தலையங்கம் 

பெரியார் பணி முடிக்க வீறு கொண்டு எழுவோம் என்ற முழக்கத்தோடு நாம் தொடங்கிய பயணம் தொய்வின்றி நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை; வேத சோதிடக் கல்வி எதிர்ப்பு; அறநிலையத் துறையின் கீழுள்ள இந்துக் கோயில்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு; தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி பிரச்சாரப் பயணம்; 27 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பரப்புரை இயக்கம்; சேலம் இரயில்வே கோட்டம் அமைய தொடர் போராட்டம்; ஈழத் தமிழர் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு; டெல்லியில் ஆர்ப்பாட்டம்; கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக பிரச்சாரப் பயணம்; இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டம்; பெரியார்

சிலை சிறீரங்கத்தில் உடைக்கப்பட்டவுடன் பார்ப்பனர்களுக்குப் பதிலடி; அதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை; மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் பிரச்சாரங்கள்; நாத்திகர் விழாக்கள் என்று ஓய்வின்றி நமது பெரியாரிய பயணம் தொடருகிறது.

உண்மையான பெரியாரியலாளர்களும், தமிழின உணர்வாளர்களும் பெரியார் திராவிடர் கழகத்தின் இந்தப் பணிகளை மனம் திறந்து பாராட்டுகிறார்கள். இப்பணிகளுக்கு சிகரம் வைத்தாற் போல், நாம் புதைந்து கிடந்த பெரியார் எழுத்துக்களையும், பேச்சுகளையும் முழுமையாக வெளிக்கொணரும் பணியில் இறங்கியுள்ளோம். மிகக் கடுமையான பணி என்ற போதிலும் பெரியாரியலுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

1927 இல் தொடங்கி 1938 வரை 27 “குடிஅரசு” தொகுதிகளை வெளிக் கொணரும் இந்த முயற்சி பெரியார் திராவிடர் கழகத்துக்கு மகத்தான பெருமை சேர்க்கும் என்பதில் அய்யமில்லை. எதிர்கால வரலாறு, பெரியார் திராவிடர் கழகத்தின் இந்தப் பணியை பதிவு செய்யும். இந்த லட்சியக் கடமையில் தோழர்கள் ஒவ்வொருவரும் களமிறங்கிச் செயல்பட வேண்டியது அவசியமாகும். முதலில் கழகத்தினர் ஒவ்வொரு வரும் தொகுதிகளை வாங்குவதை கடமையாகக் கொள்ள வேண்டும். பகுதியிலுள்ள திராவிடர் இயக்கங்களின் தோழர்கள், முக்கிய பிரமுகர்கள், கல்வி நிறுவனங்கள், ஆய்வு மய்யங்கள், தொண்டு நிறுவனங்களை அணுகி விளக்கிக் கூறுங்கள்.

கல்வி நிறுவனங்களுக்கு, நூலகங்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கலாம் என்ற யோசனையை முன் வையுங்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்கூட செலவைப் பகிர்ந்து தொகுதிகளை வாங்கலாம். வாங்கி, அன்பளிப்பாகவும் வழங்கலாம் என்ற ஆலோசனையை முன்வையுங்கள். இயக்கத்துக்கு பெருமை சேர்க்கும் இந்தப் பெரியாரியப் பணியில் தோழர்களே! அர்ப்பணிப்புடன் கடமையை விரைந்து தொடங்குங்கள்.

கொளத்தூர் தா.செ.மணி
தலைவர்