(திண்டுக்கல் மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவு உரையாடல் வடிவில் - வெளியிட்டுள்ள துண்டறிக்கை இது. மாணவர்களிடையே இது வழங்கப்பட்டு வருகிறது.)

இராமானுஜம் : +2 ரிசல்ட் பாத்தியா? அதுல ஸ்டேட் ஃபர்ஸ்ட் யார் வாங்கியிருக்கா’ன்னு பார்த்தியா? பரத்ராம்னு எங்கவா தான் வாங்கியிருக்கா! ஒரு பிராமணன்தான் வாங்கியிருக்கா!

கருப்பையா : பாத்தேன், பாத்தேன். அந்தப் பக்கி கொடுத்த பேட்டியப் பத்திதான் ஒங்கிட்ட பேசணும்னு நெனச்சேன்.

இராமானுஜம் : என்ன சொல்லியிருக்கு அந்தப் புள்ளாண்டான்?

கருப்பையா : விடிஞ்சதும் வெள்ளனா 5 மணிக்கே எந்திரிச்சு 8 மணி வரைக்கும் படிப்பானாம். அன்னன்னக்கி பாடத்த அன்னன்னக்கே படிச்சு முடிச்சுருவானாம். அவங்க வீட்லயும் அதுக்கான சூழ்நிலையை உருவாக்கிக் குடுத்தாங்களாம்.

இராமானுஜம் : சரியாத் தானே சொல்லியிருக்கான். அப்படிக் கஷ்டப்பட்டுப் படிச்ச பரத்ராம் மாதிரி பிராமணாள்க்குச் சரி சமமா ஒன் மாதிரி அரை வேக்காட்டயெல்லாம் ஐ.ஐ.டி.யில படிக்க வைக்கப் போறேன்னு இந்த அர்ஜூன்சிங் சொல்றாரே? இதென்ன நியாயம்?

கருப்பையா : அட பரதேசிப் பயலே நாட்டப் பத்தியும், நியாயத்தப் பத்தியும் நீயெல்லாம் பேசாதே! இத்தனை வருசமா ஒங்காளுக பாடுபட்டு இந்த நாட்ட அமெரிக்காவ மிஞ்சுன வல்லரசா மாத்திப் புட்டீங்க, நாங்க வந்து மாத்தீரப் போறமாக்கும். இன்னம் கொஞ்சநாள் விட்டா எத்தியோப்பி யாக்காரன் மாதிரி எலும்பும், தோலுமா எங்கள அலைய விட்டுறுவீங்களேடா? அதப் பத்தி ரொம்ப பேசணும். அப்பறம் பேசலாம். அந்தப்பய குடுத்த பேட்டியப் பத்தி மொதல்ல பேசணும்.

இராமானுஜம் : சரி, சரி சொல்லித் தொலை.

கருப்பையா : எங்கூர்ல விடிஞ்சா போதும் ஒரு கூட்டம் கரும்புக் காட்டுக்கும், வயலுக்கும் தண்ணி பாச்சப் போயிடும். பொம்பளயாளுகெல்லாம் களையெடுக்கவும், மாட்டுக்குப் புல்லுபாக்கவும் போயிடும். பள்ளி கொடத்துப் பிள்ளைகள்லாம் அரளி, கரட்டான், மல்லின்னு பூப்பொறுக்கப் போயிடும் / இல்லேன்னா காய் கனிய புடுங்கப் போயிரும்.

கீரை அறுக்கப் போயிடும். 6 மணிக்குள்ள டவுனுக்கு மார்கட்டுக்கு சரக்கு போயாகனும். 7 மணிக்குள்ள ஏலத்த முடிச்சு அடிச்சுப் புடிச்சுப் பஸ்ஸப் புடிச்சு வீட்டுக்குவந்து அப்புறம்தான்டா பல்லே வெளக்க முடியும். அப்புறம் எங்கிட்டு எங்க புள்ளைக படிக்கறது.

ஆனா நீங்க அப்புடியா 5 மணிக்கெல்லாம் நாங்க கறந்து குடுத்த பாலக் காய்ச்சி, ஹார்லிக்ச அப்டியே சாப்டுவேன்னுட்டு காய்ச்சி குடிச்சுப்புட்டு, நிம்மதியா படிக்க ஒக்காந்துருவீங்க. பாடத்துல சந்தேகம்னா ங்கொப்பன் வெளக்கம் குடுப்பான். இல்லேண்ணா ஹிண்டு பேப்பர் படிச்சுக்கிட்டு இருக்கிற ஒன் கொள்ளுப்பாட்டி கூட வெளக்கம் கொடுப்பா. ஒங்களுக்கு நல்லாப் படிக்கறதுக்கு ஏத்த சூழ்நிலை இருக்கு. எங்களுக்கு...? நாங்க என்ன வேணும்னா கூலிக்காரனா பொறந்தோம்? எங்களுக்கும் ஒரு சான்ஸ் குடுக்கலாம்ன்னு தான் இந்த இடஒதுக்கீடு இருக்கு. அது ஒனக்குப் பொறுக்கலயா?

