மொய்லி அறிக்கை எரித்து கொளத்தூர் மணி உரை

"பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அளிக்காமல் இருக்க மத்திய அமைச்சரவைக்குள்ளே சதி நடப்பதை நாம் கவனிக்க வேண்டும். மய்ய அரசில் கல்வி, வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பெயரளவுக்குத் தான் இட ஒதுக்கீடு உள்ளது. அதை சரியான முறையில் நிரப்புவது இல்லை.

மண்டல் குழு இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் என 52 விழுக்காடு மக்களை அடையாளம் காட்டியது. அதன் பிறகு மேலும் சில சாதிகள் சேர்க்கப்பட்டு தற்போது 60 விழுக்காடாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மய்ய அரசின் கல்வியில் இடஒதுக்கீடு என்பதே முழுமையாக இல்லை. உயர்கல்வியில், 60 விழுக்காடாக உள்ள மக்களுக்கு 27 விழுக்காடு இடங்களைக் கொடுப்பதற்கே உயர்சாதியினர் ஏற்றுக் கொள்ள மனமின்றி போராடுகிறார்கள்.

தகுதி, திறமை போய்விட்டது என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். ஆனால் தனியார் நடத்தும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வெறுமனே தேர்வு பெற்றால் போதும் என்று கூறி நிறைய நன்கொடை பெற்றுக் கொண்டு கல்லூரி நிர்வாகம் சேர்க்கும் போது மட்டும் தகுதி, திறமை போய்விடாதா? இதைப் பற்றி பார்ப்பனர்கள் எவரும் வாய் திறப்பதில்லையே ஏன்?

தகுதி, திறமை பேசும் பார்ப்பனர்கள் அதை இந்திய அளவில் மட்டுமே பேசுகிறார்கள். இந்திய கல்வி நிறுவனங்களில் உலக அளவில் தகுதி, திறமை உள்ளவர்களை சேர்க்க பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்வார்களா? உயர் கல்வியில் படித்து முடிக்கும் பார்ப்பனர்களில் 80 விழுக்காடு வெளிநாட்டுக்குச் சென்று வேலையில் அமர்கிறார்கள். ஆனால், திருமணம் செய்யும்போது மட்டும் தன் சொந்த சாதியில் திருமணம் செய்து சாதித் தன்மை கெட்டிப்பட்டுப் போக அவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டிற்கு எதிராக பார்ப்பனர்கள் நடத்தக் கூடிய சிறு, சிறு போராட்டங்களைக்கூட பார்ப்பன ஊடகங்கள் மிகவும் ஊதி பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. மண்டல் குழு 2 ஆண்டுகள் ஆய்வு செய்து அறிக்கைத் தந்தது; ஆனால் வீரப்ப மொய்லி குழு சில மாதங்கள் மட்டும் ஆய்வு செய்து 27 விழுக்காட்டை படிப்படியாகத்தான் கொடுப்போம் என்று கூறுவது எவ்வகையில் நியாயம்? முதல்முறையாக இட ஒதுக்கீடு பெறும் வாய்ப்புள்ளவர்கள் மிகப் பெரும்பான்மையான அளவில் இதனால் வாய்ப்பை இழப்பார்கள். எனவே, அமைதியாக நாம் இருந்தால், இருப்பதையும் இழக்க வேண்டி வரும்” என்றார்.