அடுக்கடுக்கான போராட்டங்கள்

போராட்டங்கள் - மறியல்கள் - ஆர்ப்பாட்டங்கள் - உருவ பொம்மை எரிப்புகள் என்று 2006 ஆம் ஆண்டு முழுதும் பெரியார் திராவிடர் கழகச் செயல்வீரர்கள் போராட்டக் களத்திலே நின்றனர். முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் திடீர் என சில மணி நேரங்களிலேயே களத்தில் இறங்கி நடத்தப்பட்ட போராட்டங்கள் என்று தோழர்கள் களப்பணியாற்றி - கைதானார்கள். மாநாடுகளும், பிரச்சாரப் பயணங்களும், கூட்டங்களும் புயல் வேகத்தில் நடந்து முடிந்துள்ளன. 600 பக்கங்களைக் கொண்ட ‘சோதிடப் புரட்டு’ நூலையும் ‘ஒப்பந்தங்களை மீறியது யார்’, ‘பறிபோகும் இடஒதுக்கீட்டு உரிமைகள்’ என்ற சிறு வெளியீடு களையும் கழகம் வெளியிட்டது.

பெரியார் கொள்கைகளுக்காக உயிர்த் துடிப்புடன் களத்தில் நிற்கும் இயக்கமாக நடுநிலையாளர்களாலும், இன உணர்வாளர்களாலும், பகுத்தறிவாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரியார் திராவிடர் கழகத்தின் 2006 ஆம் ஆண்டு களப்பணிகள் பற்றிய தொகுப்பு:

ஜன.10 : திருச்சியிலிருந்து கோவை வரையுள்ள தொடர்வண்டித் துறை - பாலக்காடு கோட்டத்தின் கீழ் சேர்க்கப் பட்டதால், மலையாளிகள் ஆதிக்கம் தலை விரித்தாடுவதை சுட்டிக்காட்டி, தொடர்ந்து பொதுச் செயலாளர் கோவை. இராம கிருட்டிணன் தலைமையில் கழகம் போராடியதால் - மத்திய அரசு பணிந்து, சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய கோட்டத்தை, தொடர் வண்டித்துறை அமைச்சகம் அறிவித்தது. இது கழகத்தின் நீண்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

இதற்குப் பிறகு, கோவையை மட்டும், பாலக்காட்டுப் பிரிவிலேயே தக்க வைக்கும் முயற்சிகளை மலையாள அதிகாரிகள் மேற்கொண்டனர். இதை எதிர்த்து, அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து ‘சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்புக் குழு’ ஒன்றை கழகம் உருவாக்கியது. அந்த அமைப்பின் சார்பில், சேலம் கோட்டத்திலே கோவையை சேர்க்க வேண்டும் என்று மய்ய அரசுக்கு தந்திகள் அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தந்திகள் குவிந்தன.

ஜன.30 : தமிழ் ஈழ மக்களுக்கு எதிரான அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்து சேலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பிப்.10 : கோவை - பொள்ளாச்சி - உடுமலை - பழனி - திண்டுக்கல் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றக் கோரி கோவை மாவட்டக் கழகம் - 50,000 பொது மக்கள் கையெழுத்தை வாங்கியது. இதற்காக இரண்டு மாதகாலம் தோழர்கள் அயராது உழைத்தனர். கையெழுத்துகளடங்கிய மனுவை - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ.விடம் தோழர்கள் வழங்கியதைத் தொடர் வண்டித்துறை அமைச்சர் லல்லுவிடம் நேரில் வைகோ கையளித்தார். கழகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றது; திட்டத்தை லல்லு அங்கீகரித்து நிதி ஒதுக்கீடு செய்தார்.

பிப்.13 : கோவை மாவட்டம் அவினாசி அருகேயுள்ள கிளாளகுளம் எனும் சிறிய கிராமத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் - பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க வெறி சக்திகள் - கழகக் கொடிகளை வெட்டி சாய்ப்பது; விளம்பரத் தட்டிகளை எரிப்பது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறை சாதி வெறி சக்தி களுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. தொடர்ந்து கழகப் புகார்களை அலட்சியம் செய்து, வன்முறைக் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்த சேவூர் காவல்நிலையத்தைக் கண்டித்து கழகம் மறியல் கிளர்ச்சியை நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலையில் நடந்த மறியலில் 137 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிப்.18 : புதுவை மாநில பெரியார் திராவிடர் கழக சார்பில் - அரியாங்குப்பம் பெரியார் திடலில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சினையை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை முதன் முதலில் பெரியார் திராவிடர் கழகம் துவக்கியது.

