சிறப்பு நேர்காணல் - டாக்டர் சி. சுவாமிநாதன் துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

அறிஞர் அண்ணா, நெ.து. சுந்தரவடிவேலு போன்ற வரலாற்று நாயகர்களை உருவாக்கிய சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் வரலாறு பயின்று பேராசிரியர், கல்லூரி முதல்வர், கல்லூரிச் செயலர், ஆட்சிக்குழு உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்தவர். இன்று அகில இந்தியாவில் தொழில்நுட்பம் சாராத இந்தியப்பல்கலைக் கழகங்களில் இரண்டாவது சிறந்த இடத்தைப் பெற்றுள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக உயர்ந்துள்ளார்.

சந்திப்பு: பேரா.பி.கே. மனோகரன், பேரா.என். மணி

பல்கலைக்கழகம் குறித்தும் அதன் சிறப்புகள் பற்றியும் கூறுங்களேன்.

‘பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியின் அடிச்சுவட்டில் கடந்த 27 ஆண்டு காலமாக பாரதியார் பல்கலைக்கழகம் சிறப்பான கல்விப்பணி ஆற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை ஆகிய 4 மாவட்டங்களைச் சார்ந்த 102 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பல்கலையில் 36 துறைகளில், 160 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அண்மையில் கோவையில் கோலாகலமாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தேசமே வியந்து பார்த்துப் பாராட்டியது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் எங்களை எல்லாம் அழைத்து தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றியமைக்குப் பாராட்டுத் தெரிவித்து விருந்தளித்தார்கள். அந்தப் பாராட்டுக்கு நான் மட்டும் உரியவன் அல்ல. மாநாட்டில் பணிபுரிந்த பேராசிரியர்கள், மாணவர்கள் முதற்கொண்டு மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பெருக்கும் அந்தப் பாராட்டில் பங்குண்டு. இந்த நேர்முகத்தின் வாயிலாக முதற்கண் செம்மொழி மாநாட்டின் சிறப்புக்குப் பாடுபட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு புத்தகத் திருவிழா தொடங்கிய காலம் முதல் அதனைப் பார்த்து பங்களிப்புச் செய்து ஊக்குவித்து வருகிறீர்கள். இத்திருவிழா பற்றித் தங்கள் கருத்து?

பொங்கல், தீபாவளி போன்ற திருவிழாக்களுக்கும் மேலானதாக புத்தகத் திருவிழாவைக் கருதுகிறேன். காரணம் மனித வாழ்க்கைக்கு அடிப்படை புத்தகங்கள். பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் வாழ்க்கையில் தலைமுறைகள் மாறினாலும் வாழ்க்கை முறைகள் மாறாமல், தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந்தனவோ அப்படித்தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் மனித வாழ்க்கை மட்டும் ஏராளமான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது. விலங்கோடு விலங்காகக் குகையில் வாழ்ந்த மனிதன் இன்று நாகரிகத்தின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இது எப்படிச் சாத்தியமாயிற்று? மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வரலாறாக நூல்களில் பதிவு செய்வதன் காரணமாகத்தான் இது சாத்தியமாயிற்று. நூலைப் படைத்தவன் ஒருநாள் மரிப்பான். ஆனால் நூல் சாகா வரம் பெற்றது. மனிதனின் மானத்தை மறைக்க ஆடை வழங்குவது நூல். அவனைச் சமுதாயத்தில் மானம் காத்து வாழ்ந்திட வழிகாட்டுவதும் நூல். அந்த வகையில் புத்தகத் திருவிழாக்கள் சமுதாய வளர்ச்சியின் ஒரு அடையாளம் என்பது என் கருத்து.

புத்தகத் திருவிழாவில் கல்லூரிகள் மாணவர்கள் பங்கேற்பு எப்படியுள்ளது? தாங்கள் முதல்வராக இருந்த காலங்களில் மாணவர்கள் பங்கேற்கச் செய்ய ஊக்கம் அளித்தீர்களா?

