கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சாமியர்கள் மற்றும் ஆசிரமங்களின் உண்மையான கோர முகங்கள் வெளிப்படுகின்ற காலம் என்று இன்றைய காலகட்டத்தைக் கூறலாம்.

பிரேமானந்தா, சங்கராச்சாரி, நித்தியானந்தா முதலான சாமியார்கள் பலரின் ‘ஆன்மீகத் தேடலை’ உலகம் அறிந்துகொண்டது. கொலை வழக்குகளிலும், பாலில் வல்லுறவு வழக்குகளிலும் சாமியார்கள் சிக்கிக் கைது செய்யப்பட்டனர்.

அந்தப் புழுதிகள் அடங்குவதற்கு முன்னரே, புதுவையில் உள்ள அரவிந்தர் மடத்திலிருந்து புதிய புழுதி இப்போது புறப்பட்டுள்ளது. அம் மடத்தில் தங்கியுள்ள ஐந்து பெண்கள் அங்குள்ள ஆண்கள் சிலரால் தங்களுக்குப் பாலியல் கொடுமைகள் இழைக்கப்படுவதாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர். ஒரு நடு வயதுப்பெண், தன் துயரத்தை அடக்க முடியாமல், அழுதுகொண்டே தொலைக்காட்சியில் பேசினார். அவர்களின் வழக்கறிஞர் வின்சென்ட் என்பவரும் பேட்டி அளித்தார்.

aravindar_ashram_400அங்குள்ள ‘ஆண்கள் சிலர்’ என்றால், யாரோ சிலர் இல்லை. அவர்களும் அரவிந்தர் மற்றும் அன்னையின் ஆன்மீகக் கருத்துகளை ஏற்றுக்கொண்டு ஆன்மீகத் தேடலோடு அங்கேயே தங்கியிருக்கும் அரவிந்த பக்தர்கள். அவர்கள் எத்தகைய செயல்களில் ஈடுபட்டனர் என்று அந்தப் பெண் கூறுவதை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். “நான் தங்கியிருக்கும் அறைக்குள் வந்து சிறுநீர் கழிக்கின்றனர். ஆபாசமான, மிக அருவருப்பான படங்களை எங்களிடம் கொண்டுவந்து கொடுக்கின்றனர். வாங்க மறுப்பதால், இரவில் எங்கள் அறைக்குள் அந்தப் படங்களைக் கொண்டு வந்து போட்டுவிடுகின்றனர்”, என்கிறார் அந்தப் பெண்மணி. அது மட்டுமல்லாமல், தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் போகும்போது கூட, மோசமான பாலியல் தொல்லைகளைத் தருகின்றனர் என்று கூறிக் கண்ணீர் வடிக்கிறார்.

இப்படியான அருவருக்கத்தக்க உண்மைகளோடு இப்போது ஐந்து பெண்கள் வெளிவந்துள்ளனர். இன்னும் பலர் அடுத்தடுத்து வெளிவரலாம்.

இப்பெண்கள் புதுவை அரசிடமும், தேசிய மகளிர் ஆணையத்திடமும் தங்களின் அவலநிலையை மனுக்களாகவும் எழுதிக் கொடுத்துள்ளனர். சட்டப்படியான நடவடிக்கைகள் எந்த அளவு உறுதியாக இருக்கும் என்று கூற முடியவில்லை. இதைவிடப் பன்மடங்கு கொடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சங்கராச்சாரி, இப்போது பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சாட்சிகள் தடம் பிறழ்ந்து கொண்டுள்ளனர். நித்தியானந்தாவும் அக்னி வேள்வியும், ஆனந்த நடனமுமாக மீண்டும் தன் ‘ஆன்மீகப் பணி’களைத் தொடக்கி விட்டார்.

