சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்த தமிழ்ப் புலவர்களுக்கு குத்தூசி குருசாமி தொகுத்த வினாக் கணைகளை, சென்னையில் நடந்த குத்தூசி நூற்றாண்டு விழாவில் ‘சங்கொலி’ திருநாவுக்கரசு விளக்கினார். அவரது உரையின் தொடர்ச்சி:

சுயமரியாதை இயக்கத்தைப் பார்ப்பனர்களும் அவர்தம் தாசர்களும் எதிர்த்தனர். அவர்களோடு சேர்ந்து தமிழ்ப் புலவர்களும் எதிர்த்தனர். அவர்கள் சுயமரியாதை இயக்கம் தமிழை அழித்துவிடும் என்று கூறி வந்தனர். 1929 ஜூலை 7 ஆம் தேதியிட்ட குடியரசு இதழில் மொழிப் பற்றிக் குருசாமி எழுதினார். அதனை உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகின்றேன்.

“கலை போச்சு, காவியம் போச்சு என்று கூக்குரலிடும் பண்டிதக் குழுவினர்களே! தமிழ் மொழிக்காகப் பாடுபடுவதாயும், அதன் வளர்ச்சிக்காகவே அல்லும் பகலும் உழைப்பதாயும் சொல்லும் நீங்கள், அதன் வளர்ச்சயைத் தடுப்பதற்கு எவ்வாறு காரணமாய் இருக்கின்றீர்கள் என்பதைச் சற்று யோசித்துப் பார்த்தீங்களா?

இதர மேனாட்டு மொழிகளில் உள்ள நூல்களை அம்மக்கள் எவ்விதத்தில் வளர்க்கின்றார்கள்? பொதுவாக இந்துக்கள் எனப்படுவோர் தங்கள் மொழிகளை எவ்விதம் வளர்க்கிறார்கள்? மேனாடுகளில் ஒரு நூலின் பழைய பிரதியொன்று அபூர்வமாய்க் கிடைக்குமானால் அதைத் திருத்தி புதிய முறைகளோடு உயர்ந்த காகிதத்தில் அச்சிட்டு விற்கிறார்கள். அதுமாத்திரம் அல்ல. அந்நூலில் எது உண்மை, எது பொய், எந்தெந்த விஷயங்கள் ஆசிரியரின் கருத்துக்கு மாறுபட்டன என்கிற விவரங்களை எல்லாம் குறிப்புகள் மூலமாகக் காட்டி விடுகிறார்கள்.

தற்கால அறிவு வளர்ச்சிக்குப் பொருத்தமில்லாத விஷயங்கள் இருப்பின் அவைகளைக் கண்டித்து எழுதி, அந்நூலின் ஆசிரியர் இருந்த காலத்தில் அவ்வளவுதான் எழுதியிருக்க முடியும். அந்நூலாசிரியருக்கிருந்த சாதனங்கள் அதற்கு மேல், அவரது அறிவை வளரச் செய்யவில்லை என்பதாக வெகு தெளிவாய்க் குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும், அந்நூலாசிரியர் எதை முதல் நூலாகக் கொண்டு எழுதி இருக்கிறார்? அம் முதல் நூலிலிருந்து எடுத்துக் கையாண்டது எவ்வளவு? சொந்தமாக எழுதிய பாகம் எவ்வளவு? கட்டுக்கதை எவ்வளவு? இடைச்செருகலாய் வந்தது எவ்வளவு? என்று இவ்வாறாகத் துருவித் துருவி ஆராய்ந்து, புத்தகங்களைப் பதிப்பித்து இருக்கிறார்கள். இது மாத்திரமேயன்றி, பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போதும், இன்ன பாகம் பொய்யான கதை இன்ன பாகம் உண்மையில் நடந்தது. இன்ன பாகம் அறிவுக்குப் பொருத்தமில்லாதது, இன்ன பாகம் மனப்பாடம் செய்ய வேண்டியது, இன்ன பாகம் நல்ல நடையில் எழுதப்பட்டு இருக்கிறது என்று பிரித்துப் பிரித்து ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஆனால், பண்டிதர்களே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள். முதலாவது, பழைய பிரதிகளே நமக்கு மிஞ்சாத வண்ணம் பார்ப்பனர் செய்து வைத்த சூழ்ச்சியில் அகப்பட்டு, ஆடி பதினெட்டாம் தேதியன்று பழைய பிரதிகளை ஆற்றில் போட்டுவிட்டு, கன்னத்தில் அடித்துக் கொள்வதை ஒரு விழாவாக நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படியும் மிஞ்சினவைகளில் கிடைக்கும் ஒன்றிரண்டை ‘பழைய பிரதி பழைய பிரதி’ என்று அட்டைப் போட்டு காகிதம் அப்பளமாய் முறிகின்ற தன்மையிலும்கூட அலமாரியில் வைத்து, வெளியே ஒருவர் கையிலும் கொடுக்காமல் சூடம், சாம்பிராணி போடுவதோடு, ‘சரஸ்வதி பூசையன்று’ குப்பை கூளங்களை அதன் தலையில் போட்டு, இரண்டொரு எழுத்துகள் தெரிவதையும் மறைக்குமாறு, சந்தனத்தைத் தாராளமாகத் தெளித்துப் பூட்டி வைத்துக் கொள்கிறீர்கள். இதைவிட விசேஷமான விஷயம் என்னவெனில், அந்த நூல்களைக் கற்கும் முறையும், கற்பிக்கும் முறையும் ஆகும். நூலைக் கற்க ஆரம்பிக்குமுன், கடவுள் வணக்கம் சொல்லாமல் ஆரம்பிப்பது பெரிய பாவம் என்று கருதுகிறீர்கள். கடவுள் வணக்கம் இல்லாத நூலே நமது மொழியில் இல்லையென்றே சொல்லலாம்.