இராமானுஜம் : எங்க பிராமணாள் கூடத்தான் தஞ்சாவூர் பக்கமெல்லாம் (பண்ணைகள்) வச்சிண்டிருக்கா...

கருப்பையா : வச்சிண்டுதான்டா இருக்கீங்க... அந்த நெலத்துல பாடுபட்டு, செத்து சுண்ணாம் பாகுறது நாங்க தானடா? நான் கேக்குறேன், நெல்லுல எத்தன ரகம் இருக்கு, எப்ப எதை நடணும், எப்ப நாத்து நடணும், என்ன நோய் வரும், அதுக்கு என்ன செய்யணும், எப்ப கருதருக்கணும் இதுல ஏதாவது ஒரு கேள்விக்கு நீ பதில் சொல்ல முடியுமா? முடியாது ஆனா நோகாம மனப்பாடம் பண்ணி வெவசாய டிபார்ட்மெண்டுக்கு டைரக்டரா ஆயிடுவிங்க!

நாட்டுக்குத் தேவையான எல்லாத்தையும் உற்பத்தி பண்றது நாங்க; நோகாம மேலே போயி நாட்டாம பண்றது மட்டும் நீங்களா? அதுக்குத் தாண்டா அர்ஜூன்சிங் வச்சாரு ஆப்பு!

இராமானுஜம் : நீயே சொல்லிட்ட, எங்களால வேலை செய்யத்தான் முடியும், படிக்க முடியாது, அதுக்கான சூழ்நில கிடையாதுன்னு. அதத்தானே நானும் சொல்றேன். நன்னா படிக்கறவாளுக்கு ஐ.ஐ.டி.யிலயும், ஐ.ஐ.எம்.லயும் எடம் குடுங்கோ, சாதி பாக்காதேள்னு...

கருப்பையா : ஏ... நிறுத்துப்பா... நாங்களா சாதி பாக்குறோம். நல்லா யோசிச்சுப்பார். நீங்கதானே, ஒன்ன மாதிரிப் பாப்பானுக தானே திட்டம் போட்டு சாதி உருவாக்கினீங்க. ஆயிரக்கணக்கான வருசமா நடந்ததென்ன? தோள் பலத்தோட நாட்ட ஆண்டுக்கிட்டிருந்த எங்க ராசாக்களயெல்லாம் உங்க தோல் பலத்துல அடிச்சு, சாய்ச்சு, மனு நீதின்னு ஒரு வெஷத்தை எங்க ராசாக்களுக்கு ஏத்தி, அந்த மனு தர்மப்படி நாட்ட மாத்திப்புட்டீங்க, இந்திரன் மாறுனாலும், இந்திராணி மாறமாட்டாங்குற மாதிரி எந்த அரசாங்கம் வந்தாலும், நீங்களும் ஒங்க மனுதர்மமும் தானடா இன்னமும் ஆள்றீங்க?

இராமானுஜம் : கருப்புச் சட்டைக்காரன் மாதிரிப் பேசக்கூடாது. ஐ.ஐ.டி.க்கும் மனு தர்மத்துக்கும் என்ன சம்பந்தம்? சும்மா சும்மா பிராமணர்களையும், சாஸ்திரங்களையும் திட்டுறதே வேலையாப் போச்சு.

கருப்பையா : அடப்பாவி, இந்த கோட்டா சிஸ்டமே ஒங்க மனுதர்மத்துல இருந்து தானடா தொடங்குது? ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே’, ‘சூத்திரன் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்’, ‘வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்’. இப்படியெல்லாம் ஒங்க மனுதர்மந் தானடா சொல்லியிருக்கு, இப்படிக் காலகாலமா எங்களப் படிக்கவிடாம, ஆடுமாடு மேய்க்க விட்டுட்டு, எங்களுக்குள்ளேயே பள்ளர், கள்ளர், பறையர், வன்னியர் சக்கிலியர், கவுண்டர் இப்படிப் பலப் பல சண்டைகளை உருவாக்கி அடிசுக்க விட்டுட்டு, நிம்மதியா பெரிய பெரிய அதிகாரமுள்ள பதவிகளையெல்லாம் ஒன்னப்போல பாப்பானும், உயர்சாதிக்காரனும் நிரந்தரமா அனுபவிக்க வச்சது தானடா இந்த மனுதர்மமும், சாஸ்திரமும்.

