உலகமயம் தன் கொடூரக் கதிர்வீச்சை இந்தியா மீது 1992 இல் பாய்ச்சியது. அன்று முதல் மக்கள் நல அரசின் அங்கங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன. உலகமயத்தின் கடும் விதிமுறைகளுடன் வந்த ஒன்றுதான் அரசு மானியங்களைப் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்பது. பல துறைகள் அதைக் கச்சிதமாக செய்ய, அந்தந்த துறைகளில் தனியார் முதலீடு உள்ளே நுழைகிறது. இதைத்தான் "தகுந்த இசைவான முதலீட்டுச் சூழல்' என உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகள் அழைக்கின்றனர்.

கல்வி, சுகாதாரம், உடல்நலம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து என எங்கும் தனியார், எதிலும் தனியார் என அவர்களின் பரிமாணம்தான்! ஒரே மூச்சில் ஒரு துறையிலிருந்து அரசாங்கம் வெளியேற முடியாது என்பதால், கடந்த 20 ஆண்டுகளில் அதனை படிப்படியாக செய்து வருகிறார்கள். அவர்கள் நுழைய முடியாத துறைகள் இன்னும் உள்ளன. தனியார் ரயில்கள், தனியார் ராணுவம், தனியாரிடம் அரசு நிர்வாகம் என எது நடந்தாலும் இனி வியப்பில்லை. அப்படித்தான் எண்ணெய் விலை உயர்வு சார்ந்த பிரச்சனையும்! 2002 இல் மானியங்கள் குறைப்பு அறிவிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கப்படும் மானிய அளவு குறைக்கப்பட்டது; மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மட்டும் மானிய விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எண்ணெய் விலையை நிர்ணயிக்க ஒரு புதிய ஏற்பாடு வகுக்கப்பட்டது - Administrative Pricing Mechanism.

petrol_370ரங்கராஜன் குழு 2005 இல் அமைக்கப்பட்டு, பெட்ரோலிய பொருட்களின் விலை - வரி நிர்ணயம் குறித்து ஆய்வு நிகழ்த்தப்பட்டது. பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பொழுது உள்ள விலைக்கு, ஒரு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. 2009 இல் அமைக்கப்பட்ட கிரித் பாரிக் குழு, தனது அறிக்கையை 2010 இல் அளித்தது. அரசு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கும் தனது மானியத்தை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு நிர்ணயிக்கக் கூடாது; அதனை அந்தந்த நிறுவனங்களே - உலக சந்தையின் நிலவரத்தைப் பொருத்து நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என கிரித் பாரிக் குழு தனியார் முதலாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நனவாக்கியது.

கிரித் பாரிக் குழு சூன் 25 அன்று தனது பரிந்துரைகளை அறிவித்த பொழுது, பங்குச் சந்தையில் பெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது. மறுபுறம் எண்ணெய் நிறுவனங்கள், இவை போதாது மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை விற்க வழங்கப்படும் மானியத்தால், அரசுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அதையும் அரசு கைவிட்டால்தான் எண்ணெய் நிறுவனங்கள் இனி லாபகரமாக செயல்பட இயலும் என்றன.

வட்டார ஆங்கில மற்றும் சர்வதேச ஊடகங்களும் இந்த இழப்பீட்டுக் கதையை அதிக முக்கியத்துவத்துடன் வெளியிட்ட வண்ணமிருந்தன. "பிஸினஸ் ஸ்டாண்டர்டு' தனது அறிக்கையில், மானியங்களால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு 75 கோடி ரூபாய் இழப்பு என்றது. இந்திய அரசுக்கு இது பெரும் பாரம் என கண்ணீர் வடித்தது "ராய்டர்ஸ்' நிறுவனம். பி.பி.சி. தனது செய்தியில், இந்திய அரசுக்கு நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பு என கணக்கிட்டது. "பினான்சியல் டைம்ஸ்' தனது தலையங்கத்தில், அரசின் இந்த விலைக் கட்டுப்பாடுகள் ஒழிய வேண்டும் என முழங்கியது.

பெட்ரோலிய பொருட்களைப் பொருத்தவரை, அவற்றின் பயணத்தை மூன்றாகப் பிரிக்கலாம் : 1. எண்ணெய்யை கண்டறிவது, துரப்பணம் செய்வது. அந்தப் பணியை இங்கு எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனம், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமும், தனியார் நிறுவனங்களான இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்பிளோரேசன் நிறுவனம், ரிலையன்ஸ், கார்னு எரிசக்தி மற்றும் பிரிமியர் ஆயில் செய்கின்றன. இவைதான் கச்சா எண்ணைய்யை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்றன.

2. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது, விற்பனை செய்வது, அதற்கான குழாய்களைப் பராமரிப்பது. இதனை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோலிய நிறுவனம் இவை தவிர ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களும் இதே பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் "வாயில் விலை' (உதுடிt கீச்tஞு) என ஒரு விலையை வைத்துள்ளன. இதில் எண்ணெய்யின் விலையுடன் சுத்திகரிப்புக்கான கட்டணமும் இணைக்கப்படுகிறது.

3. பெட்ரோலிய பொருட்களை நாடெங்கும் எடுத்துச் சென்று விநியோகிப்பது. இதில் கெயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் "வாயில் விலை' யுடன் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், சேமித்தல் என அனைத்தையும் இணைத்து வரிக்கு முந்தைய விலையை கணக்கிடுகின்றன. இந்த விலையுடன் மத்திய அரசின் கலால் வரியும், மாநில அரசின் விற்பனை வரியும் இணைந்ததுதான் நாம் பெட்ரோல் பங்க்கில் கொடுக்கும் விலை.

சூலை 2009இல் நிலவிய சர்வதேச விலையின் படி, கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 64.18 டாலருக்கு இந்திய ரூபாயில் கணக்கிட்டால், ஒரு லிட்டருக்கு ரூ.19.87 வருகிறது. ஆகஸ்டு 2009 இல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா இவ்வாறு கூறினார் : “தில்லியில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.44.63 இதில் கலால் வரி ரூ.13.75 மற்றும் மாநில அரசின் விற்பனை வரி ரூ.7.44. இப்பொழுது ஆலையின் "வாயில் விலை' ரூ.21.54 தான் என்பதை நம்மால் கணக்கிட முடிகிறது. ஆலையின் சுத்திகரிப்பு செலவு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.9 என்பது தெளிவாகவே உள்ளது.

மானியம் என்றால் என்ன? ஒரு பொருளை அரசு மக்களுக்கு வழங்குகிறது. அதில் அரசு ஈட்டும் வரி வருவாயை விட, அந்தப் பொருளுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை அதிகமாக உள்ளபோது, அதனை மானியம் என்கிறோம். பெட்ரோலிய துறையின் ஆவணங்களைப் பார்த்தால், பெட்ரோலிய பொருட்களின் விற்பனை லாபத்திலிருந்து ஈட்டும் வரி வருவாயில் அரசு 1 சதவிகிதத் தொகையை மட்டுமே வழங்குகிறது. அப்படியென்றால் இதனை மானியம் என்று அழைப்பது பச்சைப் பொய். இதைவிட பெரும் உண்மை என்னவென்றால், பல தனியார், பொதுத்துறை பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவ, அரசு பெரும் தொகைகளை மானியமாக வழங்கி வருகிறது.

உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்திய நாட்டின் இயற்கை வளங்களையும் கனிமங் களையும் தனியாருக்கு வழங்கி அழகு பார்த்தன பா.ஜ.க. - காங்கிரஸ் அரசுகள். அவ்வாறே எண்ணெய் வளங்களையும் இங்கு வாரி வழங்கியது அரசு. இந்திய அரசு நிறுவனங்கள் கண்டறிந்த எண்ணெய் வயல்களை தனியாருக்கு கொடுத்த தேச துரோகங்களையும் அரசுகளே செய்தன. உலகின் பெரும் எண்ணெய் வயலாக சொல்லப்படும் ஆந்திரத்தில் உள்ள கிருஷ்ணா - கோதாவரி படுகைகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது அரசு. இது ஒரு எடுத்துக்காட்டு. இது போல் ஒரு மிகப் பெரும் துரோகப் பட்டியலே உள்ளது.

