ஈழத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திமாக திகழும் பிரபாகரன் - உயிர் தான், சிங்கள பார்ப்பன சக்திகளுக்கு ‘சிம்ம சொப்பன’மாகி விட்டது.

1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி பிரபாகரன் இறந்து விட்டதாகவே ‘இந்து’, ‘தினமலர்’ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டன. மாத்தையா பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டார் என்று செய்தி போட்டு, இறுதி ஊர்வலமும் நடத்தி மகிழ்ந்தனர் - பார்ப்பான் புளுகு அம்பலமானது.

2005 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி பார்ப்பன ‘இந்து’ மீண்டும் “பிரபாகரனுக்கு” ஒரு மரணத்தை பரிசாக வழங்கி மகிழ்ச்சிக் கூத்தாடியது. சுனாமி பேரலையில் பிரபாகரன் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்று செய்தி வெளியிட்டது. செய்தி வெளியிட்டதோடு மட்டும் ‘இந்து’ ஏடு நிற்கவில்லை! இந்த பொய்ச் செய்தியை வைத்து “பிரபாகரன் எங்கே?” என்று மானவெட்கமில்லாமல் தலையங்கமும் தீட்டியது.

அதே பார்ப்பன சிங்கள கும்பல் இப்போது பிரபாகரன் சிங்களப் படை குண்டுவீச்சில் படுகாய மடைந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு கும்மாளமடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு ‘அண்டப்புளுகுவை’ தொடங்கி வைத்தவர் டி.பி.ஜெயராஜ் என்ற கனடாவில் வாழும் சிங்கள அரசின் கைக்கூலி! அவர் தனது சொந்த இணையதளத்தில் நவம்பர் 28 ஆம் தேதி விமானப்படை குண்டு வீச்சில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக ஒரு கதையை எழுதினார். அவ்வளவுதான். இந்திய பார்ப்பன ஊடகங்கள் எந்த அடிப்படையும் இல்லாத இந்த செய்தியை ஊதிப் பெரிதாக்கின. அப்போது சிங்கள அரசுகூட இப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை.

முதலில் கொழும்பிலிருந்து வெளி வரும் ‘நேஷன்’ என்ற பத்திரிகை இதை வெளியிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் இதை மறுத்தது. இப்போது சிறீலங்கா அரசுக்கு சொந்தமான ‘டெய்லி நியூஸ் பத்திரிகை’ பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் தேதியே, ராணுவம் குண்டுவீசியதாகவும், அதில் படுகாயமடைந்த பிரபாகரனை இப்போது வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடப்பதாகவும், இந்தத் தாக்குதல் நவம்பர் 26 ஆம் தேதி மாலை 5.35 மணிக்கு நடந்ததாகவும் புளுகியிருக்கிறது. அதை பார்ப்பன ‘இந்து’வும், அப்படியே வெளியிட்டிருக்கிறது.

நவம்பர் 28 ஆம் தேதி தாக்குதல் நடந்தது என்கிறார் டி.பி.ஜெயராஜ். நவம்பர் 26 ஆம் தேதி தாக்குதல் நடந்தது என்கிறது, இலங்கை அரசு பத்திரிகை. நவம்பர் 25 ஆம் தேதியே குண்டு வீச்சுக்கு பிரபாகரன் ஆளாகி, இடிபாடுகளில் சிக்கி, கை கால் எலும்புகள் முறிந்து விட்டதாக, இன்னும் சில ஏடுகள் எழுதுகின்றன. இவை எல்லாமுமே கடைந்தெடுத்த பொய் என்பது உலகுக்கே தெரியும்.

நவம்பர் 27 ஆம் தேதி மாலை தொலைக்காட்சியில் நேரே தோன்றி பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்தியதை உலகம் முழுதும் ஊடகங்கள் ஒளிபரப்பின. அதன் பிறகு, டிசம்பர் 14 ஆம் தேதி பாலசிங்கம் நினைவு நாளன்று பிரபாகரன் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்திய செய்தியும் படங்களுடன் பத்திரிகைகள் வெளியிட்டன. ஆனாலும், உளவுத் துறையும், பார்ப்பன சிங்கள கும்பலும் சேர்ந்து ‘மரண வியாபாரம்’ செய்கின்றன!

உலகத்தரம் வாய்ந்த ஏடு என்று பீற்றிக் கொள்ளும், ‘இந்து’ பார்ப்பான்களுக்கு சூடு, சொரணை எதுவுமே கிடையாது. பொய்யைப் புளுகுவதில் மஞ்சள் ஏடுகளையும் மிஞ்சி நிற்கிறது. ‘பொய்யைப் புளுகினாலும் பொருத்தமாகப் புளுங்கடா, போக்கத்தப் பசங்களா” - என்று தான் இந்த “ஜென்மங்களைப்” பார்த்துக் கூற வேண்டியிருக்கிறது.