கிராமத்து வாழ்வியலை இடுப்பொடிய கதிர் அறுத்து, கட்டு சுமந்து, களம் சேர்த்து, அடித்து, தூத்தி பொலிவிட்டு, வயிற்றுப்பசியும், உழைத்த களைப்பும் தேங்கி இழுக்கும் உடம்பின் உணர்வோடு மலையாய்க் குவிந்து கிடக்கும் பொலி முன்பு மண்டையன் மரக்கால் கொண்டு அளந்துபோடும் கூலிக்காக சாக்குப்பையின் வாயை விரித்துப் பிடித்து நிற்கும் கதை கதையாய்ச் சொல்கிற பொன்னமாக்கா நிலையில் இருந்தே எழுதவேண்டும். எழுத்தாளர் பாரதி பாலன் அவர்கள் ‘காற்று வரும் பருவம்’ நாவலை பொன்னமாக்கா நிலையில் இருந்து மட்டுமல்ல, வீட்டுக்குத் துணி துவைக்கிற பிச்சை, முடி வெட்டுகிற சாமியப்பன், பிரசவம் பார்க்கும் குடியானவன், தண்ணிக் கட்டுக்காரன் சுப்பையா, தண்ணிமானியம் ராமு.பிள்ளை, ஊர்க்கோயில் பூசாரி அப்பு பண்டாரம், நெல் களத்தைச் சுத்தம் பண்ணியவன், கருக்கா நெல் எடுக்க வந்தவர்கள். எலி பிடிக்கிறவன், மாடாய் உழைத்துவிட்டுப் பொழுது சாய கூலிக்காக ஆண்டைகளின் வீட்டுவாசலில் தோள் துண்டைக் கக்கத்தில் வைத்து இருக்கும் மண்டையன், மம்பட்டியான் நிலையில் இருந்தும் எழுதி இருக்கிறார் என்றே தோன்றுகிறது, இந்த நாவலை.

forest_400பாரதி பாலன் எழுத்துக்களின் நுகர்வு எப்போதும், மக்களை நோக்கியே நகர்கிறது என்பதற்கு அவரது படைப்புகளின் பட்டியலில் இந்த நாவலும் இணைகிறது. ‘காற்று வரும் பருவம்’ இந்த நாவல் கல்கி இதழில் 23 வார தொடர் கதையாய் வந்தபோது படித்த மன உணர்வும், இந்த முழுமையான நாவலாய்ப் படிக்கக் கிடைத்தபோது ஏற்பட்ட மனஉணர்வும் வேறு வேறானவை. ஒற்றை மயில் இறகின் கனம் கொண்டதாய் மட்டுமே இருந்த தொடர் கதை, வண்டியின் அச்சு முறியும் அளவிற்குக் கூடுதல் கனத்தை நாவலின் போது மயிலிறகுகளை அடுக்கி இருப்பது கூர்மையான பதிவைக் காட்டுகிறது. தொடர் கதை, நாவல் இரண்டையும் படிக்கிறபோது வேறு வேறான சுவையைத் தந்தாலும், நாவலின் கட்டமைப்பும்,

பூச்சு இல்லாத கதையோட்டமும், அந்தக் கிராமத்து மண்ணைவிட்டுத் தாண்டாத ஒரு நேர்க்கோட்டுத் தன்மையோடு இருப்பவையே.

எந்த ஒரு படைப்பாளனும் குதிரையாக இருக்க வேண்டுமே தவிர, அதன் மீது ஏறி சவாரி செய்கிற, குதிரையைத் தன் மனப்போக்கு போலத் திருப்பி, திருப்பி திக்கு முக்கடையச் செய்கிற, பயணியாக இருப்பது