பிப்.19 : சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், பி.ஆர். பாஸ்கரன் (பா.ம.க.), செந்திலதிபன் (ம.தி.மு.க.) உட்பட அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து ஈழத் தமிழர் ஆதரவு கூட்டத்தை கழகம் நடத்தியது.

மார்ச் 1 : முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக சட்டமன்றம், நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் கொந்தளித்தனர். தீர்ப்பு வந்தவுடனேயே அடுத்த சில மணி நேரங்களில் கோவையில் கழக மாணவர்கள் நீதிமன்றத்தை எதிர்த்து முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 9 கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் 6: சென்னையில் கழக சார்பில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய - “ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?” நூல் வெளியிடப்பட்டது.

மார்ச் 8 : திருப்பூரில் கழகத்தினர் உலக மகளிர் தினத்தை கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு போல் நடத்தினர். பிப்ரவரி மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் - திருப்பூர் பகுதியில் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி - இந்து முன்னணிக் கும்பலைக் கழகம் கலங்கடித்தது. திருப்பூர் கழகத்தின் தீவிர களப்பணியை ‘திருப்பூர் வாய்ஸ்’ ஏடு பாராட்டி எழுதியது.

மார்ச் 12 : சேலத்தில் கழக சார்பில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு எழுச்சியுடன் நடந்தது. ஈழத் தமிழர்கள் மீதான ராணுவ அடக்குமுறைக் காட்சிகள் - கண்காட்சியாக வைக்கப்பட்டன.

மார்ச் 17 : கோவையில் அரசு உதவி பெறும் பள்ளி மைதானத்தில் விசுவ இந்து பரிஷத் என்ற மதவெறி அமைப்பு மாநாடு நடத்த அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து கழகம் போர்க்கோலம் பூண்டது. மதவெறி மாநாட்டை தடை செய்யக் கோரி ஈரோட்டில் மறியல் நடத்தி 300 தோழர்கள் கைதானார்கள். தோழமை அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றன. விசுவ இந்து பரிஷத்தின் தீண்டாமை, வர்ணாஸ்ரம பார்ப்பன முகமூடியைக் கிழித்து கழகம் மக்களிடம் பரப்பிய துண்டறிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மாநாட்டில் பேசிய விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் - ‘தீண்டா மையையோ, வர்ணாஸ்ரமத்தையோ, மனுதர்மத்தையோ நாங்கள் ஏற்க வில்லை’ என்று அறிவிக்கும் நிலையை கழகப் பிரச்சாரம் உருவாக்கியது.

மார்ச் 19 : கோவையில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை - கழகம் எழுச்சியுடன் நடத்தியது.

மார்ச் 24 : மார்ச் 24 முதல் 29 வரை பெரம்பலூர் மாவட்டத்தில் கழகம் தொடர் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.

மார்ச் 26 : மதுரையில் கழக சார்பில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு சிறப்புடன் நடந்தது.

ஏப்.2 :  சேலத்தில் பெரியார் திராவிடர் கழக செயற்குழு கூடி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என முடிவு எடுத்தது. ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ என்ற பெயரை ‘பெரியார் திராவிடர் கழகம்’ என்று மாற்றிட செயற்குழு முடிவு செய்தது.

ஏப்.22 - ஏப்.22, 23 : தேதிகளில் ஏற்காட்டில் கழகப் பயிற்சி முகாம் நடந்தது.

ஏப்.28 - ஏப். 28 : முதல் மே 2 வரை திண்டுக்கல்லில் கழகப் பயிற்சி முகாம் நடந்தது.

மே 1 : ‘மேட்டூர் கெம்பிளாஸ்ட்’ பார்ப்பன நிறுவனத்தில் பெரியார் தொழிலாளர் பேரவை தொடங்கப்பட்டது.

மே 23 : இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக - கோவையில் மனித சங்கிலி போராட்டத்தை கழகம் முன்னின்று நடத்தியது.

மே 26 : ஈரோட்டில் உயர் கல்வியை எதிர்க்கும் பார்ப்பன மாணவர்களின் கொடும்பாவியை எரித்து 100க்கு மேற்பட்ட தோழர்கள் கைதானார்கள்.

இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன மாணவர்களைக் கண்டித்து புதுவை கழகம் ஜிப்மர் மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டம், சாலை மறியல் நடத்தியது.