இன்னும் நூலை எழுதிய ஆசிரியர் ஒருவர் தவறாமல் கடவுள் அவதாரம், அல்லது ‘கடவுள் அனுக்கிரகம் பெற்றவர்’ என்றுதான் கற்பிக்கப்படுகிறோமேயொழிய, சாதாரண மனிதன் எழுதுகிறதாக ஒரு நூலுமே கிடையாது. இந்த நிலையில், நூலிலுள்ள விஷயங்களைப் பற்றியோ சொல்ல வேண்டியது இல்லை. ஒரு எழுத்து விடாமல், ‘அருள் வாக்கு’ என்ற முறையில் மனப்பாடம் பண்ண வேண்டுமேயொழிய அதன் அர்த்தத்தைப் பற்றியோ, அதன் பலனைப் பற்றியோ கேள்விகள் கிடையாது. ‘உலகெலாம்’ என்று கடவுள் அடி எடுத்துக் கொடுத்ததாகத்தான் முதலில் சொல்லுகிறீர்களேயொழிய ஆசிரியர் புத்தியால் பாடியதாகச் சொல்வதேயில்லை. அருணகிரிநாதர் சுப்பிரமணியக் கடவுள் அருளியதனால்தான் பாடியதாகச் சொல்லுகிறீர்களே யொழிய, சாதாரணமாய்ப் பாடியதாகச் சொல்லியதில்லை.

கம்பருக்குச் சரஸ்வதி நாக்கில் எழுதியதால்தான் இராமாயணம் பாட முடிந்தது என்றல்லவா மாணவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள்! ‘துமி’ என்ற வார்த்தைக்காக சரஸ்வதியே நேரில் அத்தாட்சியாக இருந்து சொன்னதாக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிற நீங்கள், ராமனுடைய பாணத்தினால் கடல் வற்றியது என்று இருப்பது அறிவுக்குப் பொருத்தமற்றது என்று சொல்லிக்கொடுப்பீர்களா? ‘சத்தியமாய்ச் சிவமாகி’ என்று ‘சொக்கலிங்கக் கடவுள்’ பரஞ்சோதி முனிவருக்கு அடியெடுத்துக் கொடுத்ததாகச் சொல்லும் நீங்களா அதிலுள்ள அநீதிகளையும், அட்டூழியங்களையும் விளக்கிக் காட்டுவீர்கள்? தயிர்க்கடல், பாற்கடல், உப்புக்கடல் முதலான சப்த சாகரங்கள் இருப்பதாகச் சொல்லிக் கொடுக்கும் உங்களை, ‘சேமியா பாயசக் கடல்’, காபிக் கடல், ஜிஞ்சர்பீர் கடல், ஓவல்டின் கடல் எங்கே இருக்கின்றன சார்? என்று ஒரு மாணவன் கேட்டு விட்டால் என்ன சொல்வது என்கிற பயம் உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லையே! மகாவிஷ்ணு உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு ஒளிந்து விட்டாரென்று சொல்லிக் கொடுக்கும் போது, அது கட்டுக் கதையென்று சொல்லாவிட்டால், “பூகோள வகுப்பு ஆசிரியர் பூமி உருண்டை என்று சொல்லிக் கொடுத்தது பிழையா? என்று மாணவன் கேட்டு விடுவான் என்ற பயமும் இல்லையே! - இவ்வாறான பல சந்தேகங்களையும் அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்களையும் அவ்வப்போதே மாணவருக்கு எடுத்துக் காட்டுவதும் இல்லை. அவைகளை விளக்கிப் புத்தகங்கள் எழுதுவதும் இல்லை. எல்லா நூல்களின் உண்மை விஷயங்களை மாத்திரம் திரட்டி, அவைகளிலுள்ள புரட்டுகளையும், கட்டுக்கதைகளையும் தைரியமாகச் செல்லுவதுமில்லை. காலத்திற்கு ஏற்ற விதமாக, அறிவுக்குப் பொருத்தமில் லாதவைகளை ‘அருள்வாக்கு’ என்ற பெயரால் மக்களிடையே புகுத்தி அருமையான நூல்களிலுள்ள உயர்ந்த கருத்துகளைக்கூட குப்பைகளால் மூடிக் கலையையும் காவியத்தையும் இலக்கியத்தையும் வளர வொட்டாது அழுத்தி வருகின்ற பாதகம், பண்டிதர்களாகிய உங்களையே சார்ந்தது என்பதை உங்கள் அறிவே சொல்லும்.