நல்லதல்ல. அப்படி இருக்கக் கூடுமெனில் பயணியும், குதிரையும், ஆள் அரவமற்ற புதைகுழியில் விழுந்த கதையாகவோ, கோயில் மாடு மம்பட்டியானைக் கீழே தள்ளிக் குடல் குந்தாணியெல்லாம் வெளியே வரும் அளவிற்கு முட்டித் தள்ளிய நிலையாகிவிடும். கிட்டத் தட்ட பாரதிபாலன் அவர்கள் கதையைச் சுமந்து இருக்கிறார். சுமக்கிறபோது ஏற்படுகிற வலிகளையும் இறக்கி வைத்து இளைப்பாறுகிறபோது, அந்தக் கிராமத்தை நன்கு கூர்ந்து கவனித்து இருக்கிறார். அங்கு வாழும் பவுனு, கிங்காங்கு, மாயாண்டித்தேவர், ஒத்தைவூட்டுக்காரன், சேவாலு, கோவிந்து, சீனியாபுள்ளை, முத்துசாமி பிள்ளை, அவர் மனைவி கோமதியம்மாள், சேனையாபுள்ளை, செல்லமுத்து பிள்ளை, மாரியப்பன் செட்டி, மூக்கையா ஆசாரி, கொத்துக்காரர், அவரின் மனைவி குட்டிபுள்ளை, சிவகாமி பிள்ளை, ரெங்கம்மாகிழவி, சுப்பம்மா, தவசியா பிள்ளை, குறும்பக்கவுண்டர், மண்டையன், மம்பட்டியான், பரமத்தேவன், வேலாயுதம்பிள்ளை, மாரியப்பன், தங்கராசு, சாமியப்பன், அவரின் பிள்ளைகள் ராமு, லெட்சுமணன், கந்தையா ஆசாரி, நாட்டாமைக்காரர், கணக்குப் பிள்ளை, உறங்காப்புலித்தேவர், கொன்னவாயன், பூங்கோதை, முத்தாள் நாயக்கர் என இத்தனை மனிதர்களோடும் பயணித்து இருக்கிறார். பயணிப்பது மட்டுமோ ஒரு படைப்பாளர் வேலை. இல்லவே இல்லை. கவனிக்க வேண்டும் அல்லவா. தன் கண்களை அகலத்திறந்து கவனித்தும் இருக்கிறார்.

7வது அத்தியாத்தில் வியாழக்கிழமை சின்னமனூர்ச் சந்தையில் 11வது அத்தியாயத்தில் அறுவடை நடக்கும் வயல்களையும், அப்போது நடக்கும் நிகழ்வுகளையும், கவனித்ததை நகரத்துக் கலப்பு இல்லாமல் பதிவு செய்து இருக்கிறார். முதல் நாள் பெய்த மழையின் சீற்றத்தைச் சொல்கிற இடங்களில், 14, 15-ஆம் அத்தியாயங்களில் கிராமத்தில் நடக்கிற வன்முறை அமளிதுமளிகளைப் பதிவு செய்து இருக்கிற இடங்களைப் படிக்கிற வாசகர்களை அப்படியே இடிந்து போய் (மழைக்குத் தரையோடு தரையாய் உட்கார்ந்துவிடும் தவசியாபிள்ளை வீடுபோல) உட்கார வைத்துவிடுகிற எழுத்து என்றுதான் சொல்ல வேண்டும்.

இதோடு நிற்கவில்லை பாரதி பாலன். தலையாரித் தோப்பு, ஆசாரித்தெரு, கோட்டுற் குளம், வடக்குத்தெரு, கண்ணம்மாள் கோயில், முடக்குசாலை, திருகுவடகம், அம்மன் கோயில்தெரு, நடுத்தெரு, கொடிக்காரத் தெரு, வாய்க்கால் தெரு, பஞ்சாயத்து போர்டு தெரு, பூக்காரத் தெரு, மந்தைதெரு, ஒடப்புத்துறை வயல், மோட்டுவயல், ஓயாமாரிவயல், என மண்ணோடு மண்ணாய் வியர்வை யோடு வியர்வையாய் என அடிமேல் அடி வைத்து பயணிப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த இடங்களை உள் அடக்கிய அந்தக் கிராமத்தின் ரேகைகள் மண் வாசனை யோடு , மழைக்காலங்கள் தாண்டியும், காற்றில் மணக்கிறது. நாவலில் வரும் தங்கராசு விற்கிற பூமாதிரி. கிராமத்து சொலவடைப் பேச்சுகள். மக்களின் தொன்மம், அடை யாளம் அவைகளில்தான் வெளிப்படுகின்றன. ஒரு மனிதன் எந்தப் பகுதியைச் சேர்ந்தவன் என்பதற்கு உதடு பிரித்து மணக்க மணக்க இறக்கி வைக்கும் பேச்சுதான் அடை யாளம். இதனை நகரத்து நாகரிகம் மெல்ல மெல்ல தன் காலில் நசுக்கி, சொல்வதற்கும், எங்கேனும் அவைகள் கரை சேர்ப்பது என்பது மாதிரியான பதிவைச் செய்து இருக்கிறார் பாரதி பாலன். நகர்வு கலாச்சரம், கிராமிய கலாச்சாரத்தை வேரோடு பிடுங்கி எறிகிற இன்றைய காலகட்டத்தில் தானியகிடங்காய்த் தெரிகிறது இந்த நாவலில் வரும் மண்வாசனைப் பேச்சு வார்த்தைகள்.