மே 27 : கோவையில் கழகத் தோழர்களுக்கு இரண்டு நாள் ‘மந்திரமா, தந்திரமா’ பயிற்சியை மூத்தப் பகுத்தறிவாளர் பிரேமானந்தா வழங்கினார்.

மே 29 : உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோக்கு 27 சதவீத இடஒக்கீடு தரப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அறிவித்ததைத் தொடர்ந்து டெல்லி வட மாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் கலவரத்தில் இறங்கியதை தொலைக்காட்சி ஊடகங்கள் மிகைப்படுத்தி ஒளிபரப்பின, என்.டி.டி.வி., சி.என்.என். ‘டைம்ஸ் நவ்’ போன்ற தொலைக்காட்சிகளைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டக் கழகம் இடஒதுக்கீட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஜூன் 2 : கருநாடக மாநிலத்தைச் சார்ந்த நிர்வாண சாமியார்கள் - நிர்வாணமாக மேட்டூரில் நுழைகிறார்கள் என்பதை அறிந்த கழகச் செயல் வீரர்கள் 30 நிமிடங்களில் போராட்டத்துக்குத் தயாரானார்கள். பெண்கள் செருப்பு துடைப்பத்துடன் திரண்டனர். மேட்டூர் ஆர்.எஸ்.புரத்தில் நிர்வாண சாமியார்களைத் தடுக்க தோழர்கள் திரண்டதை அறிந்த சாமியார்கள் - தொழிற்சாலை ஒன்றுக்குள் நுழைந்து அடைக்கலம் தேடினர். 2 நாள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் நடந்தது. இறுதியாக காவல் துறையினர் சாமியார்கள் நிர்வணத்தை மறைக்க, துணிக் கூண்டு அமைத்து பாதுகாப்பாக ஊர் எல்லை வரைப் போய் அனுப்பி வைத்தனர். மேட்டூர் நகரமே பரபரப்பானது.

ஜூன் 4 : ஈரோடு மாவட்டம் காசி பாளையத்தில் கழகப் பயிற்சி முகாம் நடந்தது.

ஜூன் 5 : உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்டக் கழக சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு சூலூரில் முடிவடைந்தது.

ஜூன் 6- 26 : சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி, கழக சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜூன் 16: ஈழத்துக்கு நாடாளுமன்றக் குழுவை அனுப்பக் கோரி கழக சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்.

ஜூன் 19 : தமிழக தொடர்வண்டித் துறையில் பணிகளுக்கு வடமாநிலங்களைச் சார்ந்த பல்லாயிரம் பேர் சென்னையில் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் குவிந்தனர். ரயில் நிலையமே திக்குமுக்காடிப் போனது. காலையில் செய்தி கிடைத்தவுடன் அன்று மாலையே பெரியார் திராவிடர் கழகம் தமிழ்நாடு ரயில்வே பணியில் தமிழர்களையே வேலையில் அமர்த்தக்கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் மறியல் செய்தது; கழகத் தோழர்கள் கைதானார்கள்.

உடுமலை வட்டம் பெதம்பட்டி கிராமத்தில் தலித் மக்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் வழங்கக் கோரி ஆதித் தமிழர் பேரவையுடன் இணைந்து கழகம் மறியல் போராட்டம் நடத்தியது.

சேலம் மாநகரம் கிழக்குப் பகுதியில் தந்தை பெரியார் கருத்துகளை 2 லட்சம் துண்டறிக்கைகளாக அச்சிட்டு காலை முதல் இரவு வரை 2 நாட்கள் தோழர்கள் வழங்கினார்கள்.

ஜூன் 21 :  தமிழக தொடர் வண்டித் துறையில் தமிழர்களுக்கு வேலை கோரி மதுரையில் கழகத் தோழர்கள் மறியல் செய்து கைதானார்கள்.

ஜூன் 25 : மேட்டூரில் நாத்திகர் விழா - பேரணி எழுச்சியுடன் நடந்தது. கவிஞர் அறிவுமதி இயக்குனர் சீமான் பாராட்டப்பட்டனர். 600 பக்கங்களைக் கொண்ட ஈழத்து அறிஞர் நக்கீரன் எழுதிய சோதிடப் புரட்டு நூல் கழக சார்பில் வெளியிடப்பட்டது.

ஜூலை 3 : கோவையில் சிங்கள ராணுவத்தினருக்கு இந்திய பாதுகாப்புப் படை பயிற்சி மய்யத்தில் - பயிற்சி அளிப்பதை எதிர்த்து - கோவையில் மறியல் செய்து 300 தோழர்கள் கைதா னார்கள்.

