசுகிறாயே, பெண் உரிமையை பேசுகிறாயே, உன்னுடைய மனைவி இன்னொரு ஆணோடு போனால் அதை ஏற்றுக் கொள்ளுவாயா என்று பெரியாரிடம் கேள்வி கேட்டான்.

பெரியார் தெளிவாகச் சொன்னார் : இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. என் மனைவி போவாளா மாட்டாளா என்று நான் சொன்னால் அவர் உரிமையில் நான் கை வைத்ததாகப் பொருள். போவதோ, போகாததோ அவருடைய உரிமை. அவர் எதைச் செய்தாலும் அந்த உரிமையை நான் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்லக்கூடிய மனிதனாக பெரியார் இருந்தார். இன்றைக்கு அப்படி எல்லாம் சிந்திக்க முடியுமா? அப்படி எல்லாம் பேச முடியுமா? கடவுள் மறுப்பாளராக இருந்தார் பெரியார். ஏன் கடவுள் மறுப்பு, ‘பிராமண’ எதிர்ப்பு என்பது நாணயத்தின் இரண்டு பக்கம். கடவுள் மீது பெரியாருக்கு கோபம் இல்லை. அதற்காக பெரியார் கடவுளை வணங்கினார் என்று சொல்ல நான் இங்கு வரவில்லை. கடவுள் மீது பெரியாருக்கு ஏன் கோபம்? பாரதி மிக அழகாகச் சொல்லுவான், சாதிகள் கண்டாய் சாத்திரம் கண்டாய்.

சாதியின் உயிர்த்தளம் என்று. அவன் பார்ப்பனன் தான். ஆனால், அதைப் பார்ப்பனன் தான் பாடினான். சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோறு உண்ணும். பார்ப்புக்கு வேறு ஒரு நீதி; சாத்திரம் சொல்லிடும். ஆயின் அது சாத்திரம் அன்று. சதி என்று கண்டோம் என்று சொன்னவன் பாரதி. பெரியார் வெளிப்படையாக கொண்டு வந்து செய்தார். இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். பார்ப்பனர்களுக்கு மட்டும் எதிராக போராடுவதுதான் திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்று நீங்கள் கருதினால் அதில் கொஞ்சம் பிழையிருக்கிறது என்று உங்களிடம் எனக்கு உள்ள உரிமையோடு சேர்த்து நான் சொல்லுகிறேன். பார்ப்பனர் இன்றைக்கு தானாக வந்து உங்கள் முன்னாலே நிற்க மாட்டான். இந்த தமிழ்நாட்டில் எங்காவது சாதிக்கலவரம் நடந்தால், ஒரு பார்ப்பனனுக்கும், பார்ப்பன அல்லாதவர்க்கும் சண்டை நடந்து இரத்தம் வழிந்ததாக தகவலே கிடையாது. பார்ப்பனரல்லாதவர்க்குள்ளே பார்ப்பான் இருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

காரணம் இது படிநிலைச் சமுதாயம். இந்த சமுதாயம் வர்ணாஸ்ரமத்தில் ஊறிக் கிடக்கிற அமைப்பு படிநிலைச் சமுதாயம். படிப்படியாக இருக்கிறது.

எல்லோருக்கும் மேலே பார்ப்பான் உட்கார்ந்து கொண்டு அவன் காலாலே தோளை அழுத்துகிறான். என் தோளின் மீது உன் காலா என்று கேட்க மறுக்கிறான். ஏன் என்றால் நான்கு பேர் தோளின் மீது இவன் நின்று கொண்டு இருக்கிறான். எனவே ஒரு காலை தான் சுமப்பதன் மூலம் நான்கு பேரின்தோள் மீது நான் நிற்கிறேனே என்ற சுகம் அவனுக்கு இருக்கிறது. இப்படித்தான் அவன் அவன் ஒவ்வொருவருக்கும் கீழே அடுத்தவனின் தோளை அழுத்துவதில் சுகம் இருப்பதினால் மேலே அழுத்திக் கொண்டிருப்பவனைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனால் சொல்லுகிறேன், பார்ப்பனீயம் என்பது மிக மோசமானது. ‘சான்ஸக்ரிட்டேசன்’ என்று ஆங்கிலத்திலே சொல்லுவார்கள்.

சமஸ்கிருத மயமாக்கல், சமஸ்கிருத மயமாக்கல் என்பது உயர்சாதி ஆக்கல் என்று இருக்கிறது. இன்றைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், தலித் அவன் மிக முயன்று அய்.ஏ.எஸ். ஆகி விடுகிறான். அய்.ஏ.எஸ். ஆகிவிட்ட ஒரு தலித், நான் தலித் என்று சொல்லுகிறானா என்றால் இல்லை. அவன் உடனடியாக ஒரு பார்ப்பனனாக மாறி விடுகிறான் மனதளவில். அவன் அந்த பட்டி தொட்டியிலே இருக்கக் கூடிய மாடு மேய்க்கிற, சுள்ளி பொறுக்கிற சோற்றுக்கு இல்லாமல் அலைகிற இவன் தான் என் இனம். அவன் தான் நான் என்று சொல்லுகிற உள்ளம் வர மறுக்கிறது. இதை எல்லாம் சிந்திக்க வேண்டும். ஒரு பெரிய கருத்துப் புரட்சி நடக்கிறது என்றால், சமூகத்தை ஒட்டு மொத்தமாகப் புரட்டிப் பார்க்க வேண்டும். காலத்திற்கேற்றாற் போல் மாற்றங்கள் வருகின்றன.

அந்த மாற்றங்களை நோக்கி சமூகங்கள் நடக்க வேண்டும். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் கடவுளை மற, மனிதனை நினை என்று பேசிய பெரியாருடைய அடிப்படை லட்சியம் மனிதம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சக மனிதனின் துயர் துடைப்பதற்கு, சக மனிதனின் இழிவை அகற்றுவதற்கு, சக மனிதனுடைய சமத்துவத்தை தேடுவதற்கு தடையாக எது இருந்தாலும் அதை உடைத்தெறிவதற்கு பெரியார் என்றும் தேவைப்படுவார் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

தொகுப்பு: பொள்ளாச்சி பிரகாசு

Pin It