அருந்ததியினர் மீது வன்முறை

உடுமலைப்பேட்டை அருகே உள்ள சாளரப்பட்டி எனும் கிராமத்தில் - தீண்டாமைக் கொடுமையை எதிர்த்த அருந்ததியினர், சாதி வெறித் தாக்குதலுக்குள்ளாயினர். ஊர்ப் புறக்கணிப்புக்கும், பொருளாதாரத் தடைக்கும் உள்ளானதோடு - சாதி ஆதிக்கவாதிகள், வீடுகளுக்கும் தீ வைத்தனர். காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் அவலத்தை எதிர்த்து, உடுமலையில் சாலை மறியல் செய்த பெரியார் திராவிடக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, கோவையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பிணையில் வெளிவராத பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்தே சாளரப்பட்டியில் பதட்டம் தொடங்கிவிட்டது. கிராமத்திலுள்ள 5 தேனீர்க் கடைகளிலும், இரட்டைக் குவளை வைக்கப்பட்டு, அருந்ததி மக்களுக்கு தனிக் குவளையில் தேனீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் 5 தேனீர்க் கடைகளை வன்னியர் சாதியினரும், இரண்டு தேனீர்க் கடைகள் செட்டியார் சாதியினரும் நடத்துகிறார்கள். இந்தத் தீண்டாமையை எதிர்த்து தங்களுக்கு தனிக்குவளை வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை சுட்டிக்காட்டி, தங்களையும் சமத்துவமாக நடத்துமாறு, உள்ளூர் அருந்ததியினர் அமைதியாக வைத்த வேண்டுகோளை, ஊர் சாதி ஆதிக்கவாதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

ஏழு தேனீர்க் கடைகளையும் மூடிவிட்டனர். சில நாட்கள் கழித்து செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர் தேனீர்க் கடையைத் திறந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்னிய சமூகத்தினர் செட்டியார் தேனீர்க்கடை மீது தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் - அதே கிராமத்தில் சமூகநலக் கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதிலும் அருந்ததியினர் அனுமதிக்கப்படுவதில்லை.

தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த தால் பொருளாதாரத் தடைக்குள்ளாக்கப்பட்டு, ஊர் விலக்கம் செய்யப்பட்ட அருந்ததியினர், வாழ்வுரிமை இழந்து நின்ற நிலையில், அருகே உள்ள நகரமான உடுமலைப் பேட்டையில் 18 ஆம் தேதி காலை அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் கிராமத்துக்கு திரும்பியவுடன் ஆதிக்க சாதியினர் பெரும் கூட்டமாகத் திரண்டு வந்து, சாலை மறியல் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறை வேடிக்கைதான் பார்த்தது. பின்னர், அதே கூட்டம் அருந்ததியினர் குடிசைக்கும் தீ வைத்தது.

அப்போது கிராமத்தில் முகாமிட்டிருந்த உடுமலைப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பு அதிகாரி எஸ்.ஈசுவரன் கூறுகையில், “காவல்துறையினர் 20 பேர் மட்டுமே இருந்தனர். தாக்குதலுக்கு வந்தவர்கள் நூறுக்கும் அதிகம். எனவே அவர்கள் சக்திக்கு முன் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார். இந்தத் தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். அருந்ததியினர் தாக்கப்பட்டதையும், காவல்துறையின் அலட்சியத்தையும் கண்டித்து, உடுமலையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அதே 18 ம் தேதி இரவு 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட கழகத்தின் மாவட்ட செயலாளர் கருமலையப்பன், கழகப் பொறுப்பாளர்கள் யாழ். நடராசன், பாக்கியநாதன், விசு, அரிதாசு மற்றும் அருந்ததியர் இலக்கியக் கழகம், புரட்சிப் புலிகள் அமைப்பைச் சார்ந்த தமிழ் முருகன், ராஜேந்திரன், மயில்சாமி, பாலகிருஷ்ணன், பெருமாவளவன், ராசு, முருகானந்தம், கவுதம் எனும் சக்திவேலு ஆகிய 13 பேரையும் காவல்துறை கைது செய்து, பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கோவை சிறையில் அடைத்துள்ளது.

சாளரப்பட்டியில் 8 ஆம் வகுப்பு வரை சிறுவர்கள் படிக்கக்கூடிய பால்வாடியில் அருந்ததியர் சிறுவர்களும், பிறசாதி சிறுவர்களும் படித்து வந்தனர். சிறுவர்களையும், சாதி வெறிவிடவில்லை. பிறசாதி சிறுவர்கள், அருந்ததி சாதி சிறுவர்களை சாதியைச் சொல்லி திட்டியுள்ளனர். அருந்ததி சிறுவர்கள், கண்ணீர் விட்டு பள்ளியிலிருந்து வெளியேறி இனி, இந்த ஊரிலேயே நாங்கள் இருக்க மாட்டோம் என்று தேம்பித் தேம்பி அழுதனர். சாளரப்பட்டி இப்போது முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

காவல்துறையினர், ஊருக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. தாக்குதலுக்கு உள்ளான அருந்ததியினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ள காவல் துறை, தாக்குதல் நடத்திய ஆதிக்கசாதியினர் மீது பிணையில் வரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க திருப்பூர் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி சென்றபோது, அவரையும், காவல்துறை ஊருக்குள் முதலில் அனுமதிக்க மறுத்தது. கடும் போராட்டத்துக்குப் பிறகு தான் அவர் உள்ளே சென்றார். நிலைமையை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து, சாதி வெறித் தாக்குதலைக் கண்டித்துள்ளதோடு, அருந்ததியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தி பேட்டி அளித்துள்ளார்.

ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமானும் கடும் போராட்டத்துக்குப் பிறகே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க, காவல்துறை அனுமதித்தது. சாளரப்பட்டியில் வாழும் அருந்ததி மக்கள், ரேஷன் கடைக்குப் பொருள்கள் வாங்கச் செல்ல முடியவில்லை. ஆதிக்கசாதியினர் பகுதியில் தான் ரேஷன் கடையே இருக்கின்றது. கிராமத்தில் பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டன. மக்களின் உயிர் வாழும் உரிமையே பறிக்கப்பட்டுள்ளது. பகுதி முழுதும் பதட்டம் நிலவுகிறது.