ஜூலை 7: தனியார் கல்வி நிறுவனங்களின் நன்கொடை கொள்ளையைக் கண்டித்து கழக சார்பில் கல்வியை ஏலம் விடும் ஆர்ப்பாட்டம் கோவையில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கல்விக்குமான நன்கொடை கட்டணத்தை விலைப் பட்டியலாக எழுதி கழுத்தில் மாட்டிக் கொண்டு தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஜூலை 8 : கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தந்து - கால்பந்து விளையாட்டைப் புறக்கணிக்கும் பார்ப்பனியத்தைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கழகத்தினர் கைதானார்கள்.

ஆக.1 : பெரியார் திரைப்படத்துக்கு அரசு நிதி உதவி வழங்கியதைக் கண்டித்த பார்ப்பன நடிகர் எஸ்.வி. சேகரின் கொடும்பாவி எரிப்புப் போராட் டம் சேலம், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர். எஸ்., வேலூர், ஆனைமலை, இளம்பிள்ளை, சென்னை, கோவை, உட்படப் பல்வேறு நகரங்களில் நடந்தது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆக.15 : ஈழத்தில் செஞ்சோலை காப்பகத்தில் இருந்த 62 மாணவிகளை சிங்கள ராணுவம் குண்டுவீசி கொலை செய்ததை உலகமே எதிர்த்தது. ஆகஸ்டு 15 இல் கோவையில் கழகத் தோழர்கள் சிங்கள தேசியக் கொடியை எரித்து கைதானார்கள். சென்னை, மதுரை, கொளத்தூர், பொள்ளாச்சி, புதுவை, மேட்டூர், திருப்பூர் உட்பட பல்வேறு ஊர்களில் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. மேட்டூரில், நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் அணை, காந்தி நகர் மற்றும் ஈரோடு, ஓசூர், உடுமலை, மயிலாடுதுறை, பழனி, பல்லடம் போன்ற ஊர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மைகளை எரித்து தோழர்கள் கைதானார்கள். தாராபுரம், குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

செப்.10 : திருப்பூரில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு எழுச்சியுடன் நடந்தது.

செப்.12 : திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சிவசேனா மதவெறி சக்திகள் சந்தனம் பூசி அவமதித்ததைத் தொடர்ந்து - சிவசேனைத் தலைவர் பால்தக்கரேயின் உருவ பொம்மையை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் தோழமை அமைப் பினர் எரித்து 120 பேர் கைதானார்கள். கழகப் போராட்டத்தைத் தொடர்ந்து சிவசேனை இளைஞரணி தலைவர் பாலாஜி கைது செய்யப்பட்டான்.

அக்.3 : வேலூரில் கழகம் நடத்த இருந்த ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு காவல்துறை தடைவிதித்ததைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு - காவல்துறையின் தடை தகர்க்கப்பட்டது.

அக்.7 : சென்னையில் காலை முதல் இரவு வரை கழக சார்பில் ஒடுக்கப்பட் டோர் எழுச்சி மாநாடு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி எழுச்சியுடன் நடந்தது. கழகச் செயல் வீரர் பத்ரி நினைவாக இராயப்பேட்டையில் கழக சார்பில் படிப்பகம் திறக்கப்பட்டது.

நவம்.7: பிற்படுத்தப்பட்டோருக்காக 27 சதவீத இடஒதுக்கீட்டை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமுலாக்கக் கோரியும், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில், பொருளாதார வரம்பை புகுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் சம்பூகன் சமூக நீதிப் பயணத்தின் இரண்டாவது கட்டப் பிரச்சாரத்தை கழகம் துவக்கியது. நான்கு பிரச்சாரக் குழுக்கள், தூத்துக்குடி, பழனி, சென்னை, கோவிந்தப்பாடி (சேலம்) ஆகிய 4 முனைகளிலிருந்தும் புறப்பட்டு, நான்கு நாட்கள் 90 ஊர்களில் பிரச்சாரம் செய்து, 12 ஆம் தேதி திருச்சியில் சங்க மித்தன. அன்று திருச்சியில் வகுப்புரிமை மாநாடு எழுச்சியுடன் நடந்தது. வீரப்ப மொய்லி அறிக்கை எரிப்புக் கிளர்ச்சியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.

நவம்.17 : நவம்பர் 17 ஆம் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பங்கேற்றனர்.