‘தொரட்டு, சடவுல்லை, ரோதையில, கோட்டிப் பயலே, மோடம், பம்மல்சமயம், நெறந்து, சன்னப்பய மழை, அனுசுக்குள்ளே, அந்தாக்குலெ, கொண்டுலிக்கம், தொலாவிகிட்டு, ரோட்டச்சொம, மோட்டுஅடைப்பு, மாட்டுக்காடி, குறுதாவணி, ஒற்றை பிரிமனை, வெட்டருவா, பண்ணருவா, ஒட்டாஞ் செல்லி, தொன்னாந்து கிட்டு, நொடச்சி, லவி, சொளகு, முளக்குச்சி, நீச்சத்தண்ணி, வவுசி, வெசாழக்கிழமை, துனிமய குடிக்கி மக்கா, ஒப்பனோலி, வொக்காளி, கெராக்க மசுரு, நொச்சு, இணுங்கி வெள்ளனமா, வெலம், கிண்ணி, குலுகை, ஒலம்படி, குமரச்சம், குறுணி, முக்குறுணி, தலையடி, தாம்பு, சூட்டடி, தாக்கல், சூசுவானு, தன்னகட்டி,’ போன்ற வழக்குச்சொற்களை மக்களின் வாழ்க்கையோடு கலந்திருக்கும் இந்த விதைகளை நாவல் முழுவதும் தெளித்து, படிக்கிற வாசகருக்கும், படைப்புக்கும் இடைவெளியற்ற இருப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அந்த இடைவெளியற்ற இருப்பு ஒரு கிளர்தலையும், மணத்தலையும், மகிழ்தலையும் ஏற்படுத்தும். முருங்கைப்பூ, வேப்பம்பூ மணமாகவும் இருக்கிறது. பருத்திக்காடு, கத்திரிவரப்பு வயலில் நடக்கும் போதும், நடைதடுமாறு வதையும் தருகிறது. அறுப்புக் காலத்தில் தட்டாம் பயிரையும், கானாம் பயிரையும் நன்கு வறுத்து சட்டைப் பையிலோ, முந்தானையிலோ வாங்கி அந்த வெப்பத்தையும் உணரமுடிகிறது.

நாவலில் ஒரு மண்ணின் அடையாளத்தை, அழகிய லோடு பதிவு செய்வது என்பது படைப்புத் திறனை வெளிப் படுத்தும். மனிதகுல இயங்கியல் தன்மையும், படைப்புல அச்சாணியின் இலக்கியத் தன்மையும் காற்றாய்த் தொடர் கிறது. வெயிலாய் மின்னுகிறது. கால் செருப்புக்குள் புகுந்து கொண்ட சிறுகல் போல அவஸ்தை. “வெளிச்சம் கத்தரிச் செடியிலும் சோளப்பயிரிலும் பட்டுத்தெறிக்கிறது. தென்னம் ஓலை அசைவிலும் ஒளி விழுந்து நசுங்குகிறது. (பக்கம்11) நிலவொளி விழுந்து நசுங்குகிறது. “கண்களில் நீர்க்கூடு” பஞ்சுவின் குமுறலை “அவள் முதுகு மேலும் கீழாய் அலைந்திற்று” (பக்கம் 17)

“அம்மாவுக்குத் தூக்கமேது. மாடுகள் திரும்புகிறது வரை அதுபொழுது மாட்டுக்காடியில்தான் நசுங்கும்” (பக்கம் -23)

கோவிந்துவின் அப்பாவிடம் மார்புக் கூட்டில் பூசியிருந்த திருநீறு உரிந்து விழுந்து கிடக்கிறது..”

(பக்கம் 23)

 “சடசடவென்று இப்ப விதை உதிர்வது போல ஏழுஎட்டு சொடக்கு விழுகிறது” (பக்கம் 24)

“மாவிலைகள் மடங்கி உதிர்ந்து கிடக்கின்றன. மடங்கிய மடலுக்குள் ஒரு கூடு. அதற்குள்ளும் ஒரு உயிர்..” (பக்கம் 27)

“அந்த கசப்பு நாக்கை கடிக்கிறது..” (பக்கம் 27)

“ஆவி எழும்ப ஐஸ் தண்ணித் தெருவில் சிதறிற்று, அதை மிதித்து விளையாட ஏழுஎட்டு வாண்டுகள்..” (பக்கம் 41)

“காற்றில் ஈரவாடை. மழை மசக்கையோடு வானம்.”

