முஸ்லீம் பெண்கள் போர்க் கொடி

பெண்களை அடிமைப்படுத்தும் மதத் தலைவர்களின் மதக் கட்டளைகளை எதிர்த்து பெண்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். கடந்த சனிக் கிழமை ஜூன் 23 ஆம் தேதியன்று, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மும்பை பகுதியில் பெண்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர். பெண்களில் பெரும் பகுதியினர் முஸ்லீம்கள். தலையில் முக்காடு அணிந்திருந்தனர். ஷாபானு, குடியா, இம்ரானா ஆகியோருக்கு எதிராக தீர்ப்பளித்த மவுலானாக்களைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற ஷப்னம் குரேஷி என்ற பெண் “மவுலானாக்களைப் பார்த்து நமது அரசு அஞ்சுகிறது. பெண்களுக்கு எதிரான ‘பேத்வாக்களும்’ (தடைகள்) மதத்தலைவர்களின் உத்தரவுகளும் நிறுத்தப்பட வேண்டும். நான் மதத்தில் நம்பிக்கையுள்ளவன்தான். ஆனாலும் இதுதான் என் கருத்து” என்று கூறினார்.

“உ.பி.யில் மாமனாரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இம்ரானா என்ற பெண்ணை, மாமனாருடன் தான் சேர்ந்து வாழவேண்டும், கணவனை சகோதர உறவு கொண்டாட வேண்டும் என்று மவுலானாக்கள் அளித்த தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்தபோது என் ரத்தம் கொதித்தது” என்றார் குரேஷி.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆவாஜ் - இநிஸ்வான், பெண்கள் ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைக் குழு, மனித உரிமை மய்யம் ஆகிய அமைப்புகள் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்ரானாவைப் போல் ஆயிரக்கணக்கான இம்ரான்கள் மிகக் கொடுமையான மதங்களின் நடைமுறைகளால், விதிகளால், கொடூரமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வெளியே வந்தது இம்ரான் பிரச்சினை மட்டும் தான். பல்லாயிரக்கணக்கான இம்ரான்கள் பிரச்சினை வெளியே வராமலே மூடி மறைக்கப்பட்டு விட்டது. பெண்களின் உரிமைகளிலும், அச்சமற்ற வாழ்க்கையிலும், இந்த “மத ஆணைகள்” குறுக்கிடுகின்றன.

மற்ற சமூகத்தினருக்குப் பொருந்தக்கூடிய சட்டங்கள் முஸ்லீம் பெண்களுக்கும் பொருந்த வேண்டும். சட்டங்களை தங்களது கையில் எடுத்துக் கொள்ளும் மவுலானாக்களின் “மத ஆணைகளை” நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமணத்தைத் தொடர்ந்து நடக்கும் ‘மெகந்தி’ எனும் சடங்கில், பெண்கள் பாடி நடனமாடுவதற்கு பல முஸ்லீம் மதத் தலைவர்கள் தடை போட்டுள்ளனர். அதே போல் திருமணங்களில் புகைப்படம் எடுப்பதற்கும் தடை போடுகிறார்கள். சில மவுல்விகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கும் தடை விதித்துள்ளனர். “வாழ்க்கையில் திருமணம் ஒருமுறை வருவதுதான். அன்றுகூட நாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாதா?” என்று முஸ்லிம் பெண்கள் கேட்டனர்.