தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஒரு சொல் தலித். தலித் இலக்கியமும் தமிழில் மிகவும் ஆழமாக வேரூன்றி விட்டது. தலித்தியத்தைப் பேசும் வகையில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள் என பல படைப்புகள் வெளிவந்துள்ளன. படைப்புகள் மூலம் தலித்தியருக்கு குரல் கொடுப்பது ஒரு வகை. அப்படைப்புகளை விமரிசிப்பதன் மூலம் தலித்தியரை முன்னேற்ற முயல்வது இரண்டாம் வகை. யாழினி முனுசாமியின் ‘தலித் இலக்கியமும் அரசியலும்’ இரண்டாம் வகையைச் சார்ந்தது. இவரும் ஒரு படைப்பாளியே. ‘உதிரும் இலை’, ‘தேவைதயல்லப் பெண்கள்’, ‘பின் நவீனத்துவச் சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்’ என்னும் தொகுப்புகள் மூலம் அறியப்பட்டவர். 

தலித் இலக்கியத்தின் தோற்றம், தலித் கவிஞர்களின் பின்புலம், தலித் கவிதைகளின் பாடுபொருள் ஆகியன குறித்து பேசியுள்ளது ‘தலித் கவிதைகளின் நோக்கும் போக்கும்’ என்னும் முதல் கட்டுரை. இந்தியாவில் 1960களில் முதன் முதலில் மராத்தியில் தலித் படைப்பு எழுதப்பட்டது என்றும் 1990களின் தொடக்கத்தில் நடைபெற்ற அம்பேத்காpன் நூற்றாண்டு விழாவிற்கு பின்னே தலித் இலக்கியம் எழுச்சி பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலே 1979ல் வெளியான பூமணியின் ‘பிறகு’ என்னும் நாவலே முதல் தலித் படைப்பாகும். தலித்துகளின் பிரச்சனைகளையும் அவர்களின் விடுதலையையும் பேசுவதே தலித் இலக்கியம் என்கிறார். தலித், தலித்தல்லாதோர், சாதியை வெளிப்படுத்தாதோர், இயக்கத்தார் என்று எழுதும் நான்கு போக்குகள் உள்ளன என்றும் வகைப்படுத்தியுள்ளார். தலித் இலக்கியம் ‘கலை மக்களுக்காவே ‘ என்னும் இயக்கம் சார்ந்தது என்கிறார்.

என் முன்னோர்களுக்கு குடிக்கக்

கெடுக்கப்பட்ட சாணிப் பாலைத்தான்

கக்கிக் கொண்டிருக்கிறேன்

கவிதை என என்னும் யாழன் ஆதி உள்பட பல கவிதைகளை தலித் கவிதைகளின் பாடுபொருள்களுக்கும்; நோக்கத்துக்கும் சான்றுகள் என எடுத்துக்காட்டியுள்ளார். 

இட ஒதுக்கீடு தலித்தியர்களை அரசு பணிகளில் அமரச் செய்துள்ளது. இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய ஆதிக்க மூளை ‘கிரிமிலேயர்’ ஐ நடைமுறைப்படுத்த முயலுகின்றது. இதற்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. ‘கிரிமிலேயர்’ என்னும் தலைப்பிலேயே பேரா. அரச முருக பாண்டியன் ஒரு கவிதை எழுதியுள்ளார். இக்கவிதையை முன் வைத்தே ‘தலித் கவிதைகளில் இட ஒதுக்கீட்டுச் சிக்கல்’ என்னும் கட்டுரையை எழுதித் தன் எதிர்ப்;பைத் தெரிவித்துள்ளார் ‘இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல. அது தலித்துகளின் உரிமை என்பதை அவர்கள் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை’ என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரா. அரசமுருகபாண்டியனின் ஒரு கவிதையை வைத்து எழுதியவர் சில கவிஞர்களின் தொகுப்பை முன் வைத்து தலித் சிந்தனைககைளை வெளிப்படுதத்தியுள்ளார். அழகிய பெரியவனின் ‘அரூப நஞ்சு’, சுகிர்த ராணியின் ‘இரவு மிருகம்’ விழி.பா.இதய வேந்தனின் ‘முரண் தடை ‘ சி.முத்து கந்தனின் ‘வாய்ப் பூட்டு’, அபிமானியின் ‘எதிராக’, அரங்க மல்லிகாவின் ‘நீர் கிழிக்கும் மீன்’, அன்பாதவனின் ‘நெருப்பில் காய்ச்சிய பறை’ ம.மதி வண்ணனின் ‘‘நமக்கிடையிலான தொலைவு’ என்.டி.ராஜ்குமாரின் ‘கல் விளக்குகள்’ ஆகிய தொகுதிகளில் உள்ள தலித்தியம் பேசும் கவிதைகளை எடுத்துக்காட்டி தன் கருத்தையும் கூறியுள்ளார். ஒவ்வொரு கவிஞரும் எப்படி தலித்தியத்தை பேசியுள்ளனர், எவ்வாறு அரசியல் செய்துள்ளனர், எங்ஙனம் கலகம் ஏற்படுத்தியுள்ளனர், எந்தளவு தலித்தியருக்கு உரிமைக் கோரியுள்ளனர் என விரிவாக ஆய்ந்தளித்துள்ளார். ‘தலித் இலக்கியம் தலித் விடுதலைக்கான நம்பிக்கையை அளிப்பதாக இருக்க வேண்டும்’ என்று மேற்கோளைக் குறிப்பிட்டடிருப்தற்கேற்ப படைப்புகள் உள்ளன என அடையாளப்படுத்தியுள்ளார். இத்தொகுப்பும் அவ்வாறேயுள்ளது. 