சட்டத்தை விடுங்கள், சமூகத்தின் போக்கும், மக்களின் அறியாமையும் சற்றும் மாறவில்லையே என்பதுதான் நம் ஆதங்கம். எழுத்தாளர் அணுராதா ரமணன் போன்ற அவாள் சிலரே, தங்களிடம் சங்கராச்சாரி எப்படி நடந்து கொண்டார் என்பதை வெளிப்படையாகப் பத்திரிகைகளில் எழுதிய பிறகும், பெண்கள் பலர் சங்கர மடத்திற்குச் செல்லத்தானே செய்கின்றனர். பரோலில் வரும் பிரேமானந்தாவிடம் ஆசி வாங்க ஆயிரம்பேர் காத்திருக்கின்றனரே!

இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்? இந்து மதம் என்னும் பெயரில் பார்ப்பனீயம் பரப்பி வரும் ஆன்மீக மாயை அன்றி வேறு என்ன? அந்த மாயையைப் பரப்பியதில் அரவிந்தருக்கும் பெரும்பங்கு உண்டு. அரவிந்தர் மடம் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ள இத்தருண்த்தில், அம் மடத்தைத் தோற்றுவித்த அரவிந்தர் குறித்தும் அறிந்து கொள்வது நம் தேவையாக உள்ளது.

வரலாற்றாசிரியர் ஆர்.ஆர். திவாகர் எழுதியுள்ள ‘மகாயோகி’ (Mahayogi) என்னும் ஆங்கில நூலும், பிரேம் நாத் பசாஸ் எழுதியுள்ள நூலின் தமிழாக்கமான ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ யும் அரவிந்தர் பற்றிய ஏராளமான செய்திகளை நமக்குத் தருகின்றன.

அரசு மருத்துவரும், சிறந்த பகுத்தறிவாளருமான கிரு­ணதாஸ் கோ´ன் மகனாக அரவிந்தர் (1872 - 1950) கல்கத்தாவில் பிறந்தார். ஆறாவது வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அவர் படித்தது முழுவதும் ஐரோப்பாவில்தான். மேலை நாட்டுக் கல்வி, மேலை நாட்டுப் பண்பாடு என்னும் சூழலில்தான் அவர் வளர்ந்தார். லண்டனில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில், குதிரையேற்றப் பயிற்சியில் தோற்றதால், அப்பட்டத்தைப் பெற முடியவில்லை. ஆங்கிலேயர்களின் அந்தத் தேர்வு முறையின் மீது அவர் கடுங்கோபம் கொண்டார்.

21 ஆம் வயதில்தான் இந்தியா திரும்பினார். பரோடா சமஸ்தானத்திலும், அங்கிருந்த மாநிலக் கல்லூரியிலும் பணியாற்றினார். 1901 ஆம் ஆண்டு, மிருணாளினி என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

1905 முதல் 1908 வரை தீவிர அரசியலில் ஈடுபட்டார். அகிம்சை அரசியலில் நம்பிக்கையற்றவராக இருந்த அவர், பவானி கோயில் திட்டம் என்னும் ஆயுத அரசியலை முன்னெடுத்தார்.

திலகரின் அரசியல், பிள்ளையார் அரசியல். அரவிந்தரின் அரசியல் பவானி அரசியல்.

1908 ஆம் ஆண்டு, அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, ஓர் ஆண்டு சிறையில் இருந்தார். மேலை நாட்டில் வாழ்ந்து பழகிய அவரை, இந்தியச் சிறை வாட்டியது. அவருடைய குடும்ப வாழ்வும் பல்வேறு பிணக்குகளுக்கு உள்ளாகியது.

சிறையில் இருக்கும்போதே, அவருடைய மனம் மாறத் தொடங்கியது. கீதை, உபநிடத நூல்கள், ஆகியனவற்றைச் சிறையில் படித்துவரும் தான், ஆன்மீகப் பயணத்தைத் தொடங்க விரும்புவதாகச் சிறையிலிருந்த போதே அறிவித்தார். இந்த வழக்கில் தான் விடுவிக்கப்பட்டால், அரசியலை முழுமையாகக் கைகழுவிவிட்டு ஆன்மீகத் திற்குச் சென்றுவிடுவேன் என்று அரசுக்குத் தெரிவித்தார்.

