ஈழத் தமிழர்கள் மீது இந்திய ராணுவம் - சிங்கள ராணுவத்தோடு நடத்தி வரும் இனப் படுகொலைக்கு உத்தரவிட்டு வழி நடத்தி வருபவர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா தான் என்பது நாட்டுக்கு வெளிச்சமாகிவிட்டது. ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நளினிக்கு கருணைப் பார்வை இருந்ததுபோல் நடந்தவையெல்லாம் திட்டமிட்ட நாடகம் என்பதும் அம்பலமாகிவிட்டது.

சோனியாவின் கடந்த கால அரசியலை உன்னிப்பாகக் கவனித்தால், எப்போதுமே அவர் குரூரமான பழிவாங்கும் உணர்வுடன் செயல்படக் கூடியவர் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஜெயின் ஆணைய விசாரணை அறிக்கையைக் கூறலாம். ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆராய அவர் மரணத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் தான் ஜெயின் ஆணையம். அந்த ஆணையம் இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தபோது அதை அரசியலாக்குவதில் தீவிரம் காட்டி, மத்தியில் நடந்து கொண்டிருந்த அய்க்கிய முன்னணி ஆட்சியையே கவிழ்த்தவர்தான் சோனியா. அந்த முன்னணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க.வை - அமைச்சர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் வெளியிலிருந்து காங்கிரஸ் தரும் ஆதரவை திரும்பப் பெறும் என்று மிரட்டினார்; என்ன நடந்தது?

ஜெயின் கமிஷன் அறிக்கையை முன் கூட்டியே 'இந்தியா டுடே' என்ற பா.ஜ.க. ஆதரவு ஏடு வெளியிட்டவுடன் நவம்பர் 11 ஆம் தேதி - கல்கத்தா நேதாஜி இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பேரணியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சீதாராம் கேசரி இது பற்றிப் பேசினார். "இந்த அறிக்கைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. இதனால் அய்க்கிய முன்னணிக்கு காங்கிரஸ் தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலையும் வராது".

அதே நாளில் காங்கிரஸ் தலைவர்களான ஜிதேந்திர பிரசாத், கருணாகரன் ஆகியோர் டெல்லியில் பேசுகையில் இதற்கு நேர்மாறாக இந்த அறிக்கையை அலட்சியப்படுத்த முடியாது என்று பேசினார். இவர்கள் சோனியாவின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேசரியின் - எதிர்ப்பாளரான அர்ஜுன் சிங் முதலில் இதில் அடக்கி வாசித்தவர், சோனியாவை சந்தித்தப் பிறகு, தீவிரம் காட்ட ஆரம்பித்தார். இதை வைத்து கேசரியின் முக்கியத்துவத்தை குறைக்கலாம் என்பது இவரின் திட்டம்.

நவம்பர் 13-ம் நாள் பிரதமர் குஜ்ரால், கேசரியை அழைத்து விருந்தளித்து, பத்திரிகையில் வந்துள்ள ஜெயின் கமிஷன் அறிக்கையைப் பற்றி விவாதித்தார். குஜ்ரால் எடுத்து வைத்த வாதங்களில் கேசரி முழு திருப்தி அடைந்தார். அடுத்த நாள் அர்ஜுன் சிங்கிடமும் மூத்த தலைவர்களுடனும், முதல் நாள் பிரதமர் அளித்த விருந்தில் நடந்த விவாதத்தை கேசரி விளக்கும் போது, அவர்கள் கேசரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக் கிறார்கள். ஜெயின் அறிக்கையை பெரிதுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நிலையை கேசரி ஊகித்துக் கொண்டார். அதற்குப் பிறகு தான் வேறு வழியின்றி சோனியாவை சந்தித்திருக்கிறார். சோனியா கேசரியை எச்சரிக்கிறார். அய்க்கிய முன்னணி ஆட்சியைக் கலைக்க இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அடுத்த நாள் கேசரி கூட்டிய காங்கிரஸ் காரிய கமிட்டியை, முக்கிய உறுப்பினர்கள் புறக்கணித்து விட்டார்கள். கட்சிக்குள் தான் தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்த கேசரி, தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஜெயின் அறிக்கையை கையில் எடுக்க முடிவு செய்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜெயின் அறிக்கையை விவாதிக்கவே அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரசார் முடிவுசெய்து, அவையில் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள். ஜெயின் ஆணையம் - ராஜீவ் கொலையில் தி.மு.க.வை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களையுமே குற்றம் சாட்டியிருந்தது. தி.மு.க.வைப் பழிவாங்கத் துடித்த சோனியா, அய்க்கிய முன்னணி ஆட்சியிலிருந்து தி.மு.க.வை விலக்க வேண்டும் என்று காங்கிரசார் மூலம் நாடாளுமன்றத்தில் ரகளை செய்ய வைத்தார். இல்லையேல் ஆட்சிக்கு வெளியிலிருந்து தரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று மிரட்டினார்.

தி.மு.க.வை வெளியேற்ற - பிரதமர் குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முன்னணி ஆட்சி மறுத்தது. ஜெயின் ஆணைய அறிக்கையை ஊதிப் பெரிதாக்கிய சோனியா காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற்று, மத்திய ஆட்சியை பதவி விலக வைத்தார்.

இவர் தான் சோனியா!