நவம்.22 27 : சதவீத இடஒதுக்கீட்டை முடக்கும் வீரப்பமொய்லி அறிக்கையையும், பார்ப்பன உயர் சாதியினருக்கு 77.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் நாடாளுமன்ற மசோதாவையும் - தமிழகம் முழுதும் தோழர்கள் எரித்தனர். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியுடன் இணைந்து கழகம் இப்போராட்டத்தை நடத்தியது.

சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சிதம்பரம், சீர்காழி, கோவை திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, குமாரப் பாளையம், மன்னார்குடி, திருச்சி, உடுமலை, மேட்டூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் போராட்டம் நடந்தது. 500 தோழர்கள் கைதானார்கள்.

டிச.2 : மத்திய பஞ்சாயத்து அமைச்சராக உள்ள பார்ப்பனர் மணிசங்கர அய்யர், டெல்லியில் தனது மகள் திருமணத்துக்கு - ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அதிபர் ராஜபக்சே, முன்னாள் அதிபர்கள் சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை விருந்தினராக அமைத்தது - தமிழர்களைக் கொதிப்படையச் செய்தது. டிசம்பர் 3 ஆம் தேதி தனது தொகுதியான மயிலாடுதுறையில் கூட்டணி கட்சியினரை அழைத்து, மணி சங்கர அய்யர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருந்ததை அறிந்த தோழர்கள், தமிழின எதிர்ப்பைக் காட்ட கிளர்ந்து எழுந்தனர்.

சிறப்புப் பேருந்தில், குடும்பத்துடன், சென்னையிலிருந்து, மயிலாடுதுறை வருவதை அறிந்த புதுவை கழகத் தோழர்கள் வழியில் சாலை மறியல் நடத்தி, மணி சங்கர அய்யரின் பேருந்தை 4 மணி நேரம் தடுத்தனர். கழகத்தினர் கைதானார்கள். மயிலாடுதுறையில் டிசம்.2 ஆம் தேதியும், சீர்காழியில் டிசம்பர் 3 ஆம் தேதியும், அனைத்துக் கட்சித் தமிழர்களை இணைத்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. மானமுள்ள தமிழர்களே! மணி சங்கர அய்யரின் மானங்கெட்ட விருந்தை புறக்கணியுங்கள் என்று தொகுதி முழுதும் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மணி சங்கர அய்யர் வீட்டு விருந்தை - கூட்டணி கட்சியினர் முழுமையாகப் புறக்கணித்து, தங்களது உணர்வை வெளிப்படுத்தினர். வெகு சில காங்கிரசார் மட்டும் கடும் காவல்துறை சோதனைக்குப் பிறகு, விருந்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கழகப் போராட்டம் மணி சங்கர அய்யரைக் கதி கலங்க வைத்தது.

டிச.4 : முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரள அரசைக் கண்டித்து, தமிழ்நாட்டிலிருந்து உணவுப் பொருள்களை கேரள அரசுக்கு அனுப்பக் கூடாது என்று கோவை பாலக்காடு அருகிலுள்ள வாலையாறு சோதனைச் சாவடியில் கழகம் மறியல் போராட்டம் நடத்தியது.

டிச.7 : ஸ்ரீரங்கத்தில் இந்து வெறி சக்திகள் - பார்ப்பன தூண்டுதலால் - பெரியார் சிலையை உடைத்ததைத் தொடர்ந்து தோழர்கள் கொதித்து எழுந்தனர். ஈரோடு, மேட்டூர், பெரம்பலூர், சென்னை, சங்கராபுரம் ஆகிய ஊர்களில் பார்ப்பனர் பூணூல் அறுக்கப்பட்டதாகவும், பார்ப்பன மடங்கள் தாக்கப்பட்டதாகவும் 38 தோழர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு பிணையில் வெளிவர முடியாத கடும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் தோழர் இருவர் மீதும் தமிழக அரசு ஈரோடு தோழர்கள் நால்வர் மீதும் தேசப் பாதுகாப்பு சட்டத்தை ஏவியுள்ளது.

டிச.24 : கோவை மாவட்டக் கழக சார்பில் குத்தூசி குருசாமி படிப்பகத் திறப்பு விழா எழுச்சியுடன் நடந்தது. கழகத் தோழர்கள் மீது ஏவப்பட்டுள்ள தேசப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்து, தமிழகம் முழுதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தவும், ரூ.15 லட்சம் வழக்கு நிதி திரட்டவும், கோவையில் கூடிய கழக ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.