முதல் பிரவேசம்: பெ. மாதையன் | சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவர்.

பொதுவாக “முதல் அனுபவம்” என்பது என்றுமே மறக்கமுடியாத ஒரு வரம். அதே அனுபவம் மீண்டும் வாய்க்கின்றபோது அது முந்தைய முதல் அனுபவமாக அதே இனிமையுடன் என்றுமே அமைவதில்லை. ஆனால் ஆய்வில் வாய்க்கின்ற முதல் அனுபவம் ஒரு தவத்தின் எழுச்சியாய் மேன்மேலும் சித்திக்கும் பல அனுபவங்களுக்கான ஊற்றுக்கண்ணாய் அமைந்து ஆய்வை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றது. எனவே தமிழியல் ஆய்வாளன் எனும் நிலையில் ஒருவருக்கு வாய்க்கின்ற முதல் ஆய்வு அனுபவம் மற்ற எல்லா அனுபவங்களிலிருந்தும் வேறுபட்டதொரு ஆக்கச்சூழலாய் அமைகின்றது. இந்த வகையில் எனக்கு வாய்த்த ஆய்வு அனுபவத்தின் தொடக்கம் ஒரு சொல்லுக்கான சொற்பொருளைத் தேடுதலில் தொடங்கியது.

சங்கஇலக்கியம் எனும் பெருங்கடலில் உள்ள சிறு துளியின் ஒற்றை அணுவில் தொடங்கிய என் ஆய்வுக்கான அணுக்கூறு ‘ஆடவர்’ எனும் ஒரு ஒற்றைச் சொல்லே ஆகும். இந்தச் சொல் அமைந்த ஒளவையாரின் “நாடா கொன்றோ காடா கொன்றோ” (புறம். 187) எனத் தொடங்கும் பாடலே ஆய்வுக்கான அடித்தளமாக அமைந்தது. இந்தப் பாடலை மீளமீளப் படித்தபோது அது போதிமரமாய் இருந்து தந்த வெளிச்சம்தான் இன்று வரையிலான என் ஆய்வு வளர்ச்சிக்கான எழுச்சியாக அமைந்தது. ஒரு சொல்லின் பயன்பாட்டுச் சூழலே பொருளைத் தருகின்றது எனும் நிலையில் ஒரு பாடலில் இடம்பெறும்போது அதேசொல் ஒரு பண்பாட்டு வரலாற்றின் வெளிப்பாடாக அமைகின்றது. மேற்காட்டிய பாடலில் வரும் ஆடவர் எனும் சொல்லே இதை மெய்மையாக்கியுள்ளது.

மேற்காட்டிய பாடலில் வந்த “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை” எனும் தொடரில் வரும் ஆடவர் எனும் சொல் சங்கச்சமுதாயச் சூழல், புறநானூற்றில் அப்பாடல் இடம்பெற்ற சூழல் எனும் இவற்றின் அடிப்படையில் அணுகப்பட்டபோது அது தந்த பொருள் மன்னர் என்பதுதான். இந்தப் பொருளை இனங்கண்டபோது ஏற்பட்ட முதல் அனுபவம் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய மகிழ்ச்சியின் உச்சமாக அமைந்தது. இந்த மகிழ்வு தொடர இதற்கான உறுதிப்படுத்தமும் அவசியம் தேவை. இதை உறுதிப்படுத்திக்கொள்ள என் ஆய்வுவழிகாட்டி பேராசிரியர் பொன். கோதண்ட ராமன் (பொற்கோ) அவர்களை நாடி இதைச் சொன்னதும் அவர் என்னை ஊக்குவித்து இதை ஆய்வுரையாக எழுதுங்கள் என ஊக்கப்படுத்தியதுதான் என் ஆய்வின் வெற்றிக்கான முதற்படியாக அமைந்தது. இந்தப் பொருண்மையை ஆய்வுக்கட்டுரையாக அல்லாமல் ஆய்வின் முன்வரைவாக நான் எழுதிச்சென்று ஆய்வரங்கில் வழங்க இசைவு தந்த என் ஆசான் பொற்கோ அவர்களின் நல்லாசிரியச் செயற்பாடு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்ததோடு ஆய்வுக்களம் என்னுள் கருக்கொள்ள வாய்ப்பான சூழலையும் எனக்கு உருவாக்கித் தந்தது. தன்னுடன் பணியாற்றிய பிறிதொரு பேராசிரியரிடம் பேராசிரியர் பொற்கோ அவர்கள் ஆடவர் என்பதற்கு மன்னர் எனப் பொருள் காண்கின்றார் இவர் என என்னை அறிமுகப்படுத்திச் சொல்லியபோது அந்தப் பேராசிரியர் தந்த பதில் வியக்கத்தக்கதாகவும் ஆய்வின் உற்சாகத்தையே முடக்கிவிடக் கூடியதாகவும் அமைந்தது. “ஆடவர் என்பதற்கு அதுதானே பொருள்; இதில் என்ன புதுமை இருக்கிறது” என அவர் கூறிய கருத்திற்குப் பின்னரும் பேராசிரியர் பொற்கோ அவர்கள் நான் துவண்டு போகாதவாறு என்னை ஊக்குவித்து ஆய்வுரையை எழுதச்செய்தார்கள்.

1978ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வாளர் கருத்தரங்கம் சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்றபோது நான் வழங்கிய ஆய்வுக்கட்டுரை பெரிதளவிலான ஊக்குவிப்பை என்னுள் ஏற்படுத்தவில்லை என்றாலும் என் ஆசான் போட்ட விதை, வாய்ப்பானதொரு சூழலைப் பெற்று வளர ஆண்டுகள் பல தேவைப்பட்டன. இந்த ஆய்வுவிதை 4, 5ஆண்டுகளுக்குப் பின்னரே என்னுள் முழு அளவில் கருக்கொண்டு உருப்பெற்று முழுமையாக வளரத் தலைப்பட்டது. 1978இல் “எவ்வழி நல்லவர் ஆடவர்” எனும் தலைப்பில் கருக்கொண்ட இந்த ஆய்வுரை நான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளனாகச் சேர்ந்த 1982க்குப் பின்னர்தான் மறு உருவாக்கம் பெற்றது. கரந்தைத் தமிழ்க் கல்லூரியின் “தமிழ்ப்பொழில்” இதழுக்கான ஆய்வுரைகள் வரவேற்கப்பட்ட நிலையில் “எவ்வழி நல்லவர் ஆடவர்” எனும் அதே தலைப்பில் மறுஆக்கம் செய்யப்பட்டு அவ்வாய்வுரை வெளியீட்டிற்கு வழங்கப்பட்டது. 1983இல் இது வெளியான காலத்தில் இந்த ஆய்வுரையின் நடை பண்டிதத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என விமர்சிக்கப்பட்டாலும் ஓரளவிற்கு அதற்கான வரவேற்பும் இருந்தது. இதே ஆண்டில் என் ஆசான் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் அளித்திருந்த இந்த ஆய்வின் எழுத்துப்படி ஒன்று அவர் நடத்திய “புலமை” இதழில் இதே ஆய்க்கட்டுரை மீண்டும் அச்சேறக் காரணமாக அமைந்தது. இந்த வெளியீடு தமிழ்ப்புலத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.

‘வெற்றி’ எனப் பொருள்படும் ‘ஆடு’ எனும் சொல்லின் அடியாகப் பிறந்து வெற்றிக்கு உரியவர்களாகக் கருதப்பட்ட மன்னரைக் குறித்த ஆடவர் எனும் சொல் தன் சொற்பொருள் புதிய புத்தகம் பேசுது | ஆகஸ்ட் 2010 35