இராமானுஜம் : எப்பவோ நடந்தத இப்ப ஏன் பேசுற? இப்ப ஏன் சாதிரீதியா இடஒதுக்கீடு கேக்குறீங்க?

கருப்பையா : அந்த மனுதர்மம் சொன்னத தானடா இப்ப நீங்க சொல்றீங்க. சுதந்திரம் வாங்கி 60 வருசம் ஆகிப் போச்சு, இப்பத்தான் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் ஒரு பெரிய படிப்பு படிக்கப் போறான். அதப் பொறுக்காமத்தான் கலகம் பண்றீங்க, ஐ.ஐ.டி. போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள்ல நுழைய விடமாட்டிக்கிறீங்க.

இராமானுஜம் : அதுக்காக ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் சர்ட்டிபிகேட்ல சாதி என்னனு கேக்குறாங்களே? இது சாதிய, சாதிக்கலவரத்தை வளர்க்காதா?

கருப்பையா : தமிழ்நாடு பூராவும் பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்லதான் மொதல்ல சாதி கேக்குறாங்க. நீ சொல்றபடி பார்த்தா அங்கதான் சாதிக் கலவரம் நடந்திருக்கணும். இதுவரைக்கும் ரிஜிஸ்ட்டர்ல சாதியைப் பாத்து எந்தப் பள்ளிக்கூடத்துலயும், காலேஜ்லயும் சாதிக்கலவரம் வந்தது கெடையாது. ஆனா எல்லா திருவிழாவுலயும் சாதிக் கலவரம் வருது. எல்லாக் கோயில்களாலயும் சாதிக் கலவரம் வருது.

மொத்தல்ல கோயில்கள இழுத்து மூடிட்டு, திருவிழாக்கள தடை பண்ணிட்டு அப்பறம் எங்கிட்டவா, பதில் சொல்றேன். சுனாமியில பாதிக்கப்பட்டவங்களுக்கு நிவாரணம் தரணும்ணா மொதல்ல சுனாமியில யார்யார் பாதிக்கப்பட்டாங்க, யார் யார் வீடு எழந்தாங்க, யார் குடும்பத்த எழந்தாங்கன்னு பட்டியல் எடுக்கணும். அப்பத்தான் நிவாரணம் பண்ண முடியும். அப்படி பட்டியல் எடுக்கறது மாதிரிதான் ஸ்கூல்ல சாதி கேக்கறது. நாங்க சாதி கேக்கறது சாதிய ஒழிக்கறதுக்காகத்தான். ஒங்களமாதிரி அதவச்சுக்கிட்டு மஞ்சக் குளிக்கறதுக்கில்ல.

இராமானுஜம் : ஆயிரந்தான் இருந்தாலும் தகுதி-திறமைக்கு மரியாதை தராம இடஒதுக்கீடு கொடுக்குறது நியாயமா?

கருப்பையா : என்னடா ஒங்க தகுதி? ஒங்களுக்கு ஏதுடா தெறமை? 2005-ல தமிழ்நாட்டுல மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் நடந்துச்சே அதுல மொத்த சீட் 1445. பொதுப் போட்டிக்கு 430 சீட். இந்த 430 சீட்ல பிற்படுத்தப்பட்டவர் 321 சீட், மிகவும் பிற்படுத்தப் பட்டவர் 47, தாழ்த்தப்பட்டவர் 14 சீட். உன்ன மாதிரி ஆளு வெறும் 38 சீட் தான் வந்திருக்கீங்க.

ஒங்காளுகளுக்கு உண்மையிலேயே திறமை இருந்திருந்தா இந்த பொதுப் போட்டியில இருக்குற, 430 சீட்டும் பாப்பானுகளுக்குத்தானே கெடைச்சிருக்கணும்? தமிழ்நாட்டுல பல வருசமா இடஒதுக்கீடு இருக்கு. அதனால எங்க திறமையைக் காட்ட முடிஞ்சது. அதுபோல இந்தியா பூராவும் சான்ஸ் கேக்குறோம். குடுத்துப் பாரு. அப்புறம் யார் திறமைசாலின்னு பார்ப்போம்.

