அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி மய்யங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை அமுல்படுத்த, மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் முன் வந்துள்ளதை, கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்கள், வரவேற்றுப் பாராட்டியிருக்கிறார்கள்.

ஆனால், பார்ப்பன சக்திகள் வழக்கம் போல், அரசை மிரட்டிப் பார்க்கின்றன. டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பார்ப்பன மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள் ‘தெருக் கூட்டும்’ போராட்டத்தை நடத்தினார்களாம். காலம்காலமாக ‘தெருக்கூட்டும்’ சமூகத்தின் வலி இவர்களுக்குப் புரியாது. எனவே தான், இது இவர்கள் பார்வையில், இழி தொழிலாகத் தெரிகிறது.

“தெருக்கூட்டும்” சமுதாயத்தைச் சார்ந்தவன் அய்.அய்.டி.க்கு வரக் கூடாதாம். அப்படி வந்து விட்டால், இவர்கள் தெருக்கூட்டப் போய் விடுவார்களாம். ‘மனு தர்மத்தை’ மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்பது தானே, இவர்கள் நோக்கம். அய்.அய்.டி.யில் ஒரு மாணவன் படித்து முடிப்பதற்கு, அரசு, கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுகிறது.

மக்கள் வரிப் பணத்தில் படித்துவிட்டு, பட்டத்தை வாங்கிக் கொண்டு, வெளிநாடுகளில், கொழுத்த சம்பளத்தில் வேலை செய்வதற்காக, இவர்கள் விமானம் ஏறி விடுகிறார்கள். அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், பிரான்சிலும், செர்மனியிலும் குடியேறி, அந்த நாட்டின் குடிமகனாகப் பதிவு செய்து கொண்டு விடுகிறார்கள். இந்தக் கூட்டம் தான் - இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு தரக் கூடாது என்று காலம் காலமாக மிரட்டி வருகிறது.

வழக்கம் போல் - பார்ப்பன ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு மீண்டும் மண்டல் எதிர்ப்பு அலை உருவாகி வருவதாக செய்தி வெளியிட்டு, உசுப்பி விடுகிறது. சமூகநீதிச் சிந்தனைகளோ, அதற்கான இயக்கங்களோ வட மாநிலங்களில் வலிமையாக நடத்தப்படாத தால், ஒடுக்கப்பட்ட மாணவர்களை, எளிதாக இந்தப் பார்ப்பன சக்திகள் ஏமாற்றி, தங்கள் வஞ்சக வலையில் சிக்க வைத்து விடு கின்றனர். இதுதான் மண்டல் பரிந்துரை அமுலாக்கப்பட்டபோது நடந்தது.

அதே துயர நிலை மீண்டும் தொடரக் கூடாது. எனவே, இடஒதுக்கீட்டின் நியாயங்களை வேகம் வேகமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான பரப்புரை இயக்கம் தீவிரமாக முடுக்கி விடப்பட்டு, பார்ப்பன - சுரண்டல் சக்திகளை தனிமைப்படுத்திட வேண்டும். பார்ப்பன ஊடகங்களின் முகத்திரையை மக்கள் மன்றத்தில் கிழித்துக் காட்ட வேண்டும்.

பெரியார் திராவிடர் கழக செயல் வீரர்கள் உடனடியாக களமிறங்கும் நேரம் வந்து விட்டது. கீழ்நிலைப் பதவிகளில் இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் மட்டும் போதாது. உயர் தொழில் கல்வியிலும், உயர் அதிகார மய்யங்களிலும், நீதித் துறைகளிலும், சமூகநீதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அது தான் ஜனநாயகம் என்பதற்கான உண்மையான பொருள். ஒரு சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுவதும், போலித் ‘தகுதி திறமை’ கூக்குரல்களும், ‘பார்ப்பன நாயக’த்தின் வெளிப்பாடுகளே தவிர, ‘ஜனநாயகத்தின்’ முழக்கமல்ல.

உருட்டல் மிரட்டல்களை உறுதியாக சந்திக்க நாம் தயாராவோம். தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு ஆதரவாக நாம் எழுப்பும் உரிமைக் குரல் டில்லி வரை கேட்க வேண்டும். பார்ப்பன சக்திகளை நடுநடுங்கச் செய்ய வேண்டும். கழகத் தோழர்களே, சமூகநீதி ஆதரவாளர்களே , தயாராவீர்!

கலைஞர் தலைமையில் மீண்டும் பார்ப்பனரல்லாதார் ஆட்சி!

தமிழினத்தின் சமூக-அரசியல் வாழ்க்கையோடு 70 ஆண்டு காலம் இணைத்துக் கொண்டு தமிழினத்தின் மூத்தத் தலைவராக தொண்டுப் பழமாக விளங்கும், கலைஞர் அய்ந்தாவது முறையாக, தமிழகத்தின் முதல்வர் பதவியை ஏற்று சாதனைப் படைத்திருக்கிறார். இனவுணர்வுள்ள தமிழர்களின் உள்ளம் பூரிப்பால் நிரம்பி வழிகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு, உரிய பங்களிப்பை வழங்கியிருக்கும் 31 பேர் கொண்ட பார்ப்பனரல்லாத அமைச்சரவை ‘உளமார’ மக்களுக்கு சேவை செய்ய உறுதி எடுத்து (கடவுளை மறுத்து) பதவி ஏற்றுள்ளது.