இப்படி இந்திய மண்ணில் இந்தியர் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள இயற்கை வளத்தை, ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கிறது இந்திய அரசு. அந்த நிறுவனம் எண்ணெய் வயலை துரப்பணம் செய்து, கச்சா எண்ணெய்யை எடுக்கிறது. அந்த எண்ணெய்யை சுத்திகரிக்கிறது. அதனை அரசு நடத்தும் பெட்ரோலிய விற்பனை நிலையத்துக்கே விற்பனையும் செய்கிறது. ஆனால், அது அந்த எண்ணெய்யை சர்வதேச சந்தை விலைக்கே கொடுக்க முடியும் என்கிறது. பொதுவாக சர்வதேச சந்தையில் இந்திய அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்யை கப்பலில் ஏற்றி, சர்வதேச தீர்வைகள் செலுத்தி அதனை இங்கு கொண்டுவர, பெரும் போக்குவரத்து செலவு ஆகிறது. ஆனால், நம் மண்ணில் நம் அனைவருக்கும் உரிமையுடைய இயற்கை வளத்தை நமக்கே சர்வதேச விலைக்குதான் தர இயலும் என்கின்றன தனியார் நிறுவனங்கள். இதுதான் தனியார் மயம் மற்றும் உலகமயமாதலால் விளையும் கேடு. இதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 5,280 ரூபாய் விற்ற வேளையில், இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சி., கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 2,420 ரூபாய்க்கு இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியது. இதுதான் பொதுத்துறை!

மறுபுறம், கச்சா எண்ணெய்யின் விலையைப் போல 152 சதவிகிதம் அதிக விலைக்கு சாமானியனுக்கு பெட்ரோலை விற்று விட்டு நட்டம், மானியம் என ஓலமிடுகின்றன அரசும், ஊடகங்களும். இந்த கொள்ளை லாபத் தொழிலில் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் செயல்பட அரசு நிறுவனங்களும், விலையை நிர்ணயிக்கும் அரசின் கட்டுப்பாடுகளும் பெரும் தடையாக இருப்பதால்தான் இந்த கூச்சல், ஆர்ப்பாட்டம் எல்லாம். இந்திய முதலாளிகளால் நடத்தப்படும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள், தங்கள் முதலாளிகளுக்கு சேவை புரியும் வகையில் நட்ட, மானிய கதைகளை நம் சமூகத்தின் கடைகோடிவரை மூளைச்சலவை செய்து வைத்துள்ளன.

நாம் தினசரி போடும் டீசல் - பெட்ரோல், நாம் வீட்டிற்கு வாங்கும் மண்ணெண்ணெய் - சமையல் சரிவாயு மூலம் அரசுக்கு கிடைத்த லாபம் மிக மிகக் குறைவே. அது 2002 - 03இல் 64 ஆயிரத்து 595 கோடி ரூபாயாகவும், 2004-05இல் ரூ.77 ஆயிரத்து 700 கோடி ருபாயாகவும், 2008 - 09 இல் 85,000 கோடி ரூபாயாக, 2010 இல் அது ஒரு லட்சம் கோடியை எட்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள். இதில் ஒரு சதவிகிதத்தை தந்து நம் மூளைகளை சலவை செய்ய முயலும் இதே அரசுகள்தான் கடந்த ஆண்டில் தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நேரடி வரிச்சலுகையாக 80 ஆயிரம் கோடி ரூபாயையும், கலால் வரி, சுங்கவரி சலுகையாக 4 லட்சத்து 19 ஆயிரத்து 786 கோடி ரூபாயை யும் வழங்கியுள்ளது. தோராயமாகப் பார்த்தால், நம் மக்களின் வரிப் பணத்தில் 5 லட்சம் கோடியை இந்திய - பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி மகிழ்ந்துள்ளார், மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்.

தனியார் நிறுவனங்கள், முதலாளிகள் மற்றும் முதலீட்டாளர்கள் வைக்கும் கோரிக் கைகளை மெல்ல மெல்ல நிறைவேற்றி, வாலை ஆட்டுவதுதான் அரசின் கடமையாகி விட்டது. இவர்களின் கோரிக்கைகளை அடையும் கருவிகளாகத்தான் அரசு நியமிக்கும் அனைத்து குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பெட்ரோலிய பொருட்களின் கதையில் வந்த ரங்கராஜன் கமிட்டி, கிரித் பாரிக் கமிட்டி செய்த வேலையை நீங்களே மதிப்பிடுங்கள். அப்படி மதிப்பிட்டால், நம்மால் அடுத்து வரப்போகும் குழு என்ன அறிக்கை வழங்கும் என்பதை கணித்துவிட முடியும். அடுத்து நியமிக்கப்படும் குழு, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவினால் அரசுக்கு ஆண்டுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் அரசு இதற்கு வழங்கும் மானியத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான் அது. ஒவ்வொரு கமிட்டியும் மக்கள் வரிப்பணத்தில் தான் இயங்குகிறது. ஆனால், இவை சில கோடிகளை முழங்கிவிட்டு, தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு எழுதி அனுப்பும் அறிக்கைகளை, அப்படியே அரசுக்குப் பரிந்துரையாக வழங்குகின்றன. கமிட்டிகள் அமைப்பது, மக்களின் தலையில் கல்லைப் போடுவதற்கு சமம்!

ஆட்சியில் அமர்ந்த அன்று, "நூறு நாட்களில் என் மந்திரம் வேலை செய்யப் போகிறது பாருங்கள்; விலைவாசியை நான் எப்படி கட்டுப்படுத்துகிறேன்' என முழங்கிய மன்மோகன் சிங், இன்று அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. தனியாருக்கு வரிச்சலுகை செய்யும் கோப்புகளில் கையெழுத்திடவே நேரம் போதாத போது, அவர் எப்படி இதைப் பற்றி சிந்திப்பார். விலைவாசி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மடங்கு ஏறுமுகத்தில் நின்று கொண்டு இறங்க மறுக்கிறது. பெட்ரோல் - டீசலின் விலை ஏற்றம், மென்மேலும் விலைவாசி உயர்வை அரசு இனி கட்டுப்படுத்த இயலாது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சகாராவின் வறுமையைவிட இந்தியாவின் வறுமை அதிகரித்து வருகிற வேளையில், அரசின் இந்த விலை ஏற்றம், மக்கள் சமூகத்தின் அன்றாட வாழ்வு மீது பெரும் தாக்குதலை தொடுக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி, வறுமையில் உழன்று அடுத்த வேளை கஞ்சிக்கே பிறர் கையை எதிர்நோக்கும் சாமானிய மக்களுக்கு "வருங்கால வல்லரசு' என்ன தீர்வை வைத்திருக்கிறது?

petrol_366அண்மையில் பெட்ரோலியத் துறை பல விளம்பரங்களை கொடுத்து, இம் மானியக் கதையை மெய்ப்பிக்க முயற்சி செய்து வருகிறது. அதில் ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகிறது : “நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் இப்பொழுதும் அரசாங்கம் 224.38 ரூபாய் மானியமாக வழங்குகிறது. தற் பொழுது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.345.35. இப்பொழுது சிலிண்டருக்கு ரூ.35 விலை ஏற்றம் செய்த பிறகும் அரசு மானியமாக 224.38 ரூபாய் வழங்குகிறது. இந்த மானியத்தால் எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் நிதிநிலை பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இந்த சிறிய விலை ஏற்றம், நிறுவனங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மிகவும் அவசியமானது. இப்போதைய விலை உயர்வு உங்கள் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாயை விட குறைவான பாதிப்பையே தரும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 35 ரூபாய் அதிகப்படுத்தியதற்கு பின்பும் அரசாங்கம் 2010 - 11 நிதியாண்டில் ரூ.20.719 கோடிகளை மானியமாக அரசு சுமக்க நேரிடும். இந்த விலை ஏற்றத்திற்குப் பின்பும் இந்தியாவில் வழங்கப்படும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, நம் அண்டை நாடுகளை விட மிகக் குறைவானதே.''

ஆனால் உண்மை நிலை என்ன? ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை (இந்திய ரூபாயில்) பாகிஸ்தான் : ரூ.36, பங்களாதேஷ் : ரூ.32, நேபாளம் : ரூ.34, பர்மா : ரூ.30, ஆப்கானிஸ்தான் : ரூ.36, கியூபா : ரூ.19, இந்தியா : ரூ.59.

எண்ணெய்யைப் போன்றே மக்களின் அன்றாட வாழ்வின் ஓட்டத்தை தீர்மானிக்கும் - ஒரு தேசத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் விஷயத்தில் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் எப்படி அலட்சியமாக நடந்து கொள்கின்றன என்பதை ஆராய்ந்தால் திகைப்பாக உள்ளது. பங்குச் சந்தையின் வணிகத்தில் இன்றியமையாத பொருட்கள் இடம் பெற்றதுதான் உலக விளிம்புநிலை மக்களின் வாழ்வு, இத்தனை படுபாதாளத்திற்கு சென்றதற்கான முழுமுதல் காரணம் இணிட்ட்ணிஞீடிtதூ, ஊதtதணூஞுண், ஈஞுணூடிதிச்tடிதிஞுண் என்கிற வார்த்தைகளால் அவை பங்குச் சந்தையில் புழங்கத் தொடங்கின. இன்றியமையாத பொருட்களை வைத்து நடக்கும் இந்த சூதாட்டத்தில் தனியார் நிறுவனங்கள், முதலாளிகள் பங்கேற்றால் அதில் வியப்பில்லை. ஆனால் மூன்றாம் உலக நாடுகளின் பல அரசுகளே இதில் பெரும் ஆர்வத்துடன் பங்கு கொள்வதுதான் பெரும் வேதனை.

அரசு நடத்தும் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வருங்கால தேவைக்கு, ஒரு நிலையான விலையில் பல மாதங்களுக்கு, பல லட்சம் டன் கச்சா எண்ணெய்யை முன்பதிவு செய்கிறது. இந்த சூதாட்டத்தில் லாபமும் நட்டமும் இயல்பானதே. முன்பதிவு செய்ததை விட, சர்வதேச சந்தையில் விலை கூடினாலும் குறைந்த விலைக்கே கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளை வந்தடையும். அப்படி கூடும் காலத்தில் நமக்கு குறைந்த விலைக்குத் தானே கிடைக்கிறது; அதனால் விலையை கூட்டக்கூடாது என்று அரசு பெட்ரோலிய நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கும் ஏற்பாடுதான் கிரித பாரிக் குழுவின் பரிந்துரை. இந்த சூதாட்டத்தில் பல சமயம் கொள்ளை லாபம் வரும்; பெரும் இழப்பும் வரும்.

அப்படியான நேரத்தில் அரசு சார்ந்த பெட்ரோலிய நிறுவனங்களிடம் உள்ள உபரி தொகைகளை நிதி அமைச்சகம் கைப்பற்றிக் கொள்ளும். அதற்கு பதிலாக நிதி அமைச்சகம் இந்த நிறுவனங்களுக்கு எண்ணெய் பத்திரங்களை வழங்கும். இந்த எண்ணெய் பத்திரங்களை வைத்து நீங்கள் அரசிடம் கடன் பெறலாம் என வாக்குறுதிகள் வழங்கும். ஆனால், அந்த பத்திரங்களை வைத்து நெருக்கடியான காலங்களில் இந்த பெட்ரோலிய நிறுவனங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்பதுதான் வரலாறு. இப்படி மத்திய நிதி அமைச்சகத்தின் ஊதாரித்தனமான போக்கினால், இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத்தான் எண்ணெய் தொகுப்பு பற்றாக்குறை என சில காலத்திற்கு முன்பு அழைத்தோம்.

இதை எல்லாம் விட, இந்த நிறுவனங்களின் நடைமுறையில் உள்ள அதிகார வர்க்க - அரசியல் தலையீடுதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. லட்சம் கோடிகள் புழங்கும் ஒரு சூதாட்டத்தில், பெட்ரோலிய துறையுடன் இணைந்து திரைக்குப் பின்னால் செயல்படும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் பெரும் தொகை கைமாறுகின்றன.

கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது அதிலிருந்து பெட்ரோல், டீசல் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு தவிர ரசாயன சாயங்கள், உரங்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நஞ்சுகள், பிளாஸ்டிக் ரசாயனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருட்களும் கிடைக்கின்றன. அவை எல்லாம் முறையாக பல நிறுவனங்களுக்கு கச்சா பொருளாகின்றன. மருத்துவம் உள்ளிட்ட பல துறையினர் இப் பொருட்களைப் பெற மிகப் பெரிய போட்டியே நிலவுகிறது. ஆனால் இவை அனைத்தின் விலையையும் ஏற்றாமல், பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த 4 பொருட்களான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் சரிவாயுவின் விலையை ஏற்றுவதில் மட்டும்தான் அரசு கவனமாக உள்ளது. பல மருத்துவ நிறுவனங்கள் இங்கிருந்து பெறப்படும் பெட்ரோலிய மெழுகை அடிப்படையாக வைத்து தயாரிக்கும் களிம்புகளை, நமக்கு 500 மடங்கு விலைக்கு விற்கின்றன. இவர்களுக்கு விலை ஏற்றினால், அவர்களின் நிதிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை சுத்திகரித்து பிரித்து எடுத்த பிறகு மிதமாக உள்ள கழிவு தான் சாலைகள் போட பயன்படுத்தப்படும் தார். இந்த தாரை கூட நல்ல விலைக்கு விற்கிறது பெட்ரோலியத் துறை.