அதெல்லாம் சரி இவ்வளவு தகுதி திறமை பேசுறியே, தனியார் மெடிக்கல் காலேஜ்ல 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரைக்கும் பணம் வாங்கிட்டு ஜஸ்ட் பாஸ் பண்ணவனுக்கெல்லாம் எம்.பி.பி.எஸ். சீட் தர்றானுங்களே அத எதித்து ஒரு பாப்பானும் பேசமாட்டிங்கிறீங்களே, ஏன்?

இராமானுஜம் : அதெல்லாம் விடு. நீ சொன்னபடி பாத்தா வெறும் 430 சீட் தானே பொதுப் போட்டிக்கு வருது. மீதம் 1000 சீட்டுக்கு மேல இடஒதுக்கீடுலதான போகுது? அப்போ எங்களுக்கும் இடஒதுக்கீடு கேட்டா தருவீங்களா?

கருப்பையா : சந்தோசமா கேளுடா என் செல்லம்! அதத்தானே நாங்களும் கேக்குறோம். எங்க பெரியாரும் கேட்டாரு. அவரவர் சாதி மக்கள் தொகைக்கு ஏத்தமாதிரி விகிதாச்சார இடஒதுக்கீடு வேணும்னு பெரியார் கேட்டார். அப்படி விகிதாச்சார இடஒதுக்கீடு வந்துட்டா வெறும் 10 சதம் மக்கள் தொகை உள்ள பார்ப்பானுக கல்வி வேலைவாய்ப்புல 80 சத எடங்கள கொள்ளையடிச்சு வாழ்ற நெலைமைக்கு முடிவு வந்திடும்.

இராமானுஜம் : தப்புத்தப்பா புள்ளிவிபரம் தராத! நாங்க எங்க, 80 சதம் வேலை வாய்ப்புல இருக்கோம்?

கருப்பையா : அதான் மண்டல் அறிக்கைல துறைவாரியா புட்டுப்புட்டு வச்சிட்டாரே. அதைப் படி மொதல்ல. அப்படியில்லேன்னா ஆத்தவிட்டு வெளியே வந்து சென்னை ஐ.ஐ.டி. வரைக்கும் போயிட்டுவா. அங்க இருக்குற, 400-புரொபசர்கள்ல வெறும் 57 பேர்தான் பிற்படுத்தப்பட்டவங்க. அதவிடக் கொடுமை என்னன்னா வெறும் 3 பேர்தான் தாழ்த்தப்பட்டவங்க. முஸ்லீம் ஒருத்தர்கூட இல்ல. மீதிப்பூரா பாப்பானும், உயர்சாதிக்காரனும்தான். ஒங்க ஆட்டத்துக்கும், அதிமிதிக்கும் ‘ஜனகணமன’ பாடத் தாண்டா இடஒதுக்கீடு.

இராமானுஜம் : இப்படி திறமையில்லாதவங்கள் லாம் முக்கிய பதவிகள்ல வந்தா நாட்டு முன்னேற்றம் பாதிக்காதா?

கருப்பையா : உன் திறமையோட யோக்கியதய ஏற்கனவே பாத்தோம். இருந்தாலும் இன்னமும் சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ இத்தன வருசமா நாட்ட முன்னேத்துன லட்சணம் நம்ம நாட்டோட வெளிநாட்டுக்கடன் பட்டியலப் பார்த்தாலே தெரியுது.

வெளி நாட்டுக்கடன் 5,11,861 கோடி ரூபா. கடன் தொல்ல தாங்காம விவசாயிக சிலபேரு மருந்தக் குடிச்சு சாகிறான். சில பேரு பெப்சி, கோக் குடிச்சு சாகிறான். ஆயிரக்கணக்கான வழக்குகள் கோர்ட்ல தூங்கிகிட்டு இருக்கு. காசு வாங்கிகிட்டு ஜனாதிபதி அப்துல் கலாமயே குற்றவாளிப் பட்டியல்ல சேக்குறான். பன்னாட்டுக் கம்பெனிக கொள்ளையடிக்கறதுக்காக இந்தியாவுல சட்டத்தையே வளைக்கிறான். பங்குமார்க்கட்ல ஒங்காளு ஹர்ஷத் மேத்தா 4000 கோடி கொள்ளையடிக்கிறான். இந்த மாதிரியெல்லாம் எங்களால முன்னேத்த முடியாதுதான்; ஒத்துக்கிறோம்.

