சோஷலிசப் புரட்சி
புதிய ஜனநாயகப் புரட்சி
தேசிய இனப்புரட்சி

- என்றெல்லாம் புரட்சிகளைக் கொண்டுவர பல்வேறு இயக்கங்கள், எத்தனையோ ஆண்டுகாலமாக நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் - எல்லா புரட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மகத்தான புரட்சி ஒன்று நாட்டில் வெடித்துக் கிளம்பி விட்டது. அது தான் ‘மைதானப் புரட்சி!’

கடந்த ஒரு வார காலமாக - இந்தப் ‘புரட்சி’க்குக் காத்திருந்த ‘புரட்சிகர சக்திகள்’ இப்போது அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றன. புரட்சி தோற்றுப் போய் விட்டதாம்.

ஆமாம்! உலக கிரிக்கெட் போட்டியில் ‘இந்தியப் புரட்சி’ தோற்றுப் போய்விட்டதாம்!

இந்தியா மட்டும் வெற்றி பெற்றிருக்குமானால் நாட்டில் வறுமை தலைதெறிக்க ஓடியிருக்கும்! சாதிகள் - சமாதிக்குப் போயிருக்கும்! கல்வி அனைவருக்கும் கிடைத்திருக்கும்! எல்லோருமே வீடு, நிலம் எல்லாம் குவிந்திருக்கும்!

ஆனாலும், புரட்சி தோற்று விட்டதே என்ன செய்வது! நாடு முழுதும் ‘மைதானப் புரட்சி’யை எதிர்பார்த்தவர்கள் இப்போது கொந்தளித்து எழுந்து விட்டார்கள்.

‘விளையாட்டு புரட்சிக்காரர்கள்’ படங்கள் எரிக்கப்படுகின்றன. கழுதை மீது படத்தை வைத்து ஊர்வலம் போகிறார்கள்; செருப்பால் அடிக்கிறார்கள்.

அடேங்கப்பா, எவ்வளவு உணர்ச்சி பீறிட்டு எழுகிறது, பார்த்தீர்களா?

இந்த ‘மைதானப் புரட்சி’ நடக்கும் காலங்களில் எல்லாம், மக்களின் ஆர்வத் துடிப்பை எழுதுவதற்கு வார்த்தைகளே கிடையாது. எப்போதும் எவரும் எங்கேயும் அதைப் பற்றித்தான் பேச்சு.

புரட்சி வெற்றி பெற எத்தனையோ யாகங்கள்; பூசைகள்; எல்லாம் நடத்திப் பார்த்தாயிற்று. ஆனாலும் புரட்சி வெற்றி பெறாமல் போய் விட்டது!

அதனால் என்ன? இனி, அடுத்து ஒரு உலகப் போட்டி வராமலா போய்விடும்? அப்போது புரட்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லாமலா போய்விடும்!

அது வரை

அறியாமையை - பசியை - பட்டினியை - நோயை - எல்லாம் பாதுகாத்து வைப்போம்!

அடுத்த புரட்சியில் வெற்றி பெற யாகங்களையும் பிரார்த்தனைகளையும் நடத்திக் கொண்டே இருப்போம்!

வாங்க; எல்லோரும் ‘ரன்’ எடுத்து வாங்க! தொலைக்காட்சி பார்ப்போம் வாங்க!

பார்ப்பனர்களும் - கிரிக்கெட்டும்

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் ஏன்? காரணம் - இது பார்ப்பனர்கள் பங்கேற்கும் விளையாட்டு என்பதால்தான்; ஆக்கியிலோ, கால்பந்திலோ, சடுகுடு போட்டியிலோ, தடை தாண்டும் ஓட்டத்திலோ, அகல உயரத் தாண்டுதலிலோ, பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் மட்டும் பார்ப்பனர்கள் புகுந்ததற்கு காரணம் என்ன?

இது பற்றி 2003 ஆம் ஆண்டு ‘அவுட் லுக்’ ஏடு வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில கருத்துகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1960 முதல் 1990கள் வரை நடந்த போட்டிகளில் (டெஸ்ட் மேட்ச்) சராசரியாக 6 பார்ப்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சில நேரங்களில் இந்த எண்ணிக்கை 9 ஆகவும் இருந்திருக்கிறது. 11 பேர் கொண்ட அணியில் பார்ப்பனரல்லாதவாகளுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே தரப்பட்டதும் உண்டு.