நான் ஈரோடு கொங்கு கல்லூரியில் முதல்வராக இருந்த போது புத்தகத்திருவிழாக்களில் மாணவர்கள் கலந்து கொள்ளுதல், அத்தகைய திருவிழாக்களில் சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றை ஒரு அறப்பணியாகவே கருதி செயல்பட்டு வந்தேன். வகுப்பறையிலும், நூலகத்திலும் படிக்கும் பாடத்தை விட புத்தகத் திருவிழாக்களுக்கு வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடுவதன் வாயிலாகவும், வகைவகையான புத்தகங்களை அறிந்து கொள்வதாலும் மாணவர்கள் பெறும் பாடம் மேலானது என்று நினைப்பவன் என்பதால் அன்று முதல் இன்று வரை மாணவர்களை ஊக்குவித்து வருகிறேன்.

அடிப்படையில் தாங்கள் ஒரு பேராசிரியர் என்றாலும் நிர்வாகி என்ற பொறுப்புக்கு அதாவது கல்லூரி முதல்வராக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது துணைவேந்தராகவும் உயர்ந்து விட்டீர்கள். இந்நிலையில் பொதுவான வாசிப்புக்கு தங்களுக்கு நேரம் கிடைக்கிறதா? எந்த மாதிரியான புத்தகங்களை வாசித்து வருகிறீர்கள்கள்?

உண்மைதான். நிர்வாகச் சுமைகளின் காரணமாக ஆரம்ப காலத்தைப் போல வாசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போது நூல்களைப் படிக்கத் தவறுவதில்லை. எது எப்படி இருப்பினும் கல்வித் தொடர்பான நூல்களை, இதழ்களை படிப்பதற்கு கட்டாயம் நேரம் ஒதுக்கிக் கொள்வேன். அண்மையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் படைப்புகள் பாரதியார் பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது. புத்தக வெளியீட்டிற்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அவருடைய நூல்களை மேலும் கருத்தூன்றி படித்து வருகிறேன்.

கல்லூரி மாணவர்களின் புத்தக வாசிப்பு தன்மை பற்றி தாங்களின், பொது அபிப்ராயம் என்னவாக உள்ளது?

பொதுவாகவே இன்றைய இளைஞர்கள் மத்தியில் வாசிப்பது குறைந்து வருகிறது. கூட்டுக்குடும்பங்கள் குறைந்து விட்டதால் சிறுவர்களுக்கு தாத்தா பாட்டியிடம் கதைகேட்கும் வாய்பும் குறைந்து போய், வீடியோ விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இளைஞர்கள் தொலைக்காட்சிப் பார்த்தலில் வெறும் பார்வையாளரா களாகச் சுருங்கி போகிறார்கள். பார்ப்பதில், கேட்பதில் இருக்கின்ற ஈடுபாடு வாசிப்பதில் இருப்பதில்லை. ஊடகங்களில் விரும்பிய சினிமா பாடலைக் கேட்கவும், திரை நட்சத்திரங்களோடு உரையாடவும் ஆண்டுக்கணக்கில் முயற்சி செய்ததாகக் கூறி இன்றுதான் இணைப்பு கிடைத்தது என்று பிறவிப்பயனை அடைந்து விட்டது போன்று கூறுவது வேதனை அளிக்கும் ஒன்று.

படிக்கும் ஆர்வம் இளமையிலேயே ஊட்டப்பட வேண்டும். பிள்ளைகள், பெற்றோர் சொல்வதிலிருந்து கற்றுக் கொள்வதை விட அவர்கள் செய்வதைப் பார்த்து கற்றுக் கொள்கிறார்கள். எனவே பெற்றோர்களும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக 2 ஆயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். படிக்கும் பழக்கம் குறைந்து வந்தாலும் பத்தகங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும், விற்பனையும் அதிகரித்து வருகின்றன என்பது உண்மை.

கல்லூரி பல்கலைக்கழக நூலகங்களை எந்த அளவுக்கு மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்?