அடிப்படையிலும், “நாடா கொன்றோ” எனும் ஒளவையாரின் பாடல் மன்னர்களின் முதன்மையையும் நன்மையையும் பேசும் பொருண்மொழிக்காஞ்சிப் பாடல் வரிசையில் புறநானூற்றில் இடம்பெற்றிருப்பதன் அடிப்படையிலும் ஆடவர் என்பதற்கு மன்னர் என்பதே பொருள் என வரையறுக்கப்பட்டது. இதற்கான அகச் சான்றுகளைச் சங்கஇலக்கியத்தில் தேடிய நிலையில் மதுரைக்காஞ்சியில் வரும் “பெருஞ்செய் ஆடவர் பிறரும் தம்மின்” எனும் தொடரும், அதற்குப் “பெரியநிலத்தை ஆள்பவர்” எனப் பொருள் எழுதிய உரையாசிரியர்தம் சொற்பொருள் விளக்கமும் இந்த ஆய்வு சங்கச் சமுதாயவியல் ஆய்வாகப் பரிணமிக்கக் காரணமாக அமைந்தது. புறத்திணையின் திணை, துறைகளை அடிப்படையாகக் கொண்டு மூதின்முல்லை, வல்லான்முல்லை, மகட்பாற்காஞ்சி, செவியறிவுறூஉ போன்ற துறைகளில் அமைந்த பாடல்களின் சமுதாயப் பின்புலத்தையும் சங்கச்சமுதாய இயல்புகளையும் அறிந்து சிறுசிறு ஆய்வுரைகள் எழுதத் தூண்டு கோலாக இந்த ஆய்வுக்கட்டுரை உருவாக்கமே அமைந்தது.

இன்று அலிகர் முசுலிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் து. மூர்த்தி அவர்களும் நானும் 1983இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “சங்ககால அரசு உருவாக்கம்” எனும் பொருண்மையில் ஆய்வுத்திட்டமொன்றை உருவாக்கிச் செயற்படுத்த முனைந்ததற்கும் இந்த ஒற்றைச்சொல் பற்றிய ஆய்வே அடிப்படையாக அமைந்தது. அப்போது தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை அணுகி ஆடவர் என்பதற்கான பொருள் மன்னர் என்பதைத் தெரிவிக்க முற்பட்டோம். வாய்ப்பான சூழல் அமைந்தபோது அவரைச் சந்தித்து இந்தக் கருத்தைச் சொன்னவுடன் அவர் கூறிய சொற்றொடர் என்றுமே மறக்க முடியாததாக அமைந்தது. அவர் அப்போது சொன்ன ஒரு கேள்விதான் என்னுடைய இந்த ஆய்வின் ஆலம் விதைக்கான விருட்ச உருவாக்கமாய் அமைந்தது. “கைலாசபதிக்கு இந்தச் சொல் எப்படி விட்டுப்போனது” என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. சங்கச்சமுதாய வீரநிலைக் காலம் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதியின் ஆய்வில் இது இடம்பெற்றிருந்திருக்க வேண்டும் என்ற அவரின் அந்தக் கருத்துதான் என்ஆய்வில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

இதற்குப் பின்னர்தான் திணைத்துறைகளை ஒப்பிட்டு ஆயும் என் ஆய்வு ஒரு சரியான திசைநோக்கிச் செலுத்தப்பட்டது. 1983இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சங்கஇலக்கியக் கருத்தரங்கில் அகத்திணையிலும் அகத்திணைகளின் கூற்றுகளிலும் உள்ள சிக்கல்கள் அலசி ஆராயப்பட்டன. அப்போது நடைபெற்ற ஒரு அமர்வில் பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் அவர்கள் புறத்திணையில் இந்தச் சிக்கல்கள் இல்லை எனச் சொன்னபோது நான் மேடைக்குச் சென்று அதியமான் நெடுமானஞ்சி பற்றிய இரண்டு பாடல்களை (புறம். 92, 315) எடுத்துக்காட்டி சிக்கல் இருப்பதைச் சொன்னேன். 315ஆம் பாடலுக்கு வல்லான்முல்லை என்ற துறை கொடுக்கப்பட்டிருப்பதாலேயே உ. வே. சாமிநாதையர் நெடுமானஞ்சியை ஒரு தலைவனாகக் கொண்டுவிட்டார். ஆனால் இவரே இயன்மொழி எனும் துறைபெற்ற 92ஆம் பாடலில் வரும் அதியனை அதியமான் நெடுமானஞ்சி எனும் குறுநிலமன்னனாகக் கொண்டுள்ளார் என்பதை எடுத்துக்காட்டித் திணைத் துறைகளைச் சங்கச்சமுதாய வளர்ச்சிப் போக்கோடு இணைத்துக் காணப்பட வேண்டியதேவை நம் முன்னே உள்ளது என்ற கருத்தை முன்வைத்தேன்.