பிரிட்டிஷ் பிரபுக்கள் குளிர் காய்வதற்காக நாள் முழுவதும் சூரிய ஒளியில் நிற்பதற்குக் கண்டுபிடித்த விளையாட்டு தான் கிரிக்கெட். எனவேதான் அய்ந்து நாள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பார்சிகளும், இதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பிரிட்டிஷாருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இப்படி ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதைத் தாமதமாக உணர்ந்த பார்ப்பனர்கள், அதைப் பிடித்துக் கொண்டு விட்டனர். ஆஹிஷ் நந்தி என்பவர், கிரிக்கெட்டையும், இந்து மதத்தையும் ஒப்பிட்டு, இது இந்திய விளையாட்டு என்று எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களை கிரிக்கெட் இழுத்ததற்கு மற்றொரு காரணம் - ஹாக்கி, கால்பந்து, வாலிபால், சடுகுடு போல அரைக்கால் சட்டைப் போட்டுக் கொண்டு விளையாட வேண்டிய அவசியமில்லை; முழுக்கால் சட்டைப் போட்டுக் கொண்டே கிரிக்கெட் விளையாடலாம்.

பந்தின் லாவகத்தைக் கணக்கிட்டு மட்டையை சுழற்ற வேண்டிய மூளைக்கான வேலைதான் தேவை. இது பார்ப்பனர்களுக்கு மிகவும் எளிது. அதோடு மற்ற விளையாட்டுகளைப் போல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தன்னை மய்யப்படுத்திக் கொள்ளமுடியும்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் என்பது 1970களின் இறுதி வரை ‘ஸ்பின் பவுல’ர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. இந்தப் பார்ப்பனக் கோட்டையைத் தகர்த்தவர் - கபில்தேவ் என்ற பார்ப்பனரல்லாதவர்தான். அவர்தான் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி - உலக தரத்தில், ஒரு விளையாட்டாளரானார். கபிலின் வருகையும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும்தான் இந்திய கிரிக்கெட்டின் பார்ப்பன முகத்தை மாற்றியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கின.

பிறகு ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அகர்கர் போன்ற பார்ப்பனர்கள் கூட வேகப்பந்து வீச்சில் திறமை காட்டத் தொடங்கியதற்குக் காரணம், கபில்தேவ் வருகைதான்.

இந்திய அணியில் தலித்துகளுக்கு எப்போதுமே இடம் கிடையாது. வினேன் காம்ப்ளி என்ற மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் மட்டும் இருக்கிறார். இது தவிர, பல்வங்க் பலூ என்ற தலித் வீரர் மட்டும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுத்தனர். அவரையும்கூட, களத்தில் இறக்க விடாமல், அரங்கத்தில் உட்கார வைத்து திருப்பி அனுப்பி விட்டார்கள்.

- இவ்வாறு ‘அவுட் லுக்’ எழுதியது.

சகுனம் பார்த்து...

உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றதற்கு, நாடு முழுதும் ரசிகர்கள் கொதித்துப் போனார்களாம்; கிரிக்கெட் எப்படி பார்ப்பன விளையாட்டாக மாறியது?

இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் விளையாடச் செல்வதற்கு முன் சகுனம் பார்ப்பதும், பிரார்த்தனை யாகம் செய்வதும் வழக்கமாம்!

டெண்டுல்கர் மைதானத்துக்கு செல்வதற்கு முன் தனது இடது கால் பேட்டைத்தான் முதலில் அணிவாராம்!

அமர்நாத் - பாக்கெட்டில் சிவப்பு நிற கைக்குட்டையை எப்போதும் வைத்திருப்பார். இதைத் தெரிந்து கொண்டு ஷேவாக் என்ற விளையாட்டுக்காரர் தனது பேண்டின் இடது பாக்கெட்டில் சிவப்புக் கைக்குட்டையை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்.

ராகுல் டிராவிட் மைதானத்துக்கு செல்லும்போது வலது பேட்டையே முதலில் அணிவார். அதோடு வலது காலை முதலில் வைத்து தான் மைதானத்தில் இறங்குகிறாராம். இதேபோல் ஸ்ரீநாத்தும் மைதானத்தில் முதலில் வலது காலைத்தான் எடுத்து வைப்பாராம்!

சஞ்சய் பாஸ்கர் பாட்டிங் செய்யும் முன் சூரியனை வணங்குவாராம்!

யுவராஜ்சிங் பேட்டிங் செய்யும் முன் தனக்கு ராசியான சிவப்புக் கயிறை கையில் கட்டிக் கொள்வாராம்!

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் பந்து வீச வருவதற்கு முன், குனிந்து பிரார்த்தனை செய்வாராம்.

- இவ்வளவு மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியும், இறுதியில் கிடைப்பது தோல்வி தான்!