“நடுமுதுகில் ஜில்லென்று சுடுநீர் (?!). இறங்கிற்று (பக்கம் 48)

“அந்த தைரியத்தை பிடித்துக் கொண்டே நடந்து அவனைத் தொட்டு -----..”

“காற்று வந்து மோதிக்கொண்டே இருந்தது. புளிய மரநிழல் போகாதே போகாதே என்று பிடித்து இழுத்திற்று. (பக்கம் 77)

வேலாயுதம் ----- வெற்றிலை போடும் அழகு

(பக்கம் 59)

“வடிச்சகஞ்சி தண்ணி மாதிரி வெயில் (பக்கம் 61)

பஞ்சுவை வர்ணிக்கும் இடம் (பக்கம் 63)

சின்ன மனூர்ச் சந்தையின் அழகு (பக்கம் 79)

“பொழுது மடங்கிவிட்டது” (பக்கம் 63)

“ஒரு டீயோ வடையோ கையில் வாங்கி வைத்துக் கொண்டால் போதும் ஊர் சங்கதி எல்லா உறிஞ்சி விடலாம்.” (பக்கம் 84)

“உதடு, மூக்கு, கண், நெற்றி, கை, எல்லாமே குரல் எடுக்கும் போது அதை என்ன பாஷை என்று சொல்வது.” (பக்கம் 98)

“பெண்களின் அலர நடை, ஈரம்பட்ட, நீத சொட்ட

“இருள் விழுந்துவிட்டது. புளிய மரத்திற்குள் விழுந்த நிலா வெளிச்சம் சிதறிக்கிடந்தது. (பக்கம் 119)

“இடைக்காட்டில் உசுரை ஒழுகவிட்ட பிள்ளை.”

“ஏதோ அடுத்த பிறவி எடுத்து வந்து முதல் பிறவியில் விட்டு விட்டு வந்ததை வந்து பார்ப்பது போல் இருந்தது (பக்கம்168).

“கொடியில் தொங்கிக் கிடக்கும் சேலையைக் காற்று கழற்றி நீண்ட சூழலாக ஒதுங்கி விடுவது போல” (பக்கம் 262)

“மர அடர்த்தியில் இருள்திட்டு..” (பக்கம் 279)

-எனப் பல இடங்களில் அழகியல் தன்மையோடு உணர்வுகளின் வெளிப்பாடாகி இருக்கிறது. உழுத வயலில் தயிர் போல தடதடக்கும் சேற்றில் பதியும் நாற்றாய் சட்டென உள் இறங்குகிறது. கணவன் மனைவி இணைகிற விதம் தனி மனித அனுபவம் சார்ந்தது. இதனை நாகரிகமாய் “அந்த உயிரின் இயக்கம் முடிந்ததும் மனசு லேசாக இருந்தது..” (பக்கம் 286)

தன் எழுத்துத் திறனோடு தன் சமூக பங்களிப்பாய் நாவலில் கிராமத்தின் சுவடுகளைத் தெளிவாய் வைத்து இருக்கிறார். எந்த ஒரு கதாபாத்திரத்தின் மீதும் சவாரி செய்யாமல், எந்த திணிப்பையும் நிகழ்த்தாமல் நாவலை தந்து இருந்த போதிலும்.

“நிக்கற ஆளுங்க எல்லாம் பேசவேண்டான்டா..”

“இப்படி சொல்லி சொல்லியே

உட்காரவையுங்க..” (2வது அத்தியாயத்தில்)

“இங்கே எல்லாம் ஆள் இல்லாத போது

கால் வைத்துக்கொண்டால்தான் ஆச்சு (9வது அத்தியாயத்தில்)

“வாசற்படியில் நிக்கிற கூட்டம் நிற்கத்தான்

செய்யும் (20வது அத்தியாயத்தில்)

- இந்த வரிகளில் மனதிற்குள் ஒரு அசைவை ஏற்படுத்துகிறார்.

எங்கே வெற்றுச்சுவர் இருக்கும் சாணி தட்டலாம் என அலையும் ரெங்கம்மா கிழவி போல, எங்கே சண்டை இழுக்கலாம் என அலையும் மனங்களையும், அதன் சரடாய் உயிரைத் திருகும் கயிறாய் சாதித், தெருச் சண்டை களை, சுப்பம்மாவிடம் இருந்து வாங்கிப் போகிற ‘கங்கு’ கணக்காய் நெருப்பை வார்த்தைகளில் வைத்துக்கொண்டு சின்னச்சாமி டீக்கடை பெஞ்சுகளையும், பழனி டைலர் கடை ஒட்டுத் திண்ணைகளையும் தேய்கிற வன்முறை வாரிசுகளையும் சேர்த்து ‘காற்று வரும் பருவம்’ தந்து இருக்கிறார் பாரதிபாலன்.

நாவலுக்குள் நுழையும் முன்புவரை விரல் படாது இருக்கிறது மனது. நுழைந்த பிறகு ஊதக்காற்று, ஈரக்காற்று, வடக்கு காற்று, குளுமையான காற்று, சுழல் காற்று, சாரல் காற்று, பனிக்காற்று, கோனூரிக் காற்று என இவைகளுடன் வாழத் துடிக்கிற காதல் காற்றும், வன்மம் வைக்கிற கலவரக் காற்றும் அது தருகின்ற வீச்சில் சிக்கி, மூச்சுத்திணறலோடு நாவை விட்டு வெளியேறுகிற போது சின்னச்சாமி டீக்கடை தினத்தந்தி போல கசங்கிப் போகிறது என்பது என் வாசிப்பு அனுபவம். கூட்ட நெரிசலில் ஒரு வழியாக பேருந்தில் ஏறிவிட்டோம் என்று ஆறுதல் கொள்ளும் போதும், இறங்கிட வேண்டிய நிலையத்தில் கடைசி ஆளுக்கு மட்டும் சட்டென இறங்க முடியாத நெருக்கடி ஏற்படும் அல்லவா. அப்படியான தவிப்பும் நாவல் தருகிறது என்பது உண்மை. படித்து முடித்த பிறகு வெறிச்சோடிக்கிடக்கும் வெற்றிலைக் காடாய் மனசு இருக்கிறது.

மனிதர்களின் உள்ளக் கோடுகளையும் அளந்து, அந்தக் கோடுகளையும் மீறாமல் நம்பிக்கையோடு வெற்றிபெறும் ஒரு காதலையும், அதற்குள் நிகழ்கிற சம்பவங்களின் உணர்வுகளையும் எல்லை மீறாமல் சொல்லி இருக்கும் விதம் பாரதிபாலனின் எழுத்துக்கான அடையாளம். நன்கு வெளிப்பட்டுஇருக்கிறது.

இன்றைக்கு கிராமத்திற்கு நகரத்து முகம் வந்து விட்டது. அரசியலின் இலவச இணைப்புகள், குடியிருப்பு களின் வெளிச்சங்களாய் மாறிவிட்டது. மண்சாலை மாறிவிட்டது. விளைநிலங்கள் மாறிவிட்டன. ஊடகங் களின் ஆக்கிரமிப்பில் குழந்தைகளின் வாழ்க்கை மட்டு மல்ல பெரியவர்களின் வாழ்க்கையும் மாறிவிட்டது. ஒரு வழிப்பாதை எல்லாம் நான்கு வழியாய் மாறிவிட்டது. இத்தனை மாறியும் என்றும் மாறாத இந்தக் காதலும், சண்டைகளும், வன்முறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

எந்த நவீன கலாச்சாரமும் இந்த இரண்டு பூனை களுக்கு மணிகட்டாத நிலைதான் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, மனிதர்களின் உயிர்வேட்டையும், மனங்களின் உணர்வு வேட்டையும் தொடர்ந்து நிகழ்கிறது. தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் பார்த்தோமேயானால் காதலும், வன்முறையும் கூட ஒரு வகை காற்றுதான். இந்தக் காற்று வரும் பருவம் எங்கும் எப்போதும் நிகழலாம். இந்த நிகழ்வு கிராமத்திற்கு மட்டுமல்ல நகரத்திற்கும் பொருந்தும்.

மனிதர்களின் எண்ணமும் காற்றுதான். அது எப்பொழுது பிறரை வாழவைக்கும், ஆளைக் கொல்லும் எனச் சொல்ல முடியாது. வரும் பருவத்தை உணர்ந்து கொண்டால், அல்லது துணிந்து நின்றால் வாழ்க்கை இனிக்கும். கோவிந்து - பஞ்சுவின் காதலைப் போல. இல்லையெனில் முடியாத வழக்குகளாய்த் தொடரும் நாவலின் முடிவைப் போல வன்முறைகளும் என்பதை வலியுறுத்தும் நாவல்.

‘காற்று வரும் பருவம்” இலக்கிய வயலில் ஒரு கிராமத்து நடவு. அது தரும் தானியம் நகரத்திற்கும் பொதுவானது. தேவையானது.

காற்று வரும் பருவம் (நாவல்)

பாரதிபாலன்

புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.

Pin It