கேள்வி: பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், நாட்டைமையாகா நிலையில் அவைகளை வெளியிடுவது சட்ட விரோதம் என்று ஒப்புக் கொள்வதாகத் தானே பொருள் என்று `விடுதலை'யில் கலி. பூங்குன்றன் எழுதியுள்ளாரே!

பதில் : நாட்டுடைமையாக்கினால் தான் - பெரியார் நூல்களை வெளியிட முடியும் என்பது பெரியார் திராவிடர் கழகத்தின் கருத்தல்ல; நாட்டுடைமையாகாமலே வெளியிட உரிமை உண்டு. அதனால் தான், ஏற்கனவே `குடிஅரசு' ஏட்டின் மூன்று தொகுதிகளையும், பெரியார் நூல்களையும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டு பரப்பி வருகிறது.

இப்போது வீரமணி, `அறிவுசார் சொத்துடைமை' கோரத் தொடங்கிவிட்டதால், அந்த முறை கேடான உரிமைகளை அவர் கோரக் கூடாது என்பதற்காகவும், பெரியார் நூல்களை வெளியிட விரும்பும் பலரும், இதன் காரணமாக தயங்கி ஒதுங்கி விடக் கூடாது என்பதற்கும் தான், கழகம், இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறது. பெரியாருடைய நூல்களை எவருக்கும், எந்த இழப்பீடும் தராமலேயே அரசு நாட்டுடைமையாக்க முடியும்.

பெரியார் பெரும் தொண்டர் திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு அரசு பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய - அன்றைய முதல்வர் கலைஞரும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குவதில் பிரச்சினையில்லை; அந்த உரிமை யாரிடம் இருக்கிறது என்பதே பிரச்சினை என்று கூறியதையும் நினைவுபடுத்துகிறோம்.

Pin It