‘அழகியலைப் புறக்கணிக்கும் அழகியலே தலித் அழகியல்’ என்பதே அழகிய பெரியவனின் அழகியல் பார்வையாக இருக்கிறது என்கிறார். ‘வசதி வாய்ப்புகள் வந்ததும் தலித் பிராமணனனாக மாறி விடாமல் தலித்தாகவே இருக்கும் விழி.பா.இதய வேந்தனின் கவிதைகளும் ‘தலித்துவம்’ மிக்கதாகவே இருக்கின்றன’ என படைப்பாளர் பற்றியும் கருத்துரைத்துள்ளார். ‘எதெதிலோ சாதி பார்க்கிறான் . பொம்பளைக்கிட்ட போறதில மட்டும் சாதி பார்க்கறதில்ல’ என்பதை திரும்பத் திரும்பச் சொல்வது சற்று நெருடாலாகவே உள்ளது’ என விமரிசனத்தையும் வைக்கத் தயங்க வில்லை. படைப்பாளர்களை முக்கியமானவர் என்றும் கவனிப்பிக்குரியவர் என்றும் குறிப்பிடலுக்குரியவர் என்றும் பெருமைப்படுத்தியுள்ளார் .  

பெரும்பாலான தலித் படைப்புகளை தலித்தியர் எழுதியிருந்தாலும் மற்றவர்களை மையப்படுத்தியேயிருக்கும். தலித் தன் வரலாறு எழுதியது அரிது. 1939ல் இரட்டை மலை சீனிவாசன் எழுதியது ‘ஜீவிய சரித்தர சுருக்கம்’ . ‘வடு’ என்னும் இரண்டாம் சுயசரிதையை எழுதியவர் கே.ஏ. குணசேகரன். இதை ‘தலித் ரண வரலாறு’ என குறிப்பிட்டுள்ளார். ‘வடு’ வில் உள்ள ‘வடுக்கள்’ஐ சுட்டிக்காட்டி இறுதியில் ‘கே.ஏ.குணசேகரன் தன் வரலாற்றின் மூலம் இலட்சக்கணக்கான தலித் இளைஞர்களின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் எனபது தான் உண்மை’ என்கிறார். உண்மை என்பதற்கு இளைஞர்கள் பலர் சான்றாக உள்ளனர். 

‘மார்க்சியம் மற்றும் தமிழ் தேசிய பார்வையில் தலித்தியம்’ குறித்து எழுதிய கட்டுரை சிறப்பு. மார்க்சியர்களின் ,தமிழ் தேசியர்களின் கருத்துக்களை துணைக்கழைத்து ‘சாதிய அரசியலும் மதவாத அரசியலும் தலைதூக்கிக் கொண்டிருக்கும் இனைறய சூழலில் அனைத்து சனநாயகச் சக்திகளும் சாதிய விசயத்திலாவது ஒன்றிணைந்து விவாதித்துப் போராடுவதன் மூலமே தலித் விடுதலையை முன்னோக்கி நகர்த்த முடியும்’ என நம்பிக்கையுடன் ஆலோசனையும் வழங்கியுள்ளார். 

‘தலித் அரசியல்’, ‘உலக மயம் எதிர்ப்பு அரசியல் தலித்துகள்’, ‘பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள்’ ஆகிய நூல்களை எழுதிய அ.மார்க்ஸின் தலித்தியச் சிந்தனைகளை ஒரு கட்டுரை மூலம் விவரித்துள்ளார். ஆதிக்கச் சாதியினரால் தீண்டாமைக்குள்ளாகும் சாதிகளைச் சார்ந்தவர்களை தலித்துகள் என அ.மார்க்ஸ் வரையறுத்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார். மார்க்சியமும் தமிழ்த் தேசியமும் வலியுறுத்துவது போலவே அ.மார்க்சும் போராட்டமே விடுதலைக்கு வழி வகுக்கும் என்கிறார் என்பதைப் குறிப்பிட்டுள்ளார். தொல்.திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் தலித் இளைஞர்களை அமைப்பாக்குவதில் வெற்றிப் பெற்றுள்ளனர் என்றும் ஆனால் அரசியல் படுத்துவதில் வெற்றியடையவில்லை என்றும் கருத்துரைத்துள்ளது கவனிப்பிற்குரியது.  