அந்த வழக்கில், அவருடன் குற்றம்சாட்டப்பெற்ற குதிராம் போஸுக்குத் தூக்குத் தண்டனையும், அரவிந்தருக்கு விடுதலையும் கிடைத்தது. அரவிந்தர் கல்கத்தாவை விட்டு வெளியேறி, சந்திரநாகூர் (அதுவும் பிரெஞ்சுக் காலனி) வழியாகப் புதுவை வந்து சேர்ந்தார்.

14 ஆம் வயதிலேயே தனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் வந்துவிட்டதால், இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை என்றும், அதனால்தான் உன்னை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்றும், தன்னை மறந்துவிடுமாறும் மனைவி மிருணாளினிக்குக் கடிதம் எழுதினார். “14 வயதிலேயே ஞானம் பெற்ற நீங்கள், எதற்காக 29 வயதில், 15 வயதுப் பெண்ணான என்னைத் திருமணம் செய்து கொண்டீர்கள்?” என்று மிருணாளினி கேட்ட கேள்விக்கு அரவிந்தரிடம் இறுதிவரை விடையில்லை.

அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்களைத் திவாகர் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.

1917 ஆம் ஆண்டு, காந்தியார், சி.ஆர்.தாஸ், ரவீந்தரநாத் தாகூர் மூவரும், மீண்டும் அரசியலுக்கு வருமாறு அரவிந்தரை அழைத்தபோது, தான் உலக முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசியலுக்குத் திரும்ப இயலாது என்றும் அவர் விடையளித்தார்.

1914 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்த பால் ரிச்சர்ட் என்னும் அம்மையார் அவரைச் சந்தித்தார். தாய்நாடு திரும்பிய அவர், 1920களில் மீண்டும் புதுவைக்கு வந்து, அரவிந்தரின் சிஷ்யையாகத் தன்னை அர்ப்ப ணித்துக் கொண்டார்.

1926 இல் அரவிந்தர் மடம் நிறுவப்பட்டது தொடங்கி ‘அன்னை’ என்று அழைக்கப்படும் பால் ரிச்சர்ட்தான் ஆசிரமத்தைப் பார்த்துக் கொண்டார். தன் வாழ்நாளின் கடைசி 25 ஆண்டுகள், அரவிந்தர் பக்தர்களைக் கூடப் பார்க்கவில்லை. தனிமையில் வாழ்ந்து மறைந்தார்.

“திலகர், அரவிந்தர், லஜபதிராய் போன்றவர்கள், இந்து மத எழுச்சியின் ஒரு பகுதியாகவே அரசியலை ஆக்க முனைந்தனர்” என்கிறார் வரலாற்றறிஞர் ஆர்.சி.மஜும்தார்.

அது உண்மைதான் என்பதை, அரவிந்தரின் எழுத்துகள் நமக்கு உறுதி செய்கின்றன. ‘பகுத்தறிவும் அதற்கு அப்பாலும்’ (Reason and beyond reason) என்னும் தன் நூலில், “பகுத்தறிவின் ஒரே எதிரி, மத நம்பிக்கை. நம்பிக்கையின் முன்பு பகுத்தறிவு கைகட்டி நிற்க வேண்டியுள்ளது. பகுத்தறி வால் ஓர் எல்லைக்கு மேல் செல்ல முடியாது” என்று எழுதி மகிழ்கிறார் அரவிந்தர். பகுத்தறி வாளரின் மகனாகப் பிறந்து, மதவாதியாக மாறிவிட்ட அவர் கதை இதுதான்!

அவர் மறைவுக்குப் பின், 1968 இல், அந்த அம்மையாரால் ‘ஆரோவில்’ என்று ஒரு நகரம் புதுவைக்கருகில் தொடங்கப்பட்டது. பன்னாட்டினரும் சேர்ந்து வாழும், புதுவை அரசின் சட்டதிட்டங்களுக்குக் கூட உட்படாத அந்நகரம் பற்றி ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. இப்போது அரவிந்தர் ஆசிரமத்தின் பாலியல் கொடுமைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இனியேனும், சாமியார்களையும், ஆசிரமங்களையும் தொடர்ந்து கண்காணித்து வரும் வகையில், காவல்துறை ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தினால் நாட்டுக்கு நல்லது.