இது தவிர, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கச்சா எண்ணெய் மீது தீர்வை வசூலிக்கிறது. அது 2002இல் டன்னுக்கு 900 ரூபாயாக இருந்தது. தற்பொழுது 1800 ரூபாயாக உருமாறி, 2500ரூபாயாக வளர்ந்து நிற்கிறது. இது போன்ற பல வருவாய்கள், இந்நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில் இடம் பெருவதில்லை. இருப்பினும் இந்த தீர்வைகள் மற்றும் வரிகளின் ஏற்றத்தைதான் பிரணாப் முகர்ஜி கணக்கிட்டு, 10 சதவிகித வளர்ச்சி என்று அடிக்கடி புலம்புகிறாரோ! பச்சைப் பொய்கள், போலி புள்ளிவிவரங்கள் என மோசடி வேலைகளை திறம்படச் செய்யும் ஓர் அரசு, தன்னை மக்கள் நல அரசு என்று அழைத்துக் கொள்வதும் இந்நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையே!

விலைவாசி உயர்வு சாமானியனுக்கு கேடு. வியாபாரிக்கு லாபம். வியாபாரிகள் இதனை சாக்காக வைத்து பொருட்களின் விலையை, தங்கள் விருப்பம் போல் ஏற்றி விடுகின்றனர். வட்டி விகிதம், பணவீக்கம் எல்லாம் நஞ்சு போல் ஏறி, விளிம்புநிலை மக்களின் கழுத்தில் சுறுக்காக விழுகிறது. கடந்த ஆண்டின் சராசரி பணவீக்கம் 13 சதவிகிதமாக நிலைத்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 17 சதவிகிதமாக உயர்ந்து நிற்கிறது. விலைவாசி உயர்ந்தவுடன் சமூகத்தில் எழும் கூச்சலைத் தொடர்ந்து, சில சலுகைகளும் அறிவிப்புகளும் ஊடகங்களில் வரும். கடந்த ஆண்டு தமிழக அரசு உணவகங்களில் "ஜனதா உணவு' வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. ஆனால் அது கோபாலபுரத்திலாவது கிடைக்கிறதா என்பதை, அரசுதான் குழு அமைத்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை கூர்ந்து நோக்கினால், ஒன்று மட்டும் இயல்பாகவே தெரிகிறது. உலக மயத்தில் அரசாங்கம் என்பது பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிகளின் நிர்வாகங்களை நடத்தி, இசைவான சூழலை வழங்கும் அமைப்பாகப் பரிணாமம் பெற்றுள்ளது.

பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தினால், இந்தியாவின் பெட்ரோலிய சந்தையின் தேவையை குறைக்கலாம். பொதுப் போக்குவரத்தை திட்டமிட்டே மேம்படுத்தாமல், பேருந்து கட்டணங்களை கண்மூடித்தனமாக உயர்ததி, தனி நபர் அனைவரின் மீதும் ஒரு வாகன மோகத்தை, தேவையை ஏற்படுத்தியுள்ளது அரசு. இந்த நிலைதான் இந்தியாவின் எண்ணெய் தேவை பன்மடங்கு உயர்வதற்குக் காரணம். சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்கான ஒரே வழி, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதுதான். தவிர்க்க முடியாத தேவை ஏற்பட்டால் மட்டுமே வாகனம். இல்லையேல் கூட்டுப் பயணம் என நாம் கூட்டாக முடிவு செய்வதுதான் காலம் கோரும் முடிவாக உள்ளது.

உலகமய சூறாவளியில் நம் உரிமைகள் எல்லாம் கரைந்து வருகின்றன. மக்கள் நல அரசு, தான் ஏற்ற சட்டக் கடமைகளை செய்ய மறுத்து, நம் வாழ்வுரிமையைப் பறித்து வருகிறது. மூன்றாம் உலக நாடுகளில் இனி மக்கள் கிளர்ந்தெழுந்து தங்கள் இருப்பை உறுதிப்படுத்தாவிட்டால், உயிருடனேயே மரண சான்றிதழ்கள் பெற நேரிடும்.

Pin It