பதவி ஏற்பு விழாவிலேயே மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய உறுதி மொழிகளுக்கு செயல் வடிவம் தந்து, கலைஞர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழினத்தை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக - வஞ்சிக்கப்படும் தொழிலாகிவிட்ட விவசாயிகளுக்கு, ரூ.6866 கோடி ரூபாய்க்கு விவசாயக் கடன்களை ரத்து செய்துள்ளது, மகத்தான சாதனையாகும். மீண்டும் ‘மண்டல் எதிர்ப்பு’ சக்திகள் கலவரம், வெறியாட்டங்களைத் துவக்கியுள்ள காலகட்டத்தில், கலைஞர் ஆட்சிக் கட்டிலில் வந்து அமர்ந்திருக்கிறார். சமூகநீதியில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக, கலைஞரின் கூட்டணி கட்சியினர் திகழ்கிறார்கள். இது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இன, மொழி உரிமைக்குக் குரல் கொடுப்பதையே ‘தேச விரோதம்’ என்று அடக்குமுறைச் சட்டங்களை ஏவிவிட்ட கடந்த கால பார்ப்பன ஆட்சியை மக்கள் அதிகாரத்திலிருந்து அகற்றியிருப்பதன் மூலம் மக்கள் தமிழின உணர்வை, வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.

கடந்தகால பார்ப்பன ஆட்சியில் முடக்கப்பட்ட, மக்கள் நலத் திட்டங்களுக்கு மீண்டும் புத்துணர்வு தர வேண்டிய கடமைகள் ஆட்சி முன் நிற்கின்றன.

இன, மொழி, பண்பாட்டுத் தளங்களில் கலைஞரின் ஆட்சி, ஆக்க பூர்வமான செயல்திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தும் என்பது தமிழின உணர்வாளர்களின் உறுதியான நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் ஆணையை பிறப்பித்து - “பெரியாரின் நெஞ்சைத் தைத்த முள்ளை” கலைஞர் நிச்சயம் அகற்றுவார் என்று நம்புகிறோம்.

அந்த ஆணை, சாதி ஒழிப்பு சரித்திரத்தில் என்றென்றும் நின்று நிலைத்திடும். மறுக்கப்படும் தலித் மக்களின் உரிமைகளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள்; மாநிலப் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில உரிமைக்குக் கொண்டு வருதல்; தனியார் துறைகளிலே இட ஒதுக்கீடு பெறுதல்; தமிழை அறிவியல் மொழியாக்கவும், பயிற்று மொழியாக்குவதற்குமான முனைப்பான திட்டங்கள்; ஈழத் தமிழர் உரிமைக்குக் குரல்; நதி நீர் உரிமைகளுக்கான அழுத்த மான போராட்டம்; நிலமற்றவர்களுக்கு நிலம், பெண் ணுரிமைக்கான திட்டங்கள்;

- என்று கலைஞர், ஆட்சியின் சாதனைகள் விரிவடைந்தால், மீண்டும் தமிழ்நாட்டில், பொற்கால ஆட்சி மிளிரும். அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட வர்கள் பார்ப்பன ஊடகங்களின் துணையோடு, ஆட்சியின் செயல் பாடுகளை முடக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டவே செய்வார்கள். அவைகளை மக்கள் ஆதரவுடன் உறுதியாக முறியடிக்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.

அதிகாரம் இருக்கும் இடத்தை நோக்கி - அவ்வப்போது தங்களது நிறத்தை மாற்றிக் கொள்ளும் ‘முகமலர்ச்சி பேசும்’ குழு ஒன்று, சூழ்ந்து நின்று, ஆட்சி அதிகாரத்தை தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதங்களை, தமிழக அரசியல், தொடர்ந்து சந்தித்தே வருகிறது. ‘முகமலர்ச்சி பேசும்’ அத்தகைய பார்ப்பனிய சந்தர்ப்பவாத குழுக்களிடம் எச்சரிக்கையாகவே கலைஞர் இருப்பார் என்று நம்புகிறோம்.

விளம்பரம் - ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி நின்று, பெரியாரியலை மக்களிடம் கொண்டு செல்வதில், உறுதியாக, கடமையாற்றி வரும் பெரியார் திராவிடர் கழகம் ஆட்சியின் ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுக்கு உறுதியான ஆதரவை மக்கள் மன்றத்தில் உருவாக்கும். மாறுபாடுகள் வரும்போது, உரிமையோடு சுட்டிக்காட்டுகின்ற கடமையையும் செய்யும். பார்ப்பனரல்லாத கலைஞர் ஆட்சி சாதனைகள் குவித்து, வெற்றி நடைபோட பெரியார் திராவிடர் கழகம் உளமார விழைகிறது!