பெரியார் லட்சியங்களை வென்றெடுக்கும் போராட்டக் களத்துக்கு மிகவும் பொருத்தமான படை இது தான். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் லட்சியத் துடிப்பை நான் அறிவேன் என்று, கழகத்துக்கு புகழாரம் சூட்டினார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்.

திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா’ புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டதாவது :

குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழாவில் பேசுவதற்குத்தான் கோவை இராமகிருட்டிணன் என்னை அழைத்தார். அதில் பங்கேற்க இயலாத காரணத்தால், இன்று பங்கேற்கிறேன். குத்தூசி குருசாமி ஒரு மகத்தான மனிதர். வரலாற்றில் வாழ்ந்தவர். வரலாற்று மடியில் காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டாலும், மனித குலத்தின் மேன்மைக்கு உழைத்தவர்களை என்னதான் இருட்டடிப்பு செய்தாலும், அவர்களை மறைத்துவிட முடியாது. பெரியார் என்றார் யார்? அவர் ஒருவர் தான். பெரியார் என்றால் தந்தை பெரியார் தான். மற்றவர்கள் எல்லாம் சிறியார் தான். பெரியார் என்றால் உயரத்தில் அல்ல, அடர்த்தி நிறைந்த வாழ்க்கையில், அவர் பெரியார். அந்தத் தந்தை பெரியாராலேயே, பெரியார் என்று அழைக்கப்பட்ட ஒரே மனிதர் குத்தூசி குருசாமி தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேடையிலேயே அவருக்கு நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும் என்று நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

பிறர் வாழ தன்னை அழித்துக் கொள்வது என்பது ஒரு வகை. பிறர் வாழ தனக்கு துன்பம் நேருவதை ஏற்றுக் கொண்டு இன்பமடைகிறவர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் குத்தூசி குருசாமி. அவரது வரலாற்றுப் பக்கங்கள் நெக்குருகும் வரலாற்றைக் கொண்டவை; கடைசி மூச்சு இருக்கும் வரை போராட்டமே அவரது வாழ்க்கையாக இருந்தது. பெரியாரின் சமதர்மப் படையில் சுயமரியாதைச் சேனையில் மறக்கவே மறைக்கவே முடியாதவர் குத்தூசி குருசாமி. அதேபோல் புலவர் குழந்தைக்கும் நூற்றாண்டு விழா எடுக்கப்படுகிறது.

புலவர் குழந்தை தனது மகள்களுக்கு சூட்டியுள்ள பெயர் சமதர்மம், சமரசம். அதேபோல் குத்தூசி குருசாமியின் மகளின் பெயர் ரஷ்யா. பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். மனித சிந்தனைக்குத் தடைகளால் நின்றவைகளை எதிர்த்துப் போராடிய குறியீடுகளை பெயராகச் சூட்டிய பெருமைக்குரியது திராவிடர் இயக்கம். திராவிட இயக்கத்தின் மூலக் கொத்தளமாய் விளங்குவது திராவிடர் கழகம். அதனுடைய மதிப்பு மிக்க பங்களிப்பைப் பற்றி நான் இப்போது பேச வரவில்லை. அதே நேரத்தில் தந்தை பெரியாரின் அதே கருத்தில் பாரம்பர்யமாய்  அவருடைய பிரதிநிதியாய் ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ செயல்பட்டு வருகிறது.

இந்த மாவட்டத்திலும் மாநிலத்திலும் பல பிரச்சினைகளில் முன்னோடியாக நின்று போராடி வருகிறது. மனித சமூகத்தை ஒரு சிற்பியைப் போல் செதுக்க விரும்பும் மாமனிதர்கள் தத்துவமாக நம்மை வழி நடத்துகிறார்கள். அவர்களின் கடந்தகால வழித் தடங்களில் ஏற்பட்ட அனுபவங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, நிகழ்கால அரசியல், பொருளாதார கலாச்சார சவால்களை, எதிர்கொள்வதற்குரிய ஆயுதங்களை நாம் தயாரிக்க வேண்டும். அப்படிப் போர்க்களத்துக்குத் தயாராவதற்கு உண்மையில் சொல்கிறேன். இந்தப் படை தான் பொருத்தமான படை (பலத்த கைதட்டல்) நான் எதையும் ‘குண தோஷம்’ செய்ய விரும்பவில்லை. அது எனது நோக்கமும் அல்ல.

