தேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. தோல்வி அடைந்தது என்றால், சோதிடம் படு தோல்வி அடைந்துவிட்டது! வாக்குப் பதிவு முடிந்த பிறகு, நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தி.மு.க. அணியின் வெற்றியை உறுதிப்படுத்தின. ஆனால், ‘ஜெயா’ தொலைக்காட்சியில் ‘நட்சத்திர பலன்’ கூறும் சோதிடர்கள், கருத்துக் கணிப்பைவிட, சாதக பலன் தான் உண்மையானது என்றும், அம்மாவின் சாதகப்படி, அவர் ஆட்சியில் அமர்வதைத் தடுக்க முடியாது என்றும் கூறினார்கள். இதை ‘ஜெயா’ தொலைக்காட்சி, தனது செய்தியில் ஒளிபரப்பியது.

இது தவிர, ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்து வந்த ‘தினத்தந்தி’ நாளேடு, ஒரு பக்கம் முழுதும், ‘அம்மா’தான் ஆட்சியமைப்பார் என்று சோதிடப் பலன்களை வெளியிட்டது.

காழியூர் நாராயணன் என்ற பண்டிதர் ‘பிருகுத் ஜாதக’ முறைப்படி ‘துல்லியமாக’ கணித்திருப்பதாக சொன்னார். சுக்கிர பலத்துடன் ஜெயலலிதாவின் ஜாதகம் இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்கு எந்த அறிகுறியும் இல்லை. சூரியனின் உஷ்ணம் அழிக்கப்பட்டுவிடும். ஜெயலலிதா அரசு முழு ஆதரவு பெற்று தனிப்பட்ட ஆட்சி அமைக்கும்’ என்று எழுதியிருந்தார் அவர்.

சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா என்பவர், ‘பெண் கிரகங்கள் வலுப்பெற்றுள்ளன. மக நட்சத்திரத்துக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். ஜெயலலிதா வெற்றிகளை குவித்து முதல்வர் பதவியில் நீடிப்பார்’ என்றார். ஆர்.பி.எஸ். மணி என்பவர், ‘கருணாநிதிக்கு கூட்டணி பலம் நன்றாக உள்ளது. ஆனால் கிரகப் பலனை மிஞ்சி கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றார்.

ஏ.பி.ராஜன் என்பவர், ‘கருணாநிதிக்கு ராசி ஸ்தானத்தில் உள்ள கண்டக வியாழன் உள்பட 4 வியாழன்கள் அவருக்கு தோல்வியைக் கொடுக்கும். ஜெயலலிதா ஜெயித்தே தீரவேண்டும்’ என்றார்.

இன்டின் ஹீரோ என்பவர், ‘நடப்பு திசையான ராகு ஜெயலலிதாவுக்கு ராஜா ஆகிறார். அவருக்கு இனி தோல்வி வராது. எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி. அ.தி.மு.க. கூட்டணி 170 தொகுதிகளில் வெற்றி பெறும்’ என்றார். அறிவியல் (!) முறை சோதிடர் ரவீந்திரநாத் தொகுதி வாரியாக தேர்தல் முடிவையே வெளியிட்டு இருந்தார். ‘அ.தி.மு.க.வுக்கு 112 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். தி.மு.க.வுக்கு வெறும் 50 தொகுதிகள்தான் கிடைக்கும்’ என்றார் அவர்.

சோமசேகரன் என்ற சோதிடர் வார்த்தை விளையாட்டுகளில் விளையாடியிருந்தார். ‘சுக்கிரன் ராசியில் லக்னத்திற்கு அயசையன வீட்டிலும், நவாம்ஸையல் வர்கோத்தமம் பெற்று இருப்பதால் ஜெயலலிதா ஆட்சி அமைப்பார்’ என்று எழுதியிருந்தார் அவர்.

தேர்தல் கணிப்பாளர் ராமசுவாமி, ‘அ.தி.மு.க. கூட்டணி 201 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்று ஆருடம் சொல்லியிருந்தார். அத்தனையும் பொய்த்துவிட்டது; சோதிடத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது!