சென்னை உயர்நீதி மன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளை நியமிக்க, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மூத்த வழக்கறிஞர்கள் கே. சந்துரு, வெங்கட் ராமன், இராம சுப்பிரமணியன், எஸ். மணிக்குமார், செல்வம் ஆகியோர் பதவி ஏற்கவிருக்கும் புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகள். இவர்களில் எஸ்.மணிக்குமார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சாமிதுரையின் மகன். தலித் சமூகத்தைச் சார்ந்தவர். நீதிபதியாக நியமனம் பெற்றுள்ள செல்வம், தலித் சமூகத்தைச் சார்ந்தவர்.

ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் பி.டி.தினகரன், எஸ்.அசோக் குமார். வி.தனபாலன், எம். ஜெயபாலன், டி.தமிழ்வாணன், எஸ்.கே. கிருஷ்ணன் ஆகிய 7 பேர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதிகளாக உள்ளனர். புதிதாக நியமனமானவர்களையும் சேர்த்து தலித் நீதிபதிகள் எண்ணிக்கை 8 ஆகியுள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம் துவக்கப்பட்டு 112 ஆண்டு களுக்குப் பிறகு 14.12.1973 இல் தான் முதன்முதலாக பெரியாரின் கோரிக்கையை ஏற்று, அன்றைய முதல்வர் கலைஞர் ஆட்சியில் முதன்முறையாக தலித் சமூகத்தைச் சார்ந்த ஏ.வரதராஜன் உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தலித் நீதிபதிகள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது, மகிழ்ச்சி தருகிறது.

நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் சந்துரு, தொழிலாளர் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், பல வழக்குகளில் வாதாடியவர். 1976 இல் சென்னை சிறைச் சாலையில் மிசா கைதிகள் தாக்கப்பட்டது பற்றி விசாரிக்க அரசு நியமித்த இஸ்மாயில் கமிஷன் முன்பு பாதிக்கப்பட்டோருக்காக வாதாடியவர்.

மதுரை கிளை உட்பட சென்னை உயர்நீதி மன்றத்தில் மொத்தம் 49 நீதிபதி பதவி இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட 17 நீதிபதிகளையும் சேர்த்து தற்போது 38 நீதிபதிகள் பணியில் உள்ளனர். காலியாக உள்ள 11 இடங்களில் இப்போது 5 நீதிபதிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவி ஏற்பில் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கும், இந்த மோசமான நடைமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதில் தலையிட்டு, இந்த மோசமான நடைமுறையை மாற்ற முன்வரவேண்டியது அவசியமாகும்.