ஆனால், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பலரை நான் நன்கு அறிவேன். வெம்பிப் பழுத்த பெரியாருக்குத் தொண்டு செய்ய மிகவும் பொருத்தமானவர்கள் அவர்கள். பெரியாருடைய தொண்டில் பழுத்த தொண்டர்களாய் தொண்டாற்றுவதற்கு எவ்வளவு ஈடுபாட்டோடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை முகத்திற்கு முகம் கண்டவன் ஒவ்வொரு செயல்பாட்டிலும், உயிர்த் துடிப்பையும், லட்சியத் துடிப்பையும், பெரியாரின் உணர்வை, நினைவை, சிந்தனையை செயலூக்கம் பெற வைப்பதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு, இவர்கள் போராடுவதை நான் பார்த்திருக்கிறேன். பாடுபடுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே அத்தகைய படைப்பிரிவு வலுப் பெறவேண்டும். பலம் பெறவேண்டும் என்று அந்தரங்க சுத்தியோடு நான் வாழ்த்த விரும்புகிறேன். அத்தகைய நல்ல படைப்பிரிவு உருவானதால்தான் இன்றைய தேவைகளை எதிர்கொள்ள முடியும்.

பெரியார் வாழ்நாள் முழுதும் எதை எதிர்த்துப் போராடினாரோ, அது இன்றைக்கு ‘விசுவரூபம்’ எடுத்திருக்கிறது. சாதி இழிவுக்கு எதிராக கடந்த காலத்தில் போராடி, அதன் வடுக்களை நிகழ் காலத்திலும் சுமந்து கொண்டிருக்கிற போராளிகள், இங்கே கவுரவிக்கப்பட்டார்கள். அதே ரீதியாக உணர்வுடன், நிகழ்கால இளைஞர்களும் போராடத் தயாராக வேண்டும் என்ற குறியீட்டுக்காக, மூத்த தோழர்கள், இங்கே கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை சிறப்புகளைச் சொல்வது! இன்று யார் வேண்டுமானாலும் சாதி ஒழிப்புக்கு கருத்தரங்கம் போட்டு பேசலாம். ஆனால் காங்கிரசுக்குள் இருந்த போதே, சாதிய இழிவையும், தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடுவதில் முன்னோடும் பிள்ளையாய் இருந்தவர் தந்தை பெரியார். அக்கிரகாரத்தில் நாய் போகிறது; மனிதக் கழிவுகளைத் தின்னும் பன்றி போகிறது; மனிதனுக்கு உரிமை இல்லையா என்று குரல் எழுப்பியவர் பெரியார்.

தேர்தலை எட்டி உதைத்துவிட்டு, சமூக விடுதலைக்குப் போராடுவதையே தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் பெரியார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே தந்தை பெரியார் திராவிடர் கழகம் குத்தூசி குருசாமிக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கு கருவிகளாக நின்று, போராடும் ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்த உலைக்களத் தொண்டர்களாகத் தான் திராவிடர் இயக்கத்துக்கு உழைத்திருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கெல்லாம், விழா எடுத்து மகிழுகிறது பெரியார் திராவிடர் கழகம். பொதுவுடைமை இயக்கத் தோழர்களும், பெரியார் இயக்கத் தோழர்களும் தோளோடு தோள் நின்று, வர்ணாஸ்ரமம் விடுக்கும் சவாலை எதிர்த்து, கடினமாகப் போராட வேண்டியிருக்கிறது. அந்த சவாலை இரண்டு இயக்கத்தினரும் இணைந்து நின்று எதிர்த்துப் போராடுவோம்.