முக்கியமான செய்தி என்னன்னா எங்ககிட்ட தகுதி திறமை பேசுறியே! உன் உண்மையான தகுதிய சைனாவுல இருக்க ‘ஷாங்காய் ஜியோ டாங்க்’ன்ற பல்கலைக் கழகம் அம்பலப்படுத்தியிருக்கு தெரியுமா? அந்த பல்கலைக்கழகத்துப் பேராசிரியரான ‘நியான் சாய் லீ’ உலகத்திலுள்ள 2000 பல்கலைக்கழகங்கள ஆராய்ச்சி பண்ணி முதல்தரமான 500 பல்கலைக் கழகங்களப் பட்டியல் போட்டிருக்கார். அதுல ஒங்க டெல்லி ஐ.ஐ.டி.யோட எடம் 460. கோரக்பூர் ஐ.ஐ.டி. 459-வது எடம். மீதமுள்ள 7 ஐ.ஐ.டிக்களப் பத்திப் பேச்சே இல்ல. எங்க போச்சு ஒன் தெறமெ?

இராமானுஜம் : உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள்ல இந்த இடஒதுக்கீடே கெடையாது. அதுனால தரமா இருக்கு. இந்தியாவுல தான் நீங்க இடஒதுக்கீடு கேட்டு உயிர வாங்குறேளே?

கருப்பையா : பூனை தான் தன் கண்ணை மூடிக் கிட்டு ஒலகமே இருட்டுண்ணு நெனச்சுக்கிச்சாம்! லிஸ்ட்ட சொல்றேன் கேட்டுக்க எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவ எடுத்துக் காட்டச் சொல்லுவியே, அதே அமெரிக்காவுல இப்படி எல்லா உலகப்புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களிலும் இடஒதுக்கீடு இருக்கு. 

இராமானுஜம் : இருக்கலாம். ஆனா, வேலைன்னு வரும்போது தகுதி திறமைதான் பார்ப்பேன்னு ஐகேடிளலள நாராயணமூர்த்தி சொல்லியிருக்காரே படிச்சியா?

கருப்பையா : கம்ப்யூட்டர் ஒலகத்துல இந்த நாராயணமூர்த்தி ஐயங்காரவிட பல மடங்கு பெரிய ஆள் பில்கேட்ஸ். அவரோட மைக்ரோசாப்ட் நிறுவனத்துலயே இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துகிறார். அதுவே அவரது வெற்றிக்குக் காரணம்னு சொல்றார். அது மட்டுமா? அமெரிக்காவுல இருக்க மட்டுமில்லாம இன்னும்பல பன்னாட்டு கம்பெனிகளும் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்துறாங்க. நீங்க மட்டும் ஏண்டா மல்லுக்கு நிக்கிறீங்க! எங்களையும் படிக்க விடுங்கடா!

இராமானுஜம் : அப்போ, நாங்க இனிமே தெருக் கூட்டித்தான் பொழைக்கணும் போலிருக்கு!

கருப்பையா : சமுதாயத்துல ஏற்றத்தாழ்வுகள ஒழிச்சு சமத்துவத்தக் கொண்டுவரத்தான் இந்த இடஒதுக்கீடு. இது நடைமுறைக்கு வந்தாத்தான் காலங்காலமா அடிமை வேலை செஞ்சுகிட்டு இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற முடியும்.

தமிழ்நாட்டுல 1921-ல யிருந்து நடைமுறையில இருக்கிறதாலதான் நாங்க கொஞ்சம் தலையெடுத்திருக்கோம். அகில இந்திய அளவுல உயர்கல்வியில இப்பத்தான் இடஒதுக்கீடு வரப்போகுது. அதப் பொறுக்க மாட்டாம நீங்க போராட்டம் பண்றீங்க. போராட்டத்துக்கு அடையாளமா ஒருநாள் தெருக்கூட்டுறீங்க.

ரிக்ஷா ஓட்டுறீங்க, ஷு பாலீஸ் போடுறீங்க, வாழைப்பழம் விக்குறீங்க. ஆனா ஆயிரக்கணக்கான வருசமா எங்களுக்கு அடையாளமே இதுதான். சக மனிதன நிம்மதியா வாழவிடாத எவனுமே தானும் நிம்மதியா வாழ முடியாது. எவன் பொழைப்பையும் நாங்க கெடுக்க மாட்டோம். ஆனா, எங்க பொழைப்புல மண்ணு விழுந்தா?

பெரியார் மாணவர் பேரவை, திண்டுக்கல் மாவட்டம்.