நூலகங்களை நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். ஆனால் எந்த அளவுக்குப் படிக்கிறார்கள், மனதில் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் பெரும்பாலான மாணவர்கள் ‘அசைன்மென்ட்’, ‘புராஜக்ட்’ என்று நூல்களை நகல் எடுத்து அப்படியே டைப் செய்து தங்களுடைய கட்டுரையாகச் சமர்ப்பிக்கும்போது நூல்களின் கருத்துகள் மனதில் பதிய வாய்ப்பில்லாமல் போகிறது. எனவே நூலகங்களைப் பயன்படுத்தும் அதே நேரத்தில் மாணவர்கள் நூலறிவையும் பெற முயற்சிக்க வேண்டும்.

‘படித்ததைப் பிறருக்குப் படிக்கக் கொடுப்போம்’ என்ற திட்டத்திற்கு தாங்கள் முதல்வராக இருந்த கொங்கு அறிவியல் கல்லூரி பெரும் பங்களித்தது. இந்நிலையில் நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் வாசிப்பு முகாம்கள், வாசகர் வட்டம், நூல் விமர்சன கூட்டம், கல்லூரி வளாகத்தில் புத்தக விற்பனை நல்ல நூல்கள் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி பிரசுரம் வெளியிடுதல் போன்ற பணிகளின் சாத்தியக்கூறு பற்றி கூறுங்கள்?

நாட்டு நலப்பணித்திட்டத்தின் பணிகளுக்கு எல்லையே இல்லை. சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய எந்தச் செயலையும் நாட்டு நலப்பணித்திட்டம், குறிப்பாக பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மேற்கொள்ளத் தயங்கியதில்லை. எனவே வாசிக்கும் கலையை மேம்படுத்த அது தொடர்பான பல்வேறு பணிகளை ஏற்கெனவே செய்து வருகிறது, மேலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறது. திட்ட அலுவலர்களும், மாணவத் தொண்டர்களும் நிச்சயம் நீங்கள் பட்டியலிட்ட பணிகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாகத் தாங்கள் மேற்கொண்டுள்ள செயல்கள் குறித்து...

ஏராளமாகச் சொல்லலாம். மாநில அளவிலும் பல்கலைக்கழக அளவிலும் இது தொடர்பான பல்வேறு செயல்பாடுகள் தொடங்கி விட்டன. முதற்கட்டமாக அண்மையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா முழுக்க முழுக்க தமிழில் நடந்தேறியது. அன்றாட அலுவல் மற்றும் நிகழ்வுகளிலும் தமிழ் முழுமையாகப் பின்பற்றப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செம்மொழி ஒரு தனிப் பாடமாக கொண்டு வரப்பட உள்ளது. தமிழக அரசும் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இது ஒரு ஆரம்பம்தான், இது மேலும் தொடரும்.

நிறைவாக . . . புத்தகம் பேசுது இதழின் மூலம் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி . . .

புத்தகம் - அது ஒரு தேன்கூடு. ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தம் அதில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் பக்கங்கள்வெறும் காகிதங்கள் அல்ல, புதியதொரு உலகுக்குப் படிப்போரை அழைத்துச் செல்லும் அதிசயச் சிறகுகள் அவை.

வாசிப்பு என்பது ஓர் அற்புதக் கலை. இசைக்கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பு அல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்பதுதான். வாசிப்பது, மனதை ஒருமுகப்படுத்தி, நினைவுத் திறனை அதிகரிக்கும், கற்பனையையும் அறிவையும் வளர்க்கும், எரிந்து கொண்டிருக்கும் தீபம்தான் இன்னொரு தீபத்தை ஏற்ற முடியும். அதுபோல வாசிப்பு என்பது விடுகதையாக இல்லாமல் தொடர்கதையாக இருக்க வேண்டும்.

ஏராளமான புத்தகங்கள் இளைஞர்களின் வாசிப்பிற்காகக் காத்துக்கிடக்கின்றன. காற்றைச் சுவாசித்தால் உயிர் வாழலாம். வாசிப்பைச் சுவாசித்தால் மனிதனாக வாழலாம். வாசித்து வளம் பெற வாழ்த்துக்கள்.

Pin It