கோ.கேசவனின் தலித்திய நூல்களை முன் வைத்து எழுதிய ‘தலித் அரசியலும் இலக்கியமும்’ கட்டுரையில் தலித் - வரையறை , தலித் அரசியல், தலித் அமைப்புகள், தலித் அரசியலின் செயற்பாடுகள், தாழ்த்தப்பட்டோரும் தலைமையும், தலித் இலக்கியம், மார்க்சியப் படைப்புகளில் சாதிய எதிர்ப்பு , தலித் அரசியல் முன்னோடிகளின் மீதான விமரிசனம், தலித்தியமும் மானுட விடுதலையும் என ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக பேசியுள்ளார். தலித் அரசியல் கட்சிகளும் தலித்த்pயர்களை வாக்குகளாகவே பார்க்கின்றன என்று ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தலித்துகளில் புரட்சி கரமான சக்திகளை அமைத்து ஊக்குவித்தால் சாதி முறைக்கு எதிரான சக்தியாக மாறும் என்பதே கோ.கேவனின் கருத்து என்கிறார்.  

தொகுப்பின் இறுதிப் பகுதி சிவகாமியின் ‘பழையன கழிதலும்’ என்னும் நாவலை வைத்து எழுதப்பட்டுள்ளது. இது தலித்திய நாவல் எனினும் நாவலை வைத்து ஒரு முழுமையான ஆய்வினைச் செய்துள்ளார். இப்பகுதி மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. தலித்தியம் பற்றி பேசாவிடினும் நாவலின் நோக்கம் என்னவென ஆராய்ந்தளித்துள்ளது. இதில் ‘இராமலிங்கம் செட்டியார் போன்ற சில ‘வெறியன்கள்’ வீசிய ‘சாதி நெருப்பு’ தான் அன்று வெண்மணியை எரித்து, தொடர்ந்து காராம் சேடு, சுண்டு்ர், பொன்னுhர், நாலுமூலை கிணறு, போடி, மேலூர், அரியலூர் , குடிதாங்கி, புதுக்கோட்டை, காரணை , கொடியங்குளம், மேலவளவு மற்றும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை எரித்துக் கொண்டிருக்கிறது’ என்னும் ஊர்களை பட்டியலிட்டிருப்பது கட்டுரையாளருக்ககுள் இருக்கும் விடுதலை நெருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. முடிவுரையாக சாதிக்கலவரத்துக்குக் காரணம் சுயநலமே என்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு கல்வியிண்மையே காரணம் என்றும் பலவற்றை எடுத்து வைத்து சாதி கடந்து தொழிலாளர்கள் என்னும் அடிப்படையில் அனைவரும் இணைந்தாலே விடுதலைக் கிட்டும் என்கிறார். 

தலித் படைப்பாளிகள் அவரவர் தொகுதிகள் வாயிலாக தலித்தியம் பேசியுள்ளனர். தலித் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளனர். யாழினி முனுசாமி அத்தகைய படைப்புகளை தேடி வாசித்து தலித்தியம் தொடர்பான சிந்தனைகதை; தொகுத்தளித்துள்ளது பாராட்டத்தக்கது. தொகுதி எதைக் கூறுகிறது என்பதுடன் தன் கருத்தையும் கட்டுரை வாயிலாக கூறியுள்ளார். எடுத்துக்கொண்ட தொகுதிகளில் கவிதையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தலித் படைப்பாளிகளின் அனைத்துக் குரலும் விடுதலை என்னும் ஒரே திசையிலேயே ஒலித்துள்ளன. ஆதிக்கச் சக்திக்கு எதிரான கருத்துக்களைத் திரட்டித் தந்துள்ளார். தொடர்ந்து தலித் முன்னேற்றத்துக்குத் தடையாயயிருக்கும் அரசியல் சக்திகளையும் அடையாளம் காட்டியுள்ளார்.  

தலித்திய விடுதலைக்கு ஒற்றமையான போராட்டமே அவசியம் என்பதை வலியுறுத்தி இடையிடையே ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். ‘தலித் இலக்கியமும் அரசியலும்’ என்னும் இத்தொகுப்பு வழியாக கட்டுரையாளர் யாழினி முனுசாமியின் நோக்கமும் வேட்கையும் வெளிப்பட்டுள்ளது. ‘பழையன கழிதலும்’ மூலம் ஒரு நல்ல ஆய்வாளர் என உறுதி படுத்தியுள்ளார். கட்டுரை எனினும் வாசிப்புக்கு ஏற்ப ஓர் இயல்பான மொழியையே கையாண்டுள்ளார். தலித் இலக்கியப் பாதையில் இத்தொகுப்பு ஒரு தனியிடத்தைக் கைக் கொள்ளும் என நம்பிக்கையளிக்கிறது. தலித் விடுதலைக்கு வழிவகுக்கும் எனவும் திடமாகக் கூற வாய்ப்பிருக்கிறது. 

வெளியீடு - இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) , பெரம்பூர் ,சென்னை11

 விலை - ரூ.70.00

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It