உண்மை இவ்வாறிருக்க, வீணாக யார் யார் பேரிலோ ‘கலை போச்சு, காவியம் போச்சு’ என்று கூக்குரலிட்டால், மக்கள் இதுகாறும் ஏமாந்தது போல் இனியும் ஏமாற மாட்டார்கள் என்பதை மாத்திரம் குறிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” இந்தக் கட்டுரையில் எவ்வளவு செய்திகளை அடுக்கிக் காட்டுகிறார் பாருங்கள்.

ஒரு பத்திரிகையாளன் எழுதினால் சமூகத்தில் அதன் எதிரொலித் தெரிய வேண்டும்., அத்தகைய பத்திரிகையாளர் தான் குத்தூசி குருசாமி அவர்கள்.

தேவக்கோட்டையில் கள்ளர்கள் மாநாடு போடுகிறார்கள். இவர்கள் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர். ஆதித்திராவிடர்களை எதிர்த்து மிக்க கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகிறார்கள்.

- ஆதித் திராவிடர்கள் வெள்ளி நகைகள் அணியக் கூடாது.
- ஆண்கள் முழங்காலுக்குக் கீழும், இடுப்பைச் சுற்றிலும் கட்டக் கூடாது.
- கோட்டு, ஷர்ட், பனியன் எதுவும் அணியக் கூடாது.
- யாரும் தலைமயிரை வெட்டிக் கொள்ளக் கூடாது.
- மண்பாண்டங்கள் தவிர வேறு எதையும் வீட்டில் பயன்படுத்தக் கூடாது.
- பெண்கள் இடுப்பிற்கு மேலே தாவணி, இரவிக்கை அணிந்து மூடக் கூடாது.
- ஆண்கள் குடை, செருப்பு பயன்படுத்தக் கூடாது.

இதுதான் தீர்மானம்! இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து, புதுவை முரசில் மிக அருமையான ஆணித்தரமான விவாதத்தை எடுத்து வைத்து கள்ளர்கள் ‘நாட்டாராகி’ ஆதித்திராவிடர்களைத் தாக்குவதை அனுமதிக்க முடியாது. கள்ளர்களைப் போல ஆதித் திராவிடர்களும் படித்து உத்தியோகம், பதவி என்று பெற்றால் அப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்று கேட்டார் குத்தூசி.

இந்தச் செய்தியைக் காந்தியாருக்குத் தெரிவித்தார் குத்தூசி குருசாமி! அதன் பிறகு காந்தியார் இது குறித்து ‘யங் இந்தியாவிலும்’ எழுதினார். கள்ளர்களின் இத் தீர்மான நிறைவேற்றம் குறித்து நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஒரு கூட்டம் போட்டு வருத்தம் தெரிவித்தார். கண்டனத் தீர்மானம் போட்டு அவர்களுக்கு அனுப்பி வைத்தார் என்றால் குருசாமி எழுத்தின் வன்மையை என்னவென்று கூறுவது?

(மீதி அடுத்த இதழில்)