கருத்து வரவேற்கப்பட்டதோடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஆசிரியராக இருந்த பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் சொன்ன “இது மேலும் ஆராய்வதற்கு உரியது, என்றாலும் இதைக் கண்டுபிடித்துச் சொன்னமையே பெரியது, மிகவும் பாராட்டுக்கு உரியது” எனும் கருத்து ஏற்படுத்திய உற்சாகம் என்னுள் பெரிய வெற்றிமுகத்தை ஏற்படுத்தியது. இந்த வகையிலான தொடர்ந்த ஊக்கங்களும் வழிகாட்டுதல்களும்தான் பின்னாளில் சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் எனும் தனித்தன்மை வாய்ந்த ஆய்வை உருவாக்குவதற்கு எனக்கு முதன்மைக் காரணங்களாக அமைந்தன. ஆக ஒரு ஆய்வாளன் நுணுக்கமாக உள்நுழைந்து புதியனவற்றைத் தேடும் ஆய்வு மனப்பாங்கு உடையவனாக இருத்தல் வேண்டும்; இந்த மனப்பாங்கு வளர ஆசான்களாக அமையும் பேராசிரியர்கள் தூண்டுகோல்களாக அமைதல் வேண்டும் என்பதைத்தான் இந்த என் முதல் ஆய்வனுபவம் வெளிப்படுத்துகின்றது. இத்தகைய நிலையில் இலக்கணப் பேராசான் பேராசிரியர் பொற்கோ, தமிழிலக்கிய ஆய்வில் தனித்தடம் பதித்த இலங்கைப் பேராசான் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் போன்றோரின் ஊக்குவிப்புதான் அவர்களின் சிறியோரை இகழாத பண்பும் பண்பாடும்தான் என் ஆய்வு வளர்ச்சிக்கு அச்சாணிகளாக அமைந்துள்ளன.

நல்லாசான்களின் இத்தகைய ஊக்குவிப்பு மட்டுமே ஒருவரின் ஆய்வுப்பாதைக்கான அடித்தளத்தை முழுமையாகக் கட்டியமைத்துவிடாது. இதற்கும் மேலாக ஒரு ஆய்வாளனுக்குச் சுயசிந்தனை மரபும் இருக்கவேண்டியது மிகமிக அவசியம். இத்துடன் சமுதாயவியல் சார்ந்த ஒரு குறிப்பிட்ட ஆய்வுக்கோட்பாடும் கொள்கையும் ஆய்வாளனால் பின்பற்றப்பட வேண்டியதும் அவசியம். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட காலத்தில் என் நண்பரிடம் கற்றுக்கொண்ட மார்க்சிய மெய்ஞானம் தான் எனது இந்த ஆய்வனுபவத்திற்கு உறுதுணையாகவும் ஊற்றுக்கண்ணாகவும் அமைந்தது. ஆடவர் எனும் சொல்லுக்கான பொருளைத் தேடிய என் ஆய்வைச் சங்கச்சமுதாயவில் ஆய்வாக வரலாற்றியல்பொருள்முதல்வாத அடிப்படையில் பின்னாளில் கட்டமைத்துக் கொள்ள உதவியது மார்க்சியச் சிந்தனை மரபே.

ஆக, ஆய்வாளனின் உண்மை காணும் தேடுதல் மனப்பாங்கு, நல்லாசிரியர்களின் மேல் கீழ் என்று பாராது மாணவனையும் சமநிலையில் பார்த்த அறிவார்ந்த ஊக்குவிப்பு, ஆய்வாளனின் இயல்பான விஞ்ஞான வழிப்பட்ட சமுதாயவியல் நோக்கு என்பனவே ஒரு ஆய்வாளனின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படைகள் என்பதை எனது ஆய்வனுவம் எனக்கு ஊட்டியிருப்பதற்கு என் முதல் ஆய்வனுபவமே காரணமாக இருந்